ஜெகதாப்பட்டினத்தில் நடைபெற்ற மணவிழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 25, 2022

ஜெகதாப்பட்டினத்தில் நடைபெற்ற மணவிழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர்

 கல்வியையும், மருத்துவத்தையும் கொடுத்தது கிறித்துவ மதம்; 

இஸ்லாமிய மதத்தை எடுத்துக் கொண்டாலும், நபிகள் நாயகத்தை எடுத்துக்கொண்டாலும் ‘எல்லோருக்கும் படிப்பைக் கொடு' என்றுதான் சொன்னார்கள்!

 மனுதர்மம் ஒன்றுதான் ‘‘படிக்காதே - 

படிக்க அனுமதிக்காதே'' என்று சொல்லிற்று!

ஜெகதாப்பட்டினம், செப்.25    கல்வியையும், மருத்துவத் தையும் கொடுத்தது கிறித்துவ மதம். இஸ்லாமிய மதத்தை எடுத்துக் கொண்டாலும், நபிகள் நாயகத்தை எடுத்துக் கொண்டாலும் படிக்காதே என்று சொல்லவில்லை. ‘எல்லோருக்கும் படிப்பைக் கொடு' என்றுதான் சொன் னார்கள். ஆனால், மனுதர்மம் ஒன்றுதான் ‘படிக்காதே - படிக்க அனுமதிக்காதே' என்று சொல்லிற்று என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

மணமக்கள் குமார் - சுவாதி

கடந்த 14.9.2022  அன்று  புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல்குடி ஒன்றியம், கீழ்மஞ்சக்குடி நினைவில் வாழும் சவுரிமுத்து - தவசியம்மாள் ஆகியோரின் மகன் திராவிடர் கழக மாநில இளைஞரணி செயலாளராகப் பொறுப்பேற்று, செயல்படக்கூடிய குமார் அவர்களுக்கும், புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல்குடி ஒன்றியம், உசிலங்காடு அருளானந்து - சகாயமேரி ஆகியோரின் மகள் சுவாதி அவர்களுக்கும் வாழ்க்கை இணையேற்பு விழாவினை நடத்தி வைத்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துரையாற்றினார்.

அவரது  வாழ்த்துரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

படிக்காமல் இருந்தது முக்கியமல்ல நண்பர்களே, படிக்கக் கூடாது என்று சொன்னார்கள். அதை சொன்னது ஒரு மதம் - அதுதான் சனாதன மதமான இந்து மதம்.

மனுதர்மம் ஒன்றுதான் ‘படிக்காதே - 

படிக்க அனுமதிக்காதே' என்று சொல்லிற்று!

படிக்காதே என்று சொன்ன மதம் உலகத்தில் வேறு எங்காவது உண்டா? எல்லா மதமும் படி, படி என்றுதான் சொல்கிறது. இன்றைக்குக் கிறிஸ்துவர்கள் இல்லையென் றால், நம்முடைய நாட்டில், இவ்வளவு படிப்பு பரவியே இருந்திருக்காது. மதத்தில் மாறுபாடு இருக்கலாம், அது வேறு விஷயம்.

அவர்கள் இல்லையென்றால், இவ்வளவு பள்ளிக் கூடங்கள் வந்திருக்காது; நாங்கள் எல்லாம்கூட படித்திருக்க முடியாது. மருத்துவமனைகள் வந்திருக்காது.

கல்வியையும், மருத்துவத்தையும் கொடுத்தது கிறித்துவ மதம். அதேபோன்று இஸ்லாமிய மதத்தை எடுத்துக் கொண்டாலும், நபிகள் நாயகத்தை எடுத்துக் கொண்டாலும் படிக்காதே என்று சொல்லவில்லை. எல்லோருக்கும் படிப்பைக் கொடு என்றுதான் சொன்னார்கள்.

திராவிட இயக்கம் செய்த 

மகத்தான புரட்சி

ஆனால், மனுதர்மம் ஒன்றுதான் படிக்காதே - படிக்க அனுமதிக்காதே என்று சொல்லிற்று.  யார் படிக்க வேண் டும்? உயர்ஜாதிக்காரன் மட்டும்தான் படிக்கவேண்டும்.

மற்றவர்கள் எல்லாம், உடலுழைப்பு செய்யவேண்டும்; கூலிக்காரர்களாக இருக்கவேண்டும்; மூட்டை சுமப்ப வர்களாக இருக்கவேண்டும்; மண்வெட்டியை சுமப்பவர் களாக இருக்கவேண்டும்.

இப்படியெல்லாம் இருந்த சமுதாயத்தை மாற்றி, இந்த சமுதாயத்தில் வரக்கூடியவர்கள், குமார் போன்றவர் களாகவும், சுவாதி போன்றவர்களாகவும் வரவேண்டும் என்று சொல்வதற்குக் காரணம், இந்தத் திராவிட இயக்கம் செய்த மகத்தான புரட்சி. இதற்காக ஒரு துளி ரத்தம் சிந்தவில்லை; இதற்காக வன்முறையைச் செய்யவில்லை. மாறாக மக்களை சிந்திக்க வைத்தார்.

உடல்வலியோடுதான் நான் உரையாற்றுகின்றேன்; 

ஆனால், உடல் வலித்தாலும், மனதில் இனிக்கிறது

எனக்கு மிகவும் மகிழ்ச்சி என்னவென்றால், பாராட்டவேண்டிய விஷயம் என்னவென்றால், மணமகன் குமார் கருப்புச் சட்டை அணிந்திருக் கிறார், எல்லாம் சரி, இது பெரிய சாதனையல்ல. இந்த மணமுறைக்கு ஒப்புக்கொண்டு, எங்களை யெல்லாம் அன்போடு வரவேற்றனர் பாருங்கள், அவர்களுடைய பெற்றோர் - அவர்களைப் பாராட்டுவதற்கு வார்த்தைகளே இல்லை. அதனால் தான், எனக்கு எவ்வளவு உடல்நலக் குறைவு இருந்தாலும், இங்கே இந்த மணவிழாவில் பங் கேற்கவேண்டும் என்று வந்திருக்கின்றேன். உடல் வலியோடுதான் நான் உரையாற்றுகின்றேன். ஆனால், உடல் வலித்தாலும், மனதில் இனிக்கிறது. அதுதான் மிகவும் முக்கியம்.

ஆகவே, மணமகன் தாயாரைப் பாருங்கள்; தந்தையை இழந்தேன் என்று மணமகன் சொன்னார். ஆனால், அதைப்பற்றி அவருடைய தாயார் கவலைப் படாமல், அந்தக் கஷ்டத்தைத் தாங்கிக்கொண்டு, பிள்ளையை நன்றாகப் படிக்க வைத்திருக்கிறார்.

மதங்களால் பிளவுபடக்கூடாது;

மனங்களால் ஒன்றுபடவேண்டும்

இங்கே வந்திருக்கின்ற சகோதரிகளுக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன். கட்சிகளால் நாம் பிளவுபடக் கூடாது; ஜாதிகளால் பிளவுபடக்கூடாது; மதங்களால் பிளவுபடக்கூடாது. மனங்களால் ஒன்றுபடவேண்டும் - அதுதான் மிகவும் முக்கியம்.

மனங்களால் ஒன்றுபடுத்தக் கூடிய ஓர் அமைப்புதான் இந்த அமைப்பு. யாரையும் பிரிப்பதல்ல - எல்லோரையும் இணைப்பதுதான்.

தாய்மார்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன் - ஏற்கெனவே மீன் பிடித் தொழிலை செய்கிறவர்கள் தொடர்ந்து செய்யட்டும்; ஆனால், இளைஞர்களைப் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்புங்கள்; அதிலும் குறிப்பாக பெண்கள் படிக்கவேண்டும்.

பெண் படித்தால், அது ஒரு குடும்பமே படித்தது போன்றதாகும்!

ஒரு குடும்பத்தில் ஆண்களும், பெண்களும் இருக்கிறார்கள்; ஆனால், ஒரே ஒருவருக்குத்தான் இடம் கொடுக்க முடியும் என்றால், யாருக்கு அந்த இடத்தைக் கொடுக்கவேண்டும் என்ற கேள்விக்குப் பெரியார் அவர்கள், ‘‘ஆணுக்கு அந்த இடத்தை கொடுக்கக்கூடாது; பெண்ணுக்குத்தான் கொடுக்க வேண்டும்'' என்றார்.

ஏனென்றால், ஆணுக்குக் கொடுத்தால், அவர் ஒருவர் மட்டும்தான் படிப்பார். பெண் படித்தால், அது ஒரு குடும்பமே படித்த அளவிற்கு, சமுதாயத் திற்குப் பரவக்கூடிய வாய்ப்பு ஏற்படும்.

எனவேதான், இங்கே வந்திருக்கின்ற சகோதரிகளுக்கு நான் சொல்கிறேன், இங்கே வந்திருக்கின்ற அருமைத் தாய்மார்களுக்கு நான் சொல்கிறேன், எல்லோரும் மணமகள் சுவாதி படித்திருப்பது போன்று, உங்களுடைய பெண் குழந்தைகளைப் படிக்க வையுங்கள். அதே போன்று மணமகன் குமார் அவர்களுடைய அம்மா, எப்படி அவரைப் படிக்க வைத்திருக்கிறார்களோ, அவர் களுடைய சிற்றப்பா போன்றோரின் ஒத்துழைப்பினால் அவர் இன்றைக்குப் படித்திருக்கிறாரோ, அதேபோன்று, உங்களுடைய பிள்ளைகளையும் படிக்க வையுங்கள்.

மீண்டும் மீண்டும் அதே தொழில்தான் செய்ய வேண்டும் என்று இருக்கக்கூடாது.

எங்களுக்கெல்லாம் இப்பொழுது என்ன கவலை?

உங்களிடம் ஓட்டு வாங்கவேண்டும் என்பதற்காக நான் இனிப்பாக பேசவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. ஆனால், யாருக்கு வாக்களித்தால், பாதுகாப் போடு இருப்பீர்கள் என்று சொல்கின்ற உரிமை எங்களுக்கு உண்டு. அதில் நாங்கள் மிகக் கவனமாக இருப்போம்.

காவி கொள்ளிக்கட்டை தயாராக இருக்கிறது; அதை எடுத்துத் தலையை சொறிந்துகொள்ளக் கூடாது

ஏனென்றால், நாம் ஏமாந்துவிடக் கூடாது பாருங்கள்; கொள்ளிக்கட்டையை எடுத்துத் தலையை சொறிந்து கொள்வார்கள் சிலர். இப்பொழுது காவி கொள்ளிக் கட்டை தயாராக இருக்கிறது. அதை எடுத்துத் தலையை சொறிந்துகொள்ளக் கூடாது.

ஆகவே, மீனவ சமுதாயம் என்பது எவ்வளவு பெரிய சமுதாயம். அந்த சமுதாயத்திலிருந்து 

எத்தனை அய்.ஏ.எஸ். அதிகாரிகள் இருக்கிறார்கள்? 

அய்.பி.எஸ்., அதிகாரிகள், எத்தனை பேர் இருக் கிறார்கள்? 

உயர்நீதிமன்ற நீதிபதிகளாக எத்தனை பேர் இருக்கிறார்கள்?

நாங்கள் இதற்காகப் பலமுறை போராடி இருக்கிறோம்; பலமுறை  ‘விடுதலை'யில் எழுதியிருக்கின்றோம். உங் களில் பல பேர் ‘விடுதலை'யைப் படித்திருக்கமாட்டீர்கள். இன்னும் பல பேருக்கு நாங்கள் யாருக்காக எழுதுகிறோம் என்றுகூட தெரியாது.

நாம் போராடியதினுடைய விளைவு, குறிப்பிட்டு எழுதினோம். ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் வாய்ப்பற்ற வர்கள், அடித்தளத்தில் இருப்பவர்கள் எல்லாம் நீதிபதிகளாக வேண்டும் என்று.

ஏனென்றால், நாம் போடுகின்ற சட்டத்தில், அவர்கள் தான் செல்லுபடியாகுமா? செல்லுபடி ஆகாதா? என்ற சிவப்புக் கோடு போடுகிறார்கள்.

உயர்ஜாதிப் பெண்களைத் 

தேடிப் பிடிக்கிறார்கள்!

ஆகவே, அந்த நீதிபதி பதவி என்பது மிகவும் முக்கியமானது. அந்த இடத்தில் ஏன் ஒரு மீனவ சமு தாயத்தைச் சேர்ந்தவர் இருக்கக்கூடாது. ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இருக்கக்கூடாது; பெண்கள் ஏன் இருக்கக்கூடாது? என்று கேட்டால்,

இப்பொழுது மிக சாமர்த்தியமாக பார்ப்பனர்கள் எப்படி கையாளுகிறார்கள் என்று சொன்னால், ‘‘பெண்கள்தானே நீதிபதிகள் ஆகவேண்டும் என்று சொல்கிறீர்கள்'' என்று சொல்லி, பெண்களை அந்தப் பதவிக்கு நியமனம் செய்கிறார்கள்.

ஆனால், மேல்ஜாதியைச் சேர்ந்த பெண்களைத் தேடிக் கண்டுபிடித்து அந்தப் பதவிக்கு நியமனம் செய்கிறார்கள்.

நேரிடையாக பார்ப்பனப் பெண்ணை நீதிபதியாக நியமித்திருக்கிறீர்களே, அவர்கள் 3 சதவிகிதம்தானே இருக்கிறார்கள் என்று கேட்டால்,

அதற்குப் பதில் சொல்வது போன்று, ‘‘பெண்களுக்குத் தானே அந்தப் பதவியைக் கொடுத்திருக்கிறோம்'' என்று சொல்கிறார்கள்.

பெண்களைத்தான் நியமிக்கவேண்டும் என்று சொன்னால், அதிலும் உயர்ஜாதிப் பெண்களைத் தேடிப் பிடிக்கிறார்கள்.

இயக்கத்தினால் அவருக்கும் லாபம்; 

அவரால் இயக்கத்திற்கும் லாபம்

ஆகவே, இதற்கெல்லாம் போராடவேண்டிய இயக்கம்தான் நம்முடைய இயக்கம். இன்றைக்கு குமார் போன்ற இளைஞர்கள் இந்த இயக்கத்திற்கு வருகிறார்கள் என்றால், அவரை உற்சாகப்படுத்து வதற்காக இங்கே நாங்கள் வந்திருக்கிறோம் என்றால், இந்த இயக்கத்தினால் அவருக்கும் லாபம்; அவரால் இயக்கத்திற்கும் லாபம். லாபம் என்றால், கொள்கையில்தான்.

தஞ்சை மாவட்டத்தில் மிகவும் பிரபலமான கல்லூரி களில் பூண்டி புஷ்பம் கல்லூரியும் ஒன்று. அக்கல்லூரியில் நிறைய பேர் படித்திருக்கிறார்கள். எழிலரசன் போன்ற வர்கள் அதில் தயாரான நாற்றுகள்தான்.

எந்தவிதமான கைமாறும் கருதாமல், வாண்டையார் அவர்கள் முயற்சியால் சிறப்பாக நடைபெறக்கூடிய கல்லூரி அது. காமராஜர் அவர்களுடைய வழிகாட்டுதல் தான் அந்தக் கல்லூரி வருவதற்குக் காரணம்.

துளசி அய்யா வாண்டையாரின் 

வியப்பும் - மகிழ்ச்சியும்!

அண்மையில் மறைந்த துளசி அய்யா வாண்டையார் அவர்கள், எங்களுடைய கருத்துக்கு நேர் எதிரானவர் தான் என்று சொல்லலாம். ஆனால், எங்களோடு நட்போடு, மரியாதையோடு, அன்போடு பழகக்கூடியவர். ஒருமுறை பட்டுக்கோட்டையில் கோமளவிலாஸ் ராஜூ அவர்களின் சிலையை என்னுடைய தலைமையில், அவர் திறந்து வைத்தார்.

அவ்விழாவில் நெருக்கமான நண்பர்கள், குடும்பத்த வர்கள் பங்கேற்றனர். மேடையில் அமர்ந்திருக்கும் பொழுது துளசி அய்யா வாண்டையார் அவர்கள் என்னிடம், ‘‘மிகவும் மகிழ்ச்சி; ஒரு விஷயத்திற்காக உங்களை நான் பாராட்டுகிறேன்'' என்றார்.

எனக்கு அதைக் கேட்டதும் மகிழ்ச்சியாக இருந்தது. ஏனென்றால், எங்களுடைய கொள்கையும், அவருடைய கொள்கையும் மாறுபாடு கொண்டது. ஆனாலும், நட்பு ரீதியாகவும், பண்பு ரீதியாகவும் பழகக்கூடியவர்கள் நாங்கள்.

அவர் சொன்னார்,

‘‘இந்தப் பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சிகளை நான் பார்க்கிறேன்; திராவிடர் கழகத்திற்கு இப்பொழுது நிறைய இளைஞர்கள் வருகிறார்கள்; கருப்புச் சட்டை அணிந்துகொண்டு இருக்கிறார்கள். அதைப் பார்க்கும் பொழுது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. ஏனென்றால், உங்கள் ஓர் இயக்கத்தில்தான் கட்டுப்பாடோடு இளை ஞர்களை வைத்திருக்கிறீர்கள். அவர்களை வேறு எந்தத் தவறான பழக்க வழக்கங்களுக்கும் அவர்களை நீங்கள் அனுமதிப்பதில்லை. அவர்களை மிகவும் கண்டிப் பாகவும், கட்டுப்பாடோடும் வைத்திருக்கிறீர்கள். நானும்  நிறையப் பேரிடம் விசாரித்தேன், மிகவும் மகிழ்ச்சி'' என்றார்.

திராவிடர் கழகத்தில் இணையுங்கள் சேருங்கள் என்று பெற்றோரே சொல்கிறார்கள்

ஒரத்தநாடு பகுதி, மற்ற பகுதிகளிலிருந்து திராவிடர் கழகத்திற்கு நிறைய இளைஞர்கள் வருவதற்கு என்ன காரணம்?

பெற்றோரே சொல்கிறார்கள், வேறு இயக்கங் களுக்குப் போவதைவிட, நீ திராவிடர் கழகத்தில் இரு. ஏனென்றால், ஒழுக்கத்தோடு நீ இருக்கலாம்; ஒழுக்கக்கேடுக்கு அவர்கள் அனுமதிக்கமாட் டார்கள் என்று.

நல்ல கொள்கை முத்துதான் 

இங்கே மணமகனாக வீற்றிருக்கும் குமார்

அதுபோன்று வந்த நல்ல கொள்கை முத்துதான் இங்கே மணமகனாக வீற்றிருக்கும் குமார் அவர்கள்.

எனவே, அவர் தெளிவாக இந்தக் கொள்கையை ஏற்றுக்கொண்டிருக்கின்றார். இந்தக் கொள்கையை அவர் ஏற்றுக் கொண்டதினால் அவருக்கு என்ன லாபம்?

தவறுகள் செய்யமாட்டார்கள்; ஒழுக்கக் கேடுகள் இருக்காது; அடுத்தவர்களுக்கு உதவுகின்ற மனப் பான்மை வரும்; நம்மை முன்னிலைப்படுத்தக் கூடாது என்பதுதான் நம்முடைய நோக்கம்.

எனவே, இந்த அடிப்படையைத்தான் இன்றைய இளைஞர்களுக்குச் சொல்லவேண்டும்.

இன்றைக்கு அரசியல் கட்சிகளுக்கு இளைஞர்கள் சென்றாலும்கூட, தியாகம் செய்து, படிப்படியாக பதவி நம்மை நோக்கி வரவேண்டுமே தவிர, நாம் பதவியை நோக்கிப் போகவேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கவேண்டும் இளைஞர்கள்.

ஆனால், இன்றைக்கு அப்படியில்லை. கட்சிக்கு வரும்பொழுதே என்ன பதவி கிடைக்கும் என்று நினைத்துக்கொண்டே வருகிறார்கள். அப்படி பதவி கிடைக்கவில்லை என்றால், அடுத்தக் கட்சிக்குப் போய்விடுகிறார்கள்.

அனைவருக்கும் அனைத்தும் 

என்பதுதான் சமூகநீதி

அதிலும், இப்பொழுது  ஒரு கட்சியில் நிறைய நாற்காலிகள் காலியாக இருக்கின்றன. ஆளைப் பிடிப்பவர்கள் போன்று, ஆட்களைப் பிடித்து கட்சியில் சேர்க்கிறார்கள்.

அதுபோன்று இல்லாமல், ஒரு தன்மான உணர்வு, கொள்கை உணர்வு, மக்களுக்கு நன்மை செய்ய வேண் டும்; எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கவேண்டும். அனைவருக்கும் அனைத்தும் என்பதுதான் சமூகநீதி.

பெரியார் பிறந்த நாளை, சமூகநீதி நாள் என்று அறிவித்த பெருமை நம்முடைய சமூகநீதியின் சரித்திர நாயகர் ‘திராவிட மாடல்' ஆட்சியின் முதலமைச்சர் அவர்களையே சாரும்.

சமூகநீதி என்றால் என்ன?

அனைவருக்கும் அனைத்தும் என்பதுதான்.

இங்கே அமருவதற்கு எல்லோருக்கும் நாற்காலிகள் இருக்கின்றன; எல்லோருக்கும் அமர்வதற்கு நாற்காலிகள் இருந்தால், யாரும் நிற்கவேண்டிய அவசியம் இல் லையே!

பந்தியில் எல்லோருக்கும் சாப்பாடு இருக்கிறது என் றால், யாரும் முந்திக்கொண்டுபோய், இடித்துக்கொண்டு போகவேண்டிய அவசியம் இல்லையே!

இதுதான் சமூகநீதி!

ஆகவே, அப்படிப்பட்ட ஓர் அருமையான வாய்ப்பு. என்ன ஜாதி? என்ன மதம்? என்ன கட்சி? என்ற வேறு பாடுகள் தேவையில்லை. நாம் எல்லோரும் மனிதர்கள். அன்போடு உறவாடவேண்டும்.

மணமக்களுக்கு அறிவுரை அல்ல - வேண்டுகோள்தான்!

எனவே, அருமை இளைஞர்களே, அருமை மணமக்களே, நீங்கள் தெளிவானவர்கள். உங்களுக்கு அறிவுரை சொல்லவேண்டிய அவசியம் இல்லை.

நான் மணவிழாக்களை நடத்தி வைக்கும்பொழுது அறிவுரை சொல்வதில்லை; வேண்டுகோளாகத்தான்  வைப்பேன்.

நீங்கள் எவ்வளவுதான் வாழ்வில் உயர்ந்தாலும், சிக்கனமாக வாழுங்கள்; எளிமையாக வாழுங்கள்; பிறருக்குப் பயன்படக்கூடிய வாழ்க்கையை வாழுங்கள்.  வரவுக்குட்பட்டு செலவு செய்யுங்கள். 

எல்லாவற்றையும் தாண்டி, உங்களை வளர்த்து ஆளாக்கி, உங்களுக்காக எல்லா கஷ்டங்களையும் தாங்கிக் கொண்ட உங்கள் பெற்றோருக்கு நன்றி காட்டுங்கள்; மதிக்கவேண்டும். அவர்களுக்கு முன் னுரிமை கொடுக்கவேண்டும்.

பிறருக்கு எடுத்துக்காட்டாக வாழக்கூடிய கொள்கை வாழ்க்கையை வாழ்ந்து, இந்தக் கொள்கையை ஏற்றுக் கொண்ட எங்களைப் பாருங்கள், மற்றவர்களுக்குப் பயன்படுகிறோம் என்று எடுத்துக்காட்டாக வாழுங்கள்.

இல்லறம் - அதற்கடுத்துத் துறவறம் என்று சொல் வார்கள். ஆனால், அதைத் தந்தை பெரியார் அவர் கள்தான் மாற்றினார். இல்லறம், அதற்கு அடுத்து தொண்டறம் என்று.

தந்தை பெரியார் அவர்களுடைய மணமுறையில், எல்லோரும் மகிழ்ச்சியாக அமர்ந்திருக்கிறார்கள். இந்த மணவிழாவினை யார் வேண்டுமானாலும் தலைமை தாங்கி நடத்தலாம். ஓர் இஸ்லாமிய சகோதரர் தலைமை தாங்கி நடத்தி வைக்கலாம்; ஒரு கிறித்துவ நண்பர் நடத்தி வைக்கலாம்; எங்களைப் போன்ற மதமற்றவர்கள் வேண்டுமானாலும் நடத்தலாம். ஒரு பெண் நடத்தலாம்.

எங்களுக்கு ரத்த உறவைவிட, கொள்கை உறவு என்பது மிகவும் முக்கியம்!

ஏன் இந்த மணவிழாவினை நான் நடத்தவேண்டும் என்று குமார் விரும்பினார். நான் ஏன் இந்த மணவிழாவிற்கு வரவேண்டும் என்று நினைத்தேன்.

இது எங்கள் குடும்பம்; இது வேறு குடும்பம் அல்ல. எங்களுக்கு ரத்த உறவைவிட, கொள்கை உறவு என்பது மிகவும் முக்கியம்.

இப்படிப்பட்ட ஓர் உணர்வோடு நடைபெறக்கூடிய இந்த மணவிழா இது. அன்பார்ந்த மணமக்களே நீங்கள் சிறப்போடு வாழுங்கள்; தன்முனைப்பு இல்லாமல், ஆங்கிலத்தில் ஈகோ என்று சொல்வார்கள். விட்டுக் கொடுக்காமல் வாழ்வது. அண்ணா அவர்கள் மிக அழகாகச் சொல்வார்,

‘‘விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை-

கெட்டுப் போகிறவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை''

என்று. இதை உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் நன்றாக நினைவில் வைத்துக்கொண்டு, ஒருவருக் கொருவர் விட்டுக் கொடுத்த வாழ்க்கையை நீங்கள் வாழுங்கள். சிக்கனமாக வாழுங்கள், எளிமையாக வாழுங்கள்.

இல்லறம் - தொண்டறம்!

இல்லறம் - துறவறம் என்பதை பெரியார் அவர்கள் மாற்றி, இல்லறத்தில் இருந்துகொண்டே செய்ய வேண்டியது தொண்டறம் என்றார்.

ஆகவே, அந்தத் தொண்டறத்தையும் நீங்கள் சிறப்பாக செய்யுங்கள்.  மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டாக வாழ்ந்தால், இந்தக் கொள்கைக்குப் பெருமை - இந்தக் குடும்பத்திற்குப் பெருமை.

இந்தக் கொள்கையை ஏற்றுக்கொண்டவர்கள், நன்றாக வாழுகிறார்கள்; மற்றவர்களுக்கு உதவுகிறார்கள் என்று சொல்லக்கூடிய அளவிற்கு வாழுங்கள் என்று கேட்டு, இந்த மணமுறையைப் புகுத்தியவர் தந்தை பெரியார் என்ற அறிவாசான்; இந்த மணமுறைக்குச் சட்ட வடிவம் கொடுத்தவர் நம்முடைய பேரறிஞர் அண்ணா அவர்கள். அப்படிப்பட்ட அந்த இருபெரும் தலைவர்கள், கலைஞர் போன்றவர்கள் அகில இந்திய அளவில் இம்மணமுறை சட்டமாக வரவேண்டும் என்று நினைத்தார்கள். அவர்களுடைய நினைவைப் போற்றி, மணமக்கள் உறுதிமொழியினைக் கூறி, வாழ்க்கை ஒப்பந்த நிகழ்ச்சியினை நடத்திக் கொள்ளுமாறு அன்போடு அவர்களைக் கேட்டு, உங்கள் அனுமதியோடு இந்த மணவிழாவினை நடத்தி வைக்கிறேன்.

வாழ்க பெரியார்!

வளர்க பகுத்தறிவு!!

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த் துரையாற்றினார்.


No comments:

Post a Comment