பெரியார் நம் பெரியார்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 17, 2022

பெரியார் நம் பெரியார்!

சீர்கெட்டுக் கிடக்கின்ற மக்களுக் கேனிந்த

நிலையென்று சிந்தித்தவர் பெரியார்!-இதற்கு

சரியான முடிவொன்று எடுத்திட வழியொன்று

    வகுத்திட முனைந்தவர் பெரியார்!

கூர்கெட்டுக் கிடக்கின்ற கருவியைத் துருநீக்கி

கூர்தீட்ட முயன்றவர் பெரியார்!

கொடுமையில் ஆழ்ந்திட்ட‌ அடிமையின் விலங்கினை

    உடைத்திட துணிந்தவர் பெரியார்!

யார்வீட்டு உரிமையை யார்வந்து பறிப்பது?

யாரிங்கே உண்டுண்டு கொழுப்பது?

யாருக்கு யாரிரவு பகலாக உழைப்பது?

    யாருழைப்பை யார்கையில் கொடுப்பது?

ஊர்விட்டு ஊர்வந்து ஒண்டியவன் அண்டியவன்

ஊராரின் கண்களை மறைப்பதா?

உன்ஜாதி கீழென்றும் என்ஜாதி மேலென்றும்

    உனைமட்டம் தட்டிஅவன் சிரிப்பதா?


விலைமகள் மகனென்று வீரனே உன்னைய‌ந்த

    வேதியன் எட்டியே நில்லென்றான்

விடுதலை உனக்கில்லை வெறுந்தரையும் உனக்கில்லை

வெகுத்தொலைவு விலகியேச் செல்லென்றான்

கலைமகள் என்றான்நற் கல்வியை; நீய‌தனை

    கற்றிடவும் பெற்றிடவும் தடையென்றான்

கடவுளந்தக் கடாட்சத்தை தரவில்லை; வேதத்தை

    காதுகளில் கேளாமல் கிடவென்றான்

புலைமகன் நீயென்று பெயர்ச்சூட்டி ஒதுக்கினான்

பிற்போக்கு உண்டுனக்கு; முற்போக்கில்லை

புரியாதப் பாஷையில் ஏதேதோ உளறினான்

    புத்தியைத் தடுமாற்றி தந்தான்தொல்லை

மலையளவுப் பழிகளை உன்தலையில் சுமத்தினான்

    மட்டியாய் மடையனாய் ஆக்கினான்

மஞ்சத்தில் அவன்படுத்து உறங்கியே மகிழ்ந்துன‌து

    மானத்தைக் கப்பலேற்றிப் போக்கினான்.

- பாவலர் கொ.வீ.நன்னன்

மேனாள் சட்டப்பேரவை உறுப்பினர்


No comments:

Post a Comment