‘விடுதலை' சந்தா வழங்கும் விழாவில் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் எம்.பி. சிறப்புரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 13, 2022

‘விடுதலை' சந்தா வழங்கும் விழாவில் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் எம்.பி. சிறப்புரை

 பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள் 1962 ஆம் ஆண்டிலேயே

கருத்தியல்  வாரிசு - களப் போருக்கான வாரிசை தேர்வு செய்து  ஏகமனதாக ‘விடுதலை' நாளிதழை ஒப்படைத்துவிட்டார்!

சென்னை செப்.13   பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள் சரியான ஓர் அரசியல் வாரிசு, கருத்தியல் வாரிசு, களப் போருக்கான வாரிசை, 1962 இலேயே தேர்வு செய்துவிட்டார்; அவரிடத்தில் இந்த மகத்தான பணியை ஒப்படைத்துவிட்டார் என்பதுதான் இன்றைக்கு நாம் நினைவுகூர வேண்டிய ஒன்று என்றார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன்  அவர்கள்.

‘விடுதலை' சந்தா வழங்கும் விழா!

கடந்த 6.9.2022 அன்று மாலை  சென்னை பெரியார் திடலில் உள்ள நடிவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற 60 ஆண்டுகால ‘விடுதலை' ஆசிரியருக்கு கழகத் தோழர்கள் திரட்டிய ‘விடுதலை' சந்தா வழங்கும் விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் எம்.பி., அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:

வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்நிகழ்வின் தலைவர் திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,

அனைவரையும் வரவேற்று உரையாற்றி சிறப்பித் திருக்கின்ற திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் அவர்களே,

முன்னிலை வகித்து நிகழ்வை சிறப்பித்து கொண்டிருக்கின்ற திராவிடர் கழகத்தின் முன்னணி பொறுப்பாளர்களே,

இந்நிகழ்வில் பங்கேற்று தமிழர் தலைவரை வாழ்த்தி உரையாற்றி சிறப்பித்திருக்கின்ற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் அன்புச்சகோதரர் மல்லை சத்யா அவர்களே, மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் மதிப்பிற்குரிய தோழர்  மு.வீரபாண்டியன் அவர்களே, இந்திய கம்யூ னிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெரு மதிப்பிற்குரிய தோழர் கே.பாலகிருஷ்ணன் அவர்களே,

எனக்குப் பின்னர் இங்கே வாழ்த்துரை வழங்க விருக்கின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் மானமிகு ஆ.இராசா அவர்களே,

நிறைவாக நம்மிடையே ஏற்புரை வழங்கவிருக்கிற விழாவின் நாயகர் தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்களே,

இந்நிகழ்வில் பங்கேற்று இதனைச் சிறப்பித்துக் கொண்டிருக்கின்ற தமிழ்ச் சொந்தங்களே - உங்கள் அனைவருக்கும் என்னுடைய பணிவான வணக்கத் தினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அவருடைய ஆசிரியர் பொறுப்பின் வயதும், என்னுடைய வயதும் ஒன்று!

ஆசிரியர் அவர்கள் ‘விடுதலை' ஆசிரியராகப் பொறுப்பேற்று 60 ஆண்டுகள் ஆகின்றன. அவருடைய ஆசிரியர் பொறுப்பின் வயதும், என்னுடைய வயதும் ஒன்று.

என் வயது, அவருடைய ஆசிரியர் அனுபவம். 27, 28 வயதில் ஓர் இதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்று இருக்கிறார்; வியப்பதற்கு ஏதுமில்லை. 10 வயதிலேயே அவர் மேடையேறி பேசக்கூடிய ஆற்றல் பெற்றவராக விளங்கியிருக்கிறார்.

ஞானசம்பந்தர்தான் அப்படி பிஞ்சு பருவத்திலே பாடியவர் என்று நான் கேள்விப்பட்டு இருக்கிறேன். ஆனால், நம்முடைய தமிழர் தலைவர் அவர்கள் 10 வயதில் மேடையேறி பேசக்கூடிய அளவிற்கு ஆற்றல் பெற்றவராக, பிரச்சாரம் செய்யக்கூடிய ஆற்றல் பெற்ற வராக விளங்கியிருக்கிறார்.

அவர் எத்தகைய ஆற்றல் பெற்றவர் என்பதை, தந்தை பெரியார் அவர்களின் எழுத்துகளில் இருந்தே நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

தந்தை பெரியாரின் சான்றிதழைப் பெற்றவர் நம்முடைய தமிழர் தலைவர்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களே, வியந்து பாராட்டக் கூடிய அளவிற் கான ஆற்றலைப் பெற்றவராக, அவருடைய சான்றிதழைப் பெற்றவராக நம்முடைய தமிழர் தலைவர் அய்யா அவர்கள் விளங்குகிறபொழுது, நான் அவரை பாராட்டுவதற்கு எதுவும் இல்லை.

இனி நடத்த முடியாது, ‘விடுதலை' ஏட்டை நிறுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்கிற நிலையில், பெரியாரே கைவிட்டுவிடலாம் என்று கருதக்கூடிய அளவிற்கு, நட்டத்தைச் சந்தித்துக் கொண்டிருந்த நிலையில், அதனை இவரிடம் ஒப்படைக்கலாம் என்கிற நம்பிக்கையை, பெரியா ருக்குத் தந்தவர் நம்முடைய அய்யா ஆசிரியர் அவர்கள், தமிழர் தலைவர் அவர்கள்; இதுதான் சிறப்புக்குரியது.

இவரிடம் ஒப்படைக்கலாம், இவர் அந்தப் பணியை ஏற்றுச் செய்தால், திறம்படச் செய்வார் என்று, மிகச் சரியான ஒரு தேர்வை -

இதனை இதனால் இவன்முடிப்பான் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல்

என்பதுபோல, இவருக்கு இந்த ஆற்றல் இருக்கிறது; இவரால் இதை செய்து முடிக்க முடியும் என்று பெரியார் எடுத்த அந்த முடிவு இருக்கிறதே - அந்தத் தேர்வு இருக்கிறதே - அதுதான் இங்கே பாராட்டுதலுக்குரியது - போற்றுதலுக்குரியது.

அரசியல் வாரிசு, கருத்தியல் வாரிசு, 

களப் போருக்கான வாரிசு!

ஆக, பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள் சரியான ஓர் அரசியல் வாரிசு, கருத்தியல் வாரிசு, களப் போருக்கான வாரிசை, 1962 இலேயே தேர்வு செய்துவிட்டார்; அவரிடத்தில் இந்த மகத்தான பணியை ஒப்படைத்துவிட்டார் என்பதுதான் இன்றைக்கு நாம் நினைவுகூர வேண்டிய ஒன்று.

இந்த அரங்கம் இன்றைக்கு இப்படி ஒரு பிரம்மாண்ட மான அரங்கமாக இருக்கிறது. 35, 40 ஆண்டுகளுக்கு முன்பு இந்த அரங்கில் நானும் ஒரு மாணவனாகப் பேசியிருக்கிறேன். அப்பொழுது வெறும் தகரக் கூரையால் வேயப்பட்ட ஒரு கொட்டகையாக இருந்தது. அப்படி இருந்த ஒரு கொட்டகை, இன்றைக்குக் குளிர்சாதனம் பொருத்தப்பட்ட ஒரு பிரம்மாண்டமான அரங்கமாக இருக்கிறது என்றால், அதுதான் தமிழர் தலைவரின் திறனுக்கு ஒரு சான்று.

லாபம் ஈட்டி, பெரியாரின் கடனை அடைத்த பெருமை தமிழர் தலைவரையே சாரும்!

பெரியார் விட்டுச் சென்ற பணிகளை, அவர் கருத்தியல் தளத்தில் வேகமாக எடுத்துச் சொல்கிறார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அதேவேளையில், அவர் விட்டுச் சென்ற திராவிடர் கழகத்திற்கான அனைத்து உடைமைகளையும் பலமடங்கு பெருக்கியி ருக்கிறார்; இவர் வந்த பிறகுதான், ‘விடுதலை' ஏடு பல வண்ண அச்சாக பரிணாமம் பெற்றிருக்கிறது. அயல் நாடுகளிலிருந்து அச்சு இயந்திரங்களை இறக்குமதி செய்து, அச்சிடக் கூடிய அளவிற்கு,  பெரியார் கடன் தந்து, காகித செலவுகளை ஏற்றுக்கொண்ட நிலையில், லாபம் ஈட்டி, அந்தக் கடனை உடனே அடைத்த பெருமை நம்முடைய தமிழர் தலைவர் அவர்களைச் சாரும் என்பதை நாம் வரலாற்றுக் குறிப்புகளில் அறிய முடிகிறது.

இரண்டரை லட்ச ரூபாயை, பழத் தட்டிலே கொண்டு போய் அவரிடம் ஒப்படைத்தபொழுது, ‘‘என்னவென்று'' கேட்டிருக்கிறார் தந்தை பெரியார்.

‘‘நீங்கள் காகிதச் செலவுக்காக அவ்வப்பொழுது தருகிற கடன் தொகை இரண்டரை லட்சம் ரூபாயை - இப்பொழுது நாங்கள் இந்த இதழின் மூலமாக ஈட்டிய லாபத்தை உங்களிடம் தருகிறோம்'' என்று, பெரியார் கண்முன்னாலே வெற்றிகரமாக ‘விடுதலை' ஏட்டினை நடத்திக் காட்டிய பெருமைக்குரியவர்  தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்கள்.

அந்த அளவிற்கு நிர்வாகத் திறன் உள்ளவராக இருக்கிறார். 40 ஆண்டுகளுக்கு முன்பே அவருக்கு இதய அறுவைச் சிகிச்சை நடந்தது. நான் சட்டக் கல்லூரி மாணவனாக இருந்தபொழுது, பெரியார் திடலுக்கு வந்திருந்த ஒரு சூழலில், நம்முடைய தமிழர் தேசிய இயக்கத் தலைவர் அய்யா நெடுமாறன் அவர்களோடு பேசிக் கொண்டிருந்தார். மாணவர்களாக இருந்த நாங்கள், அப்பொழுது அவரை சந்தித்தோம்.

தன்னுடைய அமெரிக்கப் பயணத்தை முடித்துவிட்டு, இங்கே வந்திருந்தபொழுது, அந்த அறுவைச் சிகிச்சை யைப்பற்றி அவரிடம் எடுத்துச் சொல்லிக் கொண்டி ருந்தார்.

பைபாஸ் அறுவைச் சிகிச்சை செய்துகொண்டவர்கள்  உளவியல் ரீதியான பாதிப்புக்கு உள்ளாகி முடங்கிப் போவார்கள்

கால்களில் இருந்து நரம்பை எடுத்து, இதயத்தில் பைபாஸ் செய்த அந்த நிகழ்வை எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தார். இதயத்தில் அறுவைச் சிகிச்சை நடந்தால், உலகத்தில் பல பேர் உளவியல் ரீதியான பாதிப்புக்கு உள்ளாகி முடங்கிப் போவார்கள். படி ஏற மாட்டார்கள்; நடக்கமாட்டார்கள்; உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும் என்கிற அச்சம் அவர்களை ஆக்கிரமித்துக் கொள்ளும்.

ஆனால், அப்படிப்பட்ட அறுவைச் சிகிச்சை நடந்த பிறகும், இன்றைக்கும் இளைஞரைப் போல ஓடோடிப் பணியாற்றக் கூடியவராக, இளைஞராகவே இருந்து பணியாற்றக் கூடிய ஆற்றல் பெற்றவராக இருக்கிறார்.

அவருடைய அந்த ஆற்றல் என்பது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

சுற்றிச் சுழன்று பணியாற்றிக் கொண்டே இருக்கிறார்

எப்படி இந்த ஆற்றல் அவருக்கு இருக்கிறது என்பதை எண்ணி எண்ணிப் பார்த்து நான் பெருமூச்சு விடுகிறேன். 90  வயதைத் தொடப்போகிறார்; இன்னும் அவருடைய துடிப்பு பிரமிக்க வைக்கிறது. சுற்றிச் சுழன்று பணியாற்றிக் கொண்டே இருக்கிறார். எப்பொழுது கேட்டாலும், எங்காவது ஓர் ஊரிலே பயணத்தில் இருக் கிறார்; ஏதாவது ஒரு நிகழ்விலே பேசிக் கொண்டிருக்கிறார். மணிக்கணக்கிலே மேடைகளில் அமர்ந்திருக்கிறார்; நாங்கள் எல்லாம் பேசிய பிறகு, ஒரு மணிநேரம் பேசுகிறார் - திருவாரூர் மாநாட்டிலே.

அந்த நேரத்தில், ஏதோ ஒரு 5 நிமிடம், 10 நிமிடம் பேசிவிட்டு அவர் இறங்கிவிடுவார் என்று எதிர்பார்த்தால் நாம் ஏமாந்து போவோம்.

எதிரிகளை நடுங்க வைக்கக்கூடிய அளவிற்கு ஆதாரங்களை அள்ளிவீசுகிறார்

அவ்வளவு தரவுகளைத் திரட்டுகிறார்; ஊன்றிப் படிக்கிறார்; கருத்தூன்றிப் படிக்கிறார்; எதிரிகளை நடுங்க வைக்கக்கூடிய அளவிற்கு ஆதாரங்களை அள்ளி வீசுகிறார்.

இது ஒரு பிறவிப் பண்பு என்று நாம் அறிய முடிகிறது. பெரியாரிடம் அவர் கற்ற அரசியல், அந்த உந்துதலை அவருக்குத் தருகிறது. உள்ளபடியே உடல் அவருக்கு எப்படி ஒத்துழைக்கிறது என்பதுதான் நமக்குப் பெரும் வியப்பாக இருக்கிறது.

தமிழர்களின் நலன்களுக்காக 

நீடூழி வாழவேண்டும்

பல பத்தாண்டுகள் வாழவேண்டும் என்று இங்கு தோழர் கே.பி. அவர்கள் சொன்னார்கள்; நம்முடைய திராவிடர் கழகத்  துணைத் தலைவர் கவிஞர் அவர்கள் எழுதிய கவிதையில், இந்த ‘விடுதலை'யின்  ஆசிரியர் பொறுப்பில் அவர் நூறாண்டாக இருக்கவேண்டும்; அப்பொழுது நூறாயிரம் சந்தாக்களைத் தருவோம்; இன்னும் 40 ஆண்டுகள் வாழவேண்டும் என்று துணைத் தலைவர் விரும்புகிறார்.

அவர் கட்டாயம் தமிழர்களின் நலன்களுக்காக நீடூழி வாழவேண்டும்.

உழைக்கும் விளிம்பு நிலை மக்களின் நலன்களுக்காக அவர் நீடூழி வாழவேண்டும்.

திராவிட இயக்கத்தின் கடைசிப் பெருந்தலைவராக இன்றைக்கு நம்முடைய தமிழர் தலைவர் அவர்கள்தான் எஞ்சியிருக்கிறார்.                                  (தொடரும்)


No comments:

Post a Comment