புரத உணவை மறுக்கும் தனியார் பள்ளிகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 3, 2022

புரத உணவை மறுக்கும் தனியார் பள்ளிகள்

தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு தனியார் பள்ளிகள்  தங்கள் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் தங்களுக்கான மதிய உண வாக முட்டை, இறைச்சி ஆகியவற்றைக் கொண்டுவரக் கூடாது என்று கட்டுப் பாடுகள் விதித்துள்ளன. மருத்துவ அறி வியல் பார்வையில் இது ஆபத்தானது என்பது ஒருபுறம் இருப்பினும், இறைச்சி உணவின் மீதான சமூக அரசியலும் இந்தப் பிரச்சினையில் ஒரு முக்கிய அங்கமாக உள்ளது. 

புரதம் ஏன் அவசியம்?

தேசியக் குடும்பநலக் கணக்கெடுப்பு (NFHS)  2019-2021 இன்படி இந்தியாவில் ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாக, அய்ந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 39.7% பேர் (தமிழ்நாடு 22%) வயதுக்கு ஏற்ற எடையுடன் இல்லை. அதே போல ஊட்டச்சத்துக் குறைவால், இந்தியாவில் 39.7% குழந்தைகள் வளர்ச்சி குறைபாட்டு டன் உள்ளனர் (தமிழ்நாடு 25%) இவ்வாறான ஊட்டச்சத்துக் குறைபாட்டில் புரதச்சத்துக் குறைபாடு முதன்மையானதாக உள்ளது.

புரதம் என்பது உடலின் ஒட்டுமொத்த அடிப்படைக் கட்டுமானத்துக்குப் பங் களிப்பதாகும், குழந்தைகளின் உடல், மூளை வளர்ச்சி என்பது அவர்களின் எதிர்காலத்தோடு நேரடியாகத் தொடர் புடையது. ஊட்டச்சத்துக் குறைபாட்டுடன் வளரும் ஒரு குழந்தைக்குத் தொற்று நோய்கள் அதிகம் தாக்கும் சாத்தியம் உள்ளதோடு, அவர்கள் சரியான உடல் - மனநல வளர்ச்சி இல்லாமல் போவதால் கல்வியில் பின்தங்கி விடுவர். தோராயமாக மூன்று லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மனித இனம் தோன்றியபோது, பிற விலங்கு களைவிடப் பாரிய மூளைத் திறன் மனித னுக்குக் கிடைத்ததற்குக் காரணம், இறைச்சி தான் என்பது ஆய்வாளர்களின் முடி வாகும். பிரிட்டனில் 1850 முதல் 1950 வரை 100 ஆண்டுகளில் மக்கள் இறைச்சி உணவு எடுத்துக்கொண்ட அளவு, அதனை ஒட்டிய நல்வாழ்வு குறித்து நடத்தப்பட்ட மாபெரும் ஆய்வு முடிவுகள் 2017இல் வெளியாகின. அதில், இறைச்சி உணவு எடுத்துக்கொண்ட மக்கள், தாவர உணவு மட்டும் எடுத்துக்கொண்டோரைவிட அதிக உயரம் வளர்ந்துள்ளனர் என்ப தோடு, அவர்கள் நோய்வாய்ப்படுவதும் குறை வாக இருந்துள்ளது என்றும் கண்டறியப் பட்டுள்ளது. அதேபோல இறைச்சி உண வுப்  பழக்கம் கொண்டோரை அக்கால பிளேக் நோய்’ குறைவாகத் தாக்கியுள்ளது என்ப தும் அந்த ஆய்வில் வெளிப்பட்டிருந்தது.

கடல் உணவு, இறைச்சி, ஈரல், முட்டை ஆகியவை ஊட்டச்சத்துக்களின் சுரங்கம். தாவர உணவு மட்டும் எடுத்துக் கொண் டோருக்கு உடலுக்குத் தேவையான  B2 விட்டமினில் பத்தில் ஒரு பகுதி மட்டுமே கிடைக்கின்றது. அதே போல மூளை வளர்ச் சிக்குத் தேவையான B2, B3,  அயோடின், செலினியம் போன்றவையும் சரிவரக் கிடைப்பதில்லை.

பள்ளி எனும் சமூக அனுபவம்

இறைச்சியைத் தவிர்த்து தாவர உணவு களிலேயே எல்லா சத்துகளையும் பெற்று விட இயலும் என்று சிலர் வாதிடுகின்றனர். ஆனால், அவ்வாறான உணவுத் தேர்வு அனைவராலும் விலை கொடுத்து வாங்க இயலாததாகும். அய்ந்து ரூபாய்க்கு விற்கப் படும் ஒரு முட்டையில் கிடைக்கும் புர தத்தை பிராகலியில்  (Broccoli)  பெற 100 ரூபாய் செலவழிக்க வேண்டும்.

வளர்ச்சிக் குறியீடுகளில் முதல் அய்ந்து இடங்களில் உள்ள ஸ்காண்டிநேவிய நாடு கள், அந்நாட்டு மக்களுக்கான உணவுப் பரிந்துரைகளை வெளியிட்டுள்ளன. அவற்றை நோக்கினால், நாம் வாரம் மூன்று முறை கடல் உணவையும், வாரம் 500 கிரா முக்கு மிகாத இறைச்சியையும் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளதை அறிய முடி கிறது.

அறிவியல் உண்மைகள் இப்படியிருக்க, சமூக அரசியல் நோக்கில் இங்கு தனியார் பள்ளிகள் இறைச்சி ,முட்டை, மீன் கொண்டு வரக் கூடாது என்று தடை விதித்துள்ளது நடைமுறைக்கு எதிரானது. தனியார் பள்ளிகளை நடத்துவோருக்குப் பல்வேறு நம்பிக்கைகள், கலாச்சாரம், உணவுப் பழக் கம் ஆகியவை இருக்கலாம் ஆனால், அவர்கள் அதனை அவர்களின் வீடுக ளைத் தாண்டி பள்ளிக்குக் கொண்டுவருவது ஏற்புடையதல்ல. அரசமைப்புக்கு உட் பட்டே ஒரு நிறுவனம் செயல்பட வேண் டும். பள்ளி என்பது குழந்தைகளின் முதல் சமூக அனுபவமாகும். அந்த முதல் சமூக அனுபவத்திலேயே தாவர உணவு உண் போர் உயர்வானவர்கள் என்றும் இறைச்சி உண்பது உயர்வானதல்ல என்றும் கற் பிப்பது சமூக அநீதி ஆகும். 

வளரும் நாட்டின் குழந்தைகள்

இந்தியா ஒரு வளரும் நாடு. வறுமையி லிருந்தும், பசியிலிருந்தும், ஊட்டச்சத்துக் குறைபாட்டிலிருந்தும் நாம் வேகமாக மீண்டுவருகிறோம். தமிழ்நாட்டை ஆண்ட அரசாங்கங்கள் கல்வியறிவைப் பெருக் கவும், பசியை ஒழிக்கவும் சத்துணவுத் திட்டத்தைச் செயல்படுத்தி, அதில் முட் டைகளை வழங்கி ஒரு தலைமுறையையே ஆரோக்கியமான சமூகமாக ஆக்கின. ஆனால், இன்று உணவு ரீதியிலான பாகு பாட்டை   பல தனியார் பள்ளிகள் சிறுவயதி லேயே குழந்தைகளிடம் திணிப்பது வேத னையான ஒன்று. பல்வேறு கலாச்சாரம், மொழி, இனம், மதம் ஆகியவற்றைக் கொண்டது நமது இந்தியா. இவ்வாறான வேற்றுமைகளை மதித்து, ஒற்றுமையைப் பேணி, சகோதரத்துவத்தை வளரச் செய் வதைத்தான் பள்ளிகள் உறுதிசெய்ய வேண்டுமே ஒழிய கலாச்சாரத் திணிப் பைச் செய்யக் கூடாது. சத்தான உணவு அனைவருக்கும் சென்றுசேர்வதைத் தமிழ்நாடு அரசு உறுதிப்படுத்த வேண்டும். 

- சட்வா, மருத்துவர் & ‘போலி அறிவியல், மாற்று மருத்துவம், மூடநம்பிக்கை ‘ நூலின் ஆசிரியர்.

நன்றி: “இந்து தமிழ் திசை”, 25.8.2022

No comments:

Post a Comment