பெரியார் உலகத்திற்கு அடிக்கல் நாட்டிய கை எத்தகையது சமூகநீதிக்கான சரித்திரம் படைக்கும் கை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 17, 2022

பெரியார் உலகத்திற்கு அடிக்கல் நாட்டிய கை எத்தகையது சமூகநீதிக்கான சரித்திரம் படைக்கும் கை!

பெரியார் உலகைத் தொடங்கி வைத்த முதலமைச்சர் - அதனை முடித்து வைக்கவும் உதவுவார் - உதவவேண்டும்!

இது வரலாற்றில் ஒரு பொன்னாள் - திருநாள்!

பெரியார் பிறந்த நாள் விழா - பெரியார் உலகம் அடிக்கல் நாட்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கருத்துரை

சென்னை செப்.17  பெரியார் உலகத்திற்கு இன்று (17.9.2022) அடிக்கல் நாட்டினார் - சமூகநீதிக்கான சரித்திர நாயகர் - ‘திராவிட மாடல்' அரசின் தலைவர் - நமது முதலமைச்சர் -  தொடங்கி வைத்தவர் அதனை முடித்து வைக்கவும் ஆதரவுக்கரம் நீட்டுவார் - இந்நாள் வரலாற் றில் ஒரு பொன்னாள் - திருநாள் என்றார் விழாவுக்குத் தலைமை வகித்த பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் செயலாளர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

தந்தை பெரியார் பிறந்த நாள் - திருச்சி பெரியார் உலகம் அடிக்கல் நாட்டு விழா

இன்று (17.9.2022) காலை சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் 144 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா - திருச்சி சிறுகனூரில் அமையவுள்ள பெரியார் உலகத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறு வனத்தின் செயலாளர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரை யாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:நமக்கெல்லாம் விழி திறந்த வித்தகர்

அறிவாசான் நமக்கெல்லாம் விழி திறந்த வித்தகர் - மற்றவர்களுக்கெல்லாம் விழி திறந்த பிற்பாடு, வழிகாட்டிய பிற்பாடு தன்னுடைய விழிகளை மூடிக் கொண்டாலும், ஓராயிரம் ஆண்டுகள் அநீதிகளைப் புறங்காண என்னுடைய தொண்டர்கள் விழித்துக் கொண்டே இருப்பார்கள் என்ற அளவிற்கு, இன்றைக்குத் திராவிட மாடல் ஆட்சியினுடைய ஒப்பற்ற முதலமைச் சராக எங்கள் முதலமைச்சர் அவர்களிடத்திலிருந்து அமைச்சர் பெருமக்களாக இங்கே மேடையிலும், மேடையின்முன் அமர்ந்திருக்கின்ற எங்கள் தோழர்களி லிருந்து, மக்கள் தொண்டர்களாக இருந்து பணிபுரியக் கூடிய அத்துணை பேரையும் உருவாக்கிய அந்தத் தங்கச் சாலையை உருவாக்கிய மிகப்பெரிய சுயமரி யாதைப் பல்கலைக் கழகமான தந்தை பெரியாரின் 144 ஆவது ஆண்டு பிறந்த நாள் விழா இன்று.

எவ்வளவு காலம் நாங்கள் நன்றி செலுத்த வேண்டுமானாலும், செலுத்துவதற்குத் தயாராக இருக்கிறோம்

இந்திய வரலாற்றில் ஒப்பற்ற ஓர் புரட்சியை - சமூகப் புரட்சியாக உருவாக்கிய சரித்திர நாயகருக்கு - சமூக நீதிக்கான சரித்திர நாயகர் - அதை சமூகநீதி நாளாக அறிவித்தாரே, அதற்கு எவ்வளவு காலம் நாங்கள் நன்றி செலுத்த வேண்டுமானாலும், செலுத்துவதற்குத் தயாராக இருக்கிறோம் என்ற பெருமைமிகு எங்கள் ஆற்றல்மிகு ‘திராவிட மாடல்' ஆட்சியினுடைய முதலமைச்சர் அவர்களே, 

இந்தத் திட்டம் இதற்குமுன் கடந்த அய்ந்தாண்டுகளில் ஆட்சி செய்த - முன்னால் இருந்த அரசினால் கிடப்பில் போடப்பட்டது. நன்கொடை யாளர்கள் கொடுத்த பணம் வங்கியில் இருந்து, எங்களுக்கு வட்டியைப் பெற்றுத் தந்தது- அது எங்களுக்கு லாபம்!

தமிழருக்கும், தமிழ்நாட்டிற்கும் விடியலை ஏற்படுத்திய முதலமைச்சர்

அதேநேரத்தில், அதற்கு விடியல் ஏற்பட்டது. தமிழருக்கும், தமிழ்நாட்டிற்கும் விடியலை ஏற்படுத்திய அதே முதலமைச்சர் அவர்கள்தான் இதற்கும் விடியலை உருவாக்கினார்கள் - இன்றைக்கு அடிக்கல் நாட்டவும் வந்திருக்கிறார்கள்; நேரத்தின் நெருக்கடியிலும் எங் களுக்கு நேரத்தை ஒதுக்கிக் கொடுத்திருக்கிறார்.

முன்னிலை ஏற்றிருக்கக்கூடிய பெரியாருடைய தலைநகரம் என்று கருதக்கூடிய திருச்சியில், எப்படி ஒரு தளகர்த்தராக திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கிறார்களோ, அதேபோல, திராவிடர் கழகமும் உரிமைப் பெறக்கூடிய அளவிற்கு, எங்களுக்குத் துணையாக இருக்கக்கூடிய அருமைச் சகோதரர் மாண்புமிகு அமைச்சர் கே.என்.நேரு அவர்களே,

இந்தத் திட்டங்களுக்கு ஏராளமான அளவிற்குப் பல ஆலோசனை சொல்லி, ஒப்புதல் அளிப்பதற்கு வேக வேகமாக செயலாற்றிய எங்கள் மாண்புமிகு அமைச்சர் - ஈரோட்டு அமைச்சர் - அதுதான் இன்னும் சிறப்பு -  அப்படிப்பட்ட அமைச்சர் அருமைச் சகோதரர் மாண்புமிகு முத்துசாமி அவர்களே,

இந்தத் திடலுக்கும் உரியவர், அடிக்கடி  நாங்கள் சண்டை போடுவதற்கும் உரியவராக இருக்கக்கூடிய அருமைச் சகோதரர் இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறை அமைச்சர் பாசமிகு சேகர்பாபு அவர்களே,

மேனாள் ஒன்றிய அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.இராசா அவர்களே,

இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்களே,

மாண்புமிகு அமைச்சர்கள் எ.வ.வேலு, அவர்களே, கே.ஆர்.பெரியகருப்பன் அவர்களே, கே.எஸ்.மஸ்தான் அவர்களே, மனோ தங்கராஜ் அவர்களே, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்களே, சி.வெ.கணேசன் அவர் களே, ராமச்சந்திரன் அவர்களே,

ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களே, சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி அவர்களே, ஜோசப் சாமுவேல் அவர்களே,

நேரத்தின் நெருக்கடியினால் தனித்தனியோ ஒவ்வொருவரையும் விளிக்க முடியவில்லை.

இளைய தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டான வரும், ஆர்.எஸ்.எஸ். புத்தகத்தை வெளியிட நாங்கள் அழைத்தவருமான எங்கள் சகோதரரின் பிள்ளை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் அவர்களே, மாறன் என்று சொன்னால், முரசொலி மாறன் அவர் களும், நாங்களும் கொள்கை நண்பர்கள் மட்டுமல்ல - மிசா காலத்தில் சிறைச்சாலை நண்பர்களும்கூட!

‘திராவிட மாடல்’ முதலமைச்சர்

சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் அவர்களே,

வணக்கத்திற்குரிய சென்னை மேயர் அவர்களே,

துணை மேயர் அவர்களே,

எங்கள் நெஞ்சம் எல்லாம் நிறைந்திருக்கும்.

மாண்புமிகு ‘திராவிட மாடல்' முதலமைச்சர் அவர்களே,

உறுபசியும், ஓவாப் பிணியும், செறுபகையும் இல்லாத ஒரு நாட்டை உருவாக்கவேண்டும் என்பதற்காக நேற்று முன்தினம்கூட சிறு குழந்தைகளுக்கெல்லாம், அந்த அரும்புகளுக்கெல்லாம் உணவு ஊட்டினீர்களே, அந்தக் காட்சியைவிட, ‘திராவிட மாடல்' ஆட்சியி னுடைய மாட்சிக்கு வேறு என்ன தேவை?

வெற்றிடத்தை கற்றிடமாக்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

அதை செய்துவிட்டு வந்த உங்களை எப்படிப் பாராட்டுவது? என்பதில் அதிசயம் நிறைந்திருக்கிறது.

எங்களுக்கெல்லாம் பெருமையாக இருக்கிறது.

கலைஞருக்குப் பிறகு இது வெற்றிடம் என்று சொன் னார்கள் - அவர்கள் புரியாதவர்கள் என்று அப்பொழுதே சொன்ன மேடை இந்த பெரியார் திடல் மேடை.

இது வெற்றிடம் அல்ல - எங்கள் முதலமைச்சராக முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் வருவார். அதைக் கற்றிடமாக உங்களுக்கு மாற்றித் தருவார் என்று சொல் லக்கூடிய அந்த உணர்வை - அதன் செயல்பாட்டை இன்றைக்குப் பெற்றுக் கொண்டிருக்கின்றோம்.

புதிய சமுதாயத்திற்கான - புது உலகிற்கு ‘திராவிட மாடல்’ அடிக்கல்

எனவே, எந்தக்  கரங்கள் - அந்த அரும்பு பிஞ்சுகளுக்கெல்லாம் உணவை எடுத்து எடுத்துப் பரிமாறியதோ, அந்தக் கரங்கள்தான் பெரியாருடைய உலகத்திற்கு அடிக்கல் நாட்டியிருக்கிறது.

இது வெறும் கட்டடத்திற்கு அடிக்கல்லா? இல்லை, ஒரு புதிய சமுதாயத்திற்கான - புது உலகிற்கு ‘திராவிட மாடல்' அடிக்கல் என்று நீங்கள் மாற்றியிருக்கிறீர்கள்.

எதிரிகளுக்குப் பதில் சொல்வதற்கும் இந்தக் கை - பெரியார் பிறந்த நாளை, சமூகநீதி நாள் என்று சென்ற ஆண்டு, இதே காலகட்டத்தில் அறிவித்து கையெழுத்துப் போட்ட கரங்கள் அல்லவா இந்தக் கரங்கள் - அதைவிடத் தகுதி, பெரியார் உலகத்தினுடைய அடிக்கல்லை நாட்டு வதற்கு வேறு எந்தக் கரங்களுக்குத் தகுதி உண்டு?

எனவேதான், உங்களுக்கு நாங்கள் அன்புத் தொந்தரவு கொடுக்கிறோம். இவ்வளவு நெருக்கடியிலும் எங்கள் அன்புக்காக இங்கே வந்து, இந்த விழாவில் பங்கேற்று இருக்கின்றீர்கள்.

அடிக்கல் நாட்டியது மட்டுமல்ல, அடிக்கல்லாகவும் இருக்கிறீர்கள்!

அதிகமாக சொல்லவேண்டிய அவசியமில்லை இந்த அரங்கத்திற்கு. இந்தத் திட்டத்திற்கு அடிக்கல்லாக நீங்களே இருக்கிறீர்கள். வெறும் அடிக்கல் நாட்டியது மட்டுமல்ல, அடிக்கல்லாகவும் இருக்கிறீர்கள்.

பெரியாரின் தொண்டர்களுக்குத் தொண்டன் - பெரியார் வைத்த நம்பிக்கையை, அன்னை மணியம் மையார் அவர்கள் வைத்த நம்பிக்கையை நியாயப்படுத்த உழைத்துக் கொண்டிருக்கின்ற ஓர் எளிய தொண்டன் நான்.

கலைஞரின் கரமும் - இந்தக் கரமும்!

பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தைத் தொடங்கி வைத்த அந்தக் கரங்கள் கலைஞருடைய கரங்கள்.

அதற்கடுத்து ‘பெரியார் உலகத்தைத்' தொடக்கி வைக்கக் கூடிய கரங்கள், இன்றைக்கு உங்களுடைய கரங்கள்.

நம்முடைய சமுதாயத்தை தலைநிமிர வைத்த தலைவர்

இது ஒரு நீண்டத் திட்டம் - அதைப்பற்றிச் சொன் னார்கள் - 95 அடி உயர சிலை; ஆம், தலைகுனிந்த நம்முடைய சமுதாயத்தை தலைநிமிர வைத்த தலைவர் அல்லவா! எனவே, அந்தத் தலைவருடைய சிலையைப் பார்க்கும்பொழுது, தலைநிமிர்ந்து பார்க்கவேண்டும். இவர்தான் எங்களைத் தலைநிமிர்த்தியவர் என்பதற்காக - தலைநிமிர்ந்து பார்க்கவேண்டும் என்பதற்காகத்தான் - 95 அடி சிலை - 60 அடி பீடம் - ஆக மொத்தம் 155 அடி உயரத்தில் திருச்சி சிறுகனூரில் உருவாக்கவிருக் கின்றோம். உங்களுடைய ஆட்சியில் உருவான ஒரு பெரிய புதிய நகரமாக - புதிய உலகமாக அது இருக்கும். இன்னொரு மாமல்லபுரமாக அது திருச்சி பகுதியில் அமையும். டிஸ்னி வேர்ல்ட் என்று எப்படி குழந்தை களுக்கான சுற்றுலா தளம்போல் இருக்கிறதோ - அப் படிப்பட்ட அமைப்புகள் அங்கே உருவாகவிருக்கிறது.

இப்படிப்பட்ட அமைப்புகளை உருவாக்குவதற்கு நாங்கள் துண்டைத்தான் நம்பியிருக்கிறோம் - துண்டை விரிப்போம் - பிச்சை எடுப்போம் - எங்களுக்கு அதில் பெருமை இருக்கிறது.

பெரியாருடைய அறக்கட்டளை என்பது பலருடைய கண்களை உறுத்திக் கொண்டிருக்கின்ற அறக்கட்டளை.

ஆனால், அதேநேரத்தில், இதைவிட செம்மையாக நடக்கக் கூடியதற்கு எது, எப்படி என்பதற்கு அடையாளம் என்ன? என்பதை நேரமில்லாத காரணத்தினால் ஒன்றை மட்டும் சொல்கிறேன்.

எல்லாவற்றிற்கும் ஆதாரத்தை வைத்துப் பேசக் கூடியவர்கள் பெரியார் தொண்டர்களாகிய நாங்கள்.

1940 இல் (மதுரை) வாடிப்பட்டியில் பெரியாருக்கு அளிக்கப்பட்ட 1001 அணா பண முடிப்பு!

இதோ ஓர் அற்புதமான செய்தியை, உங்களுக்குச் சொல்கிறேன். என்னடா, மந்திரவாதி பிரிப்பதுபோல, எதையோ பிரிக்கிறாரே என்று நீங்கள் நினைக்க வேண்டாம்.

இது தந்தை பெரியாருக்கு அளிக்கப்பட்ட 1001  அணா பெரியார் பண முடிப்பு.

இந்தப் பையில் வைத்து 1001 அணா கொடுக்கப்பட்டது. இன்றைய தலைமுறையினருக்கு அணா என்றால், எவ்வளவு என்று தெரியாது.

16 அணா ஒரு ரூபாய் - 

1001 அணாக்கள்  பண முடிப்பு மதுரை வாடிப்பட்டியில் தந்தை பெரியாருக்குக் கொடுக்கப்பட்டது.

திராவிடர் கழகமாக, நீதிக்கட்சி மாறுவதற்கு முன் னால் - நம்மிலே சிலர் குழந்தைகளாக, பலர் பிறக்காதவர் களாக இருந்த காலகட்டத்தில், வாடிப்பட்டியில், 28.1.1940 ஆம் ஆண்டு கொடுக்கப்பட்ட 1001 அணா - அதுதான் இன்று பெரியார் உலகமாக மிகப்பெரிய அளவிற்கு வளர்ந்து - இந்தக் காலகட்டத்தில் எப்படி திட்டமிடப்பட்டு இருக்கிறது என்றால், மூன்று கட்டங்களாக உருவாக உள்ளது.

தந்தை பெரியாரின் 150 ஆம் ஆண்டு பிறந்த நாளில் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது!

அய்யாவினுடைய 144 ஆம் பிறந்த நாளான இன்று பெரியார் உலகத்திற்கு நீங்கள் அடிக்கல் நாட்டியி ருக்கிறீர்கள். இந்தத் திட்டம் முழுமையாக நிறைவு பெறுவதற்கு தந்தை பெரியாரின் 150 ஆம் ஆண்டு பிறந்த நாள் - இன்னும் 6 ஆண்டுகளில் முழுமையாக நிறைவடையும் - மூன்று கட்டங்களாக.

நாங்கள் கேட்டபொழுது, நன்கொடை இதுவரையில் 8 கோடி ரூபாயைத் தந்திருக்கிறார்கள். மூன்று கட்டங்கள் பணி உண்டு.

அத்தனையும் கணக்கோடு பாதுகாப்பாக வங்கியில் இருக்கக் கூடியவை. அதற்கு மொத்த செலவு சுமார் 60 கோடி ரூபாய் ஆகலாம் என்று நிபுணர்கள் திட்டமிட்டு இருக்கிறார்கள். 

எனவேதான், பெரியார் உலகத்தில் அத்தனை அரங்கங்கள், ஆய்வகங்கள், நூலகங்கள், குழந்தைகள் காட்சியகங்கள் - இவை அனைத்தும் அதில் அமையக் கூடிய பெரிய நகரம் 27 ஏக்கராவில் அமையவிருக்கிறது.

இந்தியாவே தலைநிமிர்ந்து பார்க்க வைக்கக்கூடிய ஒரு முதலமைச்சர்

இப்படிப்பட்ட ஓர் அருமையான திட்டத்தை, தந்தை பெரியாரின் 144 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில், ஒரு சிறப்பான முதலமைச்சர் - இந்தியாவே எதிர்பார்க்கக் கூடிய ஒரு முதலமைச்சர் - இன்னுங்கேட்டால், எந்த அரசமைப்புச் சட்டத்தின்மீது பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டோமோ,  அந்தப் பிரமாணத்தை மீறுகின்றவர்களையெல்லாம் நாங்கள் அடையாளம் காட்டுவதற்கு - அதற்கு மாறான எடுத்துக்காட்டாக தமிழ்நாட்டு முதலமைச்சர்தான் இருக்கிறார் என்று இந்தியாவே தலைநிமிர்ந்து பார்க்க வைக்கக்கூடிய ஒரு முதலமைச்சராக இருக்கக் கூடிய ஒரு முதலமைச்சர் இங்கே அடிக்கல் நாட்டியிருக்கிறீர்கள்.

அதற்காக அமைச்சர் பெருமக்களே, தோழர்களே, அனைத்துத் திராவிட இயக்க நண்பர்களே, தமிழ் இன உணர்வாளர்களே, உலகம் முழுவதும் இருந்து இந்த நிகழ்ச்சியைப் பார்த்து கேட்டுக் கொண்டிருக்கின்ற நண்பர்களே, உங்களுக்குப் பெரியார் தொண்டர்களாகிய நாங்கள் தலைவணங்கி நன்றி செலுத்துகின்றோம்.

இந்த முயற்சி எங்களுடைய முயற்சி - எங்களுடைய ஆசை - அதை உங்கள் மத்தியில் இன்றைக்குத் தொடங்கி வைத்துவிட்டோம்.

தொடங்கி வைத்தது மட்டுமல்ல - இந்தத் திட்டத்தை நிறைவு செய்வதும் உங்கள் பொறுப்பு!

இன்னும் 6 ஆண்டுகளில் அந்தத் திட்டத்தை முடிக்க வேண்டும் என்று திட்டமிட்டு இருக்கின்றோம். ஒரு வேளை அது நீண்டாலும், நீண்டலாம். அதற்குப் பல் வேறு தடங்கல்களும், நிதித் தட்டுப்பாடுகளும் ஏற்படலாம்.

இருந்தாலும், இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்த கரங்கள் - நம்பிக்கைத் தரக்கூடிய கரங்கள் என்கிற காரணத்தினால், இதைத் தொடங்கி வைத்தது மட்டுமல்ல - இந்தத் திட்டத்தை நிறைவு செய்வதும் உங்கள் பொறுப்பு என்று சொல்லிக் கொள்கிறோம்.

என்னைப் போன்றவர்கள் இந்தத் திட்டம் நிறை வேறுவதைப் பார்ப்போமோ இல்லையோ - இந்தத் திட்டம் தொடங்கி வைப்பதைப் பார்த்துவிட்டோம் - இந்தத் திருப்தி போதும்.

நாங்கள் இப்பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறோம்.

எந்த சட்டத்திற்காக தந்தை பெரியார் அவர்கள் தன்னுடைய 95 வயதில் களத்தில் நின்றாரே - அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்று சொல்லி - ஜாதி ஒழிப்பு - தீண்டாமை ஒழிப்புக்காக - அதை நடைமுறைப்படுத்தி, கலைஞர் காலத்தில் இருந்த ஆதங்கத்தையும் தாண்டி, அதைத் தீர்த்து, பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றிய கரங்கள் தங்களுடைய கரங்கள் என்பதற்காக இந்த நேரத்தில், நன்றியோடு நினைவு கூர்கிறோம்

தந்தை பெரியார் பிறந்த நாளை - சமூகநீதி நாளாக அறிவித்தீர்கள்; அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை - சமத்துவ நாளாக அறிவித்தீர்கள். அதற்காகவும் உங்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறோம்.

சமுதாய மாற்றம் - அதற்குப் பெயர்தான் ‘திராவிட மாடல்’

ஜாதி ஒழிந்த, தீண்டாமை ஒழிந்த ஒரு புதிய சமுதாயம் - ஆட்சி மாற்றம் என்பது வெறும் காட்சி மாற்றம் மட்டுமல்ல -  வெறும் அரசியல் மாற்றம் மட்டுமல்ல - சமுதாய மாற்றம் - அதற்குப் பெயர்தான் ‘திராவிட மாடல்' என்பதை இன்றைக்கு வலியுறுத்திக் கொண்டிருக்கின்ற உங்களுக்கு எங்கள் வணக்கங்களை, நன்றியைத் தெரிவித்து, உங்கள் உரையை ஆற்றுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இன்றைக்கு எங்கள் வாழ்நாளில் ஒரு பொன்னாள்!

எத்தனையோ முறை உங்களை நாங்கள் அழைத்திருக்கின்றோம். ஆனால், இன்றைக்கு எங்கள் வாழ்நாளில் ஒரு பொன்னாள். நேற்று முன்தினம் உங்களுக்குப் பொன்னாள் - இன்றைக்கும் பொன்னாள்.

எந்நாளும், ‘திராவிட மாடல்' ஆட்சியின் பெரு மையை பேசா நாளெல்லாம் எங்களுக்குப் பிறவா நாட்கள் - பெரியாரின் பெருமையை பேசா நாட்கள் - எங்களுக்குப் பிறவா நாட்கள்.

எனவேதான், உங்களையும், அமைச்சர் பெருமக் களையும் மீண்டும் வரவேற்கிறேன்.

இது ஓர் எளிய நிகழ்ச்சி!

பெரியார் எளிமையை விரும்பினார் -

பெரியார் சிக்கனத்தை விரும்பினார் -

ஆனால், பெரியார் உலக திட்டம் தாராளமாக நடை பெறுகிறது - காரணம் என்ன? உலகம் அதை எதிர் பார்க்கிறது.

வருக பெரியாரின் புது உலகம்!

உலகத்தினுடைய அதிசயங்களில் ஒன்று சிறுகனூர் என்ற பெருகனூரைக் காட்டக்கூடிய அந்த வாய்ப்பு என்று கூறி, வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி! நன்றி!!

மாண்புமிகு அமைச்சர் பெருமக்களுக்கும், மற்றவர் களுக்கும் நன்றி கூறி, விடைபெறுகிறேன்.

வாழ்க பெரியார்!

வருக பெரியாரின் புது உலகம்!

பெரியாரை உலக மயமாக்குவோம் -

உலகத்தை பெரியார் மயமாக்குவோம்!

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறு வனத்தின் செயலாளர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.


No comments:

Post a Comment