மத்திய அரசு பள்ளிகளில் தீண்டாமை? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 23, 2022

மத்திய அரசு பள்ளிகளில் தீண்டாமை?

 தீண்டத்தகாத சமூகம் எது? மதுரை வல்லபா வித்யாலயா என்ற பள்ளியில் தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி  இது!

மதுரையில் அழகர்கோவில் சாலையில் உள்ள வல்லபா வித்யாலயா என்ற  பள்ளியில் நடந்த இறுதித்தேர்வில் 'தீண்டத்தகாத ஜாதி' என்பது தொடர்பான கேள்வி இடம்பெற்றுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் தென்பகுதியான மதுரையில் உள்ள  வல்லபா வித்யாலயா என்ற பள்ளியில் கடந்த திங்கள் கிழமை (செப்டம்பர் 19) நடைபெற்ற பள்ளி ஆறாம் வகுப்பு இறுதித்தேர்வின் சமூக அறிவியல் தேர்வு வினாத்தாளில் பம்பாய் பிரசிடென்சியின் “தீண்டத்தகாத ஜாதி” என்ற கேள்வி இடம்பெற்றுள்ளது.

இந்த வினாத்தாளில் பகுதி 1-இன், சரியான பதிலை தேர்ந்தெடுங்கள் என்ற பிரிவில் ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு மதிப்பெண் வழங்கப்படும்; அதேபோல் ஒவ்வொரு கேள்விக்கும் 3 விருப்பங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஏழு கேள்விகள் இடம்பெற்றுள்ள இந்தப் பிரிவில் கடைசிக் கேள்வியில், பம்பாய் பிரசிடென்சியில் தீண்டத்தகாத வர்களாக கருதப்பட்ட சமூகம் எது? என்ற கேள்வி இடம் பெற்றுள்ளது.  

இந்தக் கேள்விக்காக (அ) மஹர், (ஆ) நாயர் மற்றும் (இ) கோலி என 3 விருப்பங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான வினாத்தாள் சமூக வலைதளங்களில் வெளியிட்டப்பட்ட நிலையில், இதைப் பார்த்த சமூக ஆர்வலர்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும் இது போன்ற மனித விரோத கேள்விகளை மாணவர்களிடம் கேட்டதற்காக பள்ளி நிர்வாகத்தை பலர் கண்டித்து வருகின்றனர்.

அதே சமயம் இந்த உள்ளடக்கம் கிரேடு VI  என்.சி.இ.ஆர்.டி பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதாக பள்ளி நிர்வாகம் விளக்கம் அளித்தது. சமூக அரசியல் வாழ்க்கை மற்றும் அத்தியாயம்-2 - பன்முகத்தன்மை மற்றும் பாகுபாடு என்ற புத்தகத்தில் இருந்து இந்தக்  கேள்வி கேட்கப்பட்டது.

“கிரேடு VI  என்.சி.இ.ஆர்.டி  (NCERT) பாடப் புத்தகத்தின் சமூக மற்றும் அரசியல் வாழ்க்கை -மி, 19-ஆம்- பக்கத்தில் உள்ள  ஒரு பகுதியின் மூலம் கேள்வி கேட்கப்பட்டதாகவும், இதற்காக நாங்கள் வருந்துகிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளனர். அதே சமயம் இந்தத் தலைப்பின் நோக்கம் பழைய நாட்களில் இருந்த சமத் துவமின்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்காகவே. 

தீண்டாமை ஒரு குற்றம் என்று நம் குழந்தைகளுக்குக் கற்பிக்கப்படுகிறது. இது குறித்து எங்கள் குழுவினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம் என்று பள்ளி சார்பில் விளக்கம் கூறப்பட்டுள்ளது.

இது ஒரு சமாளிப்பான பதில் என்பதில் அய்யமில்லை. 

ஒன்றிய அரசின் கல்வித் திட்டத்தின் கீழ் செயல்படும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் சமூக அறிவியல் பாடத் தேர்வில் (13.3.2018) கேட்கப்பட்ட கேள்வி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வருணாசிரம முறையில் மிகவும் தாழ்ந்த ஜாதி எது என்ற கேள்விக்கு நான்கு விடைகள் கொடுக்கப்பட்டு இருந்தன. அதில் சரியான விடையை எழுத வேண்டும். பிராமணர்கள், சத்திரியர்கள்,  வைசியர்கள் சூத்திரர்கள் என்று பட்டியலிடப்பட்டு இருந்தது.

அதே போல 2019இல் (8.9.2019) தமிழ்நாட்டில் கேந்திரவித்யாலயா பள்ளிகளில் காலாண்டு தேர்வில் தாழ்த்தப்பட்டவர்கள் யார்? என்பது கேள்வி. அதற்குக் கொடுக்கப்பட்ட பட்டியலில்Foreigners, Untouchables, Upper Class and Middle Class என்று இடம் பெற்றிருந்தது.

சி.பி.எஸ்.இ. என்றாலும் கேந்திர வித்யாலயா என்றாலும் இவை ஒன்றிய அரசின் கல்வித் திட்டத்தின்கீழ் நடைபெறக் கூடியவை.

இப்பொழுதெல்லாம் வருணாசிரமம் எங்கே இருக்கிறது என்று சந்தர்ப்பம் வரும்போது எல்லாம் கேள்வி கேட்கும் பார்ப்பனோத்தமர்கள் இந்தக் கால கட்டத்தில்தான் பள்ளி களிலேயே இளம்பிஞ்சுகள் மனதிலேயே வர்ணாசிரம, ஜாதி நச்சு விதைகளை நட்டு வைக்கின்றனர் என்பதைக் கவனிக்கத் தவறக் கூடாது- கூடவே கூடாது! 


No comments:

Post a Comment