சமூக ஊடகப் பதிவால் ஏற்பட்ட மூடநம்பிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 11, 2022

சமூக ஊடகப் பதிவால் ஏற்பட்ட மூடநம்பிக்கை

தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த மகன் பிழைப்பானாம் உப்பை உடம்பில் கொட்டிய பெற்றோர்

பெங்களூரு, செப். 11- அறிவியல் அடிப்படை ஏதுமின்றி ஆதாரமற்ற தகவல்கள் சமூக ஊடகங்கள்மூலம் அவ்வப் போது பதிவிடப்படுவதும், அதன் உண்மைத்தன்மை அறியாமல் அப்படியே பலராலும் பகிரப்பட்டு வருவதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. 

கருநாடகா மாநிலம் பெல்லாரி பகுதியை சேர்ந்த சுரேஷ் என்ற 10 வயது சிறுவன் கடந்த 3 நாள்களுக்கு முன்பு அங்கிருக்கும் சிராவர் என்ற கிராமத்தில் உள்ள குளத்திற்கு குளிக்க சென்றுள்ளான். அப்போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தான். பின்னர் தகவலறிந்து பதற்றத்துடன் வந்த சிறுவனின் குடும்பத்தார் அவரது உடலை மீட்டு, சக உறவினரிடம் 10 கிலோ உப்பைக் கொண்டுவருமாறு கூறியுள்ளனர். உப்பை கீழே கொட்டி அதன்மேல் தண்ணீரில் மூழ்கிய சிறுவனை படுக்க வைத்து, பின்னர் மீதி உப்பையும் சிறுவன் மேல் கொட்டியுள்ளனர்.

பின்னர் இது குறித்து சக உறவினரிடம் இறந்தவர் உடலை இது போன்று செய்தால் மீண்டும் உயிர் கிடைக்கும் என்று வாட்ஸ் அப்பில் வந்த பதிவுகுறித்து கூறினர். பின்னர் அவர்கள் சுமார் 6 மணி நேரம் வரை காத்திருந்தனர். இருப்பினும் சிறுவன் உயிர் பெறவில்லை.

இதனிடையே கிராம மக்கள் காவல்துறைக்கும், மருத்து வர்களுக்கும் தகவல் கொடுத்தனர். தகவலறிந்து வந்த அவர்கள் சிறுவனை மீட்டு சோதனை செய்தனர். அப் போது சிறுவனின் உடலை உயிரில்லை என்பதை உறுதி செய்தனர். இதனால் மிகவும் மனமுடைந்த பெற்றோர் சிறுவனை கட்டியணைத்து கதறி அழுதனர்.

இதைத்தொடர்ந்து சிறுவனின் உடல் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. மகன் உயிர்பிழைப்பான் என்ற நம்பிக்கையில் மூட நம்பிக்கையை பின்பற்றிய பெற்றோ ரின் செயல் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத் தியது.

டிஎன்பிஎஸ்சி குரூப் - 1 தேர்வு நவ.19-க்கு தள்ளிவைப்பு

சென்னை, செப். 11- தமிழ்நாட்டில் குரூப்-1 பணியிடங்களுக்கு முதல்நிலை, முதன்மை,நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இத்தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தி வருகிறது.

நடப்பு ஆண்டில் துணை ஆட்சியர் (18), காவல் துணை கண்காணிப்பாளர் (26), கூட்டுறவு சங்கதுணை பதிவாளர் (13), வணிகவரி உதவி ஆணையர் (25), ஊரகமேம்பாடு உதவி இயக்குநர் (7),மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (3) என குரூப்-1 பதவியில்காலியாக உள்ள 92 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த ஜூலை 21ஆம் தேதி வெளியிட்டது.

அதில் குரூப்-1 முதல்நிலைத் தேர்வு அக்டோபர் 30ஆம் தேதி காலை 9.30 முதல் 12.30 மணி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து அதற்கான இணையதள விண்ணப்ப பதிவு ஜூலை 21இல் தொடங்கி ஆக. 22ஆம் தேதி நிறைவு பெற்றது. அதன் பிறகு, விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள ஆக.27முதல் 29ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது.

இந்நிலையில், குரூப்-1 தேர்வுதள்ளிவைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதுபற்றி டிஎன்பிஎஸ்சி செயலர் உமா மகேஸ்வரி வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘அக்.30ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட குரூப்-1 பணிக்கான முதல்நிலைத்தேர்வு நிர்வாக காரணங்களுக்காக தள்ளிவைக்கப்பட்டு, நவம்பர் 19ஆம் தேதி நடத்தப்பட உள்ளது.கூடுதல் தகவல்களை www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in ஆகிய தளங்களில் அறியலாம்’ என்று கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இணைய  சூதாட்டம் தடை செய்யப்படுமா? உச்சநீதிமன்றம் தாக்கீது

புதுடில்லி, செப். 11 இணைய ரம்மிக்கு தடை விதிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கில் இணைய  விளையாட்டு நிறுவனங் கள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

இணைய  சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்து கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றியது.  இந்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி இணைய  விளையாட்டு நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டது. அப்போது, ‘கடந்த 5 ஆண்டுகளில் இணைய  விளையாட்டிற்கு அடிமையாகி சில மரணங்கள் நிகழ்ந்த தால் இந்த விளையாட்டிற்குத் தடை விதிக்கப்பட்டது,’ என தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட உயர் நீதிமன்றம், ‘போதுமான காரணங்களை விளக்காமல் தடை சட்டம் இயற்றப்பட்டுள்ளது; உரிய முறைப்படுத்தும் விதிகள் இல்லாமல் இணைய  விளையாட்டுகளுக்கு ஒட்டு மொத்த மாக தடை விதிக்க முடியாது’ என தெரிவித்து, இணைய  ரம்மி விளையாட்டுக்கு எதிரான தமிழ்நாடு அரசின் சட்டத்தை ரத்து செய்து கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி உத்தரவிட்டது. இதனை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது. 

நீதிபதிகள் அனிருத் போஸ், விக்ரம் நாத் அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, இதற்கு பதில் அளிக்கும்படி இணைய  ரம்மி, இணைய  சூதாட்ட நிறு வனங்களுக்கு தாக்கீது அனுப்ப உத்தரவிடப்பட்டது. இந்த பதில் மனு தாக்கல் செய்யப்பட்டதும், அதற்கு தமிழ்நாடு அரசு சார்பில் விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்ட நீதிபதி கள், வழக்கை 10 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

No comments:

Post a Comment