தமிழர் தலைவர் ஆசிரியர் போர் முழக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 2, 2022

தமிழர் தலைவர் ஆசிரியர் போர் முழக்கம்

 ஆகமமா - அரசமைப்புச் சட்டமா? என்று கேட்டால், அரசமைப்புச் சட்டம்தான் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்புக் கூறியது!

இதற்கு மாறாக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்புக் கூறலாமா?

தமிழ்நாடு அரசு இப்பிரச்சினையில் உரியதை செய்து வெற்றி பெறும்!

நீதிமன்றத்தில் முடியாவிட்டால் - வீதிமன்றத்தில் இறங்கிப் போராடுவோம் - இது உறுதி!

சென்னை, செப்.2 அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைப் பிரச்சினையில் சென்னை உயர்நீதிமன்றம் -  உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தீர்ப்பில் கூறப்பட் டுள்ளது. தமிழ்நாடு அரசு பிறப்பித்த ஆணை செல்லும் - சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு சட்டப்படி தேவையானவற்றை உறுதி யாக செய்யும். நீதிமன்றத்தால் முடியாவிடின் வீதி மன்றத்தில் இறங்கிப் போராடுவோம் - திராவிடர் கழகம் அதனைச் செய்யும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை: உயர்நீதிமன்ற அண்மைக்காலத் தீர்ப்பு - ஓர் ஆய்வரங்கம்

நேற்று (1..9.2022) மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள அன்னை மணியம்மையார் அரங்கில் நடை பெற்ற ‘‘அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை: உயர்நீதிமன்ற அண்மைக்காலத் தீர்ப்பு - ஓர் ஆய்வரங்கம்’’ சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:

திராவிடர் இயக்கத்தினுடைய ஜாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு, அனைவருக்கும் 

சம வாய்ப்பு, சமத்துவம்!

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்ற திராவிடர் இயக்கத்தினுடைய ஜாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு, அனைவருக்கும் சம வாய்ப்பு, சமத்துவம் என்ற அடிப்படையிலே, நீதிக்கட்சி காலத்தி லிருந்து திராவிடர் இயக்கம், இன்றைய திராவிட மாடல் ஆட்சிவரை தொடர்ந்து சாதனைகள் நடந்துகொண் டுள்ளன. நீதிக்கட்சி காலத்தில், டாக்டர் நாயர் அவர்களு டைய  உரையும்  இதில் இடம்பெற்றிருக்கிறது - 1917 இல்.

ஒரு நூறாண்டுகளுக்கு முந்தைய பிரச்சினை. ஆனால், அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள், வைக் கத்தில் தொடங்கிய ஜாதிப்  பாம்பை அடித்து நொறுக்க வேண்டும் என்று நினைத்த அந்த எண்ணத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த ஒரு தலைவர். 

ஜாதிப் பாம்பு கடைசியாக சென்ற இடம் 

கோவில் கருவறை

அதை முக்கிய இலக்காகக் கொண்டு தொடர்ந்து ஜாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு, மனித சமுதாய உரிமைகள், சமத்துவம், சம வாய்ப்பு.

இந்தக் கொள்கைகளை முன்னிறுத்திக் கொண்டு வந்த ஓர் இயக்கத்தினுடைய அடிப்படையில், பல இடங்களில் இருந்த ஜாதிப் பாம்பை விரட்டி, விரட்டி - தெருக்களில் நடக்கக்கூடாது; குடிநீர்ப் பானைகள் தனித்தனியே இருக்கவேண்டும்; இங்கு இவர்தான் இருக்கவேண்டும்; திருமணத்திற்கு அவர் வந்தால்தான் செல்லுபடியாகும். இப்படியெல்லாம் இருந்த ஒவ்வொரு கட்டத்திலும் அந்த ஜாதிப் பாம்பு பல இடங்களில் சுற்றிக் கொண்டிருந்தபொழுது, கடைசியாக அது பாதுகாப்பான இடத்திற்குச் சென்ற இடம்தான் - கர்ப்பக்கிரகம் என்ற கோவில் கருவறை.

அதை தந்தை பெரியார் அவர்கள் அடையாளம் கண்டு, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்ற போராட்டத்தில் தன்னுடைய வாழ்நாள் இறுதிக் காலத்தில், அவரே தன்னுடைய 90 ஆண்டு களுக்குப் பிறகு ஈடுபட்ட அந்த வயது முதுமையைப்பற்றி கவலைப்படாமல் ஏற்பட்ட நேரத்தில், அதே திராவிடர் இயக்கம்- கலைஞர் அவர்களுடைய தலைமையில், அவர் முதலமைச்சராக இருந்த நேரத்தில், ‘‘நீங்கள் இதற்காகப் போராடவேண்டாம்; சட்டத்தின்மூலமாக  நாங்கள் என்ன செய்ய முடியுமோ, அதைத் தாராளமாக செய்கிறோம்'' என்றார்.

நல்ல நோக்கத்தோடு 

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் சட்டம்

ஜாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு என்கிற நல்ல நோக்கத்தோடு அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் சட்டத்தைக் கொண்டு வந்தார்.

மிக அருமையாக இங்கே கருத்துகளை எடுத்து வைத்து விளக்கமாக சொன்ன நம்முடைய அய்யா மூத்த வழக்குரைஞர் அய்யா சிகரம் செந்தில்நாதன் அவர்களே,

பல கருத்துகளை சுட்டிக்காட்டி எனக்கு முன்பு உரையாற்றிய ஓய்வு பெற்ற மேனாள் நீதிபதி அய்யா அரிபரந்தாமன் அவர்களே,

இந்நிகழ்வில் வரவேற்புரையாற்றிய நம்முடைய மூத்த வழக்குரைஞர் த.வீரசேகரன் அவர்களே,

இணைப்புரையை வழங்கிக் கொண்டிருக்கின்ற வழக்குரைஞர் மதிவதனி அவர்களே,

நன்றியுரை வழங்கவிருக்கக் கூடிய வழக்குரைஞர் வீரமர்த்தினி அவர்களே,

அறிவார்ந்த வழக்குரைஞர்கள், மூத்தவர்கள், பல் வேறு துறை அறிஞர்களைக் கொண்ட அவையினரே, கழகத் துணைத் தலைவர் உள்பட இயக்கப் பொறுப் பாளர்களே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தந்திரத்தில் கண்ணிவெடிகளைப் 

புதைத்து வைத்திருக்கிறார்கள்!

இந்தக் கருத்துகளை எடுத்துக் கூற நான் தொடங்கு வதற்கு முன்பு, மிகுந்த கவலையோடு, பொறுப்புடனும், நாம் நடத்தியிருக்கின்ற போராட்டத்தில் பெற்ற வெற்றிகளையெல்லாம் விட, நேரிடையாக சரித்திரம் என்று வராமல், தந்திரத்தின்மூலமாக நடந்ததை, நடக்கக் கூடிய,  அந்தத் தந்திரத்தை உணர்த்தவேண்டும், அந்தத் தந்திரத்தில் கண்ணிவெடிகளைப் புதைத்து வைத்தி ருக்கிறார்கள். அதுதான் மிக ஆபத்தானது; அதைத்தான் மிகத் தெளிவாக எடுத்துச் சொல்லவேண்டியிருக்கிறது.

என்ன அந்தக் கண்ணிவெடிகள் என்பதைப்பற்றி இங்கே சொன்னார்கள்.

அண்ணா அவர்கள் ‘ஆரிய மாயை'யில் ‘தந்திர மூர்த்தி போற்றி' என்று சொன்னார்.

3 சதவிகிதத்தினர் 97 சதவிகிதத்தினரை காலங்காலமாய் ஆண்டு கொண்டிருக்கிறார்கள்?

தந்திரங்கள், அந்தத் தந்திரங்கள்தான் அவர்களு டைய பலம். 3 சதவிகிதமாக இருக்கக்கூடியவர்கள், 97 சதவிகிதமாக உள்ளவர்களை காலங்காலமாக எப்படி ஆண்டு கொண்டிருக்கிறார்கள்?

அதற்குத் தந்திரங்கள்தான் ஆயுதம். அதே தந்திரத்தை ஒவ்வொரு காலகட்டத்திலும் அவர்கள் புகுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

இந்தப் போராட்டம் 50 ஆண்டுகளுக்குமேல் ஆகி விட்டது. நல்ல எண்ணத்தோடு ஓர் ஆட்சி இப்பொழுது இருக்கிறது.

முதலமைச்சர் கலைஞரின் கவலை!

கலைஞர் அவர்கள், ‘‘தந்தை பெரியாருக்கு என்னால் அரசு மரியாதையைத்தான் கொடுக்க முடிந்ததே தவிர, ஆனால், அவருடைய நெஞ்சில் தைத்த முள்ளை எடுக்கவில்லையே'' என்று கவலையோடு தெரிவித்தார்.

‘‘அடுத்து ஆட்சிக்கு நாங்கள் வருகிறபொழுது, என்ன சொன்னீர்களோ, அதன்படி பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை எடுப்போம்'' என்பதற்கொப்ப, இன்றைய ‘திராவிட மாடல்' ஆட்சி, ஒப்பற்ற முதல மைச்சர் அவர்களுடைய தலைமையில் நடைபெறக் கூடிய ஆட்சி வந்தவுடன், முதல் காரியமாக, 2021, ஆகஸ்ட் 14 ஆம் தேதியன்று, அந்தக் காரியத்தைத் தெளிவாக செய்தார்கள் அறநிலையப் பாதுகாப்புத் துறையின்மூலம்.

அறநிலையப் பாதுகாப்புத் துறையின்மூலம் அர சாங்கமே நேரிடையாக செய்கிறது என்றவுடன் நீதிமன்றத்தைக் கொஞ்சம் அந்தப் பக்கம் இழுக்கிறார்கள்.

அறநிலையப் பாதுகாப்புத் துறையில், அதற்கு விளக்கம் எழுதி, அந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்டி ருக்கின்றோம் என்று இந்தத் தீர்ப்பிலே கூட சொல்லு கிறார்கள்.

அரசியல் புரோக்கர் ஒருவர் தொடுத்த வழக்கு!

உச்சநீதிமன்றத்தில்கூட அரசியல் புரோக்கர் ஒருவர் வழக்குத் தொடுத்தபொழுதுகூட, இடைக்காலத் தடை விதிக்க முடியாது என்று நீதிபதிகள் மறுத்துள்ளனர்.

டிரஸ்டுகள்தான் வரவேண்டும், இவர்களுக்கு அதிகாரமே கிடையாது. ஒவ்வொரு கோவிலிலும் டிரஸ்டிகளின்மூலம்தான் செய்கிறார்கள்.

டிரஸ்டிகள் இல்லாத நேரத்தில், அந்தப் பணிகளைச் செய்வது யார் என்று கேட்டால், தக்கார் என்று அவர்கள் தமிழில் சொல்கிறார்கள்.

கடவுள்கள் பட்டினியோடு இருப்பார்களோ, இல்லையோ, அர்ச்சகர் பட்டினியாக இருப்பார்!

ஏனென்று கேட்டால், கோவில்களில் பணி நடக்கவேண்டுமே, இல்லையென்றால், கடவுளுக்கு பூஜை செய்ய முடியாது. பூஜை செய்யவில்லை என்றால், கடவுள் பட்டினியாக இருப்பார். அதுமட்டுமல்ல, கடவுள் பட்டினியாக இருப்பாரோ இல்லையோ, அர்ச்சகர் பட்டினியாக இருப்பார் - கோவில்களை மூடிவிட்டால்.

ஒரு காலத்தில் நாச்சியார்கோவிலை மூடினார் கள்; உடனே கடவுள் பட்டினியாக இருப்பார், திறங்கள் என்று சொன்னார்கள்.

ஆகவே, அவர்களுடைய தந்திரங்கள்மூலமாக இங்கே வரும்பொழுது, சின்னச் சின்ன விஷயங்களை யெல்லாம் பெரிதுபடுத்துவார்கள்; பெரிய விஷயங்களை மறைத்துவிடுவார்கள்.

முதலமைச்சரே, அவர்களை அழைத்து பணி நியமன ஆணைகளை வழங்கினார்; அப்படி அரசு செய்யலாமா? என்று பெரிய கண்டுபிடிப்புப் போன்று, அதை ஒருவர் உச்சநீதிமன்றத்தில் சொல்கிறார்.

சர்வீஸ் கமிஷனில்கூட பணி நியமனம் செய்கிறார்கள்; ஆணை பிறப்பிப்பது அரசுதானே!

எப்படி சட்டப்படி தவறு என்று 

சொல்ல முடியும்?

ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு, அதனுடைய கொள்கையை நிறைவேற்றி இருக்கிறது என்று காட்டுவதற்கு, அந்த ஆணையை முதலமைச்சர் மூலம் கொடுக்கிறார்கள். இது எப்படி சட்டப்படி தவறு என்று சொல்ல முடியும்?

அதேபோன்று, அவர்களுடைய தந்திரங்களைப் பார்க்கும்பொழுது, அந்தத் தீர்ப்பு அப்பொழுது ஊடகங்களின்மூலமோ, பத்திரிகைகளின்மூலமாகவோ வெளிவரவில்லை. அப்பொழுது வந்த செய்திகளை அடிப்படையாகப் பார்க்கும்பொழுது,  எல்லாவற்றிலும் பார்த்தீர்களேயானால், பார்ப்பனர்களுடைய தந்திரம், அவர்கள் தோற்றுப்போனால், அந்தத் தோல்வியை அவர்கள் வெளிப்படையாகக் காட்டுவதில்லை.

தோற்றுப் போன பிறகுகூட அவர்கள் சமாளித்துக் கொண்டு, அவர்கள் வெற்றி பெற்றதாகவே காட்டு வார்கள்.

அரசாங்கம் போட்ட உத்தரவு 

செல்லும் என்பதுதான்!

அதற்கு உதாரணம், சேஷம்மாள் வழக்கு. அந்த வழக்கில் முதலில் என்ன சொன்னார்கள்? அரசாங்கம் போட்ட உத்தரவு செல்லும் என்பதுதான். அன்றைக்கு அந்த உத்தரவு உடனே நமக்குக் கிடைக்கவில்லை.

சிவாச்சாரியார்கள் வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு வந்தபொழுது, அவர்கள் என்ன சொன்னார்கள்? அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் வழக்கில், அரசாங்கத் திற்குத் தோல்வி என்று வெளியில் சொன்னார்கள்.

அந்தத் தீர்ப்பில் என்ன இருக்கிறது என்று யாராலும் சரியாகப் படிக்க முடியாத அளவிற்கு, பிரச்சாரம், பிரச்சாரம், பிரச்சாரம்.

ஏனென்றால், அவர்களைப் பொறுத்தவரையில், தந்திரப் பிரச்சாரத்தில் மிகவும் கெட்டிக்காரர்கள்.

‘‘அய்வருக்கும் தேவியாம்; அழியாத பத்தினியாம்'' என்று சொல்வார்கள்.

இரண்டிற்கும் பெரிய முரண்பாடு. அய்வருக்கும் தேவியாக இருந்தால், அழியாதப் பத்தினியாக இருக்க முடியாது என்பது அவர்களுடைய கருத்துப்படி.

ஆனால், அவர்கள் சொன்னதுபோல, நாமும் அன் றைக்குக் கூட்டங்களைப் போட்டு, எடுத்துச் சொல்லி, இந்த வாய்ப்பு இருக்கிறது என்று சொன்னோம்.

அன்று எது மறைக்கப்பட்டதோ....

இப்பொழுது தீர்ப்பில் ஒரு செய்தி வந்திருக்கிறது. அன்று எது மறைக்கப்பட்டதோ, அந்த செய்திகள் இன்றைக்குத் தெளிவாக வெளிவரக்கூடிய வாய்ப்பு வந்திருக்கிறது.

அது என்னவென்றால், மிகப்பெரிய அளவிற்கு, இவ்வளவு பெரிய போராட்டத்திற்குப் பிறகு, வழக்குப் போடுகிறார்கள். அந்த வழக்குகளின் அடிப்படையில் என்ன செய்யவேண்டும் என்று வருகிறபொழுது, அவர்கள் தந்திரத்தினால் செய்திருக்கிறார்கள்.

இப்பொழுது வந்திருக்கின்ற தீர்ப்பு 93 பக்கங்கள். இதைப்பற்றி மேனாள் நீதிபதி அரிபரந்தாமன் அய்யா அவர்கள் எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

கூட்டத்திற்கு தலைப்பே தீர்ப்பைப்பற்றி ஆய்வரங்கம்!

இந்தக் கூட்டத்திற்கு தலைப்பே தீர்ப்பைப்பற்றி ஆய்வரங்கம் என்பதுதான்.

அந்தத் தீர்ப்பில் என்னென்ன குறைபாடுகள் இருக் கின்றன என்பதை ஆய்வு செய்தால்தான், நம்முடைய உடலை ஆய்வு செய்யும்பொழுது, ஸ்கேன் செய்து பார்த்தால்தான், எந்தெந்த இடத்தில் கோளாறுகள் இருக்கின்றன என்று தெரிந்தால்தான், சிகிச்சைக்கு சரியாக இருக்கும்.

அதுபோன்று இருக்கக்கூடிய அளவில், இந்த வாய்ப்புகளை அனுபவம் உள்ளவர்கள் இங்கே எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.

அந்தத் தீர்ப்பில் முதல் பகுதியில், மிகவும் சாமர்த்தி யமாக விதிகள் செல்லாது என்கிறார்கள்.

50 ஆண்டு காலத்தில் மூன்று வழக்குகள் மிகவும் முக்கியம்.

மூன்று வழக்குகளிலும், 

வழக்குத் தொடுத்தவர்கள் 

யார்? யார்?

ஒன்று, சேஷம்மாள் வழக்கு

இரண்டு, ஆதிசிவாச்சாரியார் 2015 ஆம் ஆண்டு வழக்கு

மூன்றாவது, 2022 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்திருக்கின்ற வழக்கு.

இந்த மூன்று வழக்குகளிலும், வழக்குத் தொடுத்தவர்கள் யார்? யார்?

நிறைய பேர் போட்டிருக்கிறார்கள் என்றார்கள். அந்த நிறைய பேரில், இரண்டு, மூன்று சூழ்ச்சிகள் என்னவென்று, நீதிபதி அய்யா அவர்கள் சொன் னார்கள்.

முதலில், பாதிக்கப்பட்டவர்கள்தான் வழக்குப் போடவேண்டும்.

இதுதான் சட்டம். இங்கே சட்ட நிபுணர்கள் இருக்கிறார்கள்.

இவர்களுக்கு உரிமை என்று ஏதாவது இருக் கும்பொழுதுதான், வழக்குப் போடவேண்டும்.

ஆனால், மிக சாமர்த்தியமாக என்ன செய்திருக் கிறார்கள் என்றால், PIL (Public Interest Litigation)  என்றார்கள்.

ஏன் இப்பொழுது வசதியாக மறைக்கப்பட்டது?

ஆனால், இதே நீதிபதி அலகாபாத்தில் இருக்கும் பொழுது, இதேபோன்று பொதுநல வழக்கு வருகிறது.

அந்தப் பொதுநல வழக்கைத் தள்ளுபடி செய்கிறார். 

அதற்கு என்ன காரணம் சொன்னார் என்றால், பொதுநல வழக்கு போடக்கூடாது; பாதிக்கப்பட்டவர் களாக இருந்தால் மட்டும்தான் வழக்குப் போடவேண்டும் என்று சொன்னார்.

அது ஏன் இப்பொழுது வசதியாக மறைக்கப்பட்டது?

பாதிக்கப்பட்ட ரங்கநாதன் வழக்கு என்னாயிற்று?

ரங்கநாதன் என்ற தனி நபருக்காக நான் சொல்ல வில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்குத்தானே முதல் உரிமை.

பயிற்சி பெற்று 10 ஆண்டுகளாயிற்று; சில பேர் அதில் இறந்து போய்விட்டார்கள். தொடர்ந்து போராட்டங்கள் நடந்தன.

சட்டப்பூர்வமாக பிறகு பார்க்கலாம்; முதலில் மனித உரிமை அல்லவா இது.

அந்தக் காலகட்டத்தில், குறிப்பிட்ட சில மனுக்களை நான் விசாரிக்கமாட்டேன் என்றால் என்ன அர்த்தம்?

அந்தக் குறிப்பிட்ட சில பேர் என்பவர்கள் யார்?

எங்களிடம் இருந்தால்தான் அது கோவில்; எங்களிடம் இல்லாவிட்டால்... 

கோவிலே இல்லையாம்!

வழக்குத் தொடுத்தவர்களில், இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறையின்கீழ் கோவில்களே இருக்கக் கூடாது. கோவில்களில் அர்ச்சகர் ஆகம விதிப்படி நியமிக்கவேண்டும்; ஆனால், கோவில்கள் எங்களிடம் இருந்தால்தான் அது கோவில். எங்களிடம் இல்லா விட்டால், அது கோவிலே இல்லை.

பூஜைகளை நாங்கள்தான் செய்யவேண்டும். சூத்திரர் களோ, பஞ்சமர்களோ செய்தால், அது பூஜை அல்ல.

ஒரு குலத்துக்கொரு நீதி - மனுநீதி - இதுதான் அவர்களுடைய எண்ணம்.

இதை நடைமுறைப்படுத்துவதற்கு எங்கெங்கே வாய்ப்பு கிடைக்குமோ அங்கெல்லாம் இன்றைக்கும் நடந்து கொண்டிருக்கின்றார்கள் என்றால், இந்தப் போராட்டம், வெறும் சட்டப் போராட்டமாக அமையாது.

இது பார்ப்பனர் - பார்ப்பனரல்லாத போராட்டமாகத் தான் மிகப்பெரிய அளவில் வெடிக்கும்.

இந்த அரசாங்கம் எல்லோருக்கும் பாதுகாப்பாக இருந்து செயல்படுகிறது

அது மிகப்பெரிய அளவில் வெடிக்காமல் இருப்ப தற்கு என்ன காரணம் என்றால், தமிழ்நாடு அரசாங்கம் தான். இந்த அரசாங்கம் எல்லோருக்கும் பாதுகாப்பாக இருந்து செயல்படுகிறது - நிதானமாக செயல்படுகிறது.

இந்த அரசைப் பொறுத்தவரையில், சமூகநீதிக்கான சரித்திர நாயகர் என்று நம்மால் வர்ணிக்கப்படுகின்ற முதலமைச்சர் அவர்களுடைய நல்லெண்ணம், ‘‘பெரியார் அய்யா அவர்கள் நெஞ்சில் தைத்த முள்ளை எடுக்க முடியவில்லையே என்று முத்தமிழ் அறிஞர் கவலைப்பட்டாரே, அந்த நெஞ்சில் தைத்த முள்ளை நான் வந்து எடுக்கவேண்டும்; அதுதான் முக்கியமானது'' என்றார்.

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக நெய்வேலியில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுவில் தீர்மான மாகப் போட்டோம் நாங்கள்.

நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு!

நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்து, அறிக்கைக் கொடுத்தார்கள். அந்த அறிக்கையின்படி தமிழ்நாடு அரசும் செயல்பட்டது.

அண்மையில் வந்த தீர்ப்பை ஆய்வு செய்து, தீர்வு செய்யவேண்டும் என்று சொல்லி, பந்தை என்னிடத்தில் தள்ளியிருக்கிறார்கள்.

எந்தத் தியாகத்தையும் செய்வதற்கு 

திராவிடர் கழகம் தயாராக இருக்கிறது

ஏனென்றால், இது சாதாரண பிரச்சினையல்ல - அதற்காக இருக்கின்ற ஒரு பணித் தோழன் - கடைசி தோழன் நான். என்றைக்கும் அதை சுமந்து கொண்டி ருப்பவன். சிலுவை சுமந்தார் என்று உவமை சொல் வார்கள் அல்லவா - அதுபோன்று எந்தக் கஷ்டத்தையும் சுமப்பதற்குத் திராவிடர் கழகம் தயாராக இருக்கிறது. எந்தத் தியாகத்தையும் செய்வதற்கும் தயாராக இருக்கிறது.

சட்ட ரீதியாக வரும்பொழுது, சில சட்ட சிக்கல்களை உண்டாக்குகிறார்கள். தவறாகச் சொல்லி, அதை நம்ப வைப்பது.

முதலமைச்சருடைய நல்லெண்ணம், நோக்கம் - தி.மு.க.வினுடைய கொள்கைத் திட்டம் இவை அத்தனையும் மிகத்தெளிவாக இருக்கின்ற நேரத்தில், நமக்குச் சாதகமான சூழலை, பாதகமாக இருப்பதாக சித்தரிக்கிறார்கள்.

எப்படி என்று சொல்லும்பொழுது, எது தவறான தீர்ப்பு என்று சொல்லுகின்ற நேரத்தில், தீர்ப்பின் முதல் பகுதியில், நியமனங்கள் செல்லும் - விதிகள் செல்லும்.

ஆனால், அதற்கு அடுத்ததாக எங்கே புள்ளி வைக்கிறார்கள் என்றால், இதற்கு சம்பந்தமேயில்லாத ஒரு விஷயத்தை உள்ளே கொண்டு வருகிறார்கள்.

அதனால்தான் இப்பொழுது பிரச்சினை. இந்த வழக்கைப் பொறுத்தவரையில், பாதிக்கப்பட்டவர்கள் நிறைய பேரை விசாரிக்க தயாராக இல்லை என்று சொன்னது ஒன்று.

மீண்டும் முழுமையாக அவர்களால் 

ஆதிக்கம் செலுத்த முடியாது!

அதற்கடுத்து, கோவில்கள் அறநிலையப் பாதுகாப்புத் துறையில் இருக்கக்கூடாது என்று சொன்னவர்களை உள்ளே விட்டுள்ளதாகும். அவர்களுடைய மிக முக்கியமான பிரச்சாரம் என்னவென்று சொன்னால்,  மிக சாமர்த்தியமாக, ஆகம விதிப்படிதான் நடக்கிறது என்று அவர்களுக்குத் தெரிந்துவிட்டது. இதில் மீண்டும் முழுமையாக அவர்களால் ஆதிக்கம் செலுத்த முடியாது என்றும் தெரிந்துவிட்டது.

அவர்களின் தந்திரத்தினுடைய முகமூடியை பெரியார் திடல், பெரியார் தத்துவம் கிழித்துக் காட்டும்

அவர்களுடைய தந்திரத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். அவர்களுடைய தந்திரத்தினுடைய முகமூடியை பெரியார் திடல், பெரியார் தத்துவம் கிழித்துக் காட்டும் - அதுதான் எங்களுடைய வேலை.

இப்பொழுது அவர்கள் சட்ட பூர்வமாக சொல்லிவிட்டார்கள் என்கிற ஆதாரத்தை நான் சொல்கிறேன்.

என்ன அந்த தந்திரம் என்று சொன்னால், இதுவரை உச்சநீதிமன்றம் என்ன சொல்லிற்றோ அதன்படி தீர்ப்புக் கொடுக்கவேண்டியது உயர்நீதி மன்றத்தினுடைய வேலை.

ஒன்றை, புதிதாகக் கொண்டு வந்து 

உள்ளே நுழைக்க முடியாது!

அப்படியிருக்கும்பொழுது, உச்சநீதிமன்றம் சொல் லாத ஒன்றை, புதிதாகக் கொண்டு வந்து உள்ளே நுழைக்க முடியாது.

ஆனால், அவர்கள் நினைத்தால் எதையும் செய்ய முடியும் என்று சொல்லக் கூடிய நிலையில், மிக முக்கிய மான ஓர் அடிப்படை என்ன?

இன்றைக்குத் தீர்வு வருவதற்கு முன்பு, கவனிக்க வேண்டிய ஒரு செய்தி என்னவென்றால்,

இப்பொழுது வந்த தீர்ப்பில், முதலில் ஒரு பகுதியைச் சொன்னேன்.

சில பேரை தள்ளிவிடுகிறார்கள்; அவர்களை விசா ரிக்கமாட்டோம் என்று சொன்னார்கள்.

அதற்கு அடுத்த கட்டமாக, விசாரிக்க எடுத்துக் கொண்ட பிறகு, பாரா 10 இல்,

அதற்கு முன்பு என்ன சொல்கிறார்கள், விதிகள் செல்லும் - நியமனம் செல்லும்.

ஆனால், புதிதாக ஒரு கருத்தை சொல்கிறார்கள்.

உயர்நிலைக் குழுவினுடைய அறிக்கை 

கெசட்டில் வந்திருக்கிறது

நியமனம் செல்லும் என்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டியதுதானே - அடுத்து எங்கே போகிறார்கள் - யாருக்குச் செல்லும்? என்று சொல்லும்பொழுது, சேஷம்மாள் வழக்கில் என்ன சொல்லியிருக்கிறார்கள் - உச்சநீதிமன்றம் என்ன சொல்லியிருக்கிறது என்று சொன்னால், இதைச் சொல்லும்பொழுதே, ஏற்கெனவே இந்தப் பிரச்சினையை முதலில் சொன்னவுடன், கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருக்கும்பொழுது, நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், உயர்நிலைக் குழு நியமிக்கப்பட்டது.

அந்த உயர்நிலைக் குழுவினுடைய அறிக்கை கெசட்டில் வந்திருக்கிறது.

அந்த உயர்நிலைக் குழுவில், ஆதிசிவாச்சாரியார் இருக்கிறார், ஜீயர் இருக்கிறார், குன்றக்குடி ஆதினகர்த் தர்கள், பேரூர் மடத்துக்காரர் இருக்கிறார்கள் - இவர்கள் அத்துணை பேரும் தமிழ்நாட்டில் இருக்கிற எல்லா கோவில்களுக்கும் சென்று, எங்கெங்கே என்ன நடக் கிறது என்பதைப் பார்த்து அறிக்கை கொடுத்திருக் கிறார்கள் 2008 ஆம் ஆண்டு.

ஆகமம் இல்லாத கோவில்கள் - 

ஆகமக் கோவில்கள் என்று புதிதாக ஒன்றைப் புகுத்துகிறார்கள்

இப்பொழுது மறுபடியும் எதுவும் நடக்காதது போன்று, புதிதாக ஒன்றைச் சேர்க்கிறார்கள் என்றால், அதனுடைய தந்திரம் என்னவென்றால், முழுக்க நம்மிடம் வர முடியாது; ஒப்புக் கொள்வது போன்று செய்வோம் - அதெல்லாம் ஆகமம் இல்லாத கோவில்கள் - ஆகமக் கோவில்கள் என்று புதிதாக ஒன்றைப் புகுத்துகிறார்கள்.

இது சேஷம்மாள் வழக்கிலோ, அல்லது ஆதித்தன் வழக்கிலோ அல்லது சிவாச்சாரியார் வழக்கிலோ - ஆதித்தன்  வழக்கைக்கூட விட்டுவிடலாம், அது கேரள மாநிலத்தில் நடைபெற்ற வழக்கு.

மற்ற இரண்டு வழக்குகள் - 1972 ஆம் ஆண்டு கொடுத்த தீர்ப்பு - 2015 ஆம் ஆண்டு கொடுத்த தீர்ப்பு - இந்த இரண்டு வழக்கில், எங்காவது புதிதாக நீங்கள் ஆகமக் கோவில்களை அடையாளம் கண்டுகொள் ளுங்கள் என்று இருக்கிறதா?

பிரச்சினை என்னவென்பதை தயவு செய்து புரிந்துகொள்ளவேண்டும்.

பரம்பரை அர்ச்சகர் ஒழிப்பு செல்லும் என்று சேஷம்மாள் வழக்கில் சொல்லியாயிற்று.

தி.மு.க. அரசு போட்ட உத்தரவு 

செல்லும், செல்லும், செல்லும்!

அடுத்து, தி.மு.க. அரசு கொண்டு வந்த உத்தரவு செல்லும்.  மூன்று வழக்கிலும், இன்றைய வழக்கு வரை யிலும் தி.மு.க. அரசு போட்ட உத்தரவு செல்லும், செல்லும், செல்லும்.

எல்லாம் முடித்துவிட்டு, கடைசியில் ஒரு கண்ணி வெடி உள்ளே இருக்கிறது. 

அந்த வழக்கில் செல்லும் - நாத்திகர்களையெல்லாம் கொண்டு வந்து நியமனம் செய்துவிடுவார்கள் என்று பயம் இருக்கிறது என்று சொன்னவுடன்,

இங்கே நம்முடைய செந்தில்நாதன் அய்யா ஒன்றைச் சொன்னார், இது ஆத்திக - நாத்திக பிரச்சினையல்ல. இது மனித உரிமைப் பிரச்சினை. அதற்காக எல்லோரும் போராடவேண்டும் என்ற கருத்தை சொன்னார். அதில் ஒரு சின்ன விளக்கம் சொல்ல விரும்புகிறேன்.

பல பேர் புரியாமல் சொல்கிறார்கள், கடவுள் இல்லை என்று சொல்வது நாத்திகம் இல்லை. இந்து மதக் கருத்துப்படி, சங்கராச்சாரியார் கருத்துப்படி.

நாத்திகர் என்பதற்கு 

சங்கராச்சாரியாரின் விளக்கம்!

நாத்திகர் என்பதற்கு என்ன விளக்கம் கொடுத் திருக்கின்றார் சங்கராச்சாரியார் என்றால்,

‘‘நாத்திகர் என்றால், கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் அல்ல. வேதம் - வேதாந்தத்தை மறுக்கின்றவர்கள்.''

அதன்படி பார்த்தீர்களேயானால், மறைமலையடிகள் நாத்திகர். சோமசுந்தர பாரதியார் நாத்திகர்; பக்தர்கள் யாராக இருந்தாலும் நாத்திகர்கள்தான். சைவ சித்தாந்த அத்தனைப் பேரும் நாத்திகர்கள்தான். இன்னுங் கேட்டால், வைணவர்களும் நாத்திகர்கள்தான்.

அதுமட்டுமல்ல, ஹிந்து மதத்தினுடைய பெருமையே என்னவென்றால், கடவுள் உண்டு என்றவனும் ஹிந்துதான்; கடவுள் இல்லை என்றவனும் ஹிந்துதான்.

ஆகவே, கடவுள் மறுப்பாளன் நாத்திகன் என்று சொல்வது குழப்பமான விளக்கம், தேவையில்லாத விளக்கம்.

எனவே, வேதாந்தம், சித்தாந்தம் என்றால், வேத முடிவு - முழுக்க முழுக்க எதிரான தத்துவங்கள்.

கோவில்கள் - ஆகமங்கள் - மாற்றங்கள்பற்றி நீதியரசர் ஏ.கே.ராஜன் புத்தகம்!

அப்படியிருக்கும் சூழ்நிலையில், தெளிவாக உயர் நிலைக் குழு அடையாளம் கண்டு, அப்பொழுதே 2008 இல், கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த பொழுது உயர்நிலைக் குழு அறிக்கை கொடுத்து, அவர்கள் எல்லா இடங்களுக்கும் சென்று பார்த்து, அறிக்கையில் இருப்பதை, பொதுமக்களுக்கு விளங்க வேண்டும் என்பதற்காக, கோவில்கள் - ஆகமங்கள் - மாற்றங்கள்பற்றி நீதியரசர் ஏ.கே.ராஜன் புத்தகமாக வெளியிட்டு இருக்கிறார்.

அதில் இருக்கிற இரண்டு செய்திகளைச் சொல் கிறேன்.

ஆகமக் கோவில்கள் - ஆகமம் அல்லாத கோவில் கள் என்று பிரித்து புதிதாக ஒரு குழுவை போட்டிருக்கிறார்கள்.

உயர்நீதிமன்றத் தீர்ப்பின் 10 ஆவது பாரா!

புதிதாகக் கொடுத்த தீர்ப்பில் 10 ஆவது பாராவில்,

1972 இல் சேஷம்மாள் வழக்கில் இல்லாதது - 2015 இல் ஆதிசிவாச்சாரியார் வழக்கில் இல்லாததை - புதிதாக ஒன்றை உயர்நீதிமன்றம் சொல்கிறது.

மேல்முறையீடு செய்வதென்றால் நாம் போகலாம்.

இப்பொழுது வந்த தீர்ப்பில்,

கொடுத்த விதிகள் செல்லும் என்று சொல்லிவிட்டு,

An additional argument was made to constitute a Committee headed by a Retired High Court Judge to identify the temples, where construction, installation of idols and worship of deity is as per Agamas. 

இதற்கு உச்சநீதிமன்ற வழக்கான 1972 இல் சேஷம் மாள் வழக்கிலோ,  2015 இல் ஆதிசிவாச்சாரியார் வழக்கிலோ இடம் இருக்கிறதா?

இவர்களுடைய வேலை என்ன? அரசு உத்தரவு செல்லும் என்று சொல்லியாகிவிட்டது. ஆகம விதிப்படி இருக்கவேண்டும் என்று சேஷம்மாள் வழக்கில் சொன் னவுடன், நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவை அமைத்தார்கள். 

69 சதவிகித இட ஒதுக்கீடுப்படி 

205 பேர் பயிற்சி பெற்று வந்தார்கள்

அந்தக் குழுவின் அறிவுரைப்படி, ஆகம பயிற்சிப் பள்ளிக்கூடங்களைத் தொடங்கினார்கள். ஆகமத்தை முறைப்படி படித்து, பூணூல் போட்டு, பாடத் திட்டங்களை உண்டாக்கி, 69 சதவிகித இட ஒதுக்கீடுப்படி 205 பேர் பயிற்சி பெற்று வந்தார்கள்.

அதில் குழப்பம் வரக்கூடாது என்பதற்காக, வைஷ்ணவ கோவில்களில் வைணவ மதத்திற்குரிய ஆகமம் என்னவோ அதைப் படித்து, தீட்சைப் பெற்று வந்தார்கள்.

சிவ ஆகமம் படித்து, சைவக் கோவில்களில் தீட்சைப் பெற்று வந்தார்கள்.

அதில் என்ன குழப்பம்?

அப்படி தனித்தனியாக பயிற்சி பெற்று வந்த பிறகு, அதில் என்ன குழப்பம்?

அதன்படிதான் தமிழ்நாடு அரசும் பணி நியமனங் களை செய்திருக்கிறது.

உயர்நிலைக் குழுவும் நேரிலே சென்று ஆராய்ந்து பார்த்துத்தான் அறிக்கையை கொடுத்திருக்கிறது.

தமிழ்நாட்டில் திருக்கோவில்கள் வகைகள்!

2008 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி கொடுத்த அறிக்கையின்படி,

தமிழ்நாட்டில் திருக்கோவில்கள் வகைகள். தற்போது தமிழ்நாட்டில் உள்ள கோவில்களின் நடைமுறைகளின் அடிப்படையில் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம்.

நான்கு வகை:

1. ஆகம முறைப்படி கட்டப்பட்டு, ஆகம முறைப்படி பூஜைகள் நடைபெற்றுவரும் கோவில்கள்.

2. ஆகம முறைப்படி கட்டப்படாமல், ஆனால், ஆகம முறைப்படி பூஜைகள் நடைபெறும் கோவில்கள்.

3. ஆகம முறைப்படி கட்டப்பட்டு, ஆனால், ஆகம முறைப்படி பூஜைகள் நடைபெறாத கோவில்கள்.

4. ஆகம முறைப்படியும் கட்டப்படாமல், ஆகம முறைப்படி பூஜைகளும் நடைபெறாத கோவில்கள்.

இவ்வாறு நான்கு வகையாக இருக்கிறது.

ஜனவரி ஒன்றாம் தேதி விடுமுறை விடுகிறீர்களே, இதில் ஆகமம் உண்டா?

தமிழ்நாட்டைத் தவிர, வேறு இடங்களில் உள்ள கோவில்களுக்கு ஆகம விதிகளே கிடையாது!

இந்தியா முழுவதும் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம் என்றெல்லாம் சொல்கிறீர்களே, ஒரே ஒரு அற்புதமான விஷயம் என்னவென்றால், இந்த ஆகம விதிகள் தமிழ்நாட்டைத் தவிர, வேறு இடங்களில் உள்ள கோவில்களுக்கு ஆகம விதிகளே கிடையாது.

காசி விசுவநாதர் கோவிலுக்குச் சென்றீர்கள் என்றால், நேரே உள்ளே செல்லலாம். பெரியார் அய்யா அவர்கள், வண்டியை நிறுத்திவிட்டு, உள்ளே சென்று பார்த்துவிட்டு வா என்று என்னிடம் சொன்னார்.

ஒரு பசு மாட்டை கொண்டு செல்கிறார்கள். மாடும் கோவிலைச் சுற்றி வருகிறது.

மாடும் வருகிறது, மனிதனும் வருகிறான்.

அது ஆகமக் கோவில் இல்லை என்று சொல்கிறார்கள்.

இதற்கு என்ன அர்த்தம்?

சைவ கோவில்தான் அது.

தற்போதுள்ள ஆகம விதிமுறைகள் அனைத்தும் தமிழ்நாட்டில் மட்டுமே நடைமுறையில் உள்ளது.

எலக்ட்ரிக் விளக்கை 

எந்த ரிஷி கண்டுபிடித்தான்?

இன்றைக்கு எல்லா கோவில் கருவறைகளிலும் என்ன விளக்கு எரிகிறது? எலக்ட்ரிக் விளக்குதானே எரிகிறது. எலக்ட்ரிக் விளக்கை எந்த ரிஷி கண்டு பிடித்தான்? வெள்ளைக்காரன்தானே, கிறித்தவன்தானே, ஆல்வா எடிசன்தானே கண்டுபிடித்தார்.

மின்சாரம் உள்ளே சென்றாலே, ஆகமம் போயிற்றே!

ஏர்கண்டிஷனில்தான் இருக்கிறார் வெங்கடாசலபதி கோவில் கருவறை அர்ச்சகர். ஆகமத்தில் ஏர்கண்டிஷன் இருக்கிறதா?

இப்படியெல்லாம் கேள்விகள் கேட்டுக்கொண்டே போகலாம்.

ஆகமப் பயிற்சி பெறாதவர்கள் 

பெரிய கோவில்களில் அர்ச்சகர்களாக இருக்கிறார்கள்

ஆகமப் பயிற்சி பெறாதவர்கள் எந்தெந்தக் கோவில்களில் அர்ச்சகர்களாக இருக்கிறார்கள் என்ற பெரிய பட்டியலை நீதிபதி ஏ.கே.ராஜன் அவர்கள் அந்த அறிக்கையில் கொடுத்திருக்கிறார்.

சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில், ஆகம பயிற்சி பெறாத அர்ச்சகர்கள் இருக் கிறார்கள்.

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஆகம பயிற்சி பெறாத அர்ச்சகர்கள் இருக்கிறார்கள்.

திருச்செந்தூர் கோவிலில் ஆகம பயிற்சி பெறாத அர்ச்சகர்கள் இருக்கிறார்கள்.

வடபழனி கோவிலில் ஆகம பயிற்சி பெறாத அர்ச்சகர்கள் இருக்கிறார்கள்.

வரிசையாக பட்டியல் போட்டிருக்கிறார். இதற்காக ஒரு குழு அமைக்கவேண்டியதில்லை.

ஆனால், அவர்களுடைய நோக்கம் இப் பொழுது என்னவென்றால், முழுக்க அவர்களால் வெற்றி பெற முடியாது என்றவுடன், இன்றைய அரசாங்கம் மிகத் தெளிவாக கொள்கை ரீதியாக இருக்கிறது என்றவுடன், புதிதாக ஒரு தந்திர முறையை கையாளவேண்டும் என்பதுதான்.

குறுக்கே ஒரு கோடு போட்டுக் காட்டலாம் என்று நினைக்கிறார்கள்!

என்ன அவர்களின் தந்திர முறை என்றால், ஆகமக் கோவில்களை நாம் பிடித்துக் கொள்ளவேண்டும். கடைசியாக ஒரு முயற்சியை செய்து பார்க்கலாம். ஆகமம் இல்லாத கோவில்களில் அவர்கள் போகட்டும் என்று குறுக்கே ஒரு கோடு போட்டுக் காட்டலாம் என்று நினைக்கிறார்கள்.

அதற்காகத்தான் அந்தத் தீர்ப்பின் பாரா 10 இல்,

An additional argument was made to constitute a Committee headed by a Retired High Court Judge to identify the temples, where construction, installation of idols and worship of deity is as per Agamas

இது எந்த இடத்தில் இருக்கிறது. ஏன் புதுக்கரடி பூஜையில் நுழையவேண்டும். இந்தக் கேள்விக்கு என்ன பதில்?

அடுத்தபடியாக தெளிவாக சொல்லியிருக்கிறார்கள். ஒருமுறை அல்ல, பலமுறை எடுத்துச் சொல்லியிருக் கிறார்கள்.

உச்சநீதிமன்றத்தினுடைய தீர்ப்புகளைப்பற்றி சொல் லும்பொழுது, நான்கு இடத்தில் மிக அருமையாக சொல்லியிருக்கிறது.

மூன்று இடங்களை மட்டும் உங்களுக்குச் சொல்ல வேண்டும்.

2015 இல் கொடுத்த உச்சநீதிமன்றத் தீர்ப்பைப்பற்றி நீதிபதி அய்யா அரிபரந்தாமன் சொன்னார்.

Seshammal is not an authority

ஆகமங்களே சரியாகத் தொகுக்கப்படாதவை!

ஆகமங்களைப்பற்றி சொல்லும்பொழுது ஓரிடத்தில், 2016 இல், கோகாய், ரமணா ஆகிய இரண்டு நீதிபதிகள்,

ஆகமங்களே சரியாகத் தொகுக்கப்படாதவை. சரியான ஆதாரங்களோ இல்லாதவை என்று சொன்னது மிகத் தெளிவாக பதிவாகியிருக்கிறது.

மூன்று இடங்களில் மிக முக்கியமான கருத்தை சொல்லியிருக்கிறார்கள்.

அந்த மூன்று இடங்களை மட்டும் எடுத்துச் சொல்ல விரும்புகிறேன்.

உச்சநீதிமன்றத்திற்கு முரணாகத்தான் இந்தத் தீர்ப்பைக் கொடுத்திருக்கிறார்கள்!

உச்சநீதிமன்றத்தினுடைய 2015 ஆம் ஆண்டினுடைய தீர்ப்பைப் பின்பற்றவேண்டியதுதான் உயர்நீதிமன்றத்தி னுடைய வேலை. அதைப் பின்பற்றவில்லை. அதற்கு நேர் விரோதமாக, முரணாகத்தான் இந்தத் தீர்ப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.

அதில் என்ன தெளிவாகச் சொல்லப்பட்டு இருக்கிறது என்று சொன்னால், ஆகமமா? அரசமைப்புச் சட்டமா? என்று சொன்னால், அரசமைப்புச் சட்டத்தின் விதிகள் மட்டும்தான் கடைசியில் நிற்கும். மற்ற எதுவும் இருக்காது என்று மிகத் தெளிவாக எடுத்துச் சொல்லிவிட்டு, ஓரிடத்தில் மட்டுமல்ல, மூன்று, நான்கு இடங்களில் சொல்லியிருக்கிறார்கள்.

அரசமைப்புச் சட்டத்திற்கு நிகராக - 

ஆகம விதிகளோ, மற்ற எதுவும் நிற்காது!

முதலில் ஆகமம் அது, இது என்று சொல்லிவிட்டு, அதன் பின்னால் செல்வது போன்று காட்டிவிட்டு, பின்னால் என்ன சொல்கிறார்கள், 

“Consequently and in the light of the aforesaid discussion, we dispose of all writ petitions in terms of our findings, observations and directions above reiterated that as held in Seshammal (supra) appointment of Archakas will have to be made in accordance with Agamas,

என்று சொல்லிவிட்டு, அதற்கு அடுத்த பகுதி என்பதுதான் மிக முக்கியமானது. 

subject to their due  identification as well as their conformity with the Constitutional mandates and principles as discussed above.

இரண்டும் வந்தால், கடைசியில் எது வரும் என்று சொன்னால், கடைசியாக அரசமைப்புச் சட்டம்தான் கடைசியாக நிற்கவேண்டியது. அரசமைப்புச் சட்டத் திற்கு நிகராக - ஆகம விதிகளோ, மற்ற எதுவும் நிற்காது.

அதைத்தான் அய்யா அவர்கள் 13 ஆவது பிரிவை எடுத்துச் சுட்டிக்காட்டினார். அதில் தெளிவாக இருக்கிறது.

ஏனென்றால், சமூக சீர்திருத்தம்.

இன்னொன்று, சேஷம்மாள் வழக்கு - கலைஞர் காலத்தில் உச்சநீதிமன்றத்தில் வந்த வழக்கு இருக்கிறதே, அதில், இது செல்லும் என்று சொன்னவுடன், 

நாத்திகர்களையெல்லாம் இவர்கள் அர்ச்சகர்களாக்கி விட்டால் என்ன செய்வது என்றனர்.

எழுத்துமூலமாக பதில்!

உடனே, அட்வகேட் ஜெனரல் எழுத்துமூலமாக பதில் கொடுக்கிறார்.

இது சமூக சீர்திருத்தமே தவிர, மத சீர்திருத்தம் செய்ய நாங்கள் வரவில்லை என்று.

தெளிவாகிவிட்டதே. இதில் குழப்பமே இல்லை. பிறகு ஏன் மேலே மேலே செல்வதற்கு அவசியம் என்ன இருக்கிறது? 

வேண்டுமென்றே இந்தத் தந்திரங்களைக் கையாளு கிறார்கள்.

அரசமைப்புச் சட்டமா? ஆகம விதிகளா? என்றால், அரசமைப்புச் சட்ட விதிகள்தான் கடைசிவரையில் என்பதுதான் அந்தத் தீர்ப்பு.

அதைக் கடைப்பிடிக்காமல், அதனுடைய முன் பகுதியை மட்டும் வைத்துவிட்டார்கள்.

அதேபோன்றுதான் இப்பொழுது.

‘தினமலர்' வெளியிட்ட செய்தி!

30.8.2022 அன்று வெளிவந்த ‘தினமலர்' பத்திரி கையில், ‘‘மயிலை கபாலீஸ்வரர் கோவில் நிர்வாகத்தை ஏற்கும் பக்தர்கள்'' என்ற தலைப்பில் ஒரு செய்தி.

‘‘கோவில் நிர்வாகங்களை பக்தர்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தி, சென்னை கபாலீஸ்வரர் கோவிலில், இன்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடக்க உள்ளது. ஹிந்து கோவில்கள் நிர்வாகம் தொடர் பாக, ஹிந்து சமய அறநிலையத் துறைமீது பல்வேறு புகார்கள், குற்றச்சாட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. உச்சநீதிமன்றம், உயர்நீதி மன்றங்களில் பல வழக்குகளும் தொடுக்கப்பட் டுள்ளன. 

கோவில்கள் ஆகம ரீதியில் நிர்வகிக்கப்பட வேண்டும் என நீதிமன்றங்கள் உத்தரவிட்டு உள் ளன. ஆனால், உத்தரவுகளை மீறி, அற நிலையத் துறை விதிமீறல்களில் ஈடுபட்டு வருவதாக பக்தர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்நிலையில், ‘ஹிந்துக் கோவில்களின் நிர் வாகங்களை பக்தர்களிடம் ஒப்படைக்க வேண்டும்‘ என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தன்னார் வலர்கள் பலர் இணைந்து, சென்னை கபாலீஸ்வரர் கோவிலில், இன்று மாலை 6:00 மணியளவில் ஒரு நிகழ்ச்சி நடத்துகின்றனர். பக்தர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கபாலீஸ்வரரைத் தரிசித்த பின்னர், பக்தர்கள் மத்தியில் சொற்பொழிவு நிகழ்த்தப்படும். ‘பக்தர்கள் இனி கோவில்களுக்கு சென்று வழிபடுவதோடு கோவில் நிர்வாகம் செம்மையாக நடக்கிறதா என்பதை சட்டப்பூர்வமான வழியில் கண்காணிக்கவேண்டும்.

கோவில் பணம் மடைமாற்றப்பட்டிருந்தால் கோவில் நிர்வாகம் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க ‘சட்டப்பூர்வ வழிகாட்டுதல்கள் வழங்கப் படும்‘ என்பது உள்ளிட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இந்த நிகழ்வில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள், தன்னார்வலர்கள், 

கோவில் நிர்வாகம் தொடர்பாக வழக்குகள் தொடுக்கும் பக்தர்கள் என பல தரப்பினர் பங்கேற்கின்றனர்'' என்பது செய்தி.

கோவில் நிர்வாகத்தை ஏற்கும் பக்தர்கள் என்று செய்தி வெளியிடுகிறார்கள். ஆகவே, இதனுடைய நோக்கம் என்ன? அறநிலையப் பாதுகாப்புத் துறையை ஒழிக்கவேண்டும்.

எங்களிடம் பாதிக் கோவில்கள்; 

உங்களிடம் பாதிக் கோவில்கள்!

நீதிக்கட்சி ஆட்சியில் கொண்டு வந்த அறநிலையப் பாதுகாப்புத் துறையை ஒழிக்கவேண்டும். கோவில் பூனைகள் என்றும், கோவில் பெருச்சாளிகள் என்றும் அப்பொழுதே எழுதியிருக்கிறார்கள். அதையெல்லாம் நீக்கவேண்டும் என்பதற்காகத்தான் இவர்கள் முயற்சி செய்கிறார்கள்.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆவதைத் தடுக்க முடியாது என்றவுடன்,  எங்களிடம் பாதிக் கோவில்கள் இருக்கவேண்டும்; மீதி கோவில்கள் உங்களிடம் இருக்கட்டும் என்பதா?

கிராமங்களில் கோவில் பூசாரிகள் இருக்கிறார்களே, அவர்கள் எல்லாம் வேறு ஜாதிதானே? அதற்காக நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்?

ஆக,  இப்பொழுது அவர்களுடைய நோக்கம் என்ன வென்றால், ஆகம விதிகளைப் படித்து, பயிற்சி பெற்ற வர்கள் கற்பகாம்பாள் கோவிலுக்குப் போகக்கூடாது; மீனாட்சியம்மன் கோவிலுக்குப் போகக்கூடாது.

அவர்களுக்கு என்ன வயிற்றெரிச்சல் என்றால், இப்பொழுது ஆகமப் பயிற்சி பெற்று நியமனம் செய்யப்பட்டவர்கள், ஆகமக் கோவிலுக்குள்ளும் சென் றிருக்கிறார்கள் - அதைத்தான் இந்த ஆட்சி செய்திருக் கிறது. அதை ஒழிக்கவேண்டும் என்பதற்காகத்தான் இப்படி சொல்லியிருக்கிறார்கள்.

ஏற்கெனவே நியமனங்கள் செல்லும்; இனிமேல் செய்யப்படும் நியமனங்களுக்கு அந்த விதிகள் செல்லாது. ஆகமக் கோவில்களில் இந்த விதிகள் செல் லாது என்ற ஓர் இக்கட்டான சூழ்நிலையை, ஒரு தந் திரத்தை, ஒரு கண்ணிவெடியைப்  புதைத்திருக்கிறார்கள்.

இதற்கு வழிகாணவேண்டும் என்று சொல்லுகின்ற நேரத்தில்,   அரசமைப்புச் சட்டப்படி, மக்கள் விருப்பப்படி நடத்துகிறார்கள்.

மக்கள்தான் 

இறுதி முடிவு செய்பவர்கள்

ஒன்று, சட்டப் போராட்டத்தை சட்ட ரீதியாக முதலமைச்சர் அவர்கள், உரியவர்களைக் கலந்து செய்யவேண்டும் என்று நாம் அன்போடு வேண்டிக் கொள்கிறோம்.

இரண்டாவதாக, அதைவிட தாண்டி, முன்பு எடுத்ததுபோன்று, மக்கள் கிளர்ச்சி வெடித்தாக வேண்டும். இந்த அரசாங்கத்திற்குத் தொல்லை கொடுப்பது போன்று இருக்காது. ஆனால், அதே நேரத்தில் மக்கள்தான் இறுதி முடிவு செய்பவர்கள்.

ஒன்று தெளிவாகி இருக்கிறது - அரசமைப்புச் சட்டமா? ஆகமமா? என்றால், உச்சநீதிமன்றம் என்ன சொல்லியிருக்கிறது?

அரசமைப்புச் சட்டம்தான் என்று.

அரசமைப்புச் சட்டத்தில் எடுத்த எடுப்பிலேயே, பீடிகையிலேயே, We the People of India  என்றுதான் ஆரம்பிக்கிறது.

படித்தவர்களுக்கு, வழக்குரைஞர்களுக்கு எல்லாம் ஒரு விஷயம் நன்றாகத் தெரியும்.

SOVEREIGN, SOCIALIST, SECULAR DEMOCRATIC  and REPUBLIC and to secure to all its citizens:

மக்களிடம் கொண்டு போய் 

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணுவோம்

இறையாண்மை யாரிடம் இருக்கிறது என்றால்,  குடிய ரசுத் தலைவரிடமோ, பிரதமரிடமோ, துணைக் குடியரசுத் தலைவரிடமோ, முதலமைச்சரிடமோ, அமைச்சர்களி டமோ இல்லை. அல்லது நாடாளுமன்றத்திலோ, சட்டமன்றத்திலோ இருக்கிறதா? நீதித்துறையில் இருக்கிறதா? என்றால், இல்லை.

யாரிடம் இருக்கிறது?

We the People of India - மக்களிடம் இருக்கிறது என்று சொல்லும்பொழுது, எனவே, மக்களிடம் கொண்டு போய் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணுவோம்.

அரசமைப்புச் சட்டத்தைக் காப்பாற்றுங்கள். அரச மைப்புச் சட்ட விதிப்படி நடங்கள். தந்திரங்கள்மூலமாக கண்ணிவெடிகளை வைக்காதீர்கள். அப்படி நீங்கள் கண்ணிவெடி வைத்தால், அதைத் தூக்கி எறிய வேண் டிய அவசியம் உண்டு என்று சொல்லக் கூடிய அளவிலே,

இன்றைக்கு நடந்தவைகள் மிகப்பெரிய அளவில் வருத்தத்திற்குரிய அளவில் இருந்தன என்று சுட்டிக் காட்டியபொழுது, ஒருவேளை அது தவறாக இருக்கலாம்.

இது பிராமணாள் - அது சூத்திராள்!

இன்னொன்றையும் நீதிபதி அய்யா இங்கே சொன்னார் - கிராம அதிகாரிகள் பிரச்சினையில், உடனடியாகப் போட்டார்கள், ஒன்றுமே நடக்கவில்லை. அதுவும் பாரம்பரியம் - இதுவும் பாரம்பரியம் என்று சொன்னார்கள்.

அங்கேதான் விஷயமே இருக்கிறது -

இது பிராமணாள் - அது சூத்திராள் - அது மத்தாள்.

அந்தப் பிரச்சினையைப்பற்றி அவர்கள் கவலைப்பட வில்லை. இதை நாங்கள் 5 ஆயிரம் ஆண்டுகளாக அனுபவித்துக் கொண்டு வருகிறோமே, அவ்வளவு சீக்கிரம் நாங்கள் விட்டுவிடுவோமோ? என்று சொல்கிறார்கள்.

எல்லாம் எங்கள் கைகளில்தான் என்று நினைக்கிறார்கள்!

எனவேதான், அதை அனுபவிக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள்.

அவர்களுக்கு ஒரே தைரியம் என்னவென்றால், உச்சநீதிமன்றமா? உயர்நீதிமன்றமா? எல்லாம் எங்கள் கைகளில்தான் என்று நினைக்கிறார்கள்.

திராவிடர் கழகம் - ஒரு இயக்கத்தைத் தொடங்கவிருக்கிறது!

ஆகவே, அடுத்தபடியாக, மக்கள் போராட்டம் என்று சொல்லி, சட்டத் திருத்தம் மட்டுமல்ல - இன்றைக்குத் தமிழ்நாட்டில் தொடங்கி, தென் மாநிலங்களான எல்லா இடங்களிலும், திராவிடர் கழகம் ஒரு இயக்கத்தைத் தொடங்கவிருக்கிறது.

அது என்னவென்றால், சமூகநீதி இன்றைக்கு 27 சதவிகிதம் கல்வியில், உத்தியோகத்தில் வந்திருக்கிறது.

ஆனால், இதே சமூகநீதி, இட ஒதுக்கீடு என்பது உயர்நீதிமன்றங்கள் என்று சொல்லக்கூடிய  Higher Judiciary என்பதில் இல்லை.  மாவட்ட நீதிமன்றங்கள் வரை இருக்கிறது. ஆனால், அதற்குமேலே, உயர்நீதி மன்றங்கள், உச்சநீதிமன்றத்தில் இல்லை. 

எல்லாமே ஒரு ஜாதி ஆதிக்கமாகத்தான் இருக்கிறது. மிகப்பெரும்பாலான மக்களாய் இருக்கக்கூடிய நாட்டில், உச்சநீதிமன்றத்தில் 34 நீதிபதிகள் இருக்கிறார்கள். அந்த 34 நீதிபதிகளில் இரண்டு நீதிபதிகள்தான் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்கள். இன்னொருவர் பிற் படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர். அதைத் தவிர 31  நீதிபதிகளும் உயர்ஜாதிக்காரர்கள்தான்.

அவர்களுடைய சதவிகிதம் 3. சரி, உத்தரப்பிரதேச கணக்கையே எடுத்துக்கொண்டாலும், 12 சதவிகிதம், மிகத் தாரளமாக. மீதி 88 சதவிகிதம் நம்மவர்கள்தானே.

தமிழ்நாட்டு உயர்நீதிமன்றத்தில், இப்பொழுதுகூட பட்டியலில் பார்ப்பனர்கள் இரண்டு பேர் இருப்பதாகக் கேள்விப்பட்டேன்.

ஒவ்வொரு முறையும் தந்திரம் - அது என்னவென் றால், அய்ந்து பேரை பரிந்துரை செய்வது - அதில் இரண்டு பேரை உள்ளே நுழைத்துவிடுவது.

இன்னுங்கேட்டால், பெண்களுக்கு நாங்கள் முக்கியத் துவம் கொடுக்கிறோம் என்று சொல்லி, அதிலும் உயர்ஜாதி பெண்களைத்தான் பரிந்துரை செய்வது.

ஏன், நம்முடைய ஜாதிப் பெண்களுக்கு அந்தத் தகுதிகள் இல்லையா? அவர்கள் வழக்குரைஞர்களாக இல்லையா?

நீதிபதி நியமனங்களில் இட ஒதுக்கீடு தேவை - சமூகநீதி தேவை!

ஆகவேதான் நண்பர்களே, இந்தக் கண்ணிவெடிகள் பல ரூபத்தில் இருப்பதினாலே, நேரிடையாக இந்தப் பிரச்சினைக்கு சம்பந்தமில்லாமல் இருக்கலாம்; ஆனால், இதற்குத் தொடர்புகள் உண்டு.

அந்த வகையில், உயர்நீதிமன்றங்களிலும், உச்சநீதி மன்றத்திலும் நீதிபதி நியமனங்களில் இட ஒதுக்கீடு தேவை - சமூகநீதி தேவை என்ற பிரச்சாரம், போராட்டம் நடத்தப்படும்.

தனியார் துறையிலும் 

இட ஒதுக்கீடு தேவை

அதேபோன்று, இப்பொழுது பொதுத் துறை நிறுவனங்கலெல்லாம் தனியார்த் துறையாக மாற்றப்பட்டு வருகின்றன. அதனால், இட ஒதுக்கீடு பாதிக்கப்படுகிறது என்கிற காரணத்தினால், தனியார்த் துறையிலும் இட ஒதுக்கீடு தேவை.

ஆகவே, மேற்கண்ட இரண்டு அம்சங்களை வைத்துக்கொண்டு, பிரச்சாரங்களையும், போராட்டங் களையும் நடத்துவோம்.

இவர்கள் இங்கே சுட்டிக்காட்டியதைப்பற்றி, உரியவர்களோடு ஆலோசனை செய்து, சட்ட ரீதியான போராட்டம், சட்டக் களத்திலும் நடைபெறும். மக்கள் பிரச்சினை என்று சொல்லக்கூடிய அளவில், மக்கள் மத்தியிலும் இந்தப் பிரச்சினை கொண்டு செல்லப்படும்.

அந்த வகையிலே, இது ஒரு தொடர் போராட்டம்.

தந்திரங்கள், சூழ்ச்சி வலைகள் 

பின்னப்பட்டு இருக்கின்றன

ஒரு சிறிய உதாரணத்தைச் சொல்கிறேன், புராணத்திலிருந்து,

வாசுகி என்ற பாம்பை மத்தாக வைத்துக்கொண்டு அமிர்தம் கடைகிறார்களாம்; தலைப்பக்கம் அசுரர்களும், வால் பக்கம் தேவர்களும் நிற்கிறார்கள். அமிர்தம் வருகிறது - நியாயப்படி பார்த்தால், 50 சதவிகிதம், 50 சதவிகிதம் எடுத்துக்கொள்ள வேண்டும் அல்லவா! ஆனால், முழுக்க முழுக்க தேவர்களே எடுத்துக் கொள்ளத்தான் மோகினி அவதாரம்.

இப்பொழுதும் மோகினி அவதாரங்கள் வருகின்றன.

தந்திரங்கள், சூழ்ச்சி வலைகள் பின்னப்பட்டு இருக் கின்றன. அவற்றையெல்லாம் மக்களுக்கு விளக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.

அரசாங்கத்தினுடைய கவனத்திற்கு 

நாங்கள் கொண்டு செல்வோம்

ஆனால், இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டிய இடத்தில், இன்றைக்குக் கமாவும், செமிக்கோலனும்தான் போட்டிருக்கிறார்கள்.

இதையெல்லாம் அரசாங்கத்தினுடைய கவனத்திற்கு நாங்கள் கொண்டு செல்வோம்.

உரிய பரிகாரத்தைத் தேடுவதில் 

நாங்கள் பின்வாங்கமாட்டோம்

நிச்சயமாக, இந்த அரசாங்கத்தினுடைய நல்லெண் ணம், தெளிவான கொள்கை முடிவு, பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை எடுப்போம் என்று சொல்லி, அந்தக் கொள்கையை நடைமுறைப்படுத்துவோம் என்று சொல்லியிருக்கிறார்கள். அடுத்து என்ன செய்ய முடியுமோ - தீர்வுகளை இந்த ஆய்வரங்கத்தில் கருத்து களை எடுத்து வைத்திருக்கிறீர்கள். மற்ற கருத்து களையெல்லாம் கேட்டு, உரியவர்களிடம் அதைக் கொண்டு போய்ச் சேர்த்து உரிய பரிகாரத்தைத் தேடுவதில் நாங்கள் பின்வாங்கமாட்டோம்.

போராட்டம் தொடரும்! தொடரும்!!

ஆனால், இந்தக் கொள்கை வெற்றி பெறும்; இறுதி வெற்றி நமக்குத்தான். இடையில் நீங்கள் என்ன செய்தாலும், இது ஒரு தொடர் போராட்டமாக இருக்கும். இது இன்னும் முடியவில்லை.

ஆனால், தொடரும்! தொடரும்!! என்று கூறி, வந்திருந்த அனைவருக்கும் நன்றி, ஆய்வரங்கத்தில் பங்கேற்றவர்களுக்கும் நன்றி!

வாழ்க பெரியார்!

வளர்க பகுத்தறிவு!!

 - இவ்வாறு  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஏறப்புரை யாற்றினார்.


No comments:

Post a Comment