செப்டம்பர் 6 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 7, 2022

செப்டம்பர் 6

செப்டம்பர் மாதம் என்றாலே தமிழ்நாட்டின் வரலாற்றிலே மறக்கப்படவே முடியாத வைர வரிகள் நிறைந்த மாதமாகும்.

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, சுயமரியாதை இயக்கத் தலைவர் ஊ.பு.அ.. சவுந்தரபாண்டியனார், சிவகங்கை இராமச்சந்திரனார் போன்ற நமது தன்மான இயக்கத் தலைவர்கள் பிறந்ததெல்லாம் இதே செப்டம்பரில்தான். தியாக மறவர் செக்கிழுத்த செம்மல் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. பிறந்த நாளும் இம்மாதத்திலேயேதான்!

டாக்டர் சுப்பராயன் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த எஸ். முத்தையா முதலியார் அவர்களின் முயற்சியால் வகுப்புரிமை ஆணை பிறப்பிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்ட மாதமும் செப்டம்பரே!

69 விழுக்காட்டைத் தமிழ்நாட்டு மக்கள் அனுபவிக்கிறார்களே - அந்த ஆணை வருவதற்குக் காரணமாக இருந்தவர் - நமது அருமைத் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள்தான் - மூலக் கருவாக இருந்தார்கள் என்பதை வரலாறு என்றென்றும் பேசுமே  - அதற்கான சட்ட ரீதியான திட்டத்தை 31(சி) தீட்டிக் கொடுத்த தலைவர் இவர்தானே - அதற்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியதும் இதே செப்டம்பர் முதல் தேதியில்தான் (76ஆம் சட்டத் திருத்தம்).

சமூக நீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தந்தை பெரியார் பிறந்த நாளை சமூக நீதி நாளாக அறிவித்ததும் இதே செப்டம்பர் 6இல் தான்!

என்ன பொருத்தம்! இந்த செப்டம்பர் 6ஆம் நாளில்தான் (நேற்று) சென்னைப் பெரியார் திடலில், 88 ஆண்டு 'விடுதலை'க்கு 60 ஆண்டு ஆசிரியர் என்ற புது சாதனை படைத்த ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களுக்கு 60 ஆயிரம் சந்தா அளிப்பது என்ற திராவிடர் கழகத்தின் மதுரைப் பொதுக் குழுத் தீர்மானத்தின்படி  முதல் தவணையாக நேற்று 27,605 சந்தாக்கள் அளிக்கப்பட்ட இலட்சிய வரலாற்றின் புதிய அத்தியாயம் பூத்ததும் செப்டம்பரில்தான்.

அனைத்துக் கட்சித் தலைவர்களும், சமுதாய தலைவர்களும் நமது தலைவரைக் கொள்கையின் அடிப்படையில் மனந் திறந்து, உச்சி மோந்து பாராட்டியதைக் கேட்டு, ஒவ்வொரு கருஞ்சட்டைத் தோழரும் பூரித்து மகிழ்ந்த நாள் செப்டம்பர் 6.

"திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர் நீங்கள் - உங்கள் அனுபவம் பெரிதினும் பெரிது - கடந்து வந்த பாதை கல்லும் முள்ளும் நிறைந்தது - 'விடுதலை'யின் மூலம் நீங்கள் எழுதும் அறிக்கைகள் எங்களுக்கெல்லாம் வழிகாட்டக் கூடியவை - அரசுகளுக்கு 'எச்சரிக்கை' தரக் கூடியவை - பாராட்ட வேண்டியதைப் பாராட்டியும்,  எதிர்க்க வேண்டியவற்றை எதிர்த்தும் நீங்கள் அளிக்கும் அறிக்கைகள் மகத்தானவை -  சமூக நீதிக்கும், மதச் சார்பின்மைக்கும், ஜனநாயகத்திற்கும் சாவு மணி அடிக்கும்  சனாதன சக்திகள் - கொம்பு தீட்டிப் பாயும் இந்தக் கால கட்டத்தில், உங்கள் தலைமையில் இணைந்து, அணிவகுத்து முறியடிக்கக் காத்திருக்கிறோம்" என்று கட்சி எல்லைகளை எல்லாம் கடந்து ஒத்த குரலில் உரக்கப் பேசினார்களே நேற்றைய நிகழ்வில் - இவை தலைவருக்குச் சூட்டும் புகழ் மாலையாக எடுத்துக் கொள்ளலாம் என்பதைவிட, 90 வயதைத் தொட இருக்கும் நமது தலைவரின் தோளில் சுமத்தப்படும் மிகக் கனமான விடயங்கள் என்பதையும் கணிக்கத் தவறக் கூடாது.

சித்தாந்த ரீதியாக அதிகாரப் பீடத்தில் இருக்கும் ஒன்றிய அரசும் - அதன் ஆதார சுருதிகளாக இருக்கக் கூடிய சங்பரிவார்களின் ஆபத்தான திட்டங்களும், செயல்பாடுகளும் எதிர்காலத்தை இருட்டறையில் தள்ளிப் பூட்டி விடும் என்கிற நிலைமை நாட்டைக் கவ்விக் கொண்டு இருக்கிறது.

இதற்குத் தீர்வு காணப்படவில்லையெனின் பாசிசம் ஆயிரம் கொம்புகள் முளைத்துக் குத்திக் கிழித்து விடும்.

தீர்வு என்பது - முதல் நிலையில் இருப்பது - மக்கள் மத்தியில்  விழிப்புணர்வை ஏற்படுத்துவதே! அரசியல் தேர்தல் பக்கம் தலை வைத்துப் படுக்காத திராவிடர் கழகம் - அதன் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள்தான், முற்போக்குச் சக்திகளை ஒன்றிணைத்துக் களமாடும் கடப்பாட்டைக் கையில் ஏந்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

நமக்கு நல்லதோர் வாய்ப்பு - தமிழ்நாட்டில் அமைந்த 'திராவிட மாடல்' அரசாகும்.

பிரச்சார யுக்தி என்பதில் முதலிடத்தில் இருப்பது நமது ஏடுகளே! அதிலும் முதலிடத்தில் இருப்பது 'விடுதலை' 'விடுதலை', விடுதலை'யே!

எனவே 'விடுதலை' சந்தா சேர்ப்பு இயக்கம் என்பது தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டிய பணியாகும்.

'விடுதலை' விற்பனைக்காக அல்ல - மக்கள் மத்தியில் அது எந்த அளவுக்குச் சேர்கிறதோ, அந்த அளவுக்கு அதன் பலா பலன் சமுதாயத்திற்கு வந்து சேரும்.

முதல் தவணையாக 'விடுதலை' சந்தாக்களை அளிப்பதற்கு அயராது உழைத்த கருஞ்சட்டைத் தங்கங்களின் கரங்களுக்குப் பாராட்டு முத்தங்கள், நன்றிக் கை குலுக்கல்கள்!

வீடு வீடாக 'விடுதலை' செல்லட்டும் - சமுதாயம் அதன் மூலம் எல்லா வகையிலும் விடுதலை பெறட்டும்!

வாழ்க பெரியார்!

வளர்க பகுத்தறிவு! 

வாழ்க நம் தமிழர் தலைவர் 

பல்லாண்டு! பல்லாண்டுகள்!!

No comments:

Post a Comment