என்.எல்.சி. பட்டதாரி பொறியாளர் தேர்வு தேவை தமிழருக்கு முன்னுரிமை பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 6, 2022

என்.எல்.சி. பட்டதாரி பொறியாளர் தேர்வு தேவை தமிழருக்கு முன்னுரிமை பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

சென்னை, ஆக.6 நெய்வேலி பழுப்பு நிலக்கரி (என்.எல்.சி.) நிறுவனத் திட்டங்களுக்கு நிலம் வழங்கிய குடும்பங்களைச் சேர்ந்தோருக்கு, பொறியாளர் பணியிடத் தேர்வில் முன்னுரிமை வழங்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு  அவர் எழுதிய கடித விவரம் வருமாறு:

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனமானது, தமிழ்நாட்டைப் பிரதானமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் மூலமாக பயிற்சி பட்டதாரி பொறியாளர் காலிப் பணியிடங்களுக்கு சிறப்புத் தேர்வை நடத்த வேண்டுமெனவும், நெய்வேலி நிறுவனத்துக்கு நிலங்களை வழங்கிய உள்ளூர் குடும்பங்களைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் கடந்த மே 5-ஆம் தேதி தங்களுக்கு எழுதிய கடிதத்தில் கேட்டுக் கொண்டிருந்தேன். ‘கேட்’ போன்ற தேர்வுகளை நடத்துவதற்குப் பதிலாக இதுபோன்ற முறையை பின்பற்ற வேண்டுமெனக் கோரியிருந்தேன்.

எனது சார்பில் விடுக்கப்பட்ட இந்தக் கோரிக்கையை புறந்தள்ளி விட்டு, ‘கேட்’ மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு நடத்தி, 300 பேர் பணிக்கான தகுதியானவர்கள் என பட்டியலிட்டுள்ளனர். இந்தப் பட்டியலில் உள்ளூர் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகும். இது நியாயமற்றது என்பதுடன், உள்ளூர் பகுதியைச் சேர்ந்த மக்களிடம் இது மிகப்பெரிய அமைதியின்மையை ஏற்படுத்தும். ஏற்கெனவே, நெய்வேலி நிறுவனத் திட்டங்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு நிரந்தரப் பணிகள் வழங்குவது நிறுத்தப்பட்டிருக்கும் நிலை உள்ளது.

எனவே, பயிற்சி பட்டதாரி பொறியாளர் காலிப் பணியிடங்களை சிறப்புத் தேர்வை நடத்தி மட்டுமே நிரப்ப வேண்டும். அதிலும், நெய்வேலி நிறுவனத் திட்டங்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். நெய்வேலி நிறுவனத்தின் பெரும்பாலான செயல்பாடுகள் தமிழ்நாட்டை மய்யப்படுத்தியே நடைபெறுகின்றன. மேலும், அந்த நிறுவனத்தில் பணியாற்றக் கூடிய பெரும்பாலான பணியாளர்களும், பங்குதாரர்களும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர். எனவே, நிர்வாக ரீதியிலான பணியிடங்களிலும் உள்ளூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் குறிப்பிடத்தகுந்த அளவு இருப்பதே பொருத்தமானதாக இருக்கும். இந்தச் சூழலில், பயிற்சி பட்டதாரி பொறியாளர் பணியிடங்களை சிறப்புத் தேர்வு நடத்தி நிரப்ப வேண்டும் என்ற இந்த கோரிக்கையில் தாங்கள் உடனடியாகத் தலையிட்டு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு  முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.


No comments:

Post a Comment