மதவாதம், ஜாதியவாதம், சனாதனம். வர்ண பேதங்களுக்கு எதிரானது திராவிடம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 8, 2022

மதவாதம், ஜாதியவாதம், சனாதனம். வர்ண பேதங்களுக்கு எதிரானது திராவிடம்!

யாரையும் பிரித்துப் பார்க்கும் வஞ்சகத்துக்கு எதிரானது திராவிடம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சங்கநாதம்

திருப்பூர், ஆக. 8- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 6.8.2022 அன்று முகாம் அலுவலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக திருப்பூரில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 25ஆவது மாநாட்டை முன்னிட்டு சமூக நல்லிணக்கப் பாதுகாப்பு மாநில உரிமைகள் மீட்பு எழுச்சி மாநாட்டில் கலந்து கொண்டு பேசியதாவது:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 25ஆவது மாநாடு  சமூக நல்லிணக்க பாதுகாப்பு மாநில உரிமைகள் மீட்பு எழுச்சி மாநாடு -

இந்தச் சிறப்பான நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கக்கூடிய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் மதிப்பிற்குரிய டி.ராஜா அவர்களே!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பெருமதிப்பிற்குரிய அய்யா நல்லகண்ணு அவர்களே!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் என்னுடைய அன்பிற்கினிய கே.எஸ். அழகிரி அவர்களே!

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்களே!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான என்னுடைய மதிப்பிற்குரிய அருமை சகோதரர் தொல்.திருமாவளவன் அவர்களே!

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெருமதிப்பிற்குரிய  முத்தரசன் அவர்களே!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மரியாதைக்குரிய பாலகிருஷ்ணன் அவர்களே!

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசியத் தலைவர் பேராசிரியர் அய்யா காதர்மொய்தீன் அவர்களே!

தமிழகத்தினுடைய மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் 

மாண்புமிகு மு.பெ.சாமிநாதன் அவர்களே!

மாண்புமிகு கயல்விழி செல்வராஜ் அவர்களே!

நாடாளுமன்ற உறுப்பினர் அருமைக்குரிய சுப்பராயன் அவர்களே!

கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச் செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் அவர்களே!

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் சட்டமன்ற உறுப்பினர்  ஜவாஹிருல்லா அவர்களே!

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் சட்டமன்ற உறுப்பினர் என் இனிய சகோதரர் வேல்முருகன் அவர்களே!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மாநிலச் செயலாளர் நடராசன் அவர்களே!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில செயலாளர் சலீம் அவர்களே!

 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மதச்சார்பற்ற நம்முடைய தோழமைக் கட்சிகளின் நிர்வாகிகளே!

பத்திரிகை மற்றும் ஊடகத் துறையைச் சார்ந்த நண்பர்களே!

உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம்!

கரோனா தொற்றுப் பாதிப்பில் இருந்து மீண்ட நான், சில நாட்களாக வெளியூர்ப் பயணங்களைத் தவிர்ப்பது என்ற மருத்துவர்களின் கட்டளைப்படி  நேரடியாகத் திருப்பூர் வருகை தர இயலாத சூழல் எனக்கு ஏற்பட்டுவிட்டது. இதனைத் தோழமை கட்சிகளைச் சார்ந்திருக்கக்கூடிய  தலை வர்களாகிய நீங்கள் அனைவரும் உணர்ந்துகொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன்.

இப்படி ஒரு மாநாட்டை திருப்பூரில் நடத்துகிறோம் என்று என்னுடைய அருமைத் தோழர் முத்தரசன் அவர்கள் என்னிடம் கேட்டபோது உடனடியாக மனப்பூர்வமாக நான் ஒப்புக் கொண்டேன். ஏனென்றால், நாம் அனைவரும் ஒரே கொள்கைக் கூட்டத்தைச் சார்ந்தவர்கள். தனித்தனி இயக்கமாக இருந்தாலும் - கொள்கையால் ஒரே இயக்கத்தைச் சார்ந்தவர்கள் - என்ற உணர்வோடுதான் நான் இங்கே பேசிக் கொண்டு இருக்கிறேன்.

அய்யா நல்லகண்ணு அவர்கள் மேடையில் நடுநாயகமாக அமர்ந்திருக்கிறார்கள்.

அய்யா நல்லகண்ணு அவர்களே!

உங்களுக்கு நான் என் வணக்கத்தையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தோழர் நல்லகண்ணு அவர்களுக்கு "தகைசால் தமிழர்" விருது

அய்யா நல்லகண்ணு அவர்களுக்கு, இந்த ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது வழங்கப்பட இருக்கிறது என்ற அறிவிப்பை நமது அரசு வெளியிட்டிருக்கிறது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு நடைபெறும் இந்த நாளில், இத்தகைய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறோம் என்பது மிகமிக  பொருத்தமான ஒன்று. ஏனென்றால் அய்யா நல்லகண்ணு அவர்களை இயக்கத்தில் இருந்து பிரித்துப் பார்க்க முடியாது. இயக்கமே வாழ்வென வாழ்ந்து கொண்டி ருக்கும் பெரும் போராளி அவர்.  

ஆகஸ்ட் 15-ஆம் நாள் இந்திய நாட்டின் விடுதலை நாளில் இந்த விருதை அய்யா அவர்களுக்கு முறைப்படி நான் வழங்க இருக்கிறேன்.

1925-ஆம் ஆண்டு பிறந்த அய்யா நல்லகண்ணு அவர்கள் 97 வயதைக் கடந்து இந்தச் சமுதாயத்துக்காக உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள். வயதால் மட்டுமல்ல, தொண்டாலும் மூத்தவர். தியாகத்தால் மூத்தவர். அரசியல் போராட்டங்களால் மூத்தவர். ஏழாண்டு காலம் சிறையில் இருந்ததன் மூலமாக நாட்டுக்கு தன்னையே ஒப்படைக்கும் மன உறுதி படைத்தவர்.

எளிமையின் சின்னமாக - கொள்கையின் அடையாளமாக - வாழும் அய்யா நல்லகண்ணு அவர்களுக்கு, தகைசால் தமிழர் விருதை வழங்குவதை எனக்குக் கிடைத்த பெரும் பேறாக நான் கருதுகிறேன். அய்யா நல்லகண்ணு அவர்க ளுக்கு இவ்விருதை வழங்குவதன் மூலமாகத் தமிழ்நாடு அரசு பெருமை அடைகிறது.

இன்னும் பல்லாண்டு காலம் வாழ்ந்து - நமக்கும், இந்த இனத்துக்கும், நமது நாட்டுக்கும் அய்யா நல்லகண்ணு அவர்கள் வழிகாட்ட வேண்டும் என்று உங்கள் அனைவர் சார்பாக நான் கேட்டுக் கொள்கிறேன்.

சில நாட்களுக்கு முன்னால் என்னைச் சந்தித்த தோழர் முத்தரசன் அவர்கள், ஒரு கோரிக்கையை வைத்தார். காந் தியாரும் - தோழர் ஜீவா அவர்களும் சந்தித்த சிராவயல் என்ற ஊரில் அந்த மகத்தான சந்திப்பின் அடையாளமாக நினைவு மண்டபம் அமைக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை முத்தரசன் அவர்கள் எடுத்து வைத்தார்கள்.  அதனை ஏற்று, சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர் வட்டம், சிராவயல் கிராமத்தில் சிறப்பதானதொரு மணிமண் டபம் அமைக்கப்படும் என்பதையும் இந்த மாநாட்டின் மூலமாக நாட்டு மக்களுக்கு அறிவிப்பதில் நான் பெருமை அடைகிறேன்.

இது தோழர் முத்தரசனுக்கு மட்டுமல்ல, நம்முடைய மதிப்பிற்குரிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்களுக்கும் மகிழ்ச்சி தருகின்ற அறிவிப்பாக அமையும் என்று நான் நினைக்கிறேன்.

காந்தி நாடு என்று பெயர் வைக்கச் சொன்னவர் பெரியார்

மதவாத பயங்கரவாதத்தால் காந்தியார் சுட்டுக்கொல்லப் பட்டபோது, இந்த நாட்டுக்கு ‘காந்தி நாடு’ என்று பெயர் சூட்டச் சொன்னவர் தந்தை பெரியார் அவர்கள். அத்தகைய தந்தை பெரியாருடன் - சுயமரியாதை இயக்கத்தின் தொடக்க காலத்தில் இணைந்து பணியாற்றியவர் தோழர் ஜீவா அவர்கள்.

அறிஞர் அண்ணா அவர்களையும் - அஞ்சாநெஞ்சர் அழகிரிசாமி அவர்களையும் - தோழர் ஜீவா அவர்களையும் தனது மானசீகமான வழிகாட்டிகளாக நினைத்துப் போற்றி யவர் நம்முடைய தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள்.

எனவேதான், காந்தியாரையும் தோழர் ஜீவா அவர்களை யும் பெருமைப்படுத்தும் நினைவு மண்டபத்தைத் தமிழ்நாடு அரசு அமைக்கும் என்று உறுதியளிக்கிறேன். இந்த அறிவிப்பை இந்த மாநாட்டில் அறிவிப்பது மிகமிகப் பொருத்த மான ஒன்று.

சமூக நல்லிணக்கப் பாதுகாப்பு - மாநில உரிமைகள் மீட்பு எழுச்சி மாநாடு என்று இந்த மாநாட்டுக்குப் பெயர் சூட்டி இருக்கிறீர்கள். 

சமூக, மத நல்லிணக்கத்தின் அடையாளம்தான் காந்தியார். அந்த நல்லிணக்கம் ஏற்பட்டுவிடக்கூடாது என்று நினைப்ப வர்களால் அவர் கொலை செய்யப்பட்டார்.

இந்த மாநிலத்துக்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டும் என்று 1953-ஆம் ஆண்டிலேயே குரல் கொடுத் தவர் தோழர் ஜீவா அவர்கள்.

இரு பெரும் அச்சுறுத்தல்கள்

மாநிலங்களை உருவாக்குவதால், இந்திய ஒருமைப்பாடு வளம் பெறுமே தவிர - சிதையாது என்று தமிழ்நாடு சட்ட மன்றத்தில் பேசியவர் தோழர் ஜீவா அவர்கள். அத்தகைய இருவரது சிந்தனைகளும் இன்றைய இளைஞர்கள் இடையில் பரவினால், சமூக நல்லிணக்கம் ஏற்படும்; மாநில உரிமைகள் நீடிக்கும் என்பதில் அய்யமில்லை.

இந்திய நாட்டுக்கு இரண்டு மாபெரும் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளன.

ஒன்று - சமூக நல்லிணக்கத்தைக் கெடுப்பது. மற்றொன்று - மாநிலங்களின் உரிமைகளைச் சிதைப்பது. இரண்டுமே மக்களுக்கு எதிரானவை!

பல்வேறு இனம், மொழி, மதம், பண்பாட்டு வேறுபாடு களைக் கொண்ட மக்கள் இந்தியாவில் வாழ்கிறோம். ‘வேற்று மையில் ஒற்றுமை’ என்ற உயர்ந்த குறிக்கோளுடன் வாழ்கி றோம்.

· அனைத்து மொழிகளுக்கும் சமமான மரியாதை

· அனைத்து தேசிய இனங்களுக்கும் சமமான உரிமைகள்

· அனைத்து மதத்தவர்க்கும் சமமான வழிபாட்டு உரிமைகள்

· பண்பாட்டு வேற்றுமைகளுக்கு எந்தத் தடையும் இல்லை

· பண்பாட்டுப் பரிமாற்றங்களை ஒருவருக்கொருவர் செய்து கொள்வது

·அனைத்து வளங்களும் கொண்ட மாநிலங்கள்

· மொழிவாரியாக மாநிலங்கள் பிரிந்து இருந்தாலும், அண்டை மாநிலங்களோடு நட்புறவு

· பொருளாதார ஏற்றுமதி - இறக்குமதியில் நல்லுறவு 

- என எத்தனையோ நல்ல நோக்கங்களுடன் அமைதியாக இந்தியா இருப்பதை சிலர் விரும்பவில்லை. இதனைச் சிதைப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறார்கள். 

இத்தகைய சக்திகள்தான் தேசவிரோத சக்திகள்!

இவைதான் நாட்டினுடைய எதிரிகள்!

தேச விரோதி யார்?

இந்தியாவின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் உலை வைப்பவர்கள் இவர்கள்தான். ஆனால் இவர்கள் நம்மைப் பார்த்து, தேசவிரோதிகள் - நாட்டுக்கு எதிரிகள் என்று சொல்வதுதான் வேடிக்கையாக இருக்கிறது.

அனைவரையும் ஒன்றாக நடத்துங்கள் -

அனைத்து மொழிகளையும் ஒன்றாக மதியுங்கள் -

அனைத்து இனங்களுக்கும் உரிமைகள் தாருங்கள் -

எந்த மதத்தைச் சார்ந்தவர்களது வழிபாட்டு உரிமையிலும் தலையிடாதீர்கள் -

நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள் - என்று சமத்துவம் பேசுவது தேச விரோதமா?

அல்லது,-

ஒரே மதம் - ஒரே மொழிதான் இருக்க வேண்டும் என்று சொல்வது தேச விரோதமா?

இந்தியா முழுக்க இன்று கேட்கவேண்டிய கேள்வி இது மட்டும்தான்!

இது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி இயக்கங்கள் கேட்க வேண்டிய கேள்வி மட்டுமல்ல; இந்தியாவே கேட்க வேண்டிய கேள்வி.

இது ஆகஸ்ட் மாதம்!

விடுதலை மாதம்!

இந்தியாவின் பண்பாடு

வேற்றுமைகளைக் கடந்து, இந்தியாவின் மக்களாக நம்மை நாமே உணர்ந்து, நமது முன்னோர்கள் போராடிய தால்தான் 1947-ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தது. அதே போல, வேற்றுமைகளை ஏற்றுக்கொண்டு வாழ்ந்து வருவ தால்தான், 75 ஆண்டுகள் கடந்தும் விடுதலை இந்தியா கம்பீரமாகக் காணப்படுகிறது.

ஒற்றுமை - 

சமத்துவம் - 

சகோதரத்துவம் - 

அன்பு - 

ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தல் - 

இரக்கம் - 

ஒருவரை ஒருவர் மதித்தல் - 

அரவணைத்தல் -

ஆகியவைதான் இந்தியாவின் பண்பாடுகளாக அமைய வேண்டும்.

இவற்றை நாம் எப்படி கடைப்பிடிக்கிறோம் என்பதை வைத்துத்தான் நம்முடைய எதிர்காலம் அமையப் போகிறது.

நான் இன்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கிறேன். இது எனக்குத் தானாக வந்துவிடவில்லை. தோழமைக் கட்சிகளாகிய உங்களின் பேராதரவுடன் இந்த இடத்தில் உங்களால் நான் அமர வைக்கப்பட்டுள்ளேன்.

பல்வேறு திட்டங்களை உருவாக்குகிறோம்

பல்வேறு நலத்திட்டங்களை உருவாக்கி வருகிறோம்.

கல்வி,  மருத்துவம், வேளாண்மை,  விளையாட்டு, 

சாலைகள்,  பாலங்கள்,  கட்டடங்கள்,  அணைகள் - 

ஆகியவை உருவாக்கப்பட்டு வருகின்றன. 

இவை மட்டும்தான் வளர்ச்சியா? என்றால் இல்லை!

இன்னொரு பக்கமும் வளர வேண்டும்... 

அதுதான்,

சமத்துவம் - சகோதரத்துவம் -  மானுடப்பற்று - மனித நேயம்-  ஏழை, எளிய, விளிம்புநிலை மக்களது நலம் -  திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவிகள் - ஒடுக்கப்பட்டோரின் சமூக விடுதலை - அனைத்துச் சமூகத்தவரும் அர்ச்சகராவது.

இவையும் வளர வேண்டும்.

ஒரு நாணயத்துக்கு இரண்டு பக்கங்கள் இருப்பதைப் போல, திராவிட மாடல் அரசின் இரண்டு பக்கங்கள் இவைதான். 

இரண்டில் ஒன்று இருந்து இன்னொன்று இல்லாவிட்டால் அந்த நாணயம் செல்லாது.  

அதைப் போலத்தான், வளர்ச்சித் திட்டம் மட்டும் இருந்து, சமூக மேம்பாடு இல்லாமல் போய்விட்டால் அதனால் எந்தப் பயனும் இல்லை. அதை மனதில் வைத்துத்தான் திராவிட மாடல் ஆட்சியை நாம் நடத்தி வருகிறோம்.

நாங்கள் யாருக்கு எதிரிகள்

மதவாதத்துக்கு எதிரானது திராவிடம்.

ஜாதியவாதத்துக்கு எதிரானது திராவிடம்.

சனாதனத்துக்கு எதிரானது திராவிடம்.

வர்ணபேதத்துக்கு எதிரானது திராவிடம்.

இரத்த பேதத்துக்கும், பால் பேதத்துக்கும் எதிரானது திராவிடம்.

எவரையும் உயர்த்தும் தாழ்த்தும் வன்மத்துக்கு எதிரானது திராவிடம்.

யாரையும் பிரித்துப் பார்க்கும் வஞ்சகத்துக்கு எதிரானது திராவிடம்.

எனவேதான் ‘திராவிட மாடல்’ என்று ஆட்சியின் கொள்கையை வடிவமைத்திருக்கிறோம்.

“இதற்கு ஏன், ‘தமிழ்நாடு மாடல்’ என்று பெயர் வைக்கவில்லை?” என்று சிலர் கேட்கிறார்கள். 

தமிழ்நாடு என்றால் அது இடத்தைக் குறிக்கும். 

ஆனால் திராவிடம் என்று சொன்னால்தான், அது ஒரு கொள்கையை, கோட்பாட்டை, அதுகுறித்து நிற்கும் விழுமியங்களைக் குறிக்கும்! 

திராவிடம் என்பது தமிழ்நாட்டு அரசியலில் சமத்துவத்தை உணர்த்தி நிற்கும் குறிச்சொல். 

திராவிடம் என்பது என்ன?

திராவிடம் என்பது தமிழினத்தின் சமூகவிடுதலைக்கு அடையாளமாக இருக்கும் வரலாற்றுச் சொல்!

சமூகநீதி -  சமத்துவம் -  சமதர்மம் - 

சகோதரத்துவம் -  மாநில உரிமைகள் - 

மொழிப்பற்று -  இனப்பற்று -

ஆகியவற்றுக்கு எதிரானவர்கள்தான், இந்த ‘திராவிட மாடல்’ ஆட்சிக்கு எதிராக - பொய்யையும், அவதூறுகளையும் நாள்தோறும் திட்டமிட்டு பரப்பி வருகிறார்கள்.

ஆட்சியைப் பற்றி குறைசொல்வதற்கு ஏதும் கிடைக் காததால், அவதூறுகளையும் வெறுப்புப் பிரச்சாரத்தையும் கைக்கொண்டிருக்கிறார்கள். அவர்களால், 

ஒருபோதும் உண்மையைச் சொல்லவும் முடியாது! 

உண்மையை எதிர்கொள்ளவும் முடியாது!

உண்மைக்கு பயப்படும் அவர்கள் பொய்களைத் துணைக்கு அழைத்துக் கொள்கிறார்கள்!

பொய்யும் புரட்டும்தான் அவர்களது முதலீடுகள் என்பதை வரலாறு தோலுரித்துக் காட்டிவிட்டது!

இது திராவிட மாடல் அரசு

வளமான தமிழ்நாட்டை - அனைவருக்குமான தமிழ் நாட்டை ’திராவிட மாடலில்’ நாம் உருவாக்கி வருகிறோம். இந்த திராவிட மாடல் என்பது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் வழிகாட்டும் தத்துவமாக அமைந்துள்ளது.

திராவிட மாடல் கொள்கைகள் இந்தியா முழுவதும் பரவுமானால் இந்தியாவே செழிப்படையும், சிறந்து விளங்கும், மேன்மை பெறும்!

மாறாக, வகுப்புவாதமும், மதவாதமும், எதேச்சதிகார உணர்வும் தலைதூக்குமானால், அது இந்தியாவுக்கு பெருமை சேர்க்காது.   

75-ஆம் ஆண்டு விடுதலை நாளை நாம் கொண்டாடுவது என்பது வெறும் கொண்டாட்டமாக மட்டும் இருக்கக் கூடாது! 

இன்னும் பல நூறு ஆண்டுகளுக்கு, இந்தியா வலிமை உள்ளதாக இருப்பதற்கான திட்டமிடுதலாக நமது சிந்தனைகள் அமைய வேண்டும்.

இந்தியா என்பதை, வெறும் நிலப்பரப்பாகவோ, எல்லை களாகவோ நாம் கருதக் கூடாது. இந்தியா என்பது இங்கு வாழும் மக்கள்தான். அத்தகைய அனைத்து மக்களுக்குமான நாடாக இந்தியா இருக்க வேண்டும்!

இந்தியாவைக் காப்பாற்ற வேண்டுமானால் - இந்திய ஒன் றியத்துக்குள் உள்ளடங்கி உள்ள அனைத்து மாநிலங்களையும் காப்பாற்ற வேண்டும்!

''மாநிலங்கள் வளர்ந்தால்தான் ஜனநாயகம் வளர்ச்சி பெறும். அதன் மூலமாக தேசிய ஒற்றுமை அதிகரிக்கும்'' என்று சொன்னவர் தோழர் ஜீவா அவர்கள்.

“தமிழ்நாட்டுக்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டும்” என்று மாநிலங்களவையில் தனித்தீர்மானம் கொண்டு வந்தவர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இந்தியக் கம்யூனிஸ்ட் உறுப்பினர் பூபேஷ் குப்தா அவர்கள்.

'ஒரு மொழியினருக்கும் இன்னொரு மொழியினருக்கு மான கூட்டுறவை வளர்க்கவே நான் விரும்புகிறேன்'' என்று நாடாளுமன்றத்தில் பேசினார் பூபேஷ் குப்தா அவர்கள்.

அத்தகைய உயரிய அரசியல் பாரம்பரியம் கொண்ட இந்த நாட்டில், அண்மைக் காலமாக நடைபெறும் நிகழ்வுகள் மிகமிக வேதனைக்குரியதாக உள்ளது.

மாநிலங்களின் உரிமையைப்  பறிப்பது ஜிஎஸ்டி

· மாநிலங்களிடம் இருக்கிற நிதி உரிமையைப் பறிக்கிறது. ஜி.எஸ்.டி வரி. வரியை ஏற்றிவிட்டு - மாநிலங்களின் மீது பழிபோட்டு தப்பிக்கப் பார்க்கிறார் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள். வரியை மொத்தமாக வாங்கிக் கொண்டு, அதற்கான இழப்பீட்டை உரிய காலத்துக்குள் தராமல் மாநிலங்களை வஞ்சித்து வருகிறார்கள்.

· மாநிலங்களிடம் இருக்கிற கல்வி உரிமையை, புதிய கல்விக் கொள்கை மூலமாகவும் - நீட் போன்ற தேர்வுகளின் மூலமாகவும் பறிக்கிறார்கள்.

அனைவர்க்கும் கல்வி என்ற உன்னதமான நோக்கத்தைச் சிதைத்து, பள்ளிகளைத் தாண்ட விடாமல் பிள்ளைகளைத் தடுக்கப் பார்க்கிறார்கள். நுழைவுத் தேர்வு என்பது, உயர்கல்வி நிறுவனங்களுக்குள் நம் பிள்ளைகள் நுழைவதைத் தடுக்கும் தேர்வாக இருக்கிறது.

· இந்தி மயமாக்கல் வெட்டவெளிச்சமாக நடக்கிறது.

· தமிழ்நாட்டில் இருக்கும் ஒன்றிய அரசுப் பணியிடங் களில் தமிழர்களுக்கு, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு முறையான பிரதிநிதித்துவம் வழங்கப்படுவது இல்லை.

· நாடாளுமன்றத்தில் விவாதிக்கும் உரிமை என்பது பறிக்கப்படுகிறது. பேச முயற்சிக்கும் உறுப்பினர்கள் அவையை விட்டு நீக்கப்படுகிறார்கள்.

· ஒற்றையாட்சித் தன்மை கொண்டதாக இந்தியாவை மாற்ற நினைக்கிறார்கள்.

இவற்றை முழுமையாக நாம் எதிர்த்தாக வேண்டும்.

இவை குறித்து, மக்களிடம் பரப்புரைகள் செய்தாக வேண்டும். 

கூட்டு இயக்கம் நடத்தியாக வேண்டும்.

சமூக விடுதலை, பொருளாதார விடுதலை, நாட்டு விடுதலை உணர்வுள்ளவர்கள் இங்கு கூடியுள்ளோம்

சமூக விடுதலை பேசிய திராவிட இயக்கமும் - நாட்டு விடுதலை பேசிய காங்கிரஸ் கட்சியும் - பொருளாதார வர்க்க விடுதலை பேசிய கம்யூனிஸ்ட் இயக்கமும் இன்றைக்கு ஒரே மேடைக்கு வந்திருக்கிறோம்.  

ஏனென்றால், இன்று அனைவைரும் பேச வேண்டியது சமூக நல்லிணக்கமும் - மாநில உரிமைகளும்தான். தனித்தனியாக போராடி வந்த நாம் இன்று ஒன்றாகப் போராட வேண்டி ஒன்று சேர்ந்துள்ளோம்.

அதனால்தான், இது தேர்தல் கூட்டணி அல்ல; கொள்கைக் கூட்டணி!  - என்று நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன். 

தேர்தல் கூட்டணி என்றால் தேர்தலோடு முடிந்துவிடும். கொள்கைக் கூட்டணியாக இருப்பதால், நம் கொள்கையில் வெற்றி பெறும் வரை இது தொடரும்.

ஒற்றையாட்சியை எதிர்த்து - நாம் அனைவரும் ஓரணியில் - ஒன்றிணைந்து - உறுதியோடு குரல் கொடுக்க, இத்தகைய மாநாடுகள் அடித்தளம் அமைக்கட்டும்! - என்று வலியுறுத்தி கேட்டுக்கொண்டு  விடைபெறுவதற்கு முன்பாக - 

‘தகைசால் தமிழர்’ விருது பெற்றுள்ள அய்யா நல்லகண்ணு அவர்களுக்கு, மீண்டும் ஒரு முறை தமிழ்நாட்டு மக்களின் சார்பில் என்னுடைய வாழ்த்துகளை, வணக்கத்தைத் தெரிவித்து விடைபெறுகிறேன்.

நன்றி வணக்கம்!

No comments:

Post a Comment