‘விடுதலையால் விடுதலை' - நூல் ஆய்வரங்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 12, 2022

‘விடுதலையால் விடுதலை' - நூல் ஆய்வரங்கம்

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் சார்பாக குடந்தை க.குருசாமி அவர்கள் எழுதிய ‘விடுதலையால் விடுதலை ‘ என்னும் நூல் அறிமுகக் கூட்டம் 29.07.2022 வெள்ளிக்கிழமை மாலை 6.30 முதல் 8.00 மணி வரை இணைய வழியாக நடைபெற்றது. 

நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்றும், குடந்தை க.குருசாமி அவர்களைப் பற்றி சிறப்பாக அறிமுகப்படுத்தியும் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலத்துணைத்தலைவர் கவிஞர் சுப.முருகானந்தம் உரையாற்றினார். நிகழ்வுக்கு பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலத்தலைவர் முனைவர் வா.நேரு தலைமை தாங்கினார். அவர் தனது உரையில் 'விடுதலையால் விடுதலை' என்னும் இந்த நூலை அறிமுகப்படுத்தும் நிகழ்வு நடத்துவதில் மிக்க மகிழ்ச்சி.தொண்டறச்செம்மலாகத் திகழும் குடந்தை குருசாமி அவர்கள் தனது வாழ்வையும் விடுதலையையும் இணைத்து எழுதி இருக்கும் இந்த நூல் மிகவும் சிறப்பான நூல். தந்தை பெரியார் கொள்கையை வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டவர்கள் எவ்வளவு மனம் நிறைவாக, மகிழ்ச்சியாக, மற்றவர்களுக்கு உதவியாக வாழ்கிறார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டான பல செய்திகளைக் கொண்ட நூல் இது - என்றும், ஒவ்வொரு கழகத்தோழரும் இது போல தங்கள் வாழ்க்கை நிகழ்வுகளைப் பதிய வேண்டும் - என்றும் கேட்டுக்கொண்டார். நிகழ்விற்கு பகுத்தறி வாளர் கழகத்தின் மாநிலத்தலைவர் இரா.தமிழ்ச் செல்வன், பகுத்தறிவு ஊடகப்பிரிவின் தலைவர் மா.அழகிரிசாமி, பகுத்தறிவு ஆசிரியர் அணித்தலைவர் தமிழ்.பிரபாகரன், பகுத்தறிவு கலைப்பிரிவின் மாநிலச் செயலாளர் மாரி.கருணாநிதி, பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் துணைத்தலைவர் கோ.ஒளிவண்ணன் ஆகியோர் முன்னிலை ஏற்றனர்.

பெரியார் பேசுகிறார்

நிகழ்வின் தொடக்க உரையினை தஞ்சை மாவட்ட திராவிடர் கழகத்தலைவர் வழக்குரைஞர் அமர்சிங் அவர்கள் ஆற்றினார்.அவர் தனது உரையில் “ தஞ்சை மாவட்டமும்,குடந்தை மாவட்டமும் இணைந்து ஒரே மாவட்டமாக இருந்த நேரத்தில் ஒரு 5, 6 ஆண்டுகள்,2007 முதல் நான் தலைவராகவும்,குருசாமி மாவட்ட செயலாளராகவும் இருந்து பணியாற்றினோம்.எனக்கு மிகப்பெரிய வியப்பாக இருக்கும். நாங்கள் வழக்குரைஞர்கள். எங்களுக்கு லீவு வேண்டுமென்றால் ஜுனியரை அனுப்பிவிட்டு லீவு எடுத்துக் கொள்ளலாம். அலுவலகப்பணி இல்லை. இத்தனை மணிக்கு வரவேண்டும் என்ற நேரக்கட்டுப்பாடு எல்லாம் இல்லை. கையெழுத்துப் போட வேண்டியதில்லை. அவர் இருந்த பணி என்பது மிக முக்கியமான பணி.அந்தப்பணியில் இருந்து கொண்டு மிக அருமையாக கழகப்பணியையும் ஆற்றியவர் குடந்தை குருசாமி அவர்கள். குடந்தை குருசாமி ,நான் வருகிறேன் என்றால் குடந்தை பெரியார் இல்லத்தில் தயாராக இருப்பார் ஒரு பத்துப் பேருடன். அத்தோடு குருதி கொடை, விழி கொடை, உடல் கொடை என்று அந்தப் பணிகளை ஒரு பக்கம் நடத்திக் கொண்டே இருப்பார். இன்னொரு பக்கம் எழுத்துப் பணியும் செய்து கொண்டிருப்பார்.இன்னும் சொன்னால் ‘பெரியார் பேசுகிறார்' என்ற தொடரை முதன் முதலில் குடந்தையில் தொடங்கினார்.பின்னர் தஞ்சாவூரில் துவங்கினோம். பல இடங்களில் அந்தத் தொடர் நடைபெற்றது.

ஜாதி ஒழிப்புப் போர்

‘விடுதலை' என்று வருகின்றபோது, அவர் அன்று இருந்த நிலையை, அவர் எழுதிய விடுதலையால் விடுதலை புத்தகத்தில் எடுத்துக்காட்டுகிறார். அவரது ஊரான தேவராயன்பேட்டைக்கு நான் போயிருக்கிறேன். அந்த ஊர் கழகத்தோழர்கள் நிறைந்த பகுதி. ஜாதி ஒழிப்புப்போரில் முன்னின்று போராடிய தோழர்களைக் கொண்ட ஊர் அந்த ஊர். அவர் ஊருக்கு தந்தி வந்த கதையைச் சொல்கிறார். தந்தியைப் படிக்கத் தெரிந்த ஆள் ஊரில் இல்லை என்று சொல்கிறார்.ஒரு பக்கம் முடி திருத்தும் தொழிலாளர்கள் வீடு. இன்னொரு பக்கம் சலவைத்தொழிலாளர்களின் வீடு. இன்னொரு பக்கம் மண்பாண்டம் செய்யக்கூடிய தொழிலாளர்கள் இருக்கும் வீடு என்று அந்தப்பகுதி முழுவதும் அப்படித்தான் இருந்தார்கள். ஜாதியக் கட்டமைப்பு மிகத் தீவிரமாக இருந்த பகுதியில்தான் அய்யா குருசாமி அவர்கள் வளர்ந்தார்கள் என்பதைப் புத்தகத்தில் ,தந்தை பெரியார் சொல்வதைப் போல மிக வெளிப்படையாகச்சொல்லி இருக்கிறார். ஜாதிக் கட்டுப்பாடு மிகுந்த அந்தப் பகுதியில் இருந்துதான்.

தேவராயன்பேட்டை, ராஜகிரி, பாபநாசம் பகுதிகளிலிருந்து நிறையப்பேர் தந்தை பெரியார் அறிவிக்கும் போராட்டங்களில் கலந்து கொள்வார்கள். ‘விடுதலை'யைப் பணம் கொடுத்து வாங்கும் நிலை இல்லாமல் இருந்தாலும் கூட ‘விடுதலை'யை 4 கி.மீ. தூரம் நடந்து சென்று பாப நாசத்திலிருந்து தி.ம. நாக ராசன் அவர்களிடமிருந்து வாங்கி வந்து தன்னுடைய தந்தை உரக்க வாசித்து தங்களையும் கேட்கச்செய்வார் என்று கூறுகின்றார்.இந்த ‘விடுதலை'யால் அறியாமையிலிருந்து விடுதலை பெற்றிருக்கிறோம். ஜாதி இழிவிலிருந்து விடுதலை பெற்றிருக்கிறோம்.,இன்னும் சொல்லப்போனால் பெண் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்றிருக் கிறோம். வறுமையில் இருந்து விடுதலை பெற்றிருக்கி றோம். இது எல்லாமே குருசாமியின் வாழ்க்கையில் இருக்கிறது.தமிழ் நாடு முழுவதும் இருக்கும் நம் தோழர்கள் அனைவரும் ‘விடுதலை' பத்திரிகையால் இந்த நாலு விடுதலையும் பெற்றிருக்கிறோம்.பெண் உரிமை பெற்றிருக்கிறார்கள்.

எங்களுடைய வாழ்க்கையைக்கூட பொதுச் செயலாளர் ஜெயக்குமார் அவர்களின் தூண்டுதலின் பேரில் ஒரு மாதம் எழுதி ,75-ஆம் ஆண்டு விழாவில் மலராக வெளியிட்டோம். பவளவிழா மலரில் பதிவு செய்தோம்.என்னுடைய வாழ்க்கையில் கூட எனது இணையர் கலைச்செல்வி அவர்கள் விவாகரத்து பெற்றவர்கள். ஜாதி மறுப்புத்திருமணம். தந்தை பெரியாருடைய கொள்கையை திருமணத்திற்கு முன்பே ஏற்றுக்கொண்டதால் மிகச்சுலபமாக செய்ய முடிந்த்து.அதைப்போல குருசாமி அவர்கள் தன்னுடைய பிள்ளைகளுக்கு ஜாதி மறுப்புத்திருமணம் செய்து வைத்த்து அல்லாமல், தன்னுடைய சகோதரர் மகன் சந்துருவுக்கும் ஜாதி மறுப்புத்திருமணம் செய்துவைத்தார்.அவர் நிறைய ஜாதி மறுப்புத் திருமணங்களை செய்துவைத்திருக்கிறார். ஜாதி மறுப்புத் திருமணங்களை ஊக்கப்படுத்துகிற, அவர் களை ஆற்றுப்படுத்துகிற ஓர் அருமையான மனிதர் தான் நமது குருசாமி.

பகுத்தறிவு

அவரைப் பொறுத்த அளவில், 4ஆவது தலைமுறை யாக இந்த இயக்கத்தில் இவ்வளவு துடிப்போடு குருசாமியின் குடும்பத்தினர் இருப்பதற்கு நான் ஒரு குறிப்பைச்சொல்லவேண்டும்.அவருடைய வாழ்விணையர் ராணி குருசாமி அவர்கள் மிக முக்கியமான காரணம்.நம் குடும்பங்களில் ஆண்கள் இயக்கத்தில் இருப்பார்கள்.பெண்கள் நம் இயக்கத்தில் இல்லை என்றால் சிக்கல்.நம் குடும்பங்களில் பெண்கள் இயக்கத்தில் இல்லை என்றால் தொடர்ந்து போக முடியாது. ராணி அவர்களைப் பொறுத்த அளவில், நாடறிந்த நல்ல நம் இயக்க பேச்சாளர், மந்திரமா தந்திரமா நிகழ்ச்சி நடத்துகிற புரொபசர் குமார் அவர்க ளின் மகள்தான் ராணி குருசாமி. அம்மா ராணி குரு சாமி கூட பல்வேறு இடங்களில் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். குழந்தைப் பருவத்திலிருந்தே பகுத்தறிவுப் பாலை ஊட்டி, சமூகத்திற்குப் பயன்படுகிற ஒரு பெண்ணாக அவர்களை வளர்த்த காரணத்தால்தான் ராணி குரு சாமி அவர்கள் குருசாமி அவர்களுக்குத் துணையாக இருந்து ,தன்னுடைய பெண்ணுக்கும் ஜாதி மறுப்புத் திருமணம் செய்துவைத்து வழிவழியாக வருகின்றார் கள் என்பதை நான் பதிவு செய்ய விரும்புகிறேன்.

குருசாமியைப் பொறுத்தளவில் பல்வேறு பணிகளைச் செய்து வருபவர்.அத்தனை பணிகளோடு நேரத்தை ஒதுக்கி,எழுதி,இந்த நூலை வெளியிட்டிருக்கிறார் என்று சொன்னால் இன்னும் சொன்னால் தஞ்சை மாவட்ட்த்தில் இருக்கிற அனைவரின் ஒளிப்படங்களையும் அந்த நூலிலே பதிவிட்டிருக்கிறார்.அரிய ஒளிப்படங்கள்.எல்லோரும் பெரியாரின் பெருந்தொண்டர்கள், மகளிர் உட்பட அனைவரையும் பதிவு செய்திருக்கிறார்.ஒரு வரலாற்று நூலாக, எடுத்துக்காட்டான நூலாக,பெரியாரின் தொண்டர்கள் எல்லோரும் நினைவு கொள்கிற நூலாக ,தன்னுடைய வாழ் நாளில் தான் பட்ட துன்பங்களையும் இன்று ‘விடுதலை' படித்து ,இயக்கத்திற்கு வந்த்தால் தான் முன்னேறி இருப்பதைப் பற்றியும், சமுதாயத்தில் எல்லோரும் மதிக்கக்கூடிய இட்த்திலே இருப்பதற்குக் காரணமே தந்தை பெரியாரும் அவர் தந்த விடுதலையும் தான் என்பதை மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்களுக்கு மிகுந்த நம்பிக்கைக்குரியவராக திகழ்பவர் குருசாமி அவர்கள்.ஏனென்றால் நிகழ்வுகளை பதிவு செய்வதில் மிகுந்த தேர்ச்சி பெற்றவர்.எனக்கு இந்த மாதத்தில் நிகழ்ந்தது என்ன என்பது தெரியாது. ஆனால் குருசாமி அதனை நேர்த்தியாக பதிவு செய்வார். ஆண்டறிக்கையை அய்யா தமிழர் தலைவரிடம் அளிப்பார்.அதைப்பார்த்துவிட்டு அய்யா ஆசிரியர் அவர்கள், இப்படி ஆண்டறிக்கையை தயார் செய்து கொடுப்பது நீங்கள்தான் என்று பாராட்டுவார்கள். பணி நிறைவு பெற்றதும் ஒரு விடுதலைதான் என்ற வகையில் இன்றைக்கு முழு நேர களப்பணியாளராக பணியாற்றுகிறார்.அவரைப் பாராட்டி,இந்த அரிய நூலை எழுதி வெளியிட்டமைக்கும் எனது பாராட்டுகளைக் கூறி நன்றி கூறி முடிக்கிறேன்" என்று உரையாற்றினார்.

பேராயுதம்

தொடர்ந்து சிறப்புரையை குடந்தை மாவட்ட பகுத்தறிவாளர் கழகச்செயலாளர் பேரா.முனைவர் சேதுராமன் அவர்கள் ஆற்றினார்.அவர் தனது உரை யில், “அய்யா ஆசிரியர் அவர்களை வணங்குகின்றேன். நான் இந்த இயக்கத்திற்கு வந்ததற்குக் காரணமே அய்யா குருசாமி அவர்கள்தான்.அவர் போக்குவரத்துத் துறையிலே வேலை பார்த்துக்கொண்டிருந்தார்.நானும் அங்கு வேலைக்குச்சேர்ந்தேன்.அவர் என்னோடு பேசினார்.பெரியார் பற்றிய நூல்களை எல்லாம் கொடுத்தார்.அவற்றை எல்லாம் படித்து படித்து ,தந்தை பெரியாரின் பால்,அய்யா ஆசிரியரின்பால் ஈர்க்கப்பட் டேன் என்பதுதான் உண்மை.இந்த சமூகத்தினருக்கு வழிகாட்டக் கூடியவர்களாக நமது கருஞ்சட்டைத் தோழர்கள் இருக்கிறார்கள்.2000 ஆண்டுகளாக நம்மை அழுத்திக்கொண்டிருக்கிற அடிமைத்தனத்திலிருந்து நாம் விடுபட நமக்குக் கிடைத்த பேராயு தம்தான் விடுதலை.விடுதலையை எப்படிப்பெற்றார், எப்படி படித்தார்,அவரது தந்தை எப்படி பாபநாசம் நடந்தேபோய் விடுதலையைப் பெற்று ,வந்து படித்துக் காண்பித்தார் என்பதை எல்லாம் இங்கு குறிப்பிட்டுச் சொன்னார்கள்" என்று குறிப்பிட்டார். மிகச்சிறப்பாக அய்யா குடந்தை குருசாமி பற்றியும்,அவரின் ‘விடு தலையால் விடுதலை" என்னும் நூல் பற்றியும் அந்த நூலில் உள்ள பல்வேறு தலைப்புகள் பற்றியும், நூறாண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட நீதிக்கட்சி முதல் இன்றைக்கு நடக்கும் திராவிட மாடல் ஆட்சி வரை பல்வேறு எடுத்துக்காட்டுகளைக் குறிப்பிட்டு, இந்தியாவில் ,உலகத்தில் நடக்கும் பல நிகழ்வுகளோடு ஒப்பிட்டு சிறப்புரை ஆற்றினார்.

ஏற்புரையாக நூலின் ஆசிரியர் குடந்தை குருசாமி உரையாற்றினார். “ எனது இளமைக் காலத்தையும் நான் வளர்ந்த விதத்தையும் எனக்கு இருக்கிற பொருளாதார மாற்றத்தையும் குறிப்பிட வேண்டும் என்பதற்காக இந்த செய்திகளை நான் எழுத ஆரம்பித்தேன்.விடுதலை என்றால் எனக்கு என்ன என்றே தெரியாத காலத்தில் எனது அப்பா தேவராயன்பேட்டையிலிருந்து பாபநாசம் என்பது 4 கி.மீ. நடந்து போகணும். வேலையை முடிச்சிட்டு, சாயங்காலம் வந்து பிறகு புறப்பட்டுப்போய் அந்த விடுதலைப் பேப்பரை வாங்கிட்டு வந்து இராத்திரி பத்து மணிக்கு மேல அந்த விடுதலைப் பேப்பரை அவங்க படிப்பாங்க, நாங்க எல்லாம் சுத்தி இருந்து கேட்போம். அந்தப் பத்திரிகையிலே வருகிற ஒரு சில செய்தி என்னான்னு கூட அன்றைக்கு எனக்குத் தெரியாது. இருந்தாலும் அவங்க படிப்பாங்க, அவங்க இல்லாத நேரத்தில் நாங்க படிப்போம். அப்படித்தான் விடுதலை என்பது அந்தப் பகுதிக்கு அறிமுகம் ஆச்சு. அதைப்போல அன்றைக்கு விடுதலை பத்திரிக்கை என்பது இன்றைக்குப் போல் உயர்ந்த கட்டடங்களில் இல்லை. அது இருந்தது எல்லாம் நம்முடைய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சொல்வதைப்போல ,விடுதலை நாளேடு என்பது ஆலமரத்தடி,அரச மரத்தடி,அதே போல முடி வெட்டுகிற இடம், சலவை செய்கிற இடம் ஞ்அந்த மாதிரி இடங்களில்தான் விடுதலை இருந்தது.

விடுதலையால் வந்த மாற்றம்

மிக அருமையான தோழர்கள், அன்றைக்கு மண்ணாங்கட்டி, தொப்புளான், மொட்டையன், கருப்பன் என்று இருந்தார்கள். அன்றைக்கு விடுதலை யைப் படித்த அந்தத் தோழர்களுடைய குழந்தைகள் இன்றைக்கு அறிஞர்களாக, பொறிஞர்களாக, பேராசியர்களாக, வழக்குரைஞர்களாக மிகப்பெரிய மாற்றம் பெற்றிருக்கிறார்கள் என்பதைப் பதிவு செய்ய வேண்டும் என்பதற்காகத்தான், விடுதலையை பற்றி, பின்னோக்கிச்சென்று சொல்லவேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதைப்போல என்னுடைய போக்குவ ரத்துத் துறையிலே பணி என்பது. 1989இல் தந்தை பெரியார் சிலை வைத்தோம். நாம் இன்னார்தான் என்று அடையாளப்படுத்திக் கொண்டோம்.. அந்தக் கொள்கையிலிருந்து ஒரு சதவீதம் கூட வழுவாமல், அதில் பல்வேறு சிக்கல்கள் இருந்தாலும் கூட அதில் தொடர்ந்து நாம் பயணம் செய்தோம். அப்படி பயணம் செய்கிறபோது ‘விடுதலை' என்பது எவ்வளவு தூரத்திற்கு உதவியாக இருந்தது, ‘விடுதலை'யைப் படித்த ஏனைய தோழர்கள் நம்மோடு எவ்வளவு தூரத்திற்குப் பயணித்தார்கள் அப்படி என்பது ரொம்ப பெருமைப்படத்தக்கது. எனக்கு அதிகாரியாக இருந்த மதுரையைச் சார்ந்த பழனிவேல்ராஜன், அய்யா சுப.முருகானந்தம் அவர்களின் நண்பர் ஒரு பெரியாரியலாளர். நானும் பெரியாரியலாளர். இருவரும் சந்தித்தபிறகு எனது வேலையே மிகவும் எளிதாகி விட்டது. எங்களுடைய பணியைப் பெரியார் ஒருங் கிணைத்தார்.

இந்த மாதிரி ஒவ்வொரு காலகட்டத்திலும் நம்மால் முடிந்த காரியங்களை செய்வதற்கு பெரியார் எந்த வகையில் எல்லாம் நமக்குக் கைகொடுத்தார் என்பதை பதிவு செய்வதற்குத் தான் அந்த நூலை நாம் பதிவு செய்தோம்.நான் பிறந்த வருடம் 1962.1962இல் நமது தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் விடுதலை ஆசிரியர் பொறுப்பை ஏற்றார்கள்.நான் 10 வயதாக இருக்கும்போது அய்யா ஆசிரியர் அவ்ர்கள் எங்கள் ஊருக்கு வந்தார்கள்.ஊரில் 60-க்கும் மேற்பட்ட கழகத் தோழர்கள். ஒவ்வொரு தோழரையும் பெயரைச் சொல்லி அழைத்தார். இப்போது போல அப்போதும் நலம் ஒவ்வொருவரிடமும் விசாரித்தார். எனக்கும் அந்த வயதில் ,கையைக்குலுக்கி வாழ்த்து தெரிவித்தார். இன்றைக்கும் அந்த தொடுதல்,முதன் முதலில் ஆசிரிய ரோடு கைகுலுக்கியது பசுமையாக நினைவு இருக்கிறது.

வாழ்வியல் சிந்தனைகள்

அப்போது எல்லாம் அய்யா ஆசிரியர் பக்கத்தில் போக அவ்வளவு ஆசைப்படுவேன். நான் பக்கத்தில் சென்று அவரோடு பேசிக்கொண்டு இருக்க முடியுமா என நினைப்பேன்.நான் நிறையப்படித்தவன் இல்லை. அய்.டி.அய். முடித்துவிட்டு வேலைக்குப்போனவன். இயக்கத்தில் மாவட்ட செயலாளராக, தொழிற்சங்கத்தில் பணியாற்றிய போது அய்யா ஆசிரியர் அவர்களை நெருங்கிப் பார்க்கவும், அவர் சொல்வதை நிறைவேற்ற வுமான ஒரு வாய்ப்புக் கிடைத்தது. அவருடைய வாழ்வியல் சிந்தனைகள் என் வாழ்க்கையை மேலும் செம்மைப்படுத்த உதவியது. நான் ‘விடுதலை‘யால் பொருளாதார விடுதலை பெற்றவன். நான் ‘விடு தலை'யால் உயர்வு பெற்றவன்.

குருதிக்கொடை, உடற்கொடை, விழிக்கொடை என பல தோழர்களின் உடல்களை விழிகளை கொடையாகக் கொடுக்க உதவி செய்திருக்கிறேன்.அய்யா இராஜப்பா அவர்களின் துணைவியார் உள்ளிட்ட பலரின் உடல்களை கொடையாக மருத்துவமனைக்கு கொடுத்திருக்கிறோம்.தந்தை பெரியாரின் தொண்டு என்பது மனித நேயம்தான்.அந்த மனித நேய வாழ்விற்கு பெரும் துணையாக இருப்பது ‘விடுதலை'யும் அய்யா ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதலும் தான்..என் குடும்பத்தில் ஒரு பிரச்சினை என்றால் கூட தீர்வுக்கு என அணுகுவது நம் குடும்பத்து தலைவர் அய்யா ஆசிரியர் அவர்களைத்தான்.எனது இணையர் ராணி அவர்களும் அய்யா ஆசிரியர் அவர்களிடத்தில் பெருமதிப்பு கொண்டவர்.இயக்கத்தில் ஈடுபட முழு ஒத்துழைப்பு அளிப்பதோடு அவரும் இயக்க வேலை செய்பவர்.என்னோடு பழகிய, உதவிய, கழகத்திற்காக உழைத்த அனைவரையும் பதிவாகக் கொண்டு வரவேண்டும் என்று நினைத்தேன்.பதிந்தேன்.அதற்கு இப்படிப்பட்ட ஒரு வரவேற்பு இருக்குமென நான் நினைக்கவில்லை. புத்தகத்தை வெளியிட்ட நாள் அன்றே 600 புத்தகங்கள் விற்றது. இன்றைக்கு பகுத் தறிவு எழுத்தாளர் மன்றத்தின் சார்பாக இந்தப்புத்தகம் பற்றி இவ்வளவு சிறப்பாக நூல் அறிமுகம் செய்திருக் கிறீர்கள். அனைவருக்கும் நன்றி" என்று நெகிழ்வாகக் குறிப்பிட்டு உரையாற்றினார்.

நிகழ்வின் இறுதியில் அனைவருக்கும் நன்றி கூறியதோடு , ஒரு கறுப்புச்சட்டை தோழரின் வரலாறு என்பது தனிப்பட்ட வரலாறு அல்ல, ஒரு நூற்றாண்டின் வரலாறு,தமிழர்கள் மீட்சி பெற்ற வரலாறு என்ற வகையில், தன் வரலாறு என்று மட்டும் இல்லாது தன்னைச்சுற்றி இருந்த இயக்கத்தோழர்களின் வரலாற் றையும் இணைத்து இந்த நூலை அய்யா குருசாமி ஆக்கியிருப்பது நமக்கு எல்லாம் மகிழ்ச்சியும் பெருமையும் அளிக்கிறது நம்முடைய தோழர்களின் பணி என்பது எதிர் நீச்சல் பணி என்பது மட்டுமல்ல, எடுத்துக்காட்டான பணி என்பதை மிக அழகாக நூலாக வடித்து கொடுத்து இருக்கிறீர்கள்.அய்யா குரு சாமி அவர்களே ,நீங்கள் பேசும்போது தலைவருக்கும், தொண்டருக்குமான அந்த தொடர்பைக் குறிப்பிட் டீர்கள். மிக நெகிழ்ச்சியாக இருந்தது.வாழ்வியல் சிந்தனைகள் தந்த தலைவர் அல்லவா நம் தலைவர். உங்களுடைய புத்தகத்தின் வழியாக கழகத்தின் வரலாறைப் பேசியிருக்கிறோம் எனக் குறிப்பிட்டு அய்யா அமர்சிங் அவர்களின் உரையின் சிறப்புகள் பற்றியும் ,சிறப்பு பேச்சாளர் பேரா.முனைவர் சேது ராமன் அவர்களின் உரையின் சிறப்புகள் பற்றியும் குறிப்பிட்டு பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் துணைத் தலைவர் கவிஞர் மா.கவிதா அவர்கள் நன்றியுரையாற்றினார்.

No comments:

Post a Comment