சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் - சென்னையில் உச்சநீதிமன்றக் கிளை முதலமைச்சர் கோரிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 7, 2022

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் - சென்னையில் உச்சநீதிமன்றக் கிளை முதலமைச்சர் கோரிக்கை

சென்னை, ஆக.7 உச்சநீதிமன்றக் கிளை சென்னையில் அமைய ஏற்பாடு செய்வதுடன், சென்னை உயர்நீதிமன்றத் தில் வழக்காடு மொழியாக தமிழ் மொழி ஆக்கப்பட வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்து உள்ளார். 

கலைவாணர் அரங்கத்தில் தமிழ் நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் வெள்ளி விழா நேற்று (6.8.2022) நடந்தது. தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவர் நீதிபதி அருண் மிஷ்ரா தலைமை தாங்கினார். உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண் டாரி, மாநில மனித உரிமை ஆணையத் தின் தலைவர் நீதிபதி பாஸ்கரன், தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மனித உரிமை செயல்பாடு விழாவில் மனித உரிமைகள் செயல் பாட்டில் சிறப்பாக செயல்பட்டவர் களுக்கு விருதுகளை வழங்கி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதா வது:- 

தமிழ்நாட்டில் கடந்த 1996-ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகுதான், மாநில மனித உரிமை ஆணையம் அமைப்பதற்கான அர சாணை 1996-ஆம் ஆண்டு டிசம்பர் 20- ஆம் தேதி அன்று பிறப்பிக்கப்பட்டது. இதனைச் சட்டசபையில் முதல்-அமைச்சராக இருந்த முத்தமிழறிஞர் கலைஞர் அறிவித்தார். நமது அரசு, சட்டத்தின் அரசாக, நீதியின் அரசாக, சமூகநீதியின் அரசாக செயல்படுகிறது. எனவே தான் நீதித்துறையினரின் கோரிக்கையை உடனுக்குடன் நிறை வேற்றிக் கொடுத்து வருகிறோம்.தற்போது, மாநில மனித உரிமை ஆணையத்தின் வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு சில அறிவிப்புகளை வெளியிட விரும்புகிறேன். ஆணையத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். பணியாளர்களின் எண்ணிக்கை அதி கரிக்கப்படும். ஆணையத்தின் விசா ரணைக் குழுவில் போதுமான காவல் துறையினர் நியமிப்பது, மனித உரிமைக்காக குரல் கொடுப்பவர்களை எப்படி பயன்படுத்திக் கொள்வது என்பது குறித்து விரைவில் ஆய்வு செய்யப்படும். 

தமிழ் வழக்காடு மொழி 

மாநில மனித உரிமை ஆணையத்தின் இணையதளம் தமிழில் உருவாக்கப் பட்டு தகவல்கள் தமிழில் மொழி பெயர்த்து வெளியிடப்படும். பயிற்சி முகாம்கள் ஏற்பாடு செய்யப்படும். தனிமனித உரிமையும் மீறப்படக் கூடாது. எத்தகைய சமூகத்தையும் இழிவுபடுத்த கூடாது. காரணமான யாரும் சட்டத்தின் பார்வையில் இருந்து தப்பிவிடக்கூடாது. இவை 3-ம் தான் அரசினுடைய மனித உரிமைக் கொள்கை. உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் பங்கேற்கக்கூடிய இந்த நிகழ்ச்சியில் எனது சில கோரிக்கைகளை முன்வைக்க விரும்புகிறேன். பொது மக்கள், வழக்குரைஞர்களின் நலனைக் கருத்தில் கொண்டு உச்சநீதிமன்ற கிளை, சென்னையில் அமைய ஏற் பாடுகள் செய்ய வேண்டும். சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழி யாக தமிழ் மொழி ஆக்கப்பட வேண் டும். நீதித்துறையைப் பொறுத்தவரை நான் இங்கே கோரிக்கை வைப்ப வனாகத்தான் வந்திருக்கிறேன் என் பதை நீதிபதிகள் அறிவார்கள் என்று நான் நம்புகிறேன். சட்டத்தின் அரசாக, நீதியின் அரசாக, அதுவும் சமூகநீதியின் அரசாக அமைவதுதான் மக்களின் அரசாக அமைய முடியும். 'எல்லோர்க் கும் எல்லாம்' என்ற சமூகநீதித் தத்து வத்தை உள்ளடக்கிய திராவிட மாடல் அரசை நாங்கள் நடத்தி வருகிறோம். 

குறள் வழி நடக்கும் அறவழி ஆட்சி 

மக்களுக்கு இன்றைய தேவை என்ன என்பது மட்டுமல்ல, முக்கியமாக நீதி மட்டும்தான் என்பதை நாங்கள் அறி வோம். உலகப் பொருளாதார மேதை யான அமர்த்தியா சென் கூறுகிறார். அவர் 'தி அய்டியா ஆப் ஜஸ்டிஸ்' என்ற புத்தகத்தில், 'நீதியை உருவாக்கிக் கொடுப்பதும், அநீதி ஏற்படாமல் தடுப் பதும் ஆகிய இரண்டும் முக்கியமானது' என்கிறார். அத்தகைய சூழ்நிலையை உருவாக்கவே நாங்கள் செயலாற்றி வருகிறோம். இதைத்தான் திருவள் ளுவர் தனது குறளில் 'வேலன்று வெற்றி தருவது, மன்னவன் கோலதூம் கோடா தெனின்' என்று கூறினார். அதாவது, ஆட்சி யாளருக்கு வெற்றி தருவது ஆயுதம் அன்று. அவரின் நெறி தவறாத ஆட்சி முறையே என்பதாகும். குறள் வழி நடக்கும் அறவழி ஆட்சியால், தமிழ் மக்களின் நலனையே முன்வைத்து செல்கிறோம். அவர்களின் உரிமைகளை பாதுகாக்க தொடர்ந்து விழைகிறோம். அந்த வகையில், மாநில மனித உரிமை ஆணையமானது இத்தகைய சமூகநீதி சமூகத்தை உருவாக்க அனைத்து வகையிலும் உதவ வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் மாநில மனித உரிமை ஆணையத்தின் செய லாளர் டாக்டர் விஜய் கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 


No comments:

Post a Comment