கிளம்பிற்றுக்காண் திராவிடர் கழக இளைஞர் சேனை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 3, 2022

கிளம்பிற்றுக்காண் திராவிடர் கழக இளைஞர் சேனை!

அரியலூரில் ஜூலை 30ஆம் தேதி நடைபெறற திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாட்டையொட்டி நடைபெற்ற பேரணி சரியாக மாலை 4.30 மணிக்கு அரியலூர், காமராஜர் திடலில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து வருகை தந்த இளைஞர் பட்டாளம் மாவட்ட வாரியாக கூடி நின்றது தமிழர் தலைவரின் வருகையை எதிர்பார்த்து; 5.15 மணிக்கு தமிழர் தலைவர் திடலுக்கு வருகைபுரிந்தார். அரிமா சேனை போல் அணிவகுத்து நின்ற கழக இளைஞர்கள் தலைவரைப் பார்த்து உற்சாக பெருமகிழ்ச்சி கொண்டனர். தமிழர் தலைவர் உறுதிமொழி கூற அதனை ஏற்று அணிவகுத்து புறப்பட்டனர் அரியலூர் வீதிகளில்.

மாநில இளைஞரணி துணை செயலாளர், பெரியார் சமூகக் காப்பணி மாநில அமைப்பாளர் சோ.சுரேஷ் பேரணிக்குத் தலைமை வகித்தார். கழக மாநில அமைப்பாளர் இரா.குண சேகரன் பேரணியைத் தொடங்கி வைத்தார்.

இளைஞரணியினர் மாவட்ட வாரியாக, இரண்டு இரண்டு பேராக அணிவகுத்து நடைபோட தொடங்கினர். அவர்கள் எழுப்பிய கொள்கை முழக்கங்களும், மூட நம்பிக்கை ஒழிப்பு முழக்கங்களும் விண்ணிடிந்து வீழ்ந்ததோ என்கிற அளவுக்கு அரியலூரை அதிரச் செய்தது. 

கடலைக்காணா அரியலூரில் இளைஞர்களின் கருஞ்சட்டை பேரணி மடைதிறந்த பெருவெள்ளமாக அரியலூரில் பாய்ந்தது. திராவிடர் கழகத்திற்கே உரித்தான கட்டுப்பாட்டுடன் இளைஞர் பட்டாளம் அணிவகுத்தது அரியலூர் வாழ்பெருமக் களை அதிசயித்து பார்க்கச் செய்தது. அரியலூரின் சாலைகளில் இருபுறங்களிலும் திரண்டிருந்த பொது மக்களுக்கும், இளை ஞர்களுக்கும் பேரணியும், அதில் இடம்பெற்ற மூடநம்பிக்கை ஒழிப்புக் காட்சிகளும் ஆச்சரியத்தை ஏற்படுத்தின.

தஞ்சை ரெட்டிபாளையம் தப்பாட்ட கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சி பேரணியின் முதல் நிகழ்வாக புறப்பட்டது. அதில் ஆண்களும் பெண்களுமாக பறையடித்து பார்ப்பவர்கள் கண்களுக்கு விருந்தளித்தனர்.

வீர விளையாட்டுகளும், மூடநம்பிக்கை ஒழிப்பும்

கறம்பக்குடி முத்து தலைமையில் சுருள்கத்தி, சிலம்பம், தீப்பந்தம் விளையாட்டு, பூசாரிகள் தலையில் தேங்காய் உடைத்துக்காட்டி கடவுள் சத்தியில்லை மனித சக்தியே யென்று மனித மூடநம்பிக்கையை உடைத்துக் காட்டும் வகையில் ஊர்வலப் பாதையெல்லாம் கடவுள் இல்லை என்று சொல்லி, தலையில் அரிவாள் மீது ஏறி நின்று நடந்து வந்த காட்சி இளைஞர்களைப் பெரிதும் கவர்ந்தது. மு.விஜயேந்திரன் முக்கியமாக அதை செய்து காட்டினார். பேராவூரணி தோழர் சோம.நீலகண்டன் மக்கள் கூடிக் கூடி நிற்கும் இடங்களில் எல்லாம் அரிவாள்மீது ஏறி நின்றும், சூடம் கொளுத்தி கையில் ஏந்தி, நாக்கில் வைத்துக் காட்டியும் அசத்தினார்.

பெண்கள் தீச்சட்டி ஏந்தி 'தீச்சட்டி இங்கே, மாரியாத்தாள் எங்கே?' என்று முழக்கமிட்டு வந்த காட்சி பொதுமக்களை - குறிப்பாகப் பெண்களைப் பெரிதும் ஈர்த்தது.

சிந்தாமணி இராமசந்திரன், பரவனூர் மதியழகன் ஆகி யோர் ஆடிப்பாடி கடவுள் மறுப்புப் பாடல்களைப் பாடி அனாய சமாக செடல் காவடி எடுத்து நகர்முழுவதும் வலம் வந்தனர் 

பெரியார் பிஞ்சுகளின் கோலாட்டம் 

அணிவகுப்பின் மிகச் சிறப்பாக தஞ்சை மாவட்ட கலை இலக்கியணி தலைவர் சடையார்கோவில் நாராயணசாமி ஒருங்கிணைப்பில் சடையார்கோவில் பெரியார் பிஞ்சுகளின் கோலாட்டம் நடைபெற்றது. இதில் பாடகர் கோடையிடி கோவிந்தன், ந.அன்பரசு (துறையுண்டார் கோட்டை), ராஜ கோபால் (சடையார்கோவில்), மா.குழந்தைவேல் ராஜகோபால் (சடையார்கோவில்), தவில் இசைக் கலைஞர் மாதவன், பம்பை இசைக் கலைஞர் முத்து காளி மற்றும் 20 மாணவர்கள் (பெரியார் பிஞ்சுகள்) இடம்பெற்றனர். பெரியார் சமூக காப்பு அணியி னரின் மிடுக்கான அணிவகுப்பு அனைவரின் கவனத்தையும் ஈய்த்தது.

இளைஞரணியினரின் சீருடை அணிவகுப்பு

தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளில் இருந்தும் வந்திருந்த  திராவிடர் கழகத்தின் இளைஞர் பட்டா ளம் கழகக் கொடி ஏந்தி கம்பீரமாகப் பகுத்தறிவு முழக்கமிட்டு அணிவகுத்து வீறுநடை போட்டனர். முதலாவதாக விருத் தாசலம் கழக மாவட்டத்தின் அணிவகுப்பு தொடங்கியது. அதில் காண்பவர்கள் கண்களுக்கு வரலாற்றை பிரதிவலிக்கும் வகையில் திராவிட இயக்க தலைவர்களின் உருவங்கள் (பிட்டி தியாகராயர், டாக்டர் டி.எம்.நாயர், டாக்டர் கி.நடேசனார், ஏ.டி.பன்னீர்செல்வம், பனகல் அரசர் உள்ளிட்டோர்) பொருந்திய வாகனம் முன் செல்ல அதனைத் தொடர்ந்து இளைஞரணியினர் நடைபோட்டனர். தொடர்ந்து அரியலூர் மாவட்ட இளைஞரணி அணிவகுப்பு.

மக்கள் பார்வைக்கு தமிழர் தலைவர் 90  

அணிவகுப்பில் கலந்துகொண்ட தஞ்சை மாவட்ட இளை ஞரணியினர் தங்களின் அணிவகுப்பிற்கு முன்பாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 90 ஆவது அகவையை குறிக்கும் வகையில் 90 அடியில் பிளக்ஸ் பதாகையை 50க்கும் மேற்பட்ட தோழர்கள் ஏந்திபிடித்து சாலைகளில் நடந்து வந்து தொண்ணூறு வயதிலும் துவளாமல் தொண்டாற்றும் தலைவர் தான் எங்கள் தலைவர் தமிழர்தலைவர் என்று மக்களிடத்திலே பறைசாற்றினர்.

புதுச்சேரி மண்டல இளைஞரணியின் அணிவகுப்பில் மண்டல இளைஞரணி தலைவர் தி.இராசா, பாட்ஷா ஆகியோர் நாக்கில் சூடம் கொளுத்தி மூடநம்பிக்கையை முறியடித்து முழக்கமிட்டனர்.

தென்சென்னை மாவட்ட இளைஞரணியினர் தந்தை பெரியார், தமிழர் தலைவர் உருவபடங்களோடும், பெரம்பலூர் மாவட்டம் கொள்கை விளக்க பதாகைகள் ஏந்தியும், கள்ளக் குறிச்சி மாவட்டம் தாரைதப்பட்டை முழங்கவும் அணிவகுத்து வந்து அரண்சேர்த்தனர். லால்குடி மாவட்டம் புல்லம்பாடியிலிருந்து 15 க்கும் மேற்பட்ட பெரியார் பிஞ்சுகள் முழக்கமிட்டு வந்தது பெரியார் எனும் தத்துவம் இன்னும் வெகுகாலத்திற்கு உயிர்ப்புடன் இருக்கும் என்று உலகிற்கு உணர்த்தியது.

இளைஞரணியின் ஏழுச்சி பேரணியை வெள்ளாளத் தெருவில் அமைக்கப்பட்ட தனி மேடையில் கழகத் தலைவரும், தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சரும், கழகத் துணைத் தலைவரும் நின்று பார்வையிட்டு, அனைவருக்கும் வணக்கம் கூறினர். இளைஞரணியினரும், கழக தோழர்களும், பொது மக்களும் கழகத் தலைவருக்குத் தங்கள் வணக்கத்தைக் கூறி, மரியாதையை வெளிப்படுத்தினர்.

இந்த சீருடை அணிவகுப்பில் மிக நேர்த்தியாக நடை நடந்து பரிசுபெற்ற மாவட்டங்கள், முதல் பரிசை நாகபட்டிணமும், இரண்டாம் பரிசை தஞ்சாவூரும், மூன்றாம் பரிசை விருத்தாச லமும் பெற்றன. 

அரியலூரில் இளைஞர்கள் அணிவகுத்த ஊர்வலப்பாதை 

அரியலூர் திருச்சி சாலையில் அமைந்திருக்கும் காமராஜர் திடலில் புறப்பட்ட எழுச்சி பேரணி மேலஅஹ்ரகாரம், திருச்சி மெயின் ரோடு, வெள்ளாளத் தெரு, எம்.பி.கோயில் தெரு, மார்கெட் தெரு வழியாக பேருந்து நிலையம் அருகே அமைக் கப்பட்டிருந்த திறந்தவெளி மாநாடு பந்தலை அடைந்தது. அதன் பிறகு அந்த இடம் திராவிடர் கழக இளைஞரணியின் கருங்கடலாக மாறியது. மாநாட்டில் திராவிடர் கழக பொறுப் பாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர் பெருமக்கள், தமிழர் தலைவர் ஆகியோர் உரையாற்றினர். இரவு 10.30 மணிவரை மாநாடு நடைபெற்றது.


No comments:

Post a Comment