பில்கிஸ் பானு பாலியல் குற்றவாளிகள் 11 பேர் விடுதலையை எதிர்த்து மனு: உச்சநீதிமன்றம் ஏற்பு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 24, 2022

பில்கிஸ் பானு பாலியல் குற்றவாளிகள் 11 பேர் விடுதலையை எதிர்த்து மனு: உச்சநீதிமன்றம் ஏற்பு!

 புதுடில்லி, ஆக. 24- பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 11 பேருக்கு குஜராத் அரசு தண்டனைக் குறைப்பு வழங்கி விடுதலை செய்ததற்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.

கடந்த 2002 இல் குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பு நிகழ்விற்குப் பிறகு ஏற்பட்ட கலவரத்தின்போது, பில்கிஸ் பானு என்ற கர்ப்பிணி ஒரு கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அவரது குழந்தை உட்பட குடும்பத்தினர் 7 பேர் அந்த கும்பலால் படுகொலை செய்யப்பட்டனர். இந்த நிகழ்வு நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

நீண்ட நாட்கள் நடைபெற்ற இந்த வழக் கில், கடந்த 2008 இல் குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப் பட்டது. இந்நிலையில் 14 ஆண்டுகளுக்குமேல் சிறையில் இருந்த இவர்களுக்கு, 1992 ஆம் ஆண்டு தண்டனைக் குறைப்பு கொள்கை யின்கீழ், குஜராத் அரசு தண்டனைக் குறைப்பு வழங்கியது. இதையடுத்து 11 பேரும் கடந்த 15 ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டனர்.

குஜராத் அரசின் இந்த நடவடிக்கை பெரிதும் சர்ச்சைக்கு உள்ளானது. நடப்பு கொள்கையின் கீழ் இவர்களது மனுக்கள் பரிசீலிக்கப்படவில்லை என்று விமர்சனங்கள் எழுந்தன. 11 பேரின் விடுதலைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.

இதற்கிடையில், 11 பேருக்கும் குஜராத் அரசு தண்டனைக் குறைப்பு வழங்கியதற்கு எதிராக மார்க்சிஸ்ட் பிரமுகர் சுபாஷினி அலி உள்ளிட்ட 3 பேர், உச்சநீதிமன்றத்தில் வழக் குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு முன் நேற்று (23.8.2022) விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்குரைஞர் கபில் சிபல், வழக்கறிஞர் அபர்ணா பட் ஆகியோர் ஆஜராகினர்.

அப்போது, “உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில்தான் 11 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனரா?” என தலைமை நீதிபதி ரமணா கேள்வி எழுப்பினார்.

இதற்கு கபில் சிபல், “உச்சநீதிமன்றத் தீர்ப்பை நாங்கள் தவறாகக் கூறவில்லை. தண்டனைக் குறைப்பை மட்டுமே எதிர்க் கிறோம்” என்றார். இதையடுத்து இந்த மனுவை தலைமை நீதிபதி விசாரணைக்கு ஏற்றுக் கொண்டார்.

பில்கிஸ் பானு வழக்கில் தண்டிக்கப்பட்ட வர்களில் ஒருவர் தண்டனைக் குறைப்பு கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந் திருந்தார். அவர் தண்டிக்கப்பட்டபோது நடைமுறையில் இருந்த, 1992 ஆம் ஆண்டு தண்டனைக் குறைப்பு கொள்கையின்கீழ் அவரது மனுவைப் பரிசீலிக்குமாறு குஜராத் அரசுக்கு உச்சநீதிமன்றம் கடந்த மே மாதம் உத்தரவிட்டது.

தண்டனைக் குறைப்பு விவகாரங்களில் தீர்ப்பு வழங்கப்பட்ட தேதியில் நடைமுறை யில் உள்ள தண்டனைக் குறைப்பு கொள்கை யைப் பின்பற்ற வேண்டும் என அரியானா மாநிலம்-ஜகதீஷ் வழக்கில் உச்சநீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. இதைப் பின்பற்றியே கடந்த மே மாதம் குஜராத் அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment