'தாலி'பற்றி நீதிமன்ற தீர்ப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 19, 2022

'தாலி'பற்றி நீதிமன்ற தீர்ப்பு

ஈரோட்டைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி பேராசிரியருக்கும் அரசு ஆசிரியையான அவரின் மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகக் கூறி பேராசிரியரிடம் மனைவி அடிக்கடி தகராறு செய்துள்ளார். அதையடுத்து மன ரீதியாக துன்புறுத்தி வரும் மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு, பேராசிரியர் வழக்கு தொடர்ந்தார்.

ஆனால் அந்த வழக்கைக் குடும்ப நல நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கை நீதிபதிகள் வி.எம். வேலுமணி, எஸ். சவுந்தர் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது. இதில் நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் கூறப்பட்டதாவது:

"இந்த வழக்கில் மனுதாரர் பணிபுரியும் இடத்துக்குச் சென்று அவரது மனைவி தகராறு செய்துள்ளார். கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்ததும் தாலியைக் கழுத்தில் இருந்து கழற்றி வைத்துள்ளார். பொதுவாக கணவர் இறந்த பிறகே தாலியைக் கழற்றுவது வழக்கம்.

ஆனால் கணவர் உயிருடன் இருக்கும்போதே தாலியைக் கழற்றுவது என்பது இந்து திருமண சட்டப்படி சம்பிரதாயத்தை மீறிய செயலாகும். தாலிதான் திருமணத்தின் மிகப் பெரிய அங்கமாக விளங்குகிறது. அப்படி இருக்கும்போது தாலியைக் கழற்றி வைத்து மனுதாரருக்கு மிகப் பெரிய துன்பத்தை அளித்துள்ளார். எனவே விவாகரத்து அளிக்கிறோம்" என்று இரு நீதிபதிகள் அடங்கிய சென்னை உயர்நீதிமன்ற அமர்வு தீர்ப்புக் கூறியுள்ளது - பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.

தன் கணவனுக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக மனைவி சொன்ன குற்றச்சாட்டைப் பற்றி நீதிமன்றம் கணக்கில் எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை. அதைப்பற்றி எந்தவிதக் கருத்தையும் கனம் நீதிபதிகள் கூறவும் இல்லை.

அதே நேரத்தில் அந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில் மனைவி கணவனைவிட்டுப் பிரிந்திருந்த ஒரு சூழலில் தாலியைக் கழற்றி வைத்ததைப் பெரும் குற்றமாக நீதிபதிகள் கூறுவதுதான் வேடிக்கை.

இந்துத் திருமண சட்டப்படி குற்றம் என்றும் கணவனுக்குப் பெரும் மன உளைச்சலைத் தந்திருப்பதாகவும் நீதிபதிகள் கூறி இருக்கின்றனர்.

திருமணத்தில் தாலி ஒன்றும் கட்டாயம் இல்லை. மாலை அல்லது தாலி அணிந்தால் போதுமானது என்று சுயமரியாதைத் திருமணம் தொடர்பான சட்டத்தில் கூறப்படவில்லையா?

தாலி இல்லாமல் கணவனும், மனைவியுமாக வாழ்பவர்கள் எல்லாம் மன உளைச்சலில் வாழக் கூடியவர்களா? தாலி அணிந்த மனைவி - கணவனுக்கிடையே விவகாரத்து வழக்குகள் நடைபெறுவதே இல்லையா?

தாலி அணிந்து இருப்பதால் விவாகரத்து என்ற பிரச்சினைக்கே இடமில்லை என்று நீதிமன்றம் கூறுமா?

திருமணத்தின் போது தாலி அணிவித்தாலும் - அதற்குப்பின் மன ஒப்பந்தம்தான் தேவை. தாலி என்ற அடையாளம் பெண்ணுக்கு மட்டும் இருப்பது என்பது தேவையற்ற ஒன்று என்று தாலியை நீக்கிக் கொண்ட இணையர்களை ஆயிரக்கணக்கில் நீதிமன்றத்தின் முன் கொண்டு வந்து நிறுத்த முடியுமே! 

மனம் ஒத்த வாழ்வுதான் முக்கியமே தவிர வெறும் சடங்கு, சம்பிரதாய கட்டுகளும், நிர்ப்பந்தங்களும் எதற்கு?

ஆண் - பெண் சமத்துவம் இந்துத் திருமண சட்டத்தில் கிடையாதா? திருமணமானவர் என்ற அடையாளத்துக்காகப் பெண்களுக்குத் தாலியென்றால் அதே காரணம் ஆண்களுக்கும் தேவைதானே?

தந்தை பெரியார் சொல்லுவதுபோல, பெண்களைவிட ஆண்கள் தான் அதிகமாக ஊர் சுற்றுகிறார்கள், வெளியூர் பயணங்கள் செய்கிறார்கள். நியாயப்படி திருமணம் ஆகி விட்டதா, இல்லையா என்கிற அடையாளம் பெண்களைவிட ஆண்களுக்குத்தான் தேவையும், அவசியமும் ஆகும்.

இந்த வழக்கில்கூட பேராசிரியரான கணவனுக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பு என்பது தான் மனைவியின் முக்கிய குற்றச்சாட்டு. தனக்கு ஏற்கெனவே திருமணம் ஆகிவிட்டது என்று அந்தப் பேராசிரியர், மனைவி குற்றஞ்சாட்டும் சம்பந்தப்பட்ட பெண்ணிடம் கூறினாரா? அவருக்குத் திருமணம் ஆகி விட்டது என்று அடையாளம் இல்லாதது ஒரு வகையில் ஆணின் குற்றத்தை மறைக்கும் 'வசதியான' ஏற்பாடுதானே!

ஏடுகளில் அடிக்கடி செய்திகள் வருவதுண்டே! தனக்குத் திருமணம் ஆகவில்லை என்று பொய்க் கூறி, ஏராளமான பெண்களை ஏமாற்றித் திருமணம் செய்து கொண்ட ஆண்கள்பற்றி செய்திகள் வருவ தில்லையா?

இந்த 21ஆம் நூற்றாண்டிலும்கூட மனைவி தாலியைக் கழற்றி வைத்து விட்டார். இதன் மூலம் கணவனுக்கு மன உளைச்சலைக் கொடுத்து விட்டார் என்ற காரணத்தைக் கூறி விவாகரத்துக்கு  - அனுமதியளித்திருப்பது தீர்ப்புக் கூறுவது ஏற்கத்தக்கதுதானா?

அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பு எதற்கு என்று சொன்ன காலமும் இருந்தது உண்டு (இன்று ஊதும் அடுப்பே இல்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும்) இப்பொழுது அந்தப் பழமொழி எல்லாம் மலையேறி விட்டதே!

ஆனாலும் ஆண்களின் மனோபாவம் மட்டும் போதிய அளவு மாற்றம் பெறவில்லையோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

"பால்யத்தில் தந்தையின் ஆக்ஞையிலும்,  வாலிபத்தில் கணவனின் ஆக்ஞையிலும், வயோதிகத்தில் புதல்வர்களின் ஆக்ஞையிலும் பெண்ணானவள் இருக்கக் கடவது; எக்காரணம் கொண்டும் பெண்ணானவர் சுயசிந்தனையுடன் நடக்கக் கூடாதவள் என்கிறது மனுதர்மம்" (அத்தியாயம் 5 சுலோகம் 149).

மனு கூறினார் என்பதற்காக, இந்து மதத்தின் பழக்கம், வழக்கம், மரபு என்று இப்பொழுது கூற முடியுமா?

இவ்வளவுக்கும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மனைவி பள்ளி ஆசிரியை என்பதையும் கவனத்தில் கொள்வது அவசியம் இல்லையா?

கணவன் இன்னொரு பெண்ணுடன் தொடர்பு என்ற குற்றச் சாட்டைப் போல - மனைவி இன்னொரு ஆடவனை விரும்பினார் என்று கணவன் கூறினால் - அடேயப்பா நீதிமன்றமே கிடுகிடுத் திருக்குமோ!



 

No comments:

Post a Comment