அரசு கட்டடங்களுக்கு கால்கோள் விழா நடத்தும்போது 'பூமி பூஜை' - சடங்கு - வழிபாடு என்பன அரசமைப்புச் சட்டத்திற்கும், பகுத்தறிவுக்கும் முரணானவை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 19, 2022

அரசு கட்டடங்களுக்கு கால்கோள் விழா நடத்தும்போது 'பூமி பூஜை' - சடங்கு - வழிபாடு என்பன அரசமைப்புச் சட்டத்திற்கும், பகுத்தறிவுக்கும் முரணானவை!

 முதலமைச்சருக்கு ஓர் அன்பான வேண்டுகோள்!

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தனித்தன்மையைப் பாதுகாக்கவேண்டும்!

‘திராவிட மாடல்' என்பது உண்மையான மதச்சார்பின்மையைக் காப்பதே என்பதை வலியுறுத்திய, தருமபுரி தி.மு.க. எம்.பி. டாக்டர் செந்தில்குமார் அவர்களைப் பாராட்டுகிறோம்!

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை


அரசு கட்டடங்களுக்கு கால்கோள் விழா நடத்தும் போது 'பூமி பூஜை' - சடங்கு - வழிபாடு என்பன அரசமைப்புச் சட்டத்திற்கும், பகுத்தறிவுக்கும் முரணானவை! முதலமைச்சருக்கு ஓர் அன்பான வேண்டுகோள்! மதச்சார்பற்ற முற் போக்குக் கூட்டணியின் தனித்தன்மையைப் பாதுகாக்கவேண்டும்! 'திராவிட மாடல்' என்பது உண்மையான மதச்சார்பின்மையைக் காப்பதே என்பதை வலியுறுத்திய, தருமபுரி தி.மு.க. எம்.பி. டாக்டர் செந்தில்குமார் அவர்களைப் பாராட்டுகிறோம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:
கடந்த ஓராண்டு ‘திராவிட மாடல்' ஆட்சியில், செயற்கரிய செய்யும் அதன் முதலமைச்சர், சமூகநீதிக் கான சரித்திர நாயகரின் சாதனைகளை பிற மாநிலங் களும், வெளிநாட்டு முதலீட்டாளர்களும் வியந்தும், விரும்பியும் பார்க்கின்ற நிலையில், அதன் தனித் தன்மையே மதச்சார்பின்மை என்னும் சிறப்புடைய தாகும். மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் முதலமைச்சரது தலைமையில் கடந்த 8 ஆண்டு களாகவே - பதவிக்கு வருமுன்னரே அக்கூட்டணி மிகுந்த ஒற்றுமையுடனும், ஒருங்கிணைப்புடனும் செயல்பட்டு, தற்போதும் அவ்வாறே நடைபெற்று வருகிறது என்பது எடுத்துக்காட்டானதாகும்.

இந்த நிலையில், இதற்கு எதிராக சில அரசு நிகழ் வுகளை - பழைய (அ.தி.மு.க.) ஆட்சியின் தொடர்ச்சி போல, நடத்துவது எவ்வகையிலும் விரும்பத்தக்கது அல்ல.

மதச்சார்பின்மை தத்துவத்திற்கும், பகுத்தறிவுக்கும் முரணானவையே!

அரசு கட்டடங்களுக்கு கால்கோள் விழா நடத்தும் போது ‘பூமி பூஜை' என்ற சடங்கு, அதற்குப் பார்ப்பனப் புரோகிதர்களை அழைத்து வந்து, வடமொழி மந்திரம் ஓதச் சொல்வது, அமைச்சர்கள், அதிகாரிகள் உள்பட அதற்கு வழிபாடு நடத்துவதுபோன்ற தோற்றம் - இவையெல்லாம் அரசமைப்புச் சட்டத்தின் ‘செக்யூலர்' (Secular) என்ற மதச்சார்பின்மை தத்துவத்திற்கும், பகுத்தறிவுக்கும் முரணானவையே!

அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் காலத்தில், தி.மு.க. ஆட்சியில் இப்படி ஏதும் நடக்க அவர்கள் அனுமதித்தது கிடையாது.

‘மதச்சார்பற்ற' என்றால், ‘‘அனைத்து மதத்தினரையும் அரவணைத்துச் செல்லுதல்'' என்ற ஒரு தவறான வியாக் கியானம் நமது அரசியல்வாதிகளிடையே புழக்கத்திற்கு விடப்பட்டதே - அடிப்படையில் அது நியாயமல்ல - திரிபுவாத விளக்கம் ஆகும்!

தருமபுரி டாக்டர் எஸ்.செந்தில்குமார் எம்.பி.,  அவர்களின் கேள்வி நியாயமானதே!

இதன்படி பார்த்தால்கூட, அரசு அடிக்கல் நாட்டு விழாவில், அனைத்து மதத்தினர், மற்றவர் அனை வரையும்தானே அழைத்திருக்கவேண்டும்; வெறும் ஒரு மத (ஹிந்து சனாதன)ச் சடங்கு - அதுவும் நடத்தப்பட வேண்டிய அவசியம் என்ன என்று தருமபுரி நாடாளு மன்ற உறுப்பினர் டாக்டர் எஸ்.செந்தில்குமார் அவர்கள் கேள்வி எழுப்பியது மிகவும் சரியானது மட்டுமல்ல; நியாயமும், தேவையானதும் சட்டப்படியானதுமாகும்.

காரணம், இந்திய அரசமைப்புச் சட்டத்தின்மீது பதவிப் பிரமாணம் எடுத்துள்ள நிலையில், அதனடிப் படையே ‘‘மதச்சார்பற்ற சமதர்ம ஜனநாயகக் குடியரசு'' என்பதாலும், அதனைக் காப்பாற்றுவதற்கே அப்பதவி என்பதுதானே உறுதிமொழியின் தத்துவம்?
அதுமட்டுமா?

அரசமைப்புச் சட்டத்தின் 51-ஏ(எச்) என்ற பிரிவு வலியுத்துவது என்ன?
நமது அரசமைப்புச் சட்டத்தின் 51-ஏ(எச்) என்ற பிரிவு அடிப்படைக் கடமைகளை வலியுறுத்துவதில் ‘‘அறி வியல் மனப்பாங்கு, கேள்வி கேட்டுச் சிந்திக்கும் ஆற்றல், சீர்திருத்தம், மனிதாபிமானம் - இவற்றைப் பரப்புதல் ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கடமை'' என்று வலியுறுத்துகிறது.

எனவே, அவர் எழுப்பிய கேள்வி நியாயமானது - தேவையானதும்கூட.
தி.மு.க. ஒரு தனித்தன்மையான அரசியல் கட்சி - அதன் சட்ட திட்டங்களில் முதன்மையாக பகுத்தறிவைப் பரப்புவது என்பதற்காக உள்ள அரசியல் கட்சி என்பது விளக்கமாகும்!

காங்கிரஸ் எம்.பி., ஒருவர், ‘‘அது அவரவர் தனிப்பட்ட நம்பிக்கை; கார் வாங்கினால்கூட எலுமிச்சம் பழத்தை கார் டயருக்கடியில் வைத்து, புது காரை எடுப்பார்கள்'' என்று கூறியிருப்பது பொருத்தமற்ற வாதம் ஆகும்.
தனிப்பட்ட நபர்களின் விருப்பு, நம்பிக்கைக்கு எதிரானதல்ல இந்தக் கோரிக்கை.

அரசு சார்பான பொது நிகழ்ச்சியை, மதச்சார்பின்மை என்ற கொள்கை உடைய ஆட்சியில் இப்படி நடத்த லாமா என்பதுதான் கேள்வி.
அறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக வந்த நிலையில், உடனடியாக அரசு அலுவலகங்களில் எந்த மத சம்பந்தமான கடவுள் படங்களும், அடையாளங்களும் இருக்கக் கூடாது என்று சுற்றறிக்கையை அனுப்பிய தையும் இந்த நேரத்தில் நினைவூட்டுகிறோம்.

முதலமைச்சருக்கு  ஓர் அன்பான வேண்டுகோள்
    நமது முதலமைச்சருக்கு ஓர் அன்பான வேண்டு கோள்:
அருள்கூர்ந்து அரசு சார்பான நிகழ்ச்சியில், இதுபோன்ற மதச் சடங்குகள், புரோகிதர்கள் வடமொழி மந்திரம் ஓதி நடத்தப்படுவது தவிர்க்கப்பட உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

அரசமைப்புச் சட்டத்தைக் காப்பாற்றிய நடவடிக்கை
    காரணம், அரசு அனைவருக்கும் உரியது; அனைத்து மதம், மதம் சாராதவர்கள் அனைவருக்கும் உரியது. அத்துணை பேரையும் அழைக்கும் முறையும்கூட நடை முறை சாத்தியம் அல்ல; பொது நிகழ்ச்சிகளில் சடங்கு சம்பிரதாயங்களைத் தவிர்ப்பது, சனாதனத்திற்கு விடை கொடுத்து, அரசமைப்புச் சட்டத்தைக் காப்பாற்றிய நடவடிக்கையாகவே இருக்கும்.
மதவெறியை, மதக் கலவரங்களை திருவிழாக்களில் அதிகம் பரப்பிடும் ஆர்.எஸ்.எஸ். போன்ற ஆபத்தான அமைப்புகள் அதில் கொடிகட்டி ஊடுருவுவதும் வேகமாக நடைபெறும் நிலையில், அரசு நிகழ்வுகளில் மதச்சடங்குகளைத் தவிர்ப்பது இன்றியமையாததாகும்.

இதுகுறித்து துணிவுடனும், கொள்கைத் தெளிவுடனும் ‘திராவிட மாடல்' என்பது உண்மையான மதச்சார்பின் மையைக் காப்பதே என்பதை வலியுறுத்திய, தருமபுரி தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார் அவர்களைப் பாராட்டுவதுடன், அவரது உணர்வுகள் தனிப்பட்ட உணர்வல்ல - தி.மு.க.வில்  அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் கட்டிக்காத்த உணர்வுக்கான அடையாளமே!

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தனித்தன்மையைப் பாதுகாக்கவேண்டும்!

அவர்கள் வழியிலும் பிறழாத நமது முதலமைச்சர் அவர்கள், இதிலும் முன்வந்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தனித்தன்மையைப் பாதுகாக்கக் கேட்டுக் கொள்கிறோம் - உரிமையுடன்!

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
19.7.2022

No comments:

Post a Comment