நோபல் அறிஞர் அமர்த்தியா சென்னின் அச்சம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 8, 2022

நோபல் அறிஞர் அமர்த்தியா சென்னின் அச்சம்!

பிரபல பொருளாதார அறிஞரும், பொருளாதாரத் துறையில் நோபல் பரிசு பெற்றவருமான அமர்த்தியாசென் கொல்கத்தாவில் சால்ட்லேக் பகுதியில் தனது பெயரிலான ஓர் ஆராய்ச்சி மய்யத்தின் திறப்பு விழாவில் ஆற்றிய உரை மிகவும் முக்கிய மானது.

"நான் ஏதாவது பயப்படுகிறேன் என்று யாராவது என்னிடம் கேட்டால் 'ஆம்' என்றே கூறுவேன். நாட்டில் தற்போது நிலவும் சூழல் அச்சத்தை ஏற்படுத்துகிறது. நாடு ஒற்றுமையாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறேன். வரலாற்று ரீதியாக தாராளமாக - மக்கள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு நாட்டில்- பிளவு ஏற்படுவதை நான் விரும்பவில்லை"

"இந்தியா இந்துக்களுக்காக மட்டும் இருக்க முடியாது. அதேபோலவே முஸ்லிம்களால் மட்டும் இந்தியாவை உரு வாக்கவும் முடியாது. இந்தியாவில் சகிப்புத் தன்மை கொண்ட ஒரு உள்ளார்ந்த கலாச்சாரம் உள்ளது. அந்த வகையில் இந் துக்களும், முஸ்லிம்களும் ஒன்றிணைந்து செயல்படுவதே காலத்தின் தேவை.

யூதர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் பார்சிகள் இந்தியாவில் இணைந்து வாழ்கிறார்கள் என்பது இந்தியாவின் சகிப்புத் தன்மை கலாச்சாரத்துக்கு எடுத்துக்காட்டாகும். ஆனால் வழிபாட்டுத் தலங்களை மீட்கிறோம் என்ற பெயரில் சமீபத்தில் சில உணர்ச்சியூட்டும் பேச்சுகளும், நிகழ்வுகளும் நடந்து வருகின்றன."

"பாபர் மசூதியை இடித்து விட்டோம், அடுத்து  வாரணாசி ஞானவாபி மசூதியை இடிப்போம், தாஜ்மகால், குதுப்மினார்களைத் தகர்ப்போம் என்பன போன்ற முயற்சிகளால் 'தாஜ்மகாலின் பெருமையைப் பெற்றுவிட முடியும் என்று நான் நினைக்க வில்லை"

"அடிக்கடி நிகழும் துண்டு துண்டான ஆபத்துகளை இந்திய நீதித்துறை கவனிக்கவில்லை. இது அச்சத்தைத் தருகிறது. பாதுகாப்பான எதிர்காலத்திற்கு இந்தியாவில், நீதித்துறை, சட்டமன்றம் மற்றும் அதிகாரத்துவம் ஆகியவற்றிற்கிடையே சமநிலை இருக்க வேண்டும். மக்களைக் கம்பிகளுக்குப் பின்னால் தள்ளிவிட காலனித்துவ சட்டங்கள் இன்றும் பயன்படுத்தப்படுவது - அசாதாரணமானது" என்று மிகுந்த வேதனைப் பெருக்கோடு, உள்ளத்தின் ஆணி வேரிலிருந்து கருத்துகளைக் கொட்டித் தீர்த்துள்ளார்.

பேசி இருப்பவர் எந்த ஒரு அரசியல் சாயத்தையும் சார்ந்த வரல்ல - பொருளாதார நிபுணர் - உலகம் அறிந்த பெரிய மனிதர்.

அவர் உள்ளத்தில் குமுறும் உணர்வுகள் சொற்களாக வெளி வந்துள்ளன. இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்று இந்திய அரசமைப்புச் சட்டம் தன் முகவுரையிலேயே அச்சிட்டுக் கொடுத்திருக்கிறது.

ஆனால் தற்போதைய ஒன்றியத்தை ஆளும் அரசோ - இந்தியா ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரத்தைக் கொண்டது என்று சற்றும் நாணமில்லாமல் ஓங்கி ஒலித்துப் பேசக் கூடியவர்கள் - அத்தகையவர்கள் இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தில் இருப்பது எத்தகைய ஆபத்தானது என்பதை ஆழமாக உணர்ந்த காரணத்தால்தான் - தான் அச்சப்படுவதாகக் கூறி இருக்கிறார்.

நீதிமன்றங்களும் கூட இவற்றைக் கவனிக்கத் தவறுவது குறித்து வேதனைப்படுகிறார்.

எந்த அளவுக்கு இந்து மத வெறியர்கள் சென்றுள்ளனர் என்றால் - அமர்த்தியா சென்னும், தெரசாவும் நோபல் பரிசு பெற்றது கூடக் கிறிஸ்துவ சதி என்று சொல்லவில்லையா? ஆர்.எஸ்.எஸின் அதிகார பூர்வ ஏடான 'ஆர்கனைசர்' 'இந்திய நாடானது கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டு மென்று அமர்த்தியாசென் கூறியிருப்பது கிறிஸ்தவர்களின் கல்விப் பணியை நாட்டில் விரிவுபடுத்தும் நோக்கத்துடன்தான்' என்று எழுதிடவில்லையா?

உண்மையைச் சொல்லப் போனால் வெள்ளைக்கார கிறிஸ்த வன்தான். இந்நாட்டு மக்களுக்குக் கல்வியையும், மருத்து வத்தையும் அளித்தான்.

'சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக் காதே!' என்று இந்நாட்டுப் பெரும்பாலான மக்களுக்குக் கல்வியைத் தடை செய்த கூட்டம்தான் - அந்த நோக்கத்தைத் தம் ரத்த நாளங்களில் தேக்கி வைத்துக் கொண்டுள்ளவர்கள்தான் - இன்று ஆட்சி அதிகாரத்தில் உள்ளன.

இவற்றை எல்லாம் மனதிற் கொண்டுதான் அமர்த்தியாசென் போன்ற அறிஞர்கள் நாட்டின் போக்கைக் கண்டு இரத்தக் கண்ணீர் வடிக்கின்றனர்.

இதற்கு என்னதான் தீர்வு? நடைபோடும் பாசிசத்தை  எதிர்த்து மக்கள் ஒன்று திரள வேண்டும்; சமூக இயக்கங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும். அரசியல் கட்சிகள் பதவியை மட்டும் குறி வைப்பதைத் தவிர்த்து, பாசிச எதிர்ப்பு என்ற ஒற்றைப் புள்ளியில் இணைய வேண்டும்!

அமர்த்தியாசென் கூறியிருப்பதை மீண்டும் ஒரு முறை படியுங்கள் - பயணியுங்கள் - இதுவே நாட்டு மக்களுக்கு நமது கனிவான வேண்டுகோள்!


No comments:

Post a Comment