பொத்தனூர் க.சண்முகம் நூற்றாண்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 10, 2022

பொத்தனூர் க.சண்முகம் நூற்றாண்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர்

 கருப்புச் சட்டைக்காரர்களைப் போன்று, தொண்டறம் செய்பவர்கள் வேறு யாரும் இல்லை

இன்னும் எத்தனை மடங்கு நான் உழைக்கவேண்டும் என்கிற உறுதியை அய்யா க.ச. அவர்களிடமிருந்து பெறுகிறேன்

பொத்தனூர், ஜூலை 10  கருப்புச் சட்டைக்காரர்களைப் போன்று, தொண்டறம் செய்பவர்கள் வேறு யாரும் இல்லை; இன்னும் எத்தனை மடங்கு நான் உழைக்க வேண்டும் என்கிற உறுதியை அய்யா க.ச. அவர்களிட மிருந்து பெறுகிறேன் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

பெரியார் பெருந்தொண்டர் பொத்தனூர் க.சண்முகம் நூற்றாண்டு விழா

கடந்த 3.7.2022 அன்று பொத்தனூரில் நடைபெற்ற பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத் தலைவரும், மூத்த பெரியார் பெருந்தொண்டருமான பொத்தனூர் க.சண்முகம் அவர்களின் நூற்றாண்டு விழாவில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  தலைமையுரையாற்றினார்.

அவரது தலைமையுரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

கருப்புச் சட்டைக்காரர்களைப் போன்று, தொண்டறம் செய்பவர்கள் வேறு யாரும் இல்லை

‘‘கடவுளை மற, மனிதனை நினை’’ என்றார் பெரியார்.

‘கடவுளை மற’ என்று சொன்னாரே, எங்களுக்கு என்ன கடவுளின்மீது கோபம்? கடவுள் நம்பிக்கை யாளர்கள் நிறைய பேர் இங்கே இருக்கிறீர்கள்;  அய்யா க.ச. அவர்களைப் பாராட்டினீர்கள். அது எங்களுக்குப் பெருமைதான். இயக்கத்தவர்கள் பாராட்டுவது மட்டுமல்ல - எல்லாக் கட்சிக்காரர் களும், கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் உள்பட அய்யா க.ச. அவர்களைப் பாராட்டுகிறார்கள் என்றால்,  பொது ஒழுக்கத்தில், கருப்புச் சட்டைக் காரர்களைப் போன்று, தொண்டறம் செய்பவர்கள் வேறு யாரும் இல்லை என்பதைவிட  எங்களுக்கு வேறு என்ன பெருமை?

நாங்கள் பாராட்டுவது அய்யா க.ச. அவர் களுக்குப் பெரிதல்ல. நீங்கள் எல்லாம் பாராட்டு கிறீர்கள் பாருங்கள், அதுதான் அவருக்குப் பெருமை.

காரணம் என்ன?

இந்தக் கொள்கை. இயக்கக் கொள்கையில் இருப்ப வர்கள் நாணயமாக இருப்பார்கள். ஒழுக்கமாக இருப் பார்கள்.

அய்யா க.ச. அவர்களுடைய பொதுவாழ்வில், எனக்கு அவர் அறிமுகமாகி, ஏறத்தாழ 70 ஆண்டு களுக்குமேலாக இருக்கும்.

திருச்சி, நேஷனல் கல்லூரியில் படித்தவர்

இங்கே ஈ.வெ.கி.ச. இளங்கோவன் உரையாற்றும் பொழுது சொன்னார், இண்டர்மீடியட் படிப்பை அந்தக் காலத்தில் படித்தவர் என்று. அவருடைய வீட்டில் அந்தக் குரூப் போட்டோ இருக்கிறது, அதை நான் பார்த்திருக்கிறேன்.

எனக்கு பெரிய வியப்பு என்னவென்றால், திருச்சி, நேஷனல் கல்லூரியில் படித்தவர் அய்யா க.ச.

தந்தை பெரியாருக்கு ஏற்பட்ட கோபம்

நேஷனல் காலேஜ் என்பது அக்ரகாரம்; அந்தக் கல்லூரியில் நம்மாட்கள் உள்ளே நுழைய முடியாது. ஒவ்வொரு மதத்துக்காரர்களும் ஒவ்வொரு கல்லூரியை வைத்திருக்கிறார்கள்; நம் பிள்ளைகளை சேர்க்க மாட்டேன் என்கிறார்களே என்று கோபப்பட்டு, அய்ந்து லட்சம் ரூபாய் கொடுத்து, திருச்சியில் கல்லூரி தொடங்கவேண்டும்  என்று சொன்னார்.

மாணவர் கழகத்தில் இருக்கும்பொழுதே, நேஷனல் கல்லூரியில் படிப்பை முடித்து, அன்றைய காலகட்டம் முதல், இன்றுவரையில் அந்தப் பணியை செய்து கொண்டிருக்கிறார்.

இவ்வளவு நாள் பொதுவாழ்க்கையில், பஞ்சாயத்துத் தலைவராக 19 ஆண்டுகள் இருந்திருக்கிறார்.

1957 முதல் 1976 வரை பொத்தனூர் பேரரூராட்சியில் துணைத் தலைவர் மற்றும் சுப்பையா பிள்ளை அவர்கள் நீண்ட காலம் தலைவராக இருந்தார்.

தந்தை பெரியார் அவர்கள், க.ச. அவர்களுடைய இல்லத்திற்கு வரும்பொழுது, அய்யா ஒரு சமூகத் தலைவர் என்ற முறையில், கட்சி வேறுபாடு இல்லாமல் வந்து சந்திப்பார்கள்.

ஜாதிப் பெயரைக் குறிக்கும் கடைகளுக்கோ, உணவு விடுதிகளுக்கோ அனுமதி வழங்கப்படமாட்டாது என்ற தீர்மானம் பேரூராட்சியில் நிறைவேற்றப்பட்டது.

மாநிலத்திற்கே வழிகாட்டியது பொத்தனூர் பேரூ ராட்சி. அதற்கு அய்யா.க.ச. அவர்களே காரணம்.

அய்யா க.ச. அவர்களிடம் பரிந்துரை கேட்டு, பயனடையாதவர்களே இருக்க முடியாது

பதவியில் இருந்தாலும் சரி, பதவியில் இல்லா விட்டாலும் சரி, சுற்றுவட்டாரத்தில் உள்ள இளை ஞர்கள், இவரிடம் பரிந்துரை கேட்டு, பயன் அடை யாதவர்களே இருக்க முடியாது.

பரிந்துரைக் கடிதங்களைக் கொடுத்துக் கொண்டே இருப்பார். இவருடைய சொந்த செலவிலேயே நேரி டையாக சென்று, இவர் பொத்தனூரில் இருக்கின்ற இளைஞர், அவருக்கு இந்த வாய்ப்பைப் பெற்றுத் தரவேண்டும் என்று அய்யா காலத்தில், அய்யா, அம்மா காலத்தில் அம்மா, அதற்குப் பிறகு நாங்கள் என முறையிட்டு நல்லதொரு தீர்வு காண்பார்.

ஒரு பெரிய சமூக மாற்றம் நிகழ்ந்திருக்கிறது, இவருடைய தொண்டறத்தால்

இதுதான் தொண்டறம். இந்த சுற்றுவட்டாரத்தில் ஏராளமான பட்டதாரிகள், ஏராளமான ஆசிரியர்கள், பொறியாளர்கள், டாக்டர்கள் வந்திருக்கிறார்கள் என் றால், அது அய்யா க.ச. அவர்களுடைய அரிய முயற்சியினால், ஒரு பெரிய சமூக மாற்றம் நிகழ்ந்திருக்கிறது, இவருடைய தொண்டறத்தால்.

எனவேதான், அவருடைய சுயநலமற்ற பொது வாழ்க்கை - அந்தப் பொதுவாழ்க்கை எடுத்துக்காட்டான பொதுவாழ்க்கையாக முழுக்க முழுக்க அமைந்திருக் கின்ற காரணத்தினால்தான் இந்த வாய்ப்பு.

தந்தை பெரியாரின் கேள்வி!

அதைத்தான் அய்யா பெரியார் அவர்கள் சொன்னார்,

பகுத்தறிவாளர்கள் மாநாட்டில் உரையாற்றும்பொழுது சொன்னார்:

''பகுத்தறிவாளர்கள் எல்லாம் அதிக வயது வாழ் வார்கள்; காரணம், அவர்களுக்கு நோயினுடைய தன்மை புரியும்.  

‘எல்லாம் அவன் செயல்’, ‘எல்லாம் அவன் செயல்’ என்று சொல்பவர்கள், கடைசியில் டாக்டரைத்தானே நம்புகிறீர்கள்?'' என்று சொன்னார்.

அன்றைக்கு ஈரோட்டில் ஜனத்தொகை 20 ஆயிரம் பேர் இருந்தார்கள். காலரா நோய் போன்றவை வந்தால் நிறைய பேர் சிறிய வயதிலேயே இறந்துவிடுவார்கள். அன்றைக்கு சராசரி வயது 22 வயது, 30 வயதிற்குமேல் இருந்ததில்லை.

இன்றைக்குப் பார்த்தீர்களேயானால், சராசரி 60 வயதைத் தாண்டி இருக்கிறார்களே, இது எப்படி வந்தது?

‘‘உங்களுக்கு நீண்ட ஆயுளைத் தர, எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்‘‘ என்று சொல்கிறார் களே, எல்லாம் வல்ல என்றால், எல்லோரும் அல்லவா உயிரோடு இருக்கவேண்டும் என்று பெரியார் கேட்டார்.

மனிதர்களுக்குத் தொண்டு செய்!

ஆகவேதான், ‘‘கடவுளை மற, மனிதனை நினை’’ என்று சொன்னார். ‘‘கடவுளை மற’’ என்று சொல்வதோடு நின்றுவிடவில்லை தந்தை பெரியார் அவர்கள். அதற்குப் பிறகு ‘‘மனிதனை நினை’’ என்று சொன்னார்.

‘‘மனிதனை நினை’’ என்று சொன்னதினுடைய பொருள் என்னவென்றால், மனிதர்களுக்குத் தொண்டு செய் என்பதுதான்!

‘‘மனிதன் தானாகவும் பிறக்கவில்லை - தனக்காகவும் பிறக்கவில்லை.’’

சமுதாயத்திற்காக - எனக்கென்று ஒரு வாழ்க்கை இருக்கிறது - அந்த வாழ்க்கைக்கு என்ன தேவையோ அதை நான் பார்த்துக் கொள்கிறேன் - என்பதோடு, பிற மனிதர்களுக்கும் தொண்டு செய்யவேண்டும். மனிதன் எவ்வளவுதான் அதிகமாகப் பணம் சேர்த்தாலும் என்ன பயன்? இன்றைக்கு அதிகமாக சொத்து சேர்த்தவர்களின் கதி என்ன என்பதைப் பார்க்கிறோமே?

சொத்துகள் இல்லாதவருக்கு சாதாரணமாகப் பசி ஏற்படும். சொத்து சேர்ந்த பிறகு, அதைக் காப்பாற்றுவது எப்படி என்பதிலேயே பசி இருக்காது.

பொதுவாழ்க்கையில் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இலக்கணமாக இருக்கிறார்

ஆகவே, நம்முடைய அய்யா க.ச. அவர்கள், பொதுவாழ்க்கையில் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக, இலக்கணமாக இருக்கிறார். ‘ரோல்மாடல்’ என்று ஆங் கிலத்தில் சொல்வார்கள். அதுபோன்று, எடுத்துக்காட் டான தலைவராக இங்கே அய்யா க.ச. அவர்கள் திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

அதனால்தான் இன்றைக்குக் கட்சிகளுக்கு அப்பாற் பட்டு, அவரை வாழ்த்துகிறார்கள்.

சின்னதோர் கடுகு உள்ளம் படைத்தவர் அல்ல நம்முடைய அய்யா க.ச. அவர்கள்

அதுமட்டுமல்ல, தன் பெண்டு, தன் பிள்ளை, தன் வீடு என்று சின்னதோர் கடுகு உள்ளம் என்று சொன்னார் புரட்சிக்கவிஞர். சின்னதோர் கடுகு உள்ளம் படைத்தவர் அல்ல நம்முடைய அய்யா க.ச. அவர்கள்.

அய்யா க.ச. அவர்களுடைய நூறாண்டு காலத்தில், ஒரு பெரிய வரலாறு என்னவென்றால், அவருக்கும் சரி, எங்களுக்கும் சரி, திராவிடர் கழகத் தோழர்களுக்கும் ஒரு பெரிய மகிழ்ச்சி என்னவென்றால்,

தந்தை பெரியார், இந்தக் கொள்கையை உருவாக் கியவர் மட்டுமல்ல - அதற்காக உழைத்தவர் மட்டுமல்ல - தனக்குப் பிறகும் அந்தக் கொள்கை உலகளாவிய அளவிற்குப் பரவவேண்டும் என்பதற்குத் தகுந்த ஏற்பாட்டை - இந்த அறக்கட்டளைகள், இந்த இயக்கம் மூலம் ஏற்பாடுகளை செய்ததோடு மட்டுமல்ல - அதற்கு சரியானவர்களை அடையாளம் கண்டு, அய்யா க.ச. அவர்களைப் போன்று நியமித்ததும் சிறப்பு. இவை அத்தனையையும் தாண்டி, எதை எதையெல்லாம் அய்யா அவர்கள் கொள்கையாக சொன்னார்களோ, அதை அவர்கள், கண்ணால் பார்த்தார்கள். அவர்கள் காலத்திலேயே அதைப் பார்த்தார்கள்.

தந்தை பெரியாரின் சலிப்பும் - 

அண்ணாவின் கடிதமும்!

பிறந்த நாள் மலரில் தந்தை பெரியார் அவர்கள் சலிப்போடு எழுதிய நேரத்தில், அண்ணா அவர்கள் அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில்  இருந்தார்.

அமெரிக்காவில் இருந்த அண்ணா அவர்களுக்கு அந்த மலரை நான் அனுப்பியிருந்தேன்.

அய்யா எழுதியதைப் படித்துவிட்டு அண்ணா அவர்கள், அய்யாவிற்குக் கடிதம் எழுதினார்.

அந்தக் கடிதம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கடிதமாகும்.

அந்தக் கடிதத்தில்,

‘‘அய்யா நீங்கள் கொஞ்சம் சலிப்படைந்தது மாதிரி உங்கள் எழுத்துகளைப் பார்த்தேன். நீங்கள் சலிப்படைய வேண்டிய அவசியமே இல்லை. காரணம் எனக்குத் தெரிந்து, உலக  வரலாற்றில், ஒரு தலைவருடைய, புரட்சி யாளருடைய வாழ்நாளில், அவர் விதைத்த கொள்கைகள் வெற்றி பெற்றதை - அவரே பார்த்தது நீங்கள் ஒருவர் தான், வேறு யாரும் கிடையாது’’ என்று சொன்னார்.

அதுபோன்று, இன்றைக்கு, இயக்கத்தில் சேர்ந்த பிறகு, அய்யா அவர்கள் எது எதற்காகப் போராடினாரோ, அனைத்திலும் அவர் வெற்றி பெற்றிருக்கிறார்.

பெரியார் பிறந்த நாள் - சமூகநீதி நாள்

அனைத்து ஜாதியினர் அர்ச்சகர்கள் உள்பட - இங்கே சகோதரர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் சொன் னதுபோல, ‘திராவிட மாடல்’ ஆட்சியில் எப்படியெல்லாம் பெரியார் பிறந்த நாளை - சமூகநீதி நாள் என்று அரசு விழாவாகக் கொண்டாடுகிறார்கள்? 

பெரியார் படத்தை அரசு அலுவலகத்தில் மாட்டு வதா? என்று கேட்ட அரசு அதிகாரிகளும் இருந்தார்கள்.

அவர்கள் அத்தனை பேரும் எழுந்து நின்று, பெரியா ருடைய பிறந்த நாள் விழா அன்று, எல்லோரும் எழுந்து நின்று உறுதிமொழி எடுத்துக் கொள்ளக்கூடிய அள விற்கு செய்திருக்கிறது ‘திராவிட மாடல்’ ஆட்சி. ஒப்பற்ற முதலமைச்சர் ஆட்சியில் மிகச் சிறப்பாக நடை பெறுகிறது.

இதையெல்லாம் பார்க்கின்றபொழுது, அய்யா க.ச. போன்று இருக்கக்கூடியவர்களைப் பார்த்து மகிழும் போது, எங்களைப் போன்றவர்களுக்கு மகிழ்ச்சி, உற்சாகம்.

எங்களுக்கு வேறு ஒன்றும் தேவையில்லை. நாங்கள் ஆட்சிக்குப் போகவேண்டிய தேவையில்லை. ஆட் சிக்குப் போனால், தேர்தல் வித்தைகளை செய்ய வேண்டும்; நினைத்ததைப் பேச முடியாது. நாங்கள் நினைத்ததைப் பேசுபவர்கள் ஆயிற்றே, நினைத்தை பேசினால், ஓட்டு வாங்க முடியுமா? என்று தெளிவாகச் சொன்னார்.

யார் ஆட்சி செய்யவேண்டும்? என்று  கவலைப்படுபவர்கள் நாங்கள்

ஆனால், அதேநேரத்தில், மக்கள் மத்தியில் எப்படிப் பட்ட உணர்வுகளை உருவாக்குவது என்று சொல்லும் பொழுது, நாங்கள் தேர்தலில் நிற்காதவர்களாக இருந் தாலும், யார் ஆட்சி செய்யவேண்டும் என்று அதிகமாகக் கவலைப்படுபவர்கள்.

இராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால் என்ன? என்று ஒரு காலத்தில் சொல்லிக் கொண் டிருந்தார்கள்.

ஆனால், அதை மாற்றியமைத்தது தந்தை பெரியார் இயக்கம்தான்.

இராமன் ஆட்சியை ஒழி - 

இராவணன் ஆட்சியை பாதுகாக்கவேண்டும்

என்னவென்றால், இராமன் ஆட்சியா? அதை ஒழி - இராவணன் ஆட்சியா? அதைப் பாதுகாக்கவேண்டும் என்பதுதான்.

இதுதான் எங்களுடைய அளவுகோல். 

சகோதரர் இளங்கோவன் அவர்கள் சொன்னார், 90 வயதில்  ஓடோடிக் கொண்டு இருக்கிறார் என்று. இந்தப் பணியை நாங்கள் செய்யவில்லை என்றால், என்ஜின் கெட்டுப் போய்விடுமே!

பெரியார் சொன்னார், மோட்டார் கார் வாங்கினால், அழகுக்கா? அதை ஓட்டினால்தானே என்ஜின் பழுதாகாமல் இருக்கும்.

நடிகவேள் எம்.ஆர்.இராதா அவர்கள், தூக்குமேடை நாடகத்தில் ஒரு வசனம் சொல்வார், கிண்டல் செய்வ தற்காக, மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரத்திற்காக சொல்வார் -

‘‘ரோல்ஸ்ராய் கார் வாங்கினீர்களே, அது என்னாயிற்று?’’  ஒருவர் கேட்பார்,

‘‘அதை ஆயுத பூஜைக்கு, ஆயுத பூஜைக்கு எடுத்து வைப்பேன்’’ என்று சொல்வார்.

எனக்கு 90 வயதாயிற்று, 90 வயதாயிற்று என்று தோழர்கள் சொல்லும்பொழுது, கொஞ்சம் கவலையாக இருந்தது - ஆனால், இந்த விழாவில் கலந்துகொள்ளும் பொழுது எனக்கு பெரிய மகிழ்ச்சி, சுயநலம், தனிப்பட்ட முறையில் எனக்கு என்ன லாபம்?

பெரிய கோடும் - சிறிய கோடும்!

வகுப்பறையில் ஆசிரியர் ஒருவர், கரும்பலகை யில் ஒரு கோடு வரைந்து, இந்தக் கோட்டை அழிக்காமல், சிறிய கோடாக ஆக்கவேண்டும்; அதற்கு என்ன வழி? என்று மாணவர்களிடம் கேட்டார்.

நிறைய மாணவர்கள் விழித்தனர்; ஒரே ஒரு மாணவன் மட்டும் எழுந்து சென்று, சிறிய கோடு அருகில், ஒரு பெரிய கோடு போட்டான்.

அதுபோன்று, அய்யா க.ச. அவர்களுக்கு அருகில் நான் அமர்ந்திருக்கும்பொழுது, நான் சிறிய கோடு - நான் எப்பொழுதும் இளைஞன். எனக்கு வயதாயிற்று என்று எனக்கும் தோன்ற வில்லை.

இன்னும் எத்தனை மடங்கு உழைக்கவேண்டும் என்கிற உறுதியை நான் அவரிடமிருந்து பெற்றுக் கொள்கிறேன்

எனக்கு எப்பொழுதும் அந்த எண்ணம் தோன்றக்கூடாது என்றால், என்னைவிட அதிக வயதானவர் இவ்வளவு சுறுசுறுப்பாக இருக்கும் பொழுது, இவ்வளவு தெளிவாக இருக்கும்பொழுது, இந்த அளவிற்கு உழைக்கும்பொழுது - நான்  இன்னும் எத்தனை மடங்கு உழைக்கவேண்டும் என்கிற உறுதியை நான் அவரிடமிருந்து பெற்றுக் கொள்கிறேன் - என்னை புதுப்பித்துக் கொள்கி றேன் - அதற்கு இந்த விழா ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது என்று சொல்லி, உங்கள் அத்துணை பேருக்கும் நன்றி தெரிவித்து, அய்யா க.ச. அவர்களின் ஏற்புரை மிகவும் முக்கியம்.

அந்த ஏற்புரையை நாம் ஏற்கவேண்டும்.

தோழர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்!

எனவே, தோழர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் - நீங்கள் பகுத்தறிவாளராக இருந்தால், உங்கள் ஆயுள் வளரும் - இது ஜோதிடம் அல்ல - அறிவியல்பூர்வமான ஓர் அணுகுமுறை.

காரணம், நோய் வந்தால், அவ்வப்பொழுது அடையாளம் கண்டு, மருத்துவரிடம் சென்று, நோயைப் போக்குவதற்கான வழிகாணுவோம்.

‘‘ஆத்தா வந்து, முத்து போட்டுவிட்டாள்’’ என்று சொல்வது கிடையாது. நோய் நாடி நோய் முதல்நாடக் கூடிய அறிவியல் சிந்தனை உடையவர்கள் பகுத்தறிவாளர்கள்.

அய்யா க.ச. அவர்கள் போன்று சமுதாயத்திற்குப் பயன்படவேண்டும்

ஆகவேதான், உங்கள் வாழ்க்கை வளம் பெறவேண்டும்; உங்கள் வாழ்க்கை வளம் பெற்றால் மட்டும் போதாது; மற்றவர்களுக்குப் பயன்படவேண்டும்; எத்தனையோ பேர் 105 வயதுவரை வாழ்ந்திருக்கிறார்கள்; ஆனால், அய்யா க.ச. அவர்கள் போன்று சமுதாயத்திற்குப் பயன்படவேண்டும்.

அதற்கு எடுத்துக்காட்டுதான் அய்யா க.ச. அவர்கள். எனவே, அவர் மேலும் பல்லாண்டு வாழவேண்டும் என்று கூறி, வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்.

வாழ்க பெரியார்!

வாழ்க சண்முகனார்!

வளர்க பகுத்தறிவு!

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையுரையாற்றினார்.


No comments:

Post a Comment