முடித் திருத்தும் கடைகள்; சலவை செய்யும் கடைகளால்தான் இந்த இயக்கம் வளர்ந்தது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 9, 2022

முடித் திருத்தும் கடைகள்; சலவை செய்யும் கடைகளால்தான் இந்த இயக்கம் வளர்ந்தது

'மிசா'வின்போது என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும் என்ற உறுதியோடு இருந்தவர்கள் பெரியார் தொண்டர்கள்

பொத்தனூர் க.சண்முகம் நூற்றாண்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர்பொத்தனூர், ஜூலை 9  முடித் திருத்தும் கடைகள்; சலவை செய்யும் கடைகளால்தான் இந்த இயக்கம் வளர்ந்தது; மிசா காலத்தில் சிறைச்சாலையில் இருந்த தோழர்கள், ஒருவரும் கொஞ்சம்கூட சலனமில்லாமல், வீட்டிற்குப் போகவேண்டும் என்று நினைக்கவில்லை. என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும் என்ற உறுதி யோடு இருந்தவர்கள். இதுதான் பெரியார் பெருந் தொண்டர்கள் - இதுதான் க.ச. அய்யா அவர்கள் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

பெரியார் பெருந்தொண்டர் பொத்தனூர் க.சண்முகம் நூற்றாண்டு விழா

கடந்த 3.7.2022 அன்று பொத்தனூரில் நடைபெற்ற பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத் தலைவரும், மூத்த பெரியார் பெருந்தொண்டருமான பொத்தனூர் க.சண்முகம் அவர்களின் நூற்றாண்டு விழாவில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  தலைமையுரையாற்றினார்.

அவரது தலைமையுரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

அருமைச் சகோதரி சுந்தராம்பாள் அம்மையார் இருந்திருந்தால், இந்த விழா இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்

பொதுவாக ஒரு விழாவில் ஆண்களை மட்டும்தான் பாராட்டி நமக்குப் பழக்கமே தவிர, அவர்களுக்கு அடித்தளமாக இருக்கிற மகளிரைப் பாராட்டுவது என்பது மிக அபூர்வமானது. ஆகவே, இந்த நேரத்தில், அந்த அம்மையாரை நான் நினைவுகூரவேண்டும். பிறந்த நாள் மலரில், தெளிவாக நினைவூட்டியிருக் கின்றோம். அந்த வகையில் அம்மையார் இருந்திருந்தால், இந்த விழா இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

பரவாயில்லை, இயற்கையை இணைத்துக்கொண்டு, நாம் பல தூரம் போகவேண்டி இருக்கிறது. அன்னை நாகம்மையார் அவர்கள் மறைந்தபொழுது, தந்தை பெரியார் அவர்கள் எப்படி அறிக்கை எழுதினார்கள்; அதை எப்படி எதிர்கொண்டார்கள் என்று நினைத்துப் பார்க்கவேண்டும். அதுபோன்று அய்யா சண்முகம் அவர்களும் எதிர்கொண்டார்கள்.

அப்படி அவர்கள் எதிர்கொண்டதினால்தான், இன்றைக்கு நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம். டார்பிடோ ஏ.பி.ஜெனார்த்தனம் இங்கே ஒரு வாரம் தங்கிவிடுவார்கள்; கூட்டம் ஒரு நாள்தான் இருக்கும்.

பெரியார் தொண்டர்களைப் பொறுத்தவரையில், எங்களுக்கு ரத்த உறவு என்பது இரண்டாம் பட்சம்தான். கொள்கை உறவு என்பதுதான் மிகவும் அடித்தளமானது.

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு - தண்ணீரைவிட ரத்தம் கெட்டியானது என்று.

எங்களுக்கு எல்லோரும் உறவுக்காரர்கள்தான்

ஆனால், அதைவிட கெட்டியானது என்று இருக்கிறது எது என்று அவர்களுக்குத் தெரிய வில்லை. அது கருப்புச் சட்டைக்காரர்களுக்குத்தான் தெரியும். அதுதான் கொள்கை உறவு.

ரத்தத்தையே சிந்தினாலும், இந்த உறவை விடமாட்டோம் என்று சொல்வதற்கு என்ன காரணம்? இந்த உறவுதான் மிக முக்கியமான உறவாகும். அந்த வகையில், எங்களுக்கு எல்லோரும் உறவுக்காரர்கள்தான்.

தந்தை பெரியார் அவர்களை எப்படி அன்னை மணியம்மையார் அவர்கள் மிகப்பெரிய அளவிற்குக் காப்பாற்றினார்களோ அதுபோன்று, என்னுடைய திரு மணம் 62 ஆண்டுகளுக்கு முன்பு அய்யா அவர்கள், ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு, கொழுத்த ராகு காலத்தில், நடத்தி வைத்தார். அந்த நேரத்தில் திருமணம் செய்து கொண்டதால், எங்கள் வாழ்க்கை முடிந்து விடவில்லை. நன்றாகத்தான் இருக்கிறோம் நாங்கள்.

என்னுடைய திருமணத்தில் அன்பளிப்பு கொடுத் ததை எழுதியது யார் என்றால், நம்முடைய அய்யா க.ச. அவர்கள்தான்.

முடித் திருத்தும் கடைகள்; சலவை செய்யும் கடைகளால்தான்  இந்த இயக்கம் வளர்ந்தது

தந்தை பெரியார் அய்யா அவர்கள் இந்த ஊருக்கு வந்தால், இவருடைய இல்லத்தில்தான் தங்குவார். இப்பொழுது இருப்பது போன்று திரி ஸ்டார், பைவ் ஸ்டார் ஓட்டல்கள் எல்லாம் அப்பொழுது கிடையாது. இந்த இயக்கம் பரவியதற்குக் காரணமே, திரி ஸ்டார் ஓட்டலோ, பைவ் ஸ்டார் ஓட்டலோ, டிராவலர்ஸ் பங்களாவோ அல்ல - முடித் திருத்தும் கடைகளால்தான். சலவை செய்யும் கடைகளால்தான் இயக்கம் வளர்ந்தது.

இன்னுங்கேட்டால், மாவட்டங்கள் பிரிவதற்கு முன்பு, இவர் தலைவராக இருந்தார். அங்கேதான் சேலம் சுயமரியாதை சங்கம் இருக்கிறது;  நான், கலைஞர் போன்றவர்கள் மாணவர் பருவத்தில் சுற்றுப்பயணம் வருவோம். 1946 ஆம் ஆண்டு பொத்தனூருக்கு வரும் பொழுது, திண்ணையில்தான் படுத்துக்கொள்வோம். தோழர்கள் வீட்டில் சாப்பிடுவோம். அருகே முடி திருத்தும் நிலையம் இருக்கும்; அது சிறிய கடையாக இருக்கும்; அந்தத் தோழர் மிகவும் ஆர்வமுள்ளவர்; எங்களையெல்லாம் அழைத்து, டீ, மசால் வடை வாங்கிக் கொடுப்பார். கடையில் அமர்ந்து நாங்கள் சாப்பிட்டுக் கொண்டிருப்போம்; முடி வெட்டிக் கொள்வதற்காக ஒருவர் வந்தால், இரண்டு பேருக்குமேல் அமர இடமிருக்காது. நாங்கள், இரண்டு தெருவை சுற்றி விட்டு வருகிறோம் என்று சொல்லி கிளம்பும்பொழுது, உடனே அவர், போய்விடாதீர்கள், வாருங்கள், உங்களிடம் நிறைய பேசவேண்டும் என்று சொல்வார்.

இப்படித்தான் இந்த இயக்கம் வளர்ந்தது.

எல்லா பகுதிகளுக்கும் கழகத் தோழர்கள் செல் வார்கள். இன்றுகூட தவிட்டுப்பாளையத்திற்கு மறைந்த குமார் அவர்களுடைய இல்லத்திற்குச் சென்று ஆறுதல் சொல்லிவிட்டு வந்தோம்.

தவிட்டுப்பாளையத்தில்தான் 1945 இல் மாநாடு நடைபெற்றது. இன்று நான் அங்கே சென்றபொழுது, ஒரு எலுமிச்சம் பழத்தைக் கொடுத்த வயதான ஒருவர், ‘‘அய்யா, நீங்கள் இங்கே 12 வயதில் மாநாட்டில் கலந்து கொண்டீர்களே அப்போது நான் பார்த்திருக்கிறேன்’’ என்று சொன்னார். அதைக் கேட்டவுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

ஆகவே, அந்தக் காலத்திலிருந்து பொத்தனூர் எங் களுக்குத் தெரியும்; போத்தனூர் தெரியாது எங்களுக்கு.

காரணம், அய்யா சண்முகம் அவர்களுடைய தொண்டு. இந்த ஊரில் சண்முகம் என்று கேட்டால், யாரும் சொல்லமாட்டார்கள்; க.ச. அய்யா என்று கேட்டால், உடனே சொல்லிவிடுவார்கள்.

கருப்புச் சட்டை என்பதற்கு அடித்தளம்

கருப்புச் சட்டை என்பதற்கு அடித்தளம் என்னவென்றால்,

கடமையில் சரியானவர் - க.ச.

கட்டுப்பாட்டிற்குச் சரியானவர் - க.ச.

கடைப்பிடிக்கும் கொள்கையில் சமரசம் தெரியாதவர்- க.ச.

தந்தை பெரியார் அவர்கள் மறைந்த பிறகு, அன்னை மணியம்மையார் அவர்களுடைய தலைமையில் இயக்கம் இயங்கியது. அன்றைய காலகட்டத்தில் ஒரு சிலர், எந்த ஒரு இயக்கத்திலும் இப்படி ஒரு சலசலப்பு வருவது உண்டு. அந்த நேரத்தில் சில பேர், அய்யா க.ச. அவர்களிடம் வந்திருக்கிறார்கள். இவருடைய சுபாவம் எப்படி என்று கேட்டால், யாரிடமும் அதிர்ந்து பேச மாட்டார்; எதிரிகளாக இருந்தாலும், இவரை விரும்பு வார்கள். இவருக்கு யாரும் எதிரிகளே கிடையாது.

அவர்களை வரவேற்ற இவர், எந்த நோக்கத்தோடு அவர்கள் வந்திருக்கிறார்கள் என்று தெரிந்திருந்தாலும் கூட, அதைப்பற்றி அவர் கவலைப்படாமல், வழக்கம் போல சாப்பிடுங்கள் என்று அவர்களுக்கு சாப்பிடு வதற்கான ஏற்பாடுகளை செய்தார்.

அவர்கள் சாப்பிட்டு முடிந்தவுடன், இவரிடம் ‘‘அம்மா தலைவராக இருக்கிறார்; அது சரியில்லை. அதற்குப் பதிலாக நாமெல்லாம் சேர்ந்து இயக்கத்தை நடத்தவேண்டும்; நீங்கள் மூத்தவர் இயக்கத்தை வழி நடத்தவேண்டும்’’ என்று சொன்னார்கள்.

உங்கள் வழியைப் பாருங்கள்; நான் என் வழியைப் பார்க்கிறேன்

உடனே க.ச. அவர்கள், ‘‘இதோ பாருங்கள், எனக்கு ஒரே தலைவர்; அந்தத் தலைவரால் யார் அடையாளங் காட்டப்பட்டாரே, அவர்தான் எனக்குத் தலைவர். என்னைப் பார்க்க நீங்கள் நட்பு ரீதியாக வந்திருக்கிறீர்கள்; உங்களை உபசரித்தேன். நீங்கள் உங்கள் வழியைப் பாருங்கள்; நான் என் வழியைப் பார்க்கிறேன்’’ என்றார்.

காரணம் என்ன?

கட்டுப்பாடு என்பதுதான். அன்றைக்கு என்ன வழியோ, இன்றைக்கும் அதே வழியைத்தான் கடைப் பிடிக்கிறார்.

மிசா காலத்தில், க,ச. அவர்களையும் கைது செய் தார்கள். எதற்காக கைது செய்தார்கள் என்பதற்குக் காரணம் கிடையாது.

நாங்கள் கைதாகி சென்னை மத்திய சிறைச்சாலையில் இருந்தோம்; இவரும், நஞ்சைய்யா போன்றவர்கள் சேலம் சிறைச்சாலையில் இருந்தனர்.

சிறைச்சாலையில் பல அரசியல் கட்சிக்காரர்கள் இருந்தனர். மிசாவில் கைதாகி சிறைச்சாலைக்கு வந்தால், எப்பொழுது வெளியே விடுவார்கள் என்று சொல்ல முடியாது; வாழ்க்கையே சிறைச்சாலையில் முடிந்து போய்விடும் என்றெல்லாம் சொல்லி, மிகப்பெரிய அளவிற்கு மனச்சங்கடத்திற்கு ஆளாக்கினார்கள்.

ஆனால், க.ச. போன்றவர்கள் எந்த அளவிற்கு மன உறுதி படைத்தவர்கள் என்பது அவர்களுக்குத் தெரி யாது. ஆனால், என்ன காரணத்திற்காக சிறைச்சாலையில் வைத்திருக்கிறார்கள் என்பது தெரியவே தெரியாது.

நகைச்சுவையாக ஒரு செய்தியை சொல்லவேண்டும்.

எல்லோருக்கும் வெள்ளைக் காகிதத்தைக் கொடுத் தார்கள். எல்லாக் கட்சிக்காரர்களுக்கும் கொடுத்தார்கள். ‘‘மன்னிப்புக் கேட்டு நீங்கள் கடிதம் கொடுத்தால், உங்களை வெளியில் விடுவதைப்பற்றி ஆலோசிப்போம்‘‘ என்றார்கள்.

ஏனென்றால், அந்தக் கட்சியிலிருந்து அவர்களை வெளியேற்றவேண்டும் என்பதற்காக நீங்கள் மன்னிப்புக் கேட்டு எழுதிக் கொடுத்தால், உங்களை விடுதலை செய்கிறோம் என்று சொன்னார்கள்.

இவர்களிடம் வேண்டாம்; வெள்ளைத்தாள் வீணாகிப் போகும்

ஆனால், இதில் ஒரு பெரிய பெருமை எங்களுக்கு என்னவென்றால், எல்லாக் கட்சிக்காரர்களிடமும் அந்த வெள்ளைத் தாளை நீட்டினார்கள் காவல் துறையினர். திராவிடர் கழகத்துக்காரர்களிடம் வந்தவுடன், ‘‘இவர் களிடம் வேண்டாம்; வெள்ளைத்தாள் வீணாகிப் போகும்’’ என்று சொல்லி, கொடுக்கமாட்டார்கள் காவல் துறையினர். அதேபோன்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்களிடமும் கொடுக்கமாட்டார்கள்.

நடிகவேள் எம்.ஆர்.இராதாவை கைது செய்து, எங்க ளோடு சிறைச்சாலையில் வைத்தார்கள்.

வாரத்திற்கு ஒருமுறை நேர்காணலுக்கு வருவார்கள் காவல்துறை அதிகாரிகள். ஒரு திரைக்கு அந்தப் பக்கத்தில் என்னுடைய துணைவியாரைப் பேசச் சொல்வார்கள். 

அதேபோன்று ஒருமுறை எம்.ஆர்இராதா அவர் களின் துணைவியார் தனலட்சுமி அம்மையார் வந்தார்கள்.

‘‘எழுதிக் கொடுத்தால் விட்டுவிடுவேன் என்று சொல்கிறார்களே’’ என்று தெலுங்கில் சொல்லியிருக் கிறார். எழுதிக் கொடுத்தால் வெளியே வந்துவிடலாமே? என்று அந்த அம்மையார் சொன்னார்.

‘‘நானா விரும்பி வந்தேன்; அவர்களாகப் பிடித்துக் கொண்டு வந்திருக்கிறார்கள்’’ என்று சொல்லிவிட்டு, ‘‘என்ன எழுதிக் கொடுக்கவேண்டுமாம்? என்று நடிகவேள் எம்.ஆர்.இராதா கேட்டார்.

‘‘இனிமேல் இப்படி செய்யமாட்டேன் என்று எழுதிக் கொடுத்தால், விட்டுவிடுகிறேன்’’ என்று சொல்கிறார்கள் என்றார் அந்த அம்மையார்.

நடிகவேள் எம்.ஆர்.இராதா அவர்களின் நகைச்சுவை

எம்.ஆர்.இராதா அவர்கள், அவருக்கே உரிய பாணியில், ‘‘நான் தூங்கிக் கொண்டிருந்தபொழுது, என்னை எழுப்பி பிடித்துக் கொண்டு வந்தார்கள்? இனிமேல் இப்படி செய்யமாட்டேன்; என்னை விட்டுவிடுங்கள் என்று சொன்னால், வாழ்நாள் முழுவதும் என்னை இனிமேல் தூங்காமல் இருக்கச் சொல்கிறாயா?’’ என்று கேட்டார்.

இதைக் கேட்டவுடன், ஜெயிலர் உள்பட அங்கே இருந்தவர்கள் அனைவரும் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்துவிட்டனர்.

என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும் என்ற உறுதியோடு இருந்தவர்கள் பெரியார் தொண்டர்கள்

அப்படி மிகப்பெரிய அளவிற்கு, மிசா காலத்தில் சிறைச்சாலையில் இருந்த தோழர்கள், ஒருவரும் கொஞ்சம்கூட சலனமில்லாமல், வீட்டிற்குப் போகவேண்டும் என்று நினைப்பில்லாமல் என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும் என்ற உறுதியோடு இருந்தவர்கள். இதுதான் பெரியார் பெருந்தொண்டர்கள் - இதுதான் க.ச. அய்யா அவர்கள்.

எது சுயநலம்? எது பொதுநலம்?  தந்தை பெரியாரின் விளக்கம்

எது சுயநலம்? எது பொதுநலம்? என்று தத்துவ ரீதியாக தந்தை பெரியார் அவர்கள் சொல்லும்பொழுது, ‘‘எல்லோரும் என்னை பாராட்டுகிறீர்கள்; நான் பொதுநலம் புரிந்துவிட்டேன், பொதுநலம் புரிந்து விட்டேன் என்று. நீங்கள் எதைப் பொதுநலம் என்று கருதுகிறீர்களோ, அது என்னைப் பொறுத்தவரையில், அது சுயநலம். எப்படி சுயநலம் என்றால், எது செய்தால், எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறதோ, எது என்னுடைய வாழ்நாளைப் பெருக்குகிறதோ, அதை நான் செய்து கொண்டிருக்கிறேன். அதுதான் என்னுடைய கொள் கையைப் பரப்புவது; அதுதான் எல்லோருக்கும் அறிவை ஊட்டுவது, மானத்தையும், அறிவையும் உண்டாக்குவது - அதுதான் எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. எனக்காக நான் செய்கிறேனே தவிர, உங்களுக்காக அல்ல - அதனால் நீங்கள் பயன் பெறுகிறீர்கள், அவ்வளவுதான்.’’

எவ்வளவு பெரிய தத்துவம் பாருங்கள்.

இந்தத் தத்துவத்தோடுதான் இன்றைக்கு க.ச. அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அதுதான், அவரை இவ்வளவு சிறப்பாக, செம்மையாக வாழ வைக்கக் கூடிய அளவிற்கு இருக்கிறது.

இங்கே கழகத் துணைத் தலைவர் கவிஞர் அவர் களும், கழகப் பொருளாளர் குமரேசன் அவர்களும், பொதுவானவர்களும் உரையாற்றும்பொழுது எடுத்துச் சொன்னார்கள்.

100 வயதைத் தாண்டிய பெரியார் பெருந்தொண்டர்கள்

பெங்களூரு வேலு அவர்கள் 103 வயதுடையவர். அவலூர்ப்பேட்டையைச் சேர்ந்தவர், பெங்களூரு கார்ப்பரேசனில் ஓட்டுநராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

அதேபோன்று, ஆத்தூரில் 102 வயதைத் தாண்டியவர். ஆகஸ்ட் மாதம் இதுபோன்ற விழாவை அவருடைய பேரப் பிள்ளைகள் நடத்தவிருக்கிறார்கள்.

100 வயதைத் தாண்டி, 101 ஆவது வயதில் சிதம்பரத்திலிருந்து என்.வி.ராமசாமி அவர்களை பெரியார் திடலுக்கு அழைத்து வந்து, அவரைப் பேச வைத்து, அவரிடம் பேட்டி எடுத்து, வெளியிட்டு இருக்கிறோம்.

அதேபோன்று, புதுச்சேரியில் கனகலிங்கம் அவர்கள், புதுவை மாநில திராவிடர் கழகத் தலைவராக இருந்தார். அவர் மறைந்த பிறகு, அவருடைய துணைவியார் - அந்த அம்மையாருக்கும் 100 வயது. அந்த அம்மையார் சொன்னார், கோவிலுக்கெல்லாம் வரமாட்டேன்; ஆசிரி யரை அழைத்து விழா நடத்தவேண்டும் என்று.

புதுச்சேரிக்குச் சென்று, அவருடைய பாராட்டு விழாவில் பங்கேற்று, வாழ்த்திவிட்டு வந்தோம்.

ஆகவே, நூறாண்டு கண்டவர்கள் என்று சொல்லக் கூடிய அளவில், இத்தனை பேரை நாங்கள் பார்க்கிறோம் என்று சொல்கிறபொழுது, இந்தக் கொள்கை எவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது என்பதற்கு அது அடையாளம்.         (தொடரும்)


No comments:

Post a Comment