பிற இதழிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 18, 2022

பிற இதழிலிருந்து...

தாய் மண்ணுக்கு தமிழ்நாடு என பெயர் சூட்டிய அறிஞர் அண்ணாவின் வரலாற்றுத் தீர்மானம்

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில்,  1967, ஜூலை 18 அன்று - “மெட்ராஸ் ஸ்டேட்” என் பதை மாற்றி, “தமிழ்நாடு” எனும் பெயர் சூட்டப் பெறும் தீர்மானம் மீதான விவாதத்திற்குப் பதில் அளித்து அறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய உரை.  

சட்டமன்றத் தலைவர் அவர்களே! 

இந்த மன்றத்திலே எல்லாக் கட்சியினராலும் நல்ல அளவுக்கு ஒப்புக்கொள்ளப்பட்டு தீர் மானமாக நிறைவேற இருக்கின்ற “தமிழ்நாடு” என்று பெயரிடுகின்ற இந்த நிகழ்ச்சி இந்த அவையிலே  இன்றைய தினம் உறுப்பினர்களாக  இருக்கின்ற ஒவ்வொருவருடைய வாழ்  நாளிலும் மிகுந்த மகிழ்ச்சியையும், நல்ல எழுச்சியையும் தரத்தக்க ஒரு திருநாள் ஆகும்.

“இந்தத் திருநாளைக் காண்பதற்கு  பன்னெடுங் காலம் காத்துக் கொண்டிருக்க நேரிட்டதே” என்பதுதான் மகிழ்ச் சியின் இடையிலே நமக்கு வருகின்ற ஒரு துயரமே தவிர, நெடுங்காலத்திற்கு முன்னாலே நடைபெற்றிருக்க வேண்டிய  ஒரு நிகழ்ச்சியை மிகுந்த காலம் தாழ்த்தி இன்றைய தினம் ஏற்றுக்கொண்டிருக் கிறோம் என்றாலும் இதிலே எல்லாக் கட்சியினரும் ஒன்றுபட்டு இந்தத் தீர்மானத்திற்கு அவர்கள் தங்களுடைய ஆதரவைத் தந்திருப்பது மிகவும் பாராட்டத்தக்கதாகும். நம்முடைய எதிர்க்கட்சித் தலைவர் திரு.கருத்திருமன் அவர்கள் கூட இந்தத் தீர்மானத்தை ஆதரிக்கிறார்களே தவிர  வேறில்லை. அதிலே சில ஆலோசனை களைச் சொல்லியிருக்கிறோம் என்று சொல்லியிருப்பது, எதிர்க்கட்சியில் இருப்பவர்களுடைய கடமை என்ற வகையில் ஆலோசனைகளைச் சொல்ல வேண்டுமென்ற முறையிலே தவிர, எதிர்க் கிறார்கள் என்று இல்லை. ஆகையினால் இந்தத் தீர்மானம் எல்லோருடைய ஆதரவையும் பெற்று இந்தியப்  பேரரசுக்கு அனுப்பி வைக்கப் பட இருக்கிறது.

இந்தியப் பேரரசிலே மிகுந்த செல்வாக்கோடு இருக்கின்ற இரண் டொரு தலைவர்களுடன் உரையாடுகின்ற வாய்ப்புக் கிடைத்த போது இதைப்பற்றி அவர்கள் சொல்லும் போது, “தமிழகச் சட்டமன்றத்தில் இது நிறைவேற்றப் பட்டு அனுப்பப்படுமானால் இந்திய அரசியல் சட்டத் தைத் திருத்துவதிலே தயக்கம் இருக் காது” என்பதனை முன்கூட்டியே என்னிடத்தில் எடுத்துச்சொல்லி யிருக்கிறார்கள்.

அங்குள்ள பல தலைவர்கள், அதனை அரசை நடத்துகிறவர்கள் கூட ஏற்றுக் கொள்ளுகிறார்கள் என்று எண்ணத்தக்க விதத்தில் பத்து நாட் களுக்கு முன் பாராளுமன்றத்தில் இந்த மாநி லத்தைப் பற்றிப் பேச வேண்டிய வாய்ப்பு கிடைத்த நேரத் தில் அங்குள்ள உள்துறை அமைச்சர் திரு.சவான் அவர்கள் “மெட்ராஸ் ஸ்டேட்” என்று பேசிப்பழக்கப்பட்டவர் மிகுந்த அக்கறையோடும் மிகுந்த கவனத்தோடும் "Tamil Nadu” என்றுதான் பேசியிருக்கிறார். ஆக இதை அவர்களும் ஏற்றுக்கொண்டு அரசியல் சட்டத்தைத் திருத்துவ தற்கான ஒரு நல்ல வாய்ப்பை இன்றைய தினம் இந்த அவை யிலே நாம் பெற்றிருக்கிறோம்.

மதிப்புமிக்க ம.பொ.சி. அவர்கள் இதிலே மிகுந்த மன எழுச்சி பெற்றது இயற்கையான தாகும். அவர்கள் பல ஆண்டுகளாக “தமிழ்நாடு” என்ற பெயர் இந்த நாட்டுக்கு இடப்பட வேண்டுமென்பதில் மிகுந்த அக்கறையோடு பாடுபட்டவர்கள்.

திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்களும், திராவிட முன்னேற்றக் கழகம் என்பதிலே 'திராவிட' என்பதை இணைத்துக்கொண்டிருப்ப தால் “தமிழ்நாடு” என்பதிலே அக்கறை இல்லாமல் போய் விடுமோ என்று சிலர்  எண்ணிய நேரத்தில் “தமிழ்நாடு” என்று பெயரிடுதல் வேண்டுமென்று திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த நாங்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்து கொண்டிருக்கிறோம். காங்கிரஸ் கட்சியிலுள்ள வர்களும், மற்றவர்கள் கொண்டு வருகிறார்களே என்பதனாலே  முன்னாலே இதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தாலும் இலக்கியத்தில் ஆதாரம்  இருக்கிறதா என்று கேட்டிருந்தாலும்,  இன்றைய தினம் அவர்களும்  “தமிழ்நாடு” என்று சொல்லிக் கொள்வதில் மிகுந்த பெருமைப்படுகிறார்கள். ஆகையினால் இந்தத் தீர்மானம் எந்தவிதமான எதிர்ப்பும் இல்லாமல் இந்த  அவையிலே நிறை வேற்றப்பட இருக்கிறது என்று கருதுகிறேன்.  அப்படிப்பட்ட ஒரு வெற்றி கிடைக்கு மானால் அது இன்று தி.மு.க.விற்கு வெற்றியல்ல, தமிழரசுக் கழகத்திற்கு வெற்றியல்ல, மற்ற கட்சிகளுக்கு வெற்றியல்ல,  இது தமிழுக்கு வெற்றி, தமிழருக்கு  வெற்றி, தமிழ் வரலாற்றுக்கு வெற்றி, தமிழ்நாட்டுக்கு வெற்றி என்ற விதத்தில்  அனைவரும் இந்த வெற்றியிலே பங்கு  கொள்ளவேண்டும்.

“தமிழ்நாடு என்ற பெயர் இருந்தால்  வெளி நாடுகளில் உள்ளவர்கள் அறிந்து கொள்ள மாட்டார்கள்'' என்பது மட்டுமல்ல, நம்முடைய முன்னாள் தொழில் அமைச் சராக இருந்த வெங்கட்ராமன் அவர்கள், “ஒரு நாட்டுக்கும், இன்னொரு நாட்டுக்கும் இடையே செய்து கொள்ளக்  கூடிய ஒப்பந்தம் எல்லாம் திருத்தி  எழுதப்பட வேண்டிவரும், அதனாலே  சிக் கல்கள் விளையும்” என்றெல்லாம்  சொன் னார்கள். அதிலிருந்து அவர்கள்  வெளிநாடு களுக்கெல்லாம் போய்  வந்தார்கள் என்பதைத் தான் கவனப்படுத்துகிறார்களே தவிர, உண்மை யாகச்  சிக்கல்கள் இருக்கின்றனவா  என்பதைக் கவனப்படுத்தவில்லை.

மதிப்பிற்குரிய நண்பர் பாலசுப்பிரமணியம் அவர்கள் எடுத்துச் சொன்னபடி “கோல்டு கோஸ்ட்” என்பது “கானா”  ஆகி விட்டது. அதனால் எந்தவிதமான சர்வதேசச் சிக்கல் களும் ஏற்பட்டுவிடவில்லை .

தமிழ்நாடு தனி நாடாகி இந்தப் பெயரை இடவில்லை, இந்தியாவில் ஒரு பகுதியாக இருந்து கொண்டு இந்தப் பெயரை இடுவதால் இதிலே சர்வதேசச் சிக்கல்கள் எழுவதற்கு நியாயமில்லை. ஆகவே, இந்தத் தீர்மானத்தை அனை வரும் தங்கள் தங்கள் கட்சியின் சார்பில் ஆதரிக்க வேண்டு மென்பதை ஒரு கடமையுணர்ச்சியாகக் கொண்டதற்காக மிக்க மகிழ்ச்சியடை கிறேன்.

நண்பர் ஆதிமூலம் அவர்கள்.  “தமிழ்நாடு” என்ற பெயர் மாற்றத்திற்காகத் தன்னைத்தானே தியாகம் செய்துகொண்ட சங்கரலிங் கனார் அவர்களுக்கு நினைவுச் சின்னம் எழுப்ப  வேண்டும் என்று குறிப் பிட்டார்கள்.  அதையும் அத்தனைபேரும் உள்ளத் திலே, கருத்திலே கொள்ளுவார்கள்  என்று நிச்சயமாக நம்பு கிறேன்.

அவருடைய எண்ணங்கள் இன்றைய தினம் ஈடேறத்தக்க நிலை கிடைத் திருப்பதும், அந்த நிலையை உருவாக்கு வதிலே நாம் அனைவரும் பங்கு பெற்றி ருக்கிறோம் என்பதும் நமக்கெல்லாம் நம் வாழ்நாள் முழுவதும் பெருமைப்படத்தக்க காரியமாகும்.

நம்முடைய பிள்ளைகள், பேரப் பிள்ளைகள் நெடுங்காலத்திற்குப் பிறகு நம்முடைய இல்லங்களிலே அமர்ந்து பேசிக்கொள்ளுகின்ற நேரத்தில், பெருமையோடு சொல்லிக் கொள்ள இருக்கிறார்கள்.

“என்னுடைய பாட்டனார் காலத்திலே தான் நம்முடைய நாட்டுக்கு “தமிழ்நாடு” என்ற பெயர் இடப்பட்டது. எதிர்க்கட்சியிலே உட்கார்ந்து கொண்டிருந்த என்னுடைய பாட்டனார் கருத்திருமன் இதை ஆதரித்தார்" - என்று கருத்திருமன் பேரப் பிள்ளைகளும், எங்க ளுடைய பேரப் பிள்ளைகளும் எதிர்காலத்திலே பேசக்கூடிய நல்ல நிலைமைகளை எல்லாம் அவர்கள் எண்ணிப் பார்ப்பார்களேயானால் நிச்சயமாக அந்த ஆலோசனையைக் கூடச் சொல்லாமல் இதை ஏற்றுக் கொள் வார்கள் என்பதில் ஒரு துளியும் அய்யப்பாடு கொள்ளவில்லை.

ஆகையினால் இந்தத் தீர்மானத்தை அனைவரும் ஒருமனதாக நிறைவேற்றிக் கொடுக்க வேண்டுமென்று பணிவோடு கேட்டுக் கொள்ளுகின்றேன்.

(தீர்மானம் பேரவையின் முடிவுக்கு விடப் பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.)

அறிஞர் அண்ணா : சட்டமன்றத் தலைவர் அவர்களே, வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கின்ற இந்த நன்னாளில் “தமிழ்நாடு” என்று நான் சொன்னதும் “வாழ்க” என்று அவை உறுப்பினர்கள் சொல்லுவதற்குத் தங்களுடைய அனுமதியைக் கோருகிறேன். 

அறிஞர் அண்ணா :  “தமிழ்நாடு” 

உறுப்பினர்கள் : வாழ்க! 

அறிஞர் அண்ணா : “தமிழ்நாடு” 

உறுப்பினர்கள் : வாழ்க 

அறிஞர் அண்ணா : “தமிழ்நாடு” 

உறுப்பினர்கள் : வாழ்க!

 நன்றி: 'முரசொலி' 18.7.2022


No comments:

Post a Comment