விடுதலையெனும் பெருவெளி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 30, 2022

விடுதலையெனும் பெருவெளி

தோழர்களே நினைவிருக்கிறதா

நம் சுயமரியாதையின் வீட்டிற்கு 

விடுதலை என்று பெயரிட்டார் பெரியார்


தந்தை பெரியாரும் அன்னை மணியம்மையாரும்

அண்ணாவும் இந்த வீட்டில்தான் வசித்தனர்

வஞ்சகங்களையும் துரோகங்களையும்

தமிழர் மீது பொழிந்த மந்திரங்களையும்

துரத்தியடித்தது இந்த வீடுதான்

செங்கொடி ஏற்றியவர்களும் 

கதர் சட்டை அணிந்தவர்களும் 

பயிற்சி எடுத்தது இந்த வீட்டில்தான்

விடுதலை என்பது போர்க்களமல்ல

நம் பள்ளிக்கூடம்

அங்கேதான் நம் ஆசிரியர் இருக்கிறார்


மனித நாகரீகங்கள்

ஆற்றங்கரையினில் இருந்து தொடங்கின எனில்

தமிழரின் சுயமரியாதை பண்பாட்டு

நாகரீகம்

விடுதலையின் கரையில் தொடங்கியது

விடுதலையில் நடமாடுபவர்கள்

வானத்திலிருந்து வந்தவர்களல்ல

சாமானியர்கள் ஒடுக்கப்பட்டவர்கள்

பிற்படுத்தப்பட்டவர்கள்

தாழ்த்தப்பட்டவர்கள் 


விடுதலை என்பது

தமிழர்களின் மண்டையோட்டிற்குள் நுழைந்த 

பழைய வேதாந்தங்களை 

அறுவை சிகிச்சையில் 

குணப்படுத்தும் மருத்துவமனை

பேதங்களின் யுத்தங்களிலிருந்து

தமிழர்களை மீட்டெடுக்கும் 

பகுத்தறிவின் படையெடுப்பு

விடுதலை என்பது அச்சடித்த காகிதமல்ல

87 ஆண்டுகளை உள் வாங்கி 

வளர்ந்து நிற்கும் அசுரர்களின் பெருவெளி 


தேசியத்தின்  வெட்பம்  தாங்காமல் வருகிறவர்களுக்கு

நிழல் தரும் திராவிடர் கோட்டம்


விடுதலை என்பது

பெண்ணுரிமைகளின் நாக்கு

சமூகத்தின் வலிகளையும்

காயங்கலையும்  சொல்லி

வாதாடும் சமூக நீதி வழக்குரைஞர்

பகுத்தறிவின் கீழடி


விடுதலை என்பது 

விரிந்த தமிழ் பரப்பின் மீது

படரும் நச்சு கதிர் வீச்சுகளை

தடுத்து நிற்கும் ஓசோன் படலம்

விடுதலை என்பது நம் மானம் காக்க

ஆசிரியர் நெய்து தரும்

சுயமரியாதை ஆடை


விடுதலை என்பது

சடங்குகளுக்கு விற்கப்பட்டு

கொத்தடிமைகளாக கிடப்பவர்களை 

விடுவிக்கும் அதிகாரம்

விடுதலை என்பது

இரண்டாயிரம் ஆண்டுகளாய் அப்பிக்கிடக்கும்

அநீதிகளின் மீது தீப்பிழம்பை கக்கும்

எரிமலையின் வாய்


விடுதலை என்பது

தமிழர் மானத்தை மீட்டுத்தரும்

தனிமனித  ராணுவம்


விடுதலை என்பது

தமிழர்கள் தொலைந்த போதெல்லாம் 

கண்டு பிடித்து தரும் 

சுய மரியாதை காவல் நிலையம்

அது தமிழர்களின் கருவறை

கடவுள்களை காலாவதியாக்கும்

அறிவின் சோதனைக்கூடம்


விடுதலை என்பது

பூஜை  அறையில் அடிக்கும் மணியல்ல

நரகத்திற்கும்

சொர்க்கத்திற்கும் நடுவே நடமாடுபவர்களை 

அறிவின் கூடத்திற்கு அழைக்கும் அழைப்பு மணி

புரட்டுகளை தோலுரித்துக்காட்டும்

ஒப்பனை தேவையில்லாத

அறிவின் ரௌத்திரம்

சமூகநீதியெனும் விதை நெல்லின் களஞ்சியம்

மனுவின் அதர்மங்களை 

அலசி ஆராயும் ஆய்வகம்


விடுதலை என்பது

எத்தனை சம்மட்டிகளாலும்

உடைத்தெடுக்க முடியாத 

திராவிடத்தின் கிழக்கு

விடுதலை என்பது

சம்பூகனின் மரணத்திற்காக

நியாயம் கேட்கும் போராளி


விடுதலை என்பது

தமிழக அரசின் மீது படரும்

ராகு கேதுகளை

விழுங்கும் சூரியகிரகணம்


விடுதலை என்பது 

இடுப்பில் கிடந்த துண்டை 

தோளில் போட்ட தோழமை


விடுதலை என்பது 

எதிரிகளின் தூக்கத்திலும்

அதிர்ந்து ஒலிக்கும் திராவிடப்பறை


விடுதலை எங்களுக்காக இருக்கிறது

விடுதலைக்காக நாங்கள் இருக்கிறோம்

விடுதலை எங்களு க்காக எழுதும்

விடுதலைக்காக நாங்கள் எழுதுவோம்

யுத்தக்காலத்தில்

அது வாள் கேடயம்

மழைக்காலத்தில் அது கருப்பு குடை

விடுதலை பாதை போடுகிறது

அந்தப்பாதையில் நடந்து செல்கிறோம்

நாங்கள் உறங்கிக்கொண்டிருக்கிறோம்

விடுதலை எங்களுக்காக விழித்துக்கொண்டிருக்கிறது

வாழ்க விடுதலை வளர்க விடுதலை

கோசின்ரா


No comments:

Post a Comment