பிஜேபியினர் பிரிவினை வாதி ஆகிவிட்டார்களே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 20, 2022

பிஜேபியினர் பிரிவினை வாதி ஆகிவிட்டார்களே!

2024ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய மாநிலங்களின் எண்ணிக்கை 50 ஆக உயரும், தமிழ்நாடு, மேற்குவங்கம், மகாராட்டிரா மாநிலங்கள் உடையுமாம்!

"கருநாடகா உடைந்தாலும் அனைவரும் கன்னடர் களாகவே இருப்போம்" என்ற கருநாடக அமைச்சர் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

பொதுவினியோகம், உணவு மற்றும் வனத்துறை அமைச்சர் உமேஷ்கட்டி பெலகாவியில் ஊடகவியலாளர் களிடம் பேசிய போது "2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலுக்குப் பிறகு இந்தியாவில் மாநிலங்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்த்தப்படுகிறது.

புதிதாக மராட்டியத்தில் 3 மாநிலங்கள், கருநாடகத்தில் 2, உத்தரப்பிரதேசத்தில் 4 என நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள் பிரிக்கப்பட இருக்கின்றன.

இதுகுறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். பெலகாவியில் விதான சவுதா உள்ளது. தாரவார் உயர்நீதிமன்ற கிளை இருக்கிறது. பெலகாவியில் நுகர்வோர் நீதிமன்றம் அமைக்கப்படுகிறது. மாநிலம் பிரிக்கப்பட்டால் வட கருநாடகத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் அதிகரிக்கும். நாம் அனைவரும் சேர்ந்து வட கருநாடகத்தை தனி மாநிலமாக ஆக்குவோம். பெங்களூரு முழுவதுமாக நிரம்பிவிட்டது. பெங்களூருவில் உள்ள விதான சவுதாவில் இருந்து எனது வீடு 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. வீட்டில் இருந்து விதான சவுதாவுக்குச் செல்ல ஒரு மணி நேரம் ஆகிறது. அதனால் வளர்ச்சியைப் பரவலாக்க வேண்டியது அவசியம். அதனால் கருநாடகம் அவசியம் பிரிக்கப்பட வேண்டும்" இவ்வாறு உமேஷ்கட்டி கூறியுள்ளார். அமைச்சர் உமேஷ் கட்டி இதே கருத்தை தட்சிண கன்னடா மாவட்டத்திலும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. உமேஷ்கட்டியின் இந்தக் கருத்துக்கு எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே தமிழ்நாடு கொங்கு நாடு என்று விரைவில் பிரிக்கப்படும் என ஒரு தமிழ்நாளிதழ் எழுதியதும், கடுமையான எதிர்ப்புக் கிளம்பியதும் அத்துடன் அது அடங்கிவிட்டது. அதே போல் மகாராட்டிராவில் விதர்பா மற்றும் மராட்டா என மூன்று மாநிலங்களாகப் பிரிக்க வேண்டும் என்று பாஜக உறுப்பினர்கள் பேசியதற்குக் கடுமையான எதிர்ப்புக் கிளம்பியது சிவசேனா தலைவர் மறைந்த பால்தாக்கரே மராட்டியம் பிரிக்கப்பட்டால் மராட்டியர்களின் உடலைப் பிரிப்பதற்குச் சமம் என்று கூறியிருந்தார்.

ராஜஸ்தானின் தெற்கு ராஜஸ்தானும், மத்தியப் பிரதேசத்தில் உள்ள சில பகுதிகளும் இணைந்து மர்வாட் என்ற மாநிலம் பிரிக்கப்பட வேண்டும் என்னும் குரல் எழுப்பப்பட்டது. பாஜக முதலமைச்சராக அங்கு வசுந்தரா ராஜே இருந்த போது இதனைத் தீர்மானமாக கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கையை பாஜக உறுப்பினர்கள் எழுப்பினர். இதனை அடுத்து அதற்குக் கடுமையான எதிர்ப்பு எழுந்தது. வசுந்தரா ராஜே அரசு 2017ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தோல்வி அடைய பாஜகவினர் எழுப்பிய மாநிலப் பிரிவினைப் பேச்சும் காரணம் என்று அரசியல் விமர்சகர்கள் எழுதினர்.

அதேபோல் மேற்குவங்கத்தையும் கூர்காலாந்தாகப் பிரிக்க வேண்டும் என்று பாஜகவினர் மலைப் பகுதி மேற்குவங்க மாவட்டங்களில் பேசி வருகின்றனர். மேலும் அங்குள்ள மாநிலப் பிரிவினைவாதிகளோடு கூட்டணியும் வைத்துள்ளனர்.

ஆகவே இவர்களின் திட்டம் எல்லாம் அடுத்த முறை மோடி ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாடு, கருநாடகா, மகாராட்டிரா, மேற்குவங்கம் போன்ற மாநிலங்களைப் பிரித்து அதன் மூலம் எளிதாக அந்த மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்ற திட்டமாம்!

மாநில உரிமை முழக்கமிட்டால் அவர்களைப் பிரிவினைவாதிகள் என்பார்கள். இந்தியை எதிர்த்தால் அவர்களை தேசியத்துக்கு எதிரானவர்கள் என்று குற்றம் சாட்டுவார்கள். சமஸ்கிருதத் திணிப்பை எதிர்த்தால் அவர்களை இந்து விரோதிகள் என்பார்கள் - இப்படி யெல்லாம் கூறுவோர் தாம் மாநிலங்களுக்குள்ளேயே பிரிவினைவாதங்களை வாய்க்கிழிய எழுப்புகிறார்கள்.

ஆமாம், இந்தியா ஒரே நாடு என்று கூறுபவர்கள் இப்பொழுது மாநிலங்களுக்குள்ளேயே பிரிவினை பேசுகிறர்களே, இது என்ன இரட்டை வேடம்?

மக்கள் மத்தியில் இவர்கள் அம்பலப்படுவார்கள் என்பது மட்டும் திண்ணம். 

No comments:

Post a Comment