நாங்கள் திறந்த புத்தகம் - ரகசியமாக ஒளித்து வைப்பவர்கள் அல்ல! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 15, 2022

நாங்கள் திறந்த புத்தகம் - ரகசியமாக ஒளித்து வைப்பவர்கள் அல்ல!

எங்களை ராகுகாலம், எமகண்டம், கெட்ட நேரம் எல்லாம் ஒன்றும் செய்யவில்லை; காரணம் மனதில் இருக்கின்ற துணிச்சல்தான்!

ஜெ.ஆனந்த் - பா.யுவேதா மணவிழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை

உசிலம்பட்டி, ஜூலை 15 நாங்கள் திறந்த புத்தகம் - ரகசியமாக ஒளித்து வைப்பவர்கள் அல்ல!  எங்களை ராகுகாலம், எமகண்டம், கெட்ட நேரம் எல்லாம் ஒன்றும் செய்ய வில்லை; காரணம், மனதில் இருக்கின்ற துணிச்சல்தான் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

ஜெ.ஆனந்த் - பா.யுவேதா மணவிழா கடந்த 9.6.2022 அன்று  உசிலம்பட்டியில் அ.ஜெயக் கொடி - பாண்டியம்மாள் ஆகியோரின் மகன் ஜெ.ஆனந்த் அவர்களுக்கும்,  எம்.சி.பாண்டி - பத்மா ஆகியோரின் மகள் டாக்டர் பா.யுவேதாவிற்கும் வாழ்க்கை இணையேற்பு விழாவினை நடத்தி வைத்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  தலைமையுரையாற்றினார்.

அவரது தலைமையுரை வருமாறு:

அன்பிற்கும் பாராட்டுதலுக்கும் உரிய  மு.சண்முகம் எம்.பி.,

இம்மணவிழாவில் மிகச் சிறப்பானதொரு உரையாக வாழ்த்துரையாற்றிய மாநிலங்களவை உறுப்பினரும், தொ.மு.ச.வினுடைய பொறுப்பாளருமாக இருக்கக்கூடிய அன்பிற்கும் பாராட்டுதலுக்கும் உரிய மு.சண்முகம் எம்.பி., அவர்களே,

இந்நிகழ்வில் கலந்துகொள்கின்ற பெரியோர்களே, தாய்மார்களே, ஆன்றோர்களே, கழக உறவுகளே, மன்றல் கொண்டிடும் மணமக்களே உங்கள் அனை வருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தக் குடும்பம் என்பது நம்முடைய குடும்பம்,  எங்களுடைய குடும்பம் என்கிற அந்த உரிமையோடும், உறவோடும் நாங்கள் எல்லோரும் ஆனந்த் - யுவேதா மணவிழாவில் கலந்துகொள்கின்றோம்.

இங்கே எளிமையாக, அருமையாக, மகிழ்ச்சியோடு அமர்ந்திருக்கின்றார்கள் மணமக்கள்.

நாங்கள் திறந்த புத்தகம் - ரகசியமாக  ஒளித்து வைப்பவர்கள் அல்ல!

வழக்கமாக நாங்கள் மணவிழாவிற்குச் சென்றால், எல்லோரும் வாழ்த்துரை வழங்கிவிட்டு, அதற்குப் பிறகுதான் மணவிழாவினை நடத்துவோம். ஆனால், இங்கே நம்முடைய தோழர் பாண்டி அவர்கள் ஒரு வேண்டுகோள் - அவர் நேரிடையாக என்னிடம் சொல்லவில்லை; மணமகன் ஆனந்த் மூலமாக சொன்னார்.

அது என்னவென்றால், 11.15 மணிக்குள் தாலி கட்டி னால், நன்றாக இருக்கும் என்று சொன்னாராம். நாங்கள் திறந்த புத்தகம் - ரகசியமாக ஒளித்து வைப்பவர்கள் அல்ல.

அதற்கு நாங்கள் ஆட்சேபனை சொல்லவில்லை. அதற்காகத்தான் முதலிலேயே மணவிழாவினை நடத்தி வைத்தோம்.

இங்கே மணமகன் ஆனந்த் அவர்களின் தாயார் பாண்டியம்மாள் அமர்ந்திருக்கிறார்; எல்லோரும் நம்முடைய உறவுக்காரர்கள்தான்.

இந்த மணமுறையில், மணமக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இதே வைதீக திருமண முறை என்றால், மாங்குச்சி சுள்ளிகளைப் போட்டுக் கொளுத்தி, அந்தப் புகையினால் மணமக்கள் கண்களைக் கசக்க - மண மகளின் கண்களில் தண்ணீர் வர,  முதல் வரிசையில் அமர்ந்திருக்கின்ற பாட்டி, சும்மா இல்லாமல் - என்ன மணப்பெண் அழுது கொண்டிருக்கிறாள், ஏதோ குறை இருக்கும்போலிருக்கிறதே என்று சொல்லி,

ஏதோ இருக்கும் போலிருக்கிறதே என்று அவருடைய பக்கத்தில் இருப்பவர் சொல்ல - ஒரு பெரிய கதையே உருவாகும் பழைய திருமண முறை யில்.

அப்படியில்லாமல், இங்கே இருப்பவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக சிரித்துக்கொண்டு இருக்கிறார்கள் - மணமக்கள் உள்பட.

இந்த மகிழ்ச்சியைத் தந்தவர்தான் தலைவர் தந்தை பெரியார்- இந்த மகிழ்ச்சியை சட்டப்பூர் வமாக ஆக்கியவர்தான் பேரறிஞர் அண்ணா. அதைத் தொடர்வதுதான் - நம்முடைய முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர் களிலிருந்து, இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் அவர்கள் வரை தொடர்வது அனைத்தும் அவ்வளவும் சிறப்பாக இருக்கின்றன.

என்ன சொல்கிறார்கள் என்றே நமக்குப் புரியாது

நாங்கள் பேசுவது உங் களுக்கெல்லாம் புரிகிறது. வைதீக திருமணத்தில், நம் முடைய மொழியில் இருக் காது. என்ன சொல்கிறார் கள் என்றே நமக்குப் புரியாது.

இரண்டாவதாக, நல்ல நேரம், முகூர்த்த நேரம் - அது போய்விடக் கூடாது, போய்விடக்கூடாது என்று நம்முடைய மனதில் ஒருவித பயத்தை ஏற்றி வைத்து விட்டார்கள். ஆக ஒருவித பயம் மனதில் ஏறிவிட்டது.

நாங்கள் நாட்காட்டி வெளியிட்டு இருக்கிறோம். பெரியார் நாட்குறிப்பு - ஆனந்த் போன்று இருப்பவர் கள்தான் எங்களுடைய அலுவலகத்தில் அந்தப் பணியையெல்லாம் செய்திருக்கிறார்கள்.

அந்த நாட்குறிப்பில், ஒவ்வொரு தாளிலும், நல்ல நேரம்: 24 மணிநேரமும் என்றுதான் குறிப்பிட்டுள்ளோம்.

என்னிடம் ஒருவர் கேட்டார், ‘‘ஏங்க, நிறைய பேர் கொள்கையை விட்டுவிட்டார்கள்; நீங்கள்தான் கொள்கையோடு இருக்கிறீர்கள் என்று நினைத்தோம். ஆனால், உங்கள் காலண்டரில் நல்ல நேரம் என்று போட்டிருக்கிறீர்களே?’’ என்று.

அவசரப்படாதீர்கள்; முழுவதுமாகப் படியுங்கள் - நல்ல நேரம் என்று போட்டு, அதற்கடுத்து என்ன போட்டிருக்கிறோம் என்று பாருங்கள் என்றேன்.

நல்ல நேரம் - 24 மணிநேரமும்

அவரும், சரியாகப் பார்த்துவிட்டு, ‘‘நல்ல நேரம் என்று போட்டு அதற்குப் பக்கத்தில் 24 மணிநேரமும் என்று போட்டிருக்கிறீர்கள்’’ என்று சொன்னார்.

உழைக்கின்றவர்களுக்கு, பாடுபடுகின்றவர்களுக்கு, நம்மைப் போன்ற பாட்டாளிகளுக்கு 24 மணிநேரமும் நல்ல நேரம்தான்.

நமக்கு கெட்ட நேரம் எதுவும் கிடையாது. ஏனென் றால், உழைத்துதான் நாம் சம்பாதிக்கின்றோம். குறுக்கு வழியில் மேலே வருகின்றவர்கள் நாமல்ல.

படிப்பு, அறிவு, உழைப்பு எல்லாம் நம்மிடம் உண்டு.

ராகுகாலம் ஒன்றரை மணிநேரம்; எமகண்டம் இன் னொரு ஒன்றரை மணிநேரம் என்று வைத்திருக்கிறார்கள்.

எமகண்டத்தை அட்லாஸ் வரைபடத்தில் தேட முடியாது

ஆசியா கண்டத்தை அட்லாஸ் வரைபடத்தில் தேடலாம்; ஆஸ்திரேலியா கண்டத்தை தேடலாம்; ஆப்பிரிக்கா கண்டத்தைத் தேடலாம். ஆனால், எமகண்டத்தை அட்லாஸ் வரைபடத்தில் தேட முடியாது.

எமகண்டத்தை பஞ்சாங்கத்தில்தான் தேட முடியும்.

எல்லா நேரமும் நல்ல நேரம் என்று உழைக்க ஆரம்பித்தோம் என்றால், நாம் வெற்றி பெறுவோம். கெட்ட நேரம் என்கிற பயமே இருக்காது.

நாங்கள் பேசிவிட்டு செல்பவர்கள் அல்ல; என்னு டைய துணைவியார் இங்கே வந்திருக்கிறார். கழகத் துணைத் தலைவர் அவர்களுடைய துணைவியாரும் இருக்கிறார்கள். எங்களுடைய திருமணம் எல்லாம் எப்படி நடந்தது தெரியுமா?

பெரியார் தலைமையில் எங்களுடைய திருமணம் 64 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்குத்தான் நாங்கள் மாலையை மாற்றிக் கொண்டோம்; இப்பொழுதும் அவர்களுடைய கழுத்தில் தாலி இல்லை.

ராகு காலம் மட்டுமல்ல - கொழுத்த ராகுகாலமாம்

எதற்காக இதை நான் சொல்கிறேன் என்றால், திருச்சி பெரியார் மாளிகையில், ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு எங்களுடைய மணவிழா நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணி என்றால், நிறைய பேர் என்ன சொல்வார்கள் தெரியுமா? அய்யா அந்த நேரமா? அந்த நேரம் ராகு காலம் மட்டுமல்ல - கொழுத்த ராகுகாலம் ஆயிற்றே என்பார்கள்.

ராகு காலத்தில் இளைத்த ராகுகாலம் - கொழுத்த ராகுகாலம் என்று இருக்கிறதாம்.

அந்த கொழுத்த ராகுகாலத்தில்தான், பெரியார் அவர்கள் மாலையை எடுத்துக் கொடுக்க, நாங்கள் மாலையை மாற்றிக் கொண்டோம்.

இதுவரை நாங்கள் மகிழ்ச்சியாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

என்னுடைய உடலில் கத்தி படாத இடமே இல்லை.  நிறைய அறுவை சிகிச்சை நடைபெற்று இருக்கிறது. மருத்துவமனைக்கு ஆனந்த் போன்றவர்கள் எல்லாம் வருவார்கள்.

எங்களை ராகுகாலம், எமகண்டம், கெட்ட நேரம் எல்லாம் ஒன்றும் செய்யவில்லை

எங்களை ராகுகாலம், எமகண்டம், கெட்ட நேரம் எல்லாம் ஒன்றும் செய்யவில்லை. காரணம், மனதில் இருக்கின்ற துணிச்சல்தான்.

மூளைக்கு விலங்கு போட்டிருப்பதை உடைக்க வேண்டும். ஆகவேதான் துணிந்தவர்களுக்குத் துக்கமில்லை - வருத்தமில்லை. ஆகவே, எல்லா நேரத்தையும் நாம் பயன்படுத்தவேண்டும். 

அடுத்ததாக மணமகளின் பெற்றோரான பாண்டி - பத்மா ஆகியோரைப் பாராட்டவேண்டும். மணமகள் யுவேதா அவர்கள் - ஆனந்த் அவர் களுடைய வாழ்க்கைத் துணைவியராக, இணை யராக வந்திருக்கக்கூடிய யுவேதா எம்.பி.பி.எஸ். படித்திருக்கிறார்.

நீட் தேர்வையெல்லாம் தாண்டி, மிகப்பெரிய அளவிற்கு டாக்டராக ஆகியிருக்கிறார். அவரை நாங்கள் எல்லாம் பாராட்டுகிறோம், வாழ்த்து கிறோம்.

அய்யா சண்முகம் சொன்னதுபோல, போக்கு வரத்துத் துறையில் பணியாற்றுபவர் பாண்டி அவர்கள். அவருடைய பெண்ணை எம்.பி.பி.எஸ். படிப்பு படிக்க வைத்திருக்கிறார்.

இந்த ஆட்சி இருந்ததினால்தான், ‘திராவிட மாடல்’ ஆட்சி இருந்ததினால்தான் இந்த வாய்ப்புகள் அமைந்தன. அதற்கு முன்பெல்லாம் இதுபோன்ற நிலை இல்லை.

நூறாண்டுகளுக்கு முன்பு, ‘திராவிட மாடல்’ ஆட்சி வருவதற்கு முன்பு, நம்முடைய பிள்ளைகள் டாக்டராக முடியாது.

டாக்டர் படிப்பு படிக்கவேண்டும் என்றால், சமஸ்கிருதம் தெரிந்திருக்கவேண்டும். சமஸ்கிருதம் தெரிந்திருந்தால்தான், மருத்துவப் படிப்பு படிப் பதற்கே மனு போட முடியும்.

அந்த முறையை நீதிக்கட்சி ஆட்சி, திராவிட ஆட்சி வந்தவுடன், பனகல் அரசர் முதலமைச்சராக இருந்த நேரத்தில், பெரியார் அவர்கள் சொல்லி, அந்த முறையை ரத்து செய்தார்.

அதனால்தான், மருத்துவக் கல்லூரிகளின் கதவுகள் நமக்கெல்லாம் திறந்திருக்கிறது.

(தொடரும்)


No comments:

Post a Comment