செஸ் விளையாட்டின் தலைநகரம் சென்னை தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 29, 2022

செஸ் விளையாட்டின் தலைநகரம் சென்னை தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை,ஜூலை 29- இந்தியாவில் செஸ் விளையாட்டுக்கான தலைநகரமாக சென்னை திகழ்கிறது என்று முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

சென்னையில் 28.7.2022 அன்று நடை பெற்ற 44ஆவது பன்னாட்டு செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது;

முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டியை இந்தியாவில் நடத்துவது எங்களுக்கு பெருமையான விஷயம். குறிப்பாக தமிழ்நாட்டுக்கு பெருமை. பிரதமர் மோடி செஸ்விளையாட்டில் அதிக ஆர்வம் உள்ளவர் என்பது எனக்கு தெரியும். குஜராத் முதல்வராக அவர் இருந்த போது மிகப்பெரிய செஸ் விளையாட்டு போட்டியை நடத்தினார். பூடான் மன்னர் குடும்பம் இந்தியா வந்த போது, அவர்களுக்கு செஸ் போர்டை பரிசாகவும் வழங்கினார். எனவே 44ஆவது செஸ் ஒலிம்பியாட்டை தொடங்கி வைக்க பிரதமர் தமிழ்நாடு வந்திருப்பது மிகவும் பொருத்தமானது.

இதுபோன்ற பன்னாட்டு விளை யாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு குறைந்தது 18 மாதங்கள் ஆகும். ஆனால் வெறும் 4 மாதங்களில் அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு சிறப்பாக செய்து முடித்துள்ளது. இதனை நான் பெருமையாகச் சொல்லிக் கொள்கிறேன். 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி என்பது உலக அளவில் தமிழ்நாட்டின் மீது கவனத்தை ஈர்க்கும் நிகழ்வாக அமைந்துள்ளது. இப்போட்டியின் மூலமாக தமிழ்நாட்டில் விளையாட்டு துறை மட்டும் அல்ல; சுற்றுலா துறையும், தொழில் துறையும் மிகப்பெரிய வளர்ச்சியை அடைய இருக்கிறது.

1961ஆம் ஆண்டு உலக செஸ்சாம் பியன் ஆன மேனுவல் ஆரோன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பது நமக்கு கிடைத்த பெருமை. இந்தி யாவின் செஸ் விளையாட்டை முன் னோக்கி நகர்த்தி பல்வேறு திறமையாளர்களுக்கு ஊக்கமளித்ததும் மேனுவல் ஆரோன் தான். 1972ஆம் ஆண்டு சென்னையில் சோவியத் கலாச்சார மய்யத்தில் செஸ் கிளப் ஒன்றை அவர் உருவாக்கினார். செஸ் விளையாட்டில் உலகப் புகழ் பெற்ற சோவியத் நாடே இவரது ஆலோச னையைப் பின்பற்றி தான் செயல்பட்டது.

உலக கிராண்ட் மாஸ்டரான, புகழ்பெற்ற விஸ்வநாதன் ஆனந்த் 1988ஆம் ஆண்டு தனது 19ஆவது வயதில் உலகப் புகழை பெற்றவர். இன்றும் அவர் செஸ் போட்டியில் வலிமையான வீரராக விளங்கிக் கொண்டிருக்கிறார். 2001ஆம் ஆண்டு பெண் கிராண்ட் மாஸ்டராக பட்டம் வென்றவர் விஜயலட்சுமி சுப்ப ராமன். 2018ஆம் ஆண்டு மிக இளம் வயதில் கிராண்ட்மாஸ்டராக உயர்ந் தவர் பிரக்ஞானந்தா. இந்தியாவில் 73 கிராண்ட் மாஸ்டர்கள் உள்ளனர். அவர் களில் 26 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்த வர்கள். அதாவது இந்தியாவில் உள்ள கிராண்ட் மாஸ்டர்களில் 36 சதவீதம் பேர் தமிழ் நாட்டில்தான் உள்ளனர். இந்தியாவில் செஸ் விளையாட்டுக்கான தலை நகரமாக சென்னை விளங்குகிறது.

இந்த செஸ் ஒலிம்பியாட் போட் டியை நடத்துவதற்காக தமிழ்நாடு அரசு ரூ.102 கோடியை ஒதுக்கியுள்ளது. பள்ளி மாணவர்கள் மத்தியில் செஸ் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ரூ.1 கோடியை பள்ளிகல்வித் துறை ஒதுக்கீடு செய்துள்ளது. இத்தகைய பன்னாட்டு போட்டிகளை நடத்துவதற்கான இன் னும் பல வாய்ப்புகளை தமிழ்நாட்டுக்கு பிரதமர் தொடர்ந்து தர வேண்டும்.

கீழடி அகழாய்வு மூலம், பல்லாயிரம் ஆண்டு பழமையை கொண்டது தமிழி னம் என்பது உறுதியாகியிருக்கிறது. கீழடியில் ஏராளமான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அங்கு தந்தத்தினால் ஆன 2 வகையான ஆட்ட காய்கள் கிடைத்துள்ளன. இவ்வகையான பொருட்கள் சதுரங்கம் போன்ற விளை யாட்டுகளை விளையாட பயன்படுத்தப் பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். பல்லாயிரம் ஆண்டு களுக்கு முன்பிருந்தே சதுரங்க விளை யாட்டுக்கும் தமிழ்நாட்டுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இந்த விளை யாட்டை இந்தியாவில் மேலும் பரவச் செய்ய இந்த ஒலிம்பியாட் போட்டி பெரும் உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இன்றைய மாணவ சமுதாயத்துக்கு கல்வியோடு விளையாட்டையும் சேர்த்து அளிக்கவேண்டும். அதிலும் அறிவுத் திறனை பெருக்கும் சதுரங்கத்தின் பங்கும் இடம் பெறவேண்டும். அதற்கு இந்த செஸ் ஒலிம்பியாட் சிறப்பான தொடக்கப் புள்ளியாக அமையும்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.


No comments:

Post a Comment