நாடாளுமன்றமும் கண்ணியக் குறைவான சொற்களும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 15, 2022

நாடாளுமன்றமும் கண்ணியக் குறைவான சொற்களும்!

நாடாளுமன்றத்தில் இனிமேல், இதுபோன்ற தரக்குறைவான கண்ணியமற்ற வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது என்று அறிவித்துள்ள மக்களவை செயலகம் , அந்த வார்த்தைகள் குறித்த பட்டியலையும் வெளியிட்டுள்ளது.

2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் மக்களவை விவாதத்தின் போது, பப்பு, பேகு, மாமு அல்லது பந்ததார் போன்ற‘இழிவான வார்த்தைகளை’ பயன்படுத்தக்கூடாது என்றும், உறுப்பினர் களின் கண்ணியத்தைத்தவிர, சபையின் அலங்காரத்தையும் நாம் பராமரிக்க வேண்டும் என்று அவைத் தலைவர் கூறியதுடன், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 105(2) பிரிவின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர்களால் பயன்படுத்த முடியாத வார்த்தைகளின் பட்டியலைத் தயாரித்து வருவதாகவும் கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தற்போது நாடாளுமன்றத்தில் பயன் படுத்தக்கூடாத வார்த்தைகள் என்ற புத்தகம் வெளியிடப் பட்டுள்ளது; நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18ஆம் தேதி தொடங்கி ஆகஸ்டு 12ஆம் தேதி வரை நடைபெறும் என நாடாளுமன்ற செயலகம் அறிவித்து உள்ளது. இந்த தொடரில் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற ஒன்றிய பாஜக அரசு திட்டமிட்டு உள்ளது. இந்த தொடரில் பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன. இந்த நிலையில், நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்களவையிலும் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது.

அதில் ஆங்கில வார்த்தைகளும், இந்தி வார்த்தைகளும் அதிக அளவில் இடம்பெற்றுள்ளன. வெட்கக்கேடு, திட்டினார், துரோகம் செய்தார், ஊழல், ஒட்டுக் கேட்பு, கரோனா பரப்புபவர், வாய்ஜாலம் காட்டுபவர், நாடகம், கபட நாடகம், திறமையற்றவர், அராஜகவாதி, சகுனி, சர்வாதிகாரம், சர்வாதிகாரி, அழிவு சக்தி, காலிஸ்தானி கோட்சே முதலிய வார்த்தைகள் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகளாக சேர்க்கப்பட்டுள்ளன.

மேலும், இரட்டை வேடம், பயனற்றது, நாடகம், ரத்தக்களரி, குரூரமானவர், ஏமாற்றினார், குழந்தைத்தனம், கோழை, கிரிமினல், முதலைக் கண்ணீர், அவமானம், கழுதை, கண் துடைப்பு, ரவுடித்தனம், போலித்தனம், தவறாக வழிநடத்துதல், பொய், உண்மையல்ல, முட்டாள்தனம், பாலியல் தொல்லை, குண்டர்கள், லாலிபாப், பாப்கட் ஆகிய வார்த்தைகளும் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் பட்டியலில் இடம் பெற் றுள்ளன. மேலும், ‘Jumlajeevi’ மக்களை ஏமாற்றுபவர், ‘Taanashah’ சர்வாதிகாரி, ‘Nautanki’ நாடகமாடுகிறார் உள்பட ஏராளமான வார்த்தைகள் அந்த புத்தகத்தில் இடம் பெற் றுள்ளனவாம்.

இதுபோன்ற வார்த்தைகளை உறுப்பினர்கள் பயன்படுத் தினால், அந்த வார்த்தைகள் அவைத் தலைவரால் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மக்களவை செயலகம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. இவை அனைத்துமே ஒன்றிய அரசின் ஆட்சியாளர்களின் மோசடித்தனத்தை எடுத்துக்காட்ட பயன்படும் சொற்கள் ஆகும். ஆனால் இனி இந்தச் சொற்களைப் பயன்படுத்தக் கூடாது என்பதன் மூலம் இனி மோடி - அமித்ஷா இருவரின் புகழ் பாட மட்டுமேவா நாடாளுமன்றம் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதில் சில வார்த்தைகள் தவிர்க்கப்பட வேண்டியவை என்று கூட எடுத்துக் கொள்ளலாம். பிரச்சினை என்ன வென்றால் இதில் இடம் பெற்றுள்ள பெரும்பாலான சொல் லாடலுக்கு முற்றிலும் உரியவர்களாக, பொருத்தமானவர்களாக ஆளும் தரப்பில் உள்ளனர் என்பதுதான். 

கோட்சே என்ற வார்த்தையை ஏன் பயன்படுத்தக் கூடாதாம்? காரணம் காந்தியாரைக் கொன்ற மகாராட்டிர பார்ப்பனராயிற்றே!

அந்த அளவுக்கு மதவாதம், ஜாதியவாதம், சர்வாதிக்காரம், பாசிசம் என்று பிற்போக்குத்தனத்தின் மொத்த குத்தகைக் காரர்களாக ஆளும் தரப்பினர் உள்ளனர் என்பதுதான்.

நான் பூண்டு, வெங்காயம் சாப்பிடாத பாரம்பரியத்தைச் சேர்ந்தவள் என்று நிதி அமைச்சர் நாடாளுமன்றத்தில் பேசினாரே, அதன் பொருள் என்ன? இனவாதம் - அதன் அர்த்தமற்ற பெருமை தொக்கி நிற்கவில்லையா?

உண்மையைச் சொல்லப் போனால் சிறுபிள்ளைத் தனமான ஏற்பாடு இது! ஓ, சிறுபிள்ளைத்தனம் என்பதுகூட நாடாளுமன்ற மரபுக்கு  (Un Parliamentary) விரோதமானதோ! நாடு தாங்காது.


No comments:

Post a Comment