இந்திய அரசமைப்புச் சட்டம் கூறும், சமூகநீதி - மதச்சார்பின்மை உள்ளிட்டவற்றைக் காப்பாற்றும் கடமை முக்கியம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 25, 2022

இந்திய அரசமைப்புச் சட்டம் கூறும், சமூகநீதி - மதச்சார்பின்மை உள்ளிட்டவற்றைக் காப்பாற்றும் கடமை முக்கியம்!

 * ஒடுக்கப்பட்ட (பழங்குடி) சமுதாயத்திலிருந்து முதல் பெண் குடியரசுத் தலைவர் -  பாராட்டுகிறோம், வாழ்த்துகிறோம்!    

*சனாதனம் வீழ்ந்தது - மாற்றம் என்பதே காலத்தின் கட்டாயம்!


ஒடுக்கப்பட்ட (பழங்குடி) சமூகத்தில் பிறந்த முதல் பெண் குடியரசுத் தலைவராக முதன் முதலாக வந்திருப்பதற்கு வாழ்த்துத் தெரிவித்தும், அதேநேரத்தில் அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள, சமூகநீதி, மதச்சார்பின்மை, ஜனநாயக மாண்புகளுக்கு ஊறு ஏற்படாமல் கட்டிக் காக்கவேண்டும் என்பதை வலியுறுத்தியும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

இந்தியாவின் 15 ஆவது குடியரசுத் தலைவராக மேதகு திரவுபதி முர்மு அவர்கள், இன்று (25.7.2022) காலை பதவியேற்றிருப்பது, இந்திய வரலாற்றில் இது ஒரு திருப்பம்.

தடைகள் பல கடந்து, ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து முதல் குடியரசுத் தலைவராக வந்துள்ள முதல் பெண்ணைப் பாராட்டி மகிழ்கிறோம்!

பழங்குடி வகுப்பில் பிறந்து, பல்வேறு துன்பங்கள், இடர்ப்பாடுகள்  இவற்றையெல்லாம் தாண்டி, இவர் பல் வேறு பதவிகளை - ஆளுநர் உள்பட பார்த்த நிறைந்த அனுபவத்தோடு ‘‘நாட்டின் முதல் குடிமகள்'' என்ற பெருமையான பதவிக்கு வந்திருப்பது, சமூகநீதியாளர்கள் அனைவரையும் மகிழ வைப்பதாகும் - அவருக்கு நமது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!

தொடக்கத்தில் இவரது தேர்வும், வேட்பு மனுவும் ஒரு அரசியல் யுக்தியினால் ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. வினால் திட்டமிட்டு களம் இறக்கப்பட்ட ஒன்று என்ற போதிலும்கூட, 5 ஆண்டுகால பதவி வகிக்கும் அவர் அப்பெரும் பதவியின் மாண்பு, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் தத்துவங்களையும், மதிப்பீடுகளையும், விழு மியங்களையும் காப்பாற்றுவது என்று அவர், பதவியேற் பின்போது எடுத்துள்ள உறுதிமொழியைக் காப்பாற்றி, எப்பொழுதும் அரசமைப்புச் சட்டத்தின் முக்கிய இலக் குகளான ‘‘இறையாண்மைமிக்க, சமதர்ம, மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசின்'' தத்துவங்களுக்கு ஊறுநேராத வண்ணம் தக்க விழிப்புடனும், விவேகத்துடனும் கடமையாற்றி, வரலாற்றில் சமூகநீதி பங்களிப்பில் ஒரு தனி முத்திரை பதிக்கத் தயங்கக்கூடாது என்பதே நாட்டு மக்களின் மிகுந்த எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் ஆகும்!

தேர்தலுக்குமுன் அவர் ஒரு அணியின் வேட்பாள ராகவே பார்க்கப்பட்டார்.

சனாதனம் பேசுவோர் கற்கவேண்டிய பாடம்!

தேர்தல் முடிவு - அமோக வெற்றிக்குப் பின், அவர் அனைவருக்கும் பெருமைமிக்க மேதகு மாண்பமை குடியரசுத் தலைவர் - நாட்டின் தனிச் சிறப்புப் பெற்ற முதல் குடிமகள் - இந்தியாவின் முப்படைகளின் முதன்மையான தனிப்பெரும் தளபதி - (அரசமைப்புச் சட்டப்படி)யாவார் என்றே பார்க்கப் படுகிறார்!

இப்படி ஒரு பெண், முதன்மை இடத்தைப் பெற்றிருப் பதன்மூலம், சனாதனம் பேசுவோர் கற்கவேண்டிய சில முக்கிய பாடங்களும் உண்டு.

பெண் - ஆணுக்கு நிகரானவர்!

பெண்ணும் ஆணுக்குச் சமமான தகுதியும், திறமை யும்,  ஆற்றலும் பெற்றவர்; அவர்களைப் புறக்கணித்து வீட்டுக்குள்ளே பெண்களைப் பூட்டி வைக்கச் சொன்ன செல்லரித்த பழைய வர்ண மத  சனாதனங்களுக்கு இது மரண அடி! கால மாறுதல் என்ற வெள்ளத்தின் - வேகத்தின் முன் என்னதான் காவிகள் சனாதன  சத்சங் தத்துவார்த்த பிரச்சாரம் - மாறாதது என்று ஓங்காரக் கூச்சலிட்டாலும், ‘மாறும், மாறும், மாறியே தீரும்' என்ற பகுத்தறிவு வளர்ச்சித் தத்துவம்தான் இறுதியில் வெற்றியடையும் என்பதன் முழுமுதற் பொருளாக நாட்டின் தலைவரே - அதுவும் ஒரு ஒடுக்கப்பட்ட சமுதாயப் பெண்மணி - தன்னை முழுத் தகுதியாக்கி யுள்ளார் என்பது ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

'சதி மாதா கோவில்' கட்டடம் - சனாதனம் வீழ்ந்தது!

சுமார் 150 ஆண்டுகளுக்குமுன் எந்தப் பெண் சமுதாயத்திற்கு ‘சதி மாதாக் கோவில்' கட்டிய சனாதனம் மாற்றப்பட்டு, இன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் அவர்களே அழைத்து அவர்களை அமர வைக்கும் திருப்பம் ஏற்பட்டிருக்கிறது!

இதில் தத்துவ ரீதியான வெற்றி யாருக்கு என்பதை உலகம் எண்ணிப் பார்த்து புரிந்துகொள்ளும் என்று நினைக்கிறோம். அரசியல் ரீதியாகவே அவருக்குப் போட்டி இருந்ததே தவிர, அது சமூகநீதிக் கண்ணோட்டத்தில் அல்ல - அந்தப் போட்டி என்பது எவருக்கும் விளங்கும்!

அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள சமூகநீதி, மதச்சார்பின்மை ஆகியவற்றைக் கட்டிக் காப்பாற்றிடவேண்டும்!

நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் அவர் குடியரசுத் தலைவர் என்பதால், அவர் அரசமைப்புச் சட்ட நெறிமுறைகளுக்கேற்ப தனது சீரிய கடமைகளை ஆற்றி, சிறந்த முறையில் முத்திரைப் பதிக்கவேண்டும் என்ற விழைவை திராவிட மண் - சமூகநீதி மண் - எப்போதும் ஜனநாயகம் காக்கும் பாசறையான தமிழ்நாடு அவரை வாழ்த்தி மகிழ்கிறது!

குடியரசுத் தலைவர் மாளிகையில் தொடங்கி, எங்கெங்கும் சமூகநீதி கலந்த பாலியல் நீதியும்  (Gender Justice Combined with Social Justice) மதச்சார்பின்மை, ஜனநாயக மாண்பு மனித உரிமைகளும், சமத்துவ சம வாய்ப்புகளும் பாதுகாக்கப்பட அவரது ஆளுமை ஒரு தடுப்பூசி போன்று பாதுகாப்பாக அமையட்டும்!

வாழ்த்துகள்! வாழ்த்துகள்!!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

25.7.2022


No comments:

Post a Comment