அரியலூர் இளைஞரணி மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 30, 2022

அரியலூர் இளைஞரணி மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!

 *    ‘விடுதலை’ சந்தா இலக்கை எட்டுவீர்!  நாடெங்கும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறைகள் நடக்கட்டும்!

* தமிழ்நாட்டில் வட மாநிலத்தவர் ஆதிக்கம் ஆபத்தானது!

* உடற்கொடை, குருதிக்கொடை, விதவைத் திருமணம், ஜாதி மறுப்புத் திருமணம் புரிவீர்!

மதவாத ஒன்றிய அரசை அகற்ற ஓரணியில் சேர்வீர்!

ஒரே மதம் என்போர், ஒரே ஜாதி என்று சொல்லட்டுமே!!

‘நீட்’, ‘கியூட்’ தேர்வுகளை நீக்குக!



அரியலூர், ஜூலை 30 திராவிடர் கழக இளைஞரணி செயல்பாடுகள், சமூகநீதி, மதவாத அரசு எதிர்ப்பு, ஜாதி ஒழிப்பு, ‘விடுதலை’ சந்தா சேர்ப்பு, ‘நீட்’, ‘கியூட்’, தேசிய கல்வி எதிர்ப்பு உள்ளிட்டவை குறித்த 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்கள் வருமாறு:

தீர்மானம் எண் 1:

விடுதலை சந்தா சேர்ப்பு

நீதிக்கட்சியால் தொடங்கப்பட்டு, தந்தை பெரியாரால் நாளேடாக நிறுவப்பட்ட, தமிழர்களின் மூச்சுக்காற்றாம் ‘விடுதலை’ நாளேட்டின் ஆசிரியராக கடந்த 60 ஆண்டுகள் அரும்பணியாற்றி, எண்ணற்ற இடையூறுகளுக்கும், இன்னல்களுக்கும், இழப்புகளுக்கும், தடைகளுக்கும் மத்தியில், கரோனா நோய்த் தொற்றுக் காலத்திலும் எவ்வித தொய்வும் இன்றி, வீறுநடை போடவைத்துக் கொண்டிருக்கும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பெரும்பணிக்கு இம்மாநாடு தன் செம்மாந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

‘விடுதலை’ ஆசிரியராக 60 ஆண்டுகள் என்பதைத் தனிப்பட்ட சிறப்பாகக் கருதாமல், அதையும் ‘விடுதலை’யின் வளர்ச்சிக்கும், அதன் மூலம் தமிழர் தம் உரிமைக் குரல் சென்று தீர - வென்று வரவேண்டும் என்னும் நோக்கோடு செயலாற்றும் நம் உயிரனைய தலைவராம் ஆசிரியருக்கு 60,000 ‘விடுதலை’ சந்தாக்களைத் திரட்டித் தரும் பணியை விரைந்து முடித்திடவும், இளைஞர்களுக்கு அறிவூட்ட ‘விடுதலை’யை வீடுதோறும் கொண்டுபோய்ச் சேர்த்திடவும் தொடர்ந்து செயலாற்றுவது என்று திராவிடர் கழக இளைஞரணி உறுதியெடுத்துக் கொள்கிறது.

தீர்மானம் எண் 2:

பெரியார் 1000 வினா - விடை

பள்ளி மாணவர்கள் மத்தியில் தந்தை பெரியாரை மிகப்பெரிய அளவில் அறிமுகப் படுத்தி, பகுத்தறிவு - இன உணர்வூட்டிய “பெரியார் 1000 வினா-விடைப் போட்டி”யை வரும் ஆகஸ்ட் 19, 20, 21 ஆகிய மூன்று நாட்கள் தமிழ்நாடு, புதுச்சேரி இரண்டு மாநிலங்களிலும் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின்) பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் நடத்திட உள்ளது. தமிழ்நாடு அரசின் கல்வித்துறையும் அனுமதி அளித்துள்ளது. அதில், பல லட்சம் மாணவர்களைப் பங்கேற்கச் செய்திடமுழு வீச்சில் செயலாற்றுவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் எண் 3:

கல்வியும் -  மாநில உரிமையும்

மாணவர்களின் கல்வி உரிமையை மோசமாகப் பாதிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள தேசியக் கல்விக் கொள்கையை மறைமுகமாகப் புகுத்துவதற்கு ஒன்றிய அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு இம்மாநாடு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. கல்வியில் தனியார் மயத்தைத் திணிப்பது, ஒன்றிய அரசின் அளவிறந்த தலையீடுகள், இந்துத்துவ நோக்கில் வரலாற்றை மாற்றி எழுதுதல் என்னும் முனைப்போடு வரலாற்றுத் திரிபில் ஈடுபடும் செயல்பாடுகள், ‘நீட்’,  ‘கியூட்’ தேர்வுகளில் தொடர்ந்து,  மாநில உரிமைப் பறிப்பு என்று செயல்பட்டுவரும் ஒன்றிய அரசின் கல்விச் சிதைப்பு, சமூகநீதி ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக மாணவர்களும், இளைஞர்களும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது. தமிழர் தலைவரின் கட்டளையை ஏற்று போராட்டக் களம் காண திராவிடர் கழக இளைஞரணி சித்தமாக இருக்கிறது என்பதை இம்மாநாடு உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் எண் 4:

ஆளுநரைத் திரும்பப் பெறுக!

தேசியக் கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்ற தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை அறிந்திருந்தும், பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மேடைகளை தேசியக் கல்விக் கொள்கைக்கான பிரச்சார மேடையாகப் பயன்படுத்திக் கொள்வதோடு, சனாதனத்துக்குச் சிம்மாசனம் தரும் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடும் தமிழ்நாடு ஆளுநருக்கு இக் கூட்டம் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. ஆளுநரின் இத்தகைய நடவடிக்கைகள் தமிழ்நாட்டின் அமைதிச் சூழலைக் குலைக்கும் நோக்கம் கொண்டது என்று இம்மாநாடு குற்றம் சாட்டுகிறது. துணைவேந்தர்கள் நியமனத்திலும் மாநில அரசைக் கலக்காமல் தன்னிச்சையாகவே செயல்படுகிறார். இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கடமைகளுக்கும், நெறிமுறைகளுக்கும் மாறாகச் செயல்படுவதோடு, அதன் அடிப்படைக் கட்டமைப்புகளில் முதன்மையானதான மதச்சார்பின்மைக்கு எதிராகச் செயலாற்றும் தமிழ்நாடு ஆளுநரை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் எண் 5:

பிரச்சாரப் பணியில் இளைஞர்கள்

சமூக ஊடகங்களில் தந்தை பெரியார் கருத்துகளையும், இயக்கச் செயல்பாடுகளையும் பதிவு செய்வதைப் பிரச்சாரத்திற்கான பெருவாய்ப்பாகக் கருதி, கழக இளைஞரணி செயல்படுவது என்றும், கழகத்தின் பிரச்சாரப் பணிக்கு பேச்சு, எழுத்து, கலைத் துறை, மந்திரமா-தந்திரமா உள்ளிட்ட மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரம், மின்னணு ஊடகம் என அனைத்துத் துறைகளிலும் இளைஞர்களுக்கான பயிற்சிப் பட்டறைகள் மூலம் பிரச்சாரப் பெரும்படையை உருவாக்குவது என்றும் தீர்மானிக்கப்படுகிறது. 

தீர்மானம் எண் 6:

மதவாத சக்திகள் மீதான 

நடவடிக்கைகளை விரைவுபடுத்துக!

உண்மைக்கு மாறான தகவல்களையும், புரட்டுகளையும் தொடர்ந்து பரவவிட்டு, சமூகப் பதட்டத்தை உருவாக்கிடும் இந்துத்துவ கும்பலையும், அதற்குத் துணை புரியும் ஊடகங்களையும் முறையாக சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்த வேண்டும் என்று இம்மாநாடு தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறது.

பள்ளி-கல்லூரிகளிலும், பொது இடங்களிலும் ஷாகா, யோகா என்ற பெயர்களில் ஊடுருவ நினைக்கும் ஆர்.எஸ்.எஸ்., ஏ.பி.வி.பி. போன்ற மதவெறி அமைப்புகளுக்கும், பல்வேறு பெயர்களில் இயங்கும் அதன் மறைமுக அமைப்புகளுக்கும் இடம் தந்துவிடாமல் இவர்களின் நடவடிக்கை உளவுத்துறை மூலம் கண்காணிக்கப்படவேண்டும்.

தமிழ்நாடு இதுவரை காணாத வகையில் வன்முறைக்கான திட்டமிடல்களிலும், அதற்கான முனைப்புகளிலும் சமூக ஊடகத்தின் பங்கை அண்மைக்காலத்தில் கண்கூடாகக் கண்டிருக்கிறோம். ஜாதி, மத வெறியைக் கூர்தீட்டிட முயலும் பாசிசச் சக்திகளை எவ்விதத் தயக்கமுமின்றி முளையிலேயே கெல்லி எறிய வேண்டியது தமிழ்நாடு அமைதிப் பூங்காவாகத் திகழ மேற்கொள்ளப்படவேண்டிய அவசர அவசிய நடவடிக்கை என்பதையும் இம் மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 7:

மாணவர் நலன்

கல்வி நிலையங்களில் மாணவர்கள் - ஆசிரியர்கள் உறவிலும், பள்ளிகளின் அன்றாட நிகழ்வுகளிலும் உளவியல் சிக்கல்கள் எழுவதையும் கவனத்தில் கொண்டு, மாணவர்களுக்கு உரிய உளவியல் ஆலோசனைகள் வழங்கி நெறிப்படுத்தவும், அதற்குத் தேவையான பயிற்சியையும், விளையாட்டு, கலை நிகழ்வுகள், தனித்திறன் போட்டிகள் மூலம் அவர்களின் பல்துறைத் திறமைகளை வெளிக்கொண்டு வரும் முயற்சிகள் மூலமும் இந்நிலை சரியாக்கப்படவேண்டும் என்றும் இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது. இத் திசையில் தமிழ்நாடு அரசின் தொடர் செயல்பாடுகளை இம் மாநாடு நம்பிக்கையோடு எதிர் நோக்குகிறது

பள்ளி-கல்லூரி மாணவர்கள் எவ்வித போதைப் பழக்கங்களுக்கும் ஆளாகிவிடாமல் அவர்களை நெறிப்படுத்துவதும், தன்னம்பிக்கை குறைவிலோ, அநீதியை எதிர்க்கத் துணி வில்லாமலோ தவறான முடிவுகளை மேற்கொண்டுவிடாமல் காக்க வேண்டியது அவசியம் என்பதையும், அதற்கான பணிகளில் அறிவியல் சிந்தனையோடு கூடிய அமைப்புகளையும், உளவியலாளர்களையும் ஈடுபடுத்திட வேண்டும் என்றும் இம்மாநாடு தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறது. மாணவர்கள் மத்தியில் ஜாதீய உணர்வை வளர்க்கும் வகையில் ஜாதியை அடையாளப்படுத்தும் வகையில் தனித்தனி வண்ணக் கயிறுகளைக் கட்டி வருவதைக் கண்டிப்பாக தடை செய்ய வேண்டும் என்றும் இம்மாநாடு தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் எண் 8:

நடைபாதைக் கோயில்களை அகற்றுக!

உச்சநீதிமன்றத்தாலும், உயர்நீதிமன்றங்களாலும், பல முறை கண்டிக்கப்பட்டும் கூட நடைபாதைக் கோயில்கள் இன்னும் நிறைய தோன்றுவதும், சிறிய பொம்மைகள் வைக்கப்பட்ட இடங்களில் அவை விரிவாக்கப்பட்டு கோயில்களாக உருவாவதும், அரசுக் கல்வி நிலையங்களிலும், பல்கலைக்கழக வளாகங்களிலும் கோயில்கள் கட்டப்பட முயற்சிகள் எடுக்கப்படுவதும் தடுக்கப்பட வேண்டும். நடைபாதைகளில் கடவுள் பொம்மைகளை வைத்து, அவற்றை வழிபாட்டிடங்களாக மாற்றி, மெல்ல மெல்ல மதவெறியாளர்கள் அப் பகுதிகளை ஆக்கிரமிப்பதும், பொது அமைதிக்கு ஆபத்தான சூழலை உருவாக்க முயற்சிப்பதும் கடந்து செல்லக் கூடியவையல்ல. அவற்றை சட்டரீதியாகத் தடுத்திட இருக்கும் வாய்ப்புகளை அரசு பயன்படுத்தி, உடனடியாக நடவடிக்கை எடுத்தல் அவசியம் என்றும், அரசு நிகழ்ச்சிகளில் மதச்சார்புடைய நிகழ்ச்சிகளைத் தவிர்த்து, ‘திராவிட மாடல்’ ஆட்சியின் மதச்சார்பின்மை  அடையாளத்தைப் பேண வேண்டும் என்றும் இம் மாநாடு வலியுறுத்துகிறது. 

தீர்மானம் எண் 9: 

வடமாநிலத்தவரின் ஆதிக்கம்  

தமிழ்நாட்டில் இயங்கும் ஒன்றிய அரசின் பொதுத்துறைகளின் வேலைவாய்ப்புகளில் சட்ட விரோதமாக வட மாநிலத்தவர்கள் பணி நியமனம் செய்யப்படுவதை கண் கூடாகப் பார்க்க முடிகிறது. வங்கிகளில் தமிழ் தேர்வு அவசியமில்லை என்பதும், வங்கிச் செயல்பாடுகளில் தமிழைத் தவிர்த்துவிட்டு முழுக்க முழுக்க இந்தி, ஆங்கிலம் என்னும் இருமொழிகளைக் கொண்டுவருவதற்கு அச்சாரமாக இந்தப் போக்கு இருப்பதையும் காண முடிகிறது. இந்த நிலை தொடர்வதைத் தடுத்து நிறுத்திட வேண்டும் என்பதுடன், தமிழ்நாடு அரசின் பணி வாய்ப்புகளிலும் சட்டத்தின் சந்துபொந்துகளைப் பயன்படுத்தி, வடநாட்டவர் ஆக்கிரமிப்புத் தொடர்வதை (எ.கா: பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள்) மிகுந்த எச்சரிக்கையுடன் இம்மாநாடு சுட்டிக் காட்டுகிறது. தமிழ்நாட்டு வேலைவாய்ப்பு தமிழர்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் முக்கியத்துவம் வாய்ந்த முன்னெடுப்பை விரைவுபடுத்திடவேண்டும் என்றும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் எண் 10:

பெரியாரியல் பயிற்சிப் பட்டறை

மண்டலத்திற்கு ஓர் இடத்தில் சனி, ஞாயிறு ஆகிய இருநாள்கள் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையை நடத்துவது எனவும், பெருவாரியான இளைஞர்கள், மாணவர்களை ஒருங்கிணைத்து  பயிற்சிப் பட்டறையில் பங்கேற்கச் செய்வது எனவும் தீர்மானிக்கப்படுகிறது. இதனை ஒரு முக்கிய திட்டமாகக் கருத வேண்டும் என்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 11:

பெரியார் சமூகக் காப்பு அணி 

பெரியார் சமூகக் காப்பு அணி பயிற்சி முகாம்களை பரவலாக முக்கியப் பகுதிகளில் நடத்துவது, எந்த நேரத்திலும் எதற்கும் தொண்டாற்ற தயாராகவுள்ள உடல் வலிவும், உள்ள உறுதியும் கொண்ட இளைஞர்களை மாவட்டத்திற்கு 15 நபர்கள் என்று தேர்வு செய்து, பெரியார் சமூகக் காப்பு அணி பயிற்சி முகாமில் பயிற்சி பெறச்செய்வது, பேரிடர் காலங்களில் மக்களுக்கு முன்னின்று உதவும் வகையில்  பணியாற்றுவது என்று திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை செயல்படுத்த முழுவீச்சில் உழைப்பதென்று தீர்மானிக்கப்படுகிறது. 

தீர்மானம் எண் 12:

பெரியார் வீர விளையாட்டுக் கழகம்

தமிழர்களின் பண்பாட்டுக் கலையான சிலம்பம், சடுகுடு, உடல்வலிவை மேம்படுத்தும் தற்காப்புக் கலைகளைப் பயிற்றுவிக்கும் பெரியார் வீரவிளையாட்டுக் கழகத்தின் கிளைகளை தமிழ்நாடு தோறும் உருவாக்கி, அதற்கான போட்டிகள் மூலம் இருபால் இளைஞர்களையும் ஊக்கப்படுத்திடுவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் எண் 13:

கழக இளைஞரணியை வலுப்படுத்துதல்

திராவிடர் கழக இளைஞரணி, மாநில, மண்டல, மாவட்டப் பொறுப்பாளர்கள் தங்கள் பொறுப்புக்கு உட்பட்ட பகுதிகளில் ஊர்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, கலந்துரையாடல் கூட்டங்களை நடத்தி, கிராமக் கிளை, ஒன்றிய அமைப்பு, நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் வட்டக் கழக வாரியாக இளைஞரணி அமைப்புகளை உருவாக்குவது.  இவ்வமைப்புகளுக்குப்  புதிய உறுப்பினர்களைச் சேர்த்து தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் கழக இளைஞரணி அமைப்பைப் பரவலாக வலுப்படுத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.  

தீர்மானம் எண் 14:

தெருமுனைக் கூட்டங்கள், 

கிராமப் பிரச்சாரம் 

தமிழ்நாட்டில் ஒன்றிய அரசு மற்றும் பலமுனைகளில் அவ்வப்போது எழும் பிரச்சினைகளை தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் ‘விடுதலை’ அறிக்கைகள், தலையங்கங்களைக் கொண்டு விளக்கியும், பகுத்தறிவுப் பிரச்சாரத் தெருமுனைக் கூட்டங்களையும் நடத்திடுவதை தொடர் பணியாக மேற்கொள்வது எனவும், கிராமப் பிரச்சாரத்தில் போதிய கவனம் செலுத்துவது எனவும் தீர்மானிக்கப்படுகிறது

தீர்மானம் எண் 15: 

உடற்கொடை - குருதிக் கொடை - 

உற்சாகம் காட்டுக!

உடற்கொடை - குருதிக் கொடை என்பவை தலை சிறந்த தொண்டறம் என்பதால் இவற்றிக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படுத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் எண் 16:

விதவைத் திருமணம் - ஜாதி மறுப்பு திருமணங்களுக்கு முன்னுரிமை

விதவைத் திருமணம், ஜாதி ஒழிப்புத் திருமணங்களை ஊக்கப்படுத்துவது என்றும், வாழ்வில் இவற்றைச் செயல்படுத்துவதில் முன்னுரிமை கொடுப்பது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் எண் 17: 

உயிருக்கு ஊறு விளைவிக்கும் பழக்கவழக்கங்களைத் தடை செய்க!

குழந்தை வரம் வேண்டி மண் சோறு சாப்பிடுவது, புனித நீர் என்று ஆறு, குளங்களில் நீரை குடிப்பது, தீர்த்தம் சாப்பிடுவது என்பவை ஆபத்தை விளைவிக்கும் செயல்பாடுகள் என்பதால் இவற்றைத் தடை செய்ய வேண்டும் என்று ஒன்றிய, மாநில  அரசுகளை இம்மாநாடு வலியுறுத்துகிறது. கோயில்களில் மத சம்பந்தப்பட்டவை என்பதற்காக உயிருக்கு ஆபத்தான இவற்றை அனுமதிக்க கூடாது; இந்திய அரசமைப்புச் சட்டம் 51-கி(லீ)  விஞ்ஞான மனப்பான்மையை வளர்ப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்பதற்கு எதிரான பழக்கத்தில் இருக்கும் மூடத்தன்மைகளைக் களைய வேண்டியது மக்கள் நல அரசுகளின் அடிப்படைக் கடமை என்பதையும் இம்மாநாடு நினைவூட்டுகிறது.

தீர்மானம் எண் 18:

சமூகநீதிப் பாதுகாப்புக் களம்

ஒன்றிய அரசின் உயர் அதிகாரப் பணியிடங்கள், செயலாளர்கள் மட்டத்தில் சமூகநீதிமுற்றிலும் புறக்கணிக்கப்பட்டிருப்பதோடு, ஒன்றிய அரசின் பிற பணி வாய்ப்புகளிலும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டின் படி நிரப்பப்படாமல் இருப்பதை புள்ளிவிவரங்கள் அம்பலப்படுத்துகின்றன. மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் உயர் கல்வி நிறுவனங்களிலும் இதே நிலைமை திட்டமிட்டு செயல்படுத்தப்படுகிறது. சமூகநீதிப் புறக்கணிப்பை ஒருபோதும் நாம் ஏற்க முடியாது என்பதோடு, கடினமாகப் படித்து அரசின் நிர்வாகத்துறையில் இடம்பெறப் போராடும் ஏராளமான இருபால் இளைஞர்களின் கனவுகளை நசுக்கும் இத்தகைய போக்கு கண்டிக்கப்படவேண்டியதும் ஆகும். இடஒதுக்கீட்டை விதிவிலக்கு இல்லாமல் அனைத்துத் துறைகளிலும் செயல்படுத்தவேண்டும் என்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தமிழ்நாடு அரசு நியமித்துள்ள சமூகநீதிக் கண்காணிப்புக் குழுவைப் போல, ஒன்றிய  அரசு அளவில் குழு நியமிக்கப்பட்டு, அதற்கு உரிய சட்ட அங்கீகாரமும், அதிகாரமும் வழங்கப்படவேண்டும் என்றும், இதுவரை இட ஒதுக்கீட்டின் படி நிரப்பப்பட வேண்டிய இடங்களில் பணி நியமனங்கள் செய்யப்படாமல் இருந்ததற்குக் காரணமாக இருந்தவர்கள்மீது சட்டப்படியான நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரத்தையும் உருவாக்க வேண்டியது அவசியமாகும். ஏட்டளவில் மட்டும் இட ஒதுக்கீடு என்ற ஏமாற்றுத்தனத்தை வடபுலத்து இளைஞர்கள் மத்தியிலும் அம்பலப்படுத்தி அவர்களின் உரிமைக் குரலையும் எழுப்பவேண்டியிருப்பதையும் இம்மாநாடு கவனத்தில் கொள்கிறது. சமூகநீதிப் பாதுகாப்புக்கான களத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வழிகாட்டுதலில் முனைப்புடன் செயலாற்றுவது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் எண் 19 (அ):

பிஜேபி தலைமையிலான அரசு

ஒன்றியத்தில் ஆட்சி பொறுப்பில் இருக்கும் பிஜேபி தலைமையிலான அரசு - அரசமைப்புச் சட்டத்திற்கு முற்றிலும் விரோதமாக ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்ற தன்மையில் சமூகநீதி, மதச்சார்பின்மை, சோசலிசம், ஜனநாயக கட்டமைப்பைச் சீர்குலைக்கும் வேலையில் அதிகாரத்தைப் பயன்படுத்தி செயல்பட்டுவருவதாலும் ஆட்சிக் கவிழ்ப்பு வேலையிலும் ஜனநாயகப் பண்புகளுக்கு விரோதமாக தொடர்ந்து ஈடுபட்டு வருவதாலும், வரும் மக்களவைத் தேர்தலில் இந்தப் பாசிச - மதவாத பிற்போக்கு ஜனநாயக விரோத அரசை அகற்றும் வகையில் மதச்சார்பின்மை, சமூகநீதியில், நம்பிக்கையுள்ள சக்திகள், கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று முற்போக்குச் சக்திகளை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 19 (ஆ):

ஒரே ஜாதி என்று கூறட்டும்!

ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்போர் ஒரே ஜாதி என்று கூற முன்வருவார்களா? என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் கூறி வரும் கருத்துப்பற்றி ஏன் சிந்திக்கவில்லை என்ற வினாவை நாடெங்கும் பரப்பி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்று இம்மாநாடு முடிவு செய்கிறது.


No comments:

Post a Comment