அறிவாசான் தந்த மகிழ்ச்சி அறுவடை மாசற்ற மறவாத கொள்கை உறவு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 8, 2022

அறிவாசான் தந்த மகிழ்ச்சி அறுவடை மாசற்ற மறவாத கொள்கை உறவு!

கி.வீரமணி


தலைமையாசிரியர் மெ. அன்பரசு - ஆசிரியை  நவமணி ஆகியோருக்கு தமிழர் தலைவர்பொன்னாடை அணிவித்தார்.

திருச்சி பெரியார் மாளிகையிலிருந்து 7.7.2022 மாலை 4 மணிக்கு திருச்சி மாவட்டக் கழகத் தலைவர் ஆரோக்கியராஜ் அவர்களும், தோழர்களும் லால்குடி, அன்பில், பூண்டி வழியாக திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பழமானேரி கிராமத்திற்குச் சென்றோம்.

லால்குடியில் மாவட்டத் தலைவர் வால்டேர், மண்டல தலைவர் ஆல்பர்ட், செயலாளர் துறையூர் மணிவண்ணன் முதலியோர் வரவேற்று, பக்கத்து கிராமங்களில் நடைபெறும் இயக்கப் பணிகள் பற்றி மகிழ்ச்சியுடன் வேனில் உரையாடி மகிழ்ந்ததோடு, 'விடுதலை' 60 ஆயிரம் சந்தா சேர்ப்பு இயக்கம் எல்லா ஊர்களிலும் உற்சாகமாக நடைபெறுவதாகக் கூறியதோடு திராவிட மகளிர் பாசறைக் கூட்டங்களை பல கிராமங்களில் நடத்த ஏற்பாடு செய்து வருவதாகவும் மகிழ்ச்சியுடன் கூறினர்.

திருச்சினம்பூண்டி மாந்துறை (வயது 103) அவர்களுக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்தார்.

பழமானேரி கிராமத்தில் ஆசிரியர் பணி ஓய்வுக்குப் பின் அங்குள்ள நில புலன்களைப் பார்த்துக் கொண்டிருக்க அங்கேயே வீடு அமைத்துத் தங்கியுள்ள மேனாள் மாநில ப.க. தலைவர், ப.க. ஆசிரியரணி தலைவர், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர், மானமிகு அய்யா ஆரோக்கியசாமி என்ற இயற்பெயர் கொண்ட ஆசிரியர் மெ. அன்பரசு அவர்களையும் (93 வயது), அவரது வாழ்விணையரும், கழகத்தில் தீவிர ஈடுபாடு கொண்ட மேனாள் ஓய்வு பெற்ற ஆசிரியையுமான திருமதி நவமணி அம்மையார் (வயது 83) ஆகிய இருவரையும் சந்திக்க நானும் சில ஆண்டுகளாக விரும்பினேன்; அவர்களும் ஆவலோடு சந்திக்க விழைவைத்  தெரிவித்தனர். உடல் நிலை காரணமாக அவர்கள் வர இயலா மையைக் கேட்டு, நானே புறப்பட்டு அங்கு சென்றபோது, ஏராளமான கழகத் தோழர்கள், கருஞ்சட்டையுடன் எங்களை, வாழ்த்தொலி முழக்கமிட்டு வரவேற்றார்கள். இளைஞர்கள், சுற்று வட்டார கிராமங்களில்  உள்ள தோழர்கள், நமது இயக்க மகளிர் அமைப்பில் உழைத்த கலைவாணி அவர்களும், தாய்மார்களும் வரவேற்றதும் மகிழ்ச்சி அளித்தது!

படம் 1: கிராமப்புற இளைஞரணி தோழர்கள் தமிழர் தலைவரைச் சந்தித்து பயனாடை  அணிவித்தனர். 
படம் 2: தலைமையாசிரியர் 
மெ. அன்பரசு  அவர் இணையர்  ஆசிரியை  நவமணி ஆகியோர் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்தனர்.

இவற்றையெல்லாம் விட கருப்புச் சட்டையணிந்து ஒரு முதியவர் அமர்ந்தவாறு எனது இரு கைகளையும் பிடித்து மகிழ்ச்சியுடன் வாழ்த்தியபோது, "நீடாமங்கலம் மாநாட்டில் நீங்கள் சிறுவனாக இருந்தபோது உங்கள் பேச்சைக் கேட்டு, அய்யா, அண்ணா எல்லாம் அந்த மாநாட்டில் பேசியதைக் கேட்டு இயக்கத்தில் சேர்ந்தவன். உங்களது அந்நாள் பேச்சு 'பந்தலிலே பாவக்காய்' என்று பேசியது இன்றும் என் நினைவில் உள்ளது?" என்று எவ்விதத் தடுமாற்றமும் இல்லாமல் தொடர்ந்து பேசினார்! அவர் பெயர் திருச்சினம்பூண்டி மாந்துறை.

அவர் பக்கத்து ஊரான திருச்சினம்பூண்டி, கோவிலடி அருகே உள்ள ஊரைச் சேர்ந்தவர் என்று அவருடன் வந்த தோழர்கள் கூறினர்.

நான் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்தபோது கோடை விடுமுறையில் அவ்வூருக்கு எனது விடுதி - வகுப்புத் தோழர்களுடன் சென்று மூன்று நாள் தங்கி மகிழ்ந்த நிகழ்வை நினைவு கூர்ந்தனர்.

யாருடைய வீடு? நா.மு.வேங்கடசாமி நாட்டார் மகள் தமிழாசிரியர் சிவ.பார்வதி, அவரது கணவர் புலவர் சிவப்பிரகாச சேதிராயர் ஆகியவர்கள் வீடு; அவருடைய இளைய மகன் திருஞானசம்பந்தம் எனது வகுப்புத் தோழர், அன்புத் தோழராகவும் இருந்தவர். அவரது மூத்த சகோதரர்கள் திருநாவுக்கரசு, ஆலாலசுந்தரம் எங்களின் சமகால பல்கலைக் கழகப் படிப்பாளிகள் - தமிழ் ஆசிரியர்கள் அந்தக் குடும்பத்தினர். எனது நட்பு கண்டு மகிழ்ச்சியடைந்தேன். அதை நினைவூட்டி மகிழ்ந்தார்கள் நம் கோவிலடி ஊர் தோழர்கள்.

இந்த முதுபெரும் பெரியார் தொண்டரான கருஞ்சிறுத்தையின் வயது என்ன தெரியுமா? 103, தடுமாற்றமின்றி பேச்சு, நினைவு - வியப்பானது!

வயது 100 ஆண்டு (பொத்தனூர் க. சண்முகம் நூற்றாண்டு   விழா) விழாக் கொண்டாடிய 

4 நாள்களுக்குள் இப்பகுதியில் 103 வயதுடைய கருஞ்சட்டைப் போராளி.

என்னே கொள்கை! எப்படிப்பட்ட இயக்கம் - எளியவர்கள்  - கொள்கைப் பாசறைப் போராட்டத்திற்கு அஞ்சாதவர்கள்.

பழமானேரி கிராம மக்கள் மற்றும் தோழர்கள் புடைசூழ தமிழர் தலைவரை வரவேற்று ஒளிப்படம் எடுத்துக் கொண்டனர்.

எல்லோருடனும் மகிழ்ச்சியாக சுமார் 30 நிமிடம் உரையாடி - உறவாடி பிறகு  விடைபெற்று, அய்யா தந்த உறவின் பெருமையை அசை போட்டுக் கொண்டே வேனில் கல்லணை வழியே மீண்டும் பெரியார் மாளிகை வந்தடைந்தேன்!

அந்த மூத்தோரைப்பார்த்து நான் இளையோன் ஆகியது இலாபம்தானே! 

எதையும் எதிர்பாராது, எவ்வகை விளம்பரத்தையும் எதிர்பாராது - தொண்டற தலைமை ஆசிரியர் அன்பரசும் - அவரது வாழ்விணையர் அம்மா நவமணி அவர்களும் சேர்ந்து எத்தகைய மாணவ மணிகளை நம் இயக்க கொள்கை வரவுகளாக, உறவுகளாக அமைத்துள்ளனர் - எங்களைப் பார்த்ததால் அவர்கள் பேட்டரி ரீசார்ஜ் ஆயிற்று; எனது பேட்டரியும் ரீசார்ஜ் ஆனது. பெரியார் தந்த மகிழ்ச்சி அறுவடை செழித்தது!

துறையூர் மணிவண்ணன், கலைவாணி வீரமணி மற்றும் தோழர்கள் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்தனர்.



No comments:

Post a Comment