இந்து மதத்தின் சோதனைக் கூடமா உத்தரப்பிரதேசம்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 14, 2022

இந்து மதத்தின் சோதனைக் கூடமா உத்தரப்பிரதேசம்?

 டில்லி, உத்தரப் பிரதேசம், பீகார், ஜார்கண்ட், சத்தீஸ்கர், அரியானா, பஞ்சாப், இராஜஸ்தான் மற்றும் மத்தியப்பிரதேச மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் 'விரதம்' மேற்கொண்ட பின்னர், காவடி யாத்திரை என்ற கான்வர் யாத்திரை என காவடி ஏந்தி, தொலைதூரத்தில் உத்தராகாண்டில் உள்ள அரித்துவார், கங்கோத்திரி, கோமுகம், கேதார்நாத்,  மற்றும் உத்தரப் பிரதேசத்தில் உள்ள வாரணாசி, பிரயாகை போன்ற இடங்களில்  உள்ள கோவில்களுக்குக் கால்நடையாக நடந்து சென்று கங்கை நீரை சேமித்து எடுத்து வந்து நிறைவாக அதனை தங்கள் சொந்த ஊரில் உள்ள சிவலிங்கத்திற்கு, அபிசேகம் செய்வார்களாம்.

சுமார் 5 வாரம் நடக்கும் இந்த யாத்திரை காரணமாக இறைச்சி விற்பதற்கு உத்தரப்பிரதேச அரசு தடை விதித்துள்ளது. 

இறைச்சி விற்பனை செய்யாமல் இருப்பதை உறுதி செய்ய உள்ளூர், மாவட்ட மற்றும் காவல்துறை அதிகாரிகள் இறைச்சி வியாபாரிகளை அணுகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்துப் பேசிய உத்தரப்பிரதேச முதலமைச்சர் சாமியார் ஆதித்யநாத், “யாத்திரிகர்கள் செல்லும் பாதையில் சாலைகளை சீரமைக்கவும், விளக்குகள், சுகாதாரம் மற்றும் முதலுதவிக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளவும், திறந்த வெளியில் இறைச்சி விற்பனை செய்வதைத் தடுக்கவும் நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.

கரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தடைபட்டிருந்த கான்வர் யாத்திரை,  ஜூலை 14 தேதி முதல் தொடங்கி ஆகஸ்ட் 28ஆம் தேதிவரை நடைபெற இருக்கிறது.

“நாங்கள் இறைச்சி வியாபாரிகளை தொடர்பு கொண்டு, திறந்தவெளியில் இறைச்சி விற்பனை நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளோம். வர்த்தகர்கள் எங்களுக்கும் அதையே உறுதியளித்துள்ளனர்” என்று பரேலி மூத்த காவல் கண்காணிப்பாளர் சத்யார்த் அனிருத்தா தெரிவித்துள்ளார்.

"கான்வார் யாத்திரிகர்கள் செல்லும் வழியில் இறைச்சி விற்பனை நடைபெறாது" என்று உறுதியளித்த இறைச்சி வியாபாரிகளுக்கும் இதே போன்ற வேண்டு கோள்களை விடுத்துள்ளதாக பிஜ்னோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தினேஷ் சிங் கூறியுள்ளார்

இந்த இரண்டு மாதங்களிலும் - உத்தரப்பிரதேசத்தைத் தொடர்ந்து பாஜக ஆளும், அரியானா, உத்தராகாண்ட் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களும் இறைச்சிக் கடைகளை மூடுமாறு உத்தரவிட்டுள்ளன. 

 இதன் படி இரண்டு மாதங்களுக்கு இனி வட இந்தியாவின் மிகப் பெரிய மாநிலங்களில் இறைச்சிகள் விற்கப்படாது.   ஏற்கெனவே புரத்தச்சத்து குறைபாட்டினால் பல்வேறு உடற்குறைபாடுகளோடு பிறக்கும் குழந்தைகள் அதிகம் உள்ள இந்த மாநிலங்களில் இறைச்சிக்கு ஈடான சத்துள்ள உலர் பழங்கள் மற்றும் விலை உயர்ந்த கொட்டைகளை வாங்கும் அளவிற்கு மக்களிடம் பணமும் இல்லை. 

இது போன்ற பிற்போக்குத்தனமான உத்தரவிற்கு எதிர்க்கட்சிகளும் வாய்மூடி அமைதி காக்கின்றன. ஏற்கெனவே 'அத்திமரம் அபசகுனம்' என்று கூறி காவடி யாத்திரை செல்லும் பாதையில் உள்ள அத்திமரங்களை 2018ஆம் ஆண்டு வெட்ட உத்தரவிட்டிருந்தார் சாமியார் முதல் அமைச்சர். இதன் காரணமாக சுமார் 12 கோடிக்கும் மேற்பட்ட அத்திமரங்கள் வெட்டப்பட்டன.

ஒரே நாடு, ஒரே மதம், ஒரே கலாச்சாரம், ஒரே மொழி என்பதுதான் பிஜேபி, ஆர்.எஸ்.எஸின் கொள்கை. அதை இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் செயல்படுத்துவதற்கு முன்பு உத்தரப்பிரதேசத்தை இந்து மதத்தின் சோதனைக் கூடமாக மாற்றிவிட்டார்கள். அதற்குப் பொருத்தமாகத் தான் சாமியார் ஒருவரை அம்மாநில முதல் அமைச்சராகவும் ஆக்கியிருக்கின்றனர்.

குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள் வழிபாடு செய்யச் செல்லுவதற்காக மற்ற மதங்களைச் சேர்ந்தவர்களுக்கும், மதம் சாராதவர்களும் இறைச்சி சாப்பிடக் கூடாது என்பது எந்த வகையில் சரி - எந்த வகையில் நியாயம்?

இந்து மதக் கடவுள் படங்கள் இருந்தக் காகிதத்தில் இறைச்சியைக் கட்டிக் கொடுத்ததற்காக முஸ்லிம் தோழர் தாக்கப்படுகிறார் என்றால், "இது நாடா, கடும் புலி வாழும் காடா?" - எது எதற்கெல்லாமோ தன்னிச்சையாக முன் வந்து வழக்கு விசாரணை என்று நடத்தும் நம் நாட்டு நீதிமன்றங்கள் இந்த விடயத்தில் மட்டும் கண்களை இறுக மூடிக் கொள்ளும், அப்படித் தானே!

No comments:

Post a Comment