நூறாண்டு வாழ்வில், 80 ஆண்டுகளுக்குமேலாக பொதுவாழ்க்கையில் தன்னை இணைத்துக்கொண்ட ஒப்பற்ற தனி வாழ்வுக்குச் சொந்தக்காரர் என்னை மேசையின்மீது தூக்கி நிறுத்திப் பேச வைத்தவர் மூத்த பெரியார் பெருந்தொண்டர் பொத்தனூர் க.ச. அவர்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 8, 2022

நூறாண்டு வாழ்வில், 80 ஆண்டுகளுக்குமேலாக பொதுவாழ்க்கையில் தன்னை இணைத்துக்கொண்ட ஒப்பற்ற தனி வாழ்வுக்குச் சொந்தக்காரர் என்னை மேசையின்மீது தூக்கி நிறுத்திப் பேச வைத்தவர் மூத்த பெரியார் பெருந்தொண்டர் பொத்தனூர் க.ச. அவர்கள்

தமிழர் தலைவர் ஆசிரியர் நெகிழ்ச்சியுரை

பொத்தனூர், ஜூலை 8  நூறாண்டு வாழ்வில், 80 ஆண்டுகளுக்குமேலாக பொதுவாழ்க்கையில் இணைத் துக் கொண்ட ஒப்பற்ற தனி வாழ்வுக்குச் சொந்தக்காரர்; என்னை மேசையின்மீது தூக்கி நிறுத்தி பேச வைத்தவர் அய்யா பொத்தனூர் க.சண்முகம் அவர்கள் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

பெரியார் பெருந்தொண்டர் பொத்தனூர் க.சண்முகம் நூற்றாண்டு விழா

கடந்த 3.7.2022 அன்று பொத்தனூரில் நடைபெற்ற பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத் தலைவரும், மூத்த பெரியார் பெருந்தொண்டருமான பொத்தனூர் க.சண்முகம் அவர்களின் நூற்றாண்டு விழாவில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  தலைமையுரையாற்றினார்.

அவரது தலைமையுரை வருமாறு:

நூறாண்டு வாழ்வில், 80 ஆண்டுகளுக்கு மேலாக பொதுவாழ்க்கை

நூறாண்டு வாழ்வில், 80 ஆண்டுகளுக்குமேலாக பொதுவாழ்க்கையில் இணைத்துக் கொண்ட ஒப்பற்ற தனி வாழ்வு என்று சொல்லக்கூடிய அளவில், எவரும் பெறாத ஓர் அரிய வாய்ப்பினைப் பெற்று, இன்றைக்கு நூற்றாண்டு காணக்கூடிய எங்களுடைய அருமைத் தலைவர், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் என்று தந்தை பெரியார் அவர்களால் உருவாக்கப் பெற்ற, பெரியார் அறக்கட்டளையின் ஒப்பற்ற தலைவராக, பல ஆண்டுகாலமாக நீடித்துக் கொண்டிருக்கக்கூடிய கருஞ் சட்டைத் தோழர் அருமை க.ச. என்று பெருமிதத்தோடு அழைக்கக்கூடிய பொத்தனூர் க.சண்முகம் அவர்களு டைய நூற்றாண்டு இன்றைக்கு சிறப்பாக இந்த அரங் கத்தில் கொண்டாடப்படுகின்ற விழாவின் நாயகராக இருக்கக்கூடிய அய்யா அவர்களே,

அவருடைய அருமைக் குடும்ப உறவுகளே, கொள்கை உறவுகளாக பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கே வந்திருக்கக்கூடிய கழகத் தோழர்களே, நேரிலே இந்த அரங்கத்திற்கு வராவிட்டாலும், உலகத்தினுடைய பற்பல பாகங்களிலிருந்தும் இந்த நிகழ்ச்சியைக் கேட்டும், சுவைத்தும், அவரை வாழ்த்திக் கொண்டிருக்கக்கூடிய அருமைத் தோழர்களே,

கழகத்தினுடய இந்த சிறப்பான முயற்சியைப் பாராட்டி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியினுடைய முன்னணி தலைவர்களில், சீரிய தலைவர்களில் ஒருவர் என்கிற பெருமை இருந்தாலும், எந்நாளும் அவர் நம் குடும்பத்தவர், பகுத்தறிவு குடும்பத்தவர், சுயமரியாதைக் குடும்பத்தவர் - உண்மையையே பேசி அதனால் சில விளைவுகளையும் அவர் சந்தித்துக் கொண்டிருக்கக் கூடியவர் என்ற பெருமைக்குரிய அருமைச் சகோதரர் மானமிகு மாண்புமிகு ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களே,

இந்த நிகழ்ச்சியில் காலை நிகழ்ச்சியிலும், வாழ்த் தரங்கத்திலும் கலந்துகொண்டு உரையாற்றிய கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,

பொதுச்செயலாளர்கள் முனைவர் துரை.சந்திர சேகரன் அவர்களே, அன்புராஜ் அவர்களே, ஜெயக் குமார் அவர்களே, கழகப் பொருளாளர் வீ.குமரேசன் அவர்களே, மாநில அமைப்பாளர் குணசேகரன் அவர் களே, துணைப் பொதுச்செயலாளர் இன்பக்கனி அவர் களே, பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி அவர்களே, அமைப்புச் செயலாளர்கள் தோழர்கள் ஈரோடு சண்முகம், ஊமை.ஜெயராமன், வி.பன்னீர் செல்வம் ஆகிய தோழர்களே,

வரவேற்புரையாற்றிய பேராசிரியர் டாக்டர் காளி முத்து அவர்களே, மாநில மகளிர் பாசறை தலைவர் வழக்குரைஞர் பா.மணியம்மை அவர்களே, 

மண்டல தலைவர்கள், மண்டல செயலாளர்கள், மாவட்டத் தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள், கழகப் பொறுப்பாளர்கள் ஆகிய தோழர்களே,

மந்திரமா? தந்திரமா? என்ற நிகழ்ச்சியை நடத்திய ஈட்டி கணேசன் அவர்களே,

நிகழ்வை ஒருங்கிணைத்துத் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கக்கூடிய மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் வழக்குரைஞர் இளங்கோ அவர்களே,

மற்றும் நண்பர்களே, பெரியோர்களே, தாய்மார்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நம்முடைய அய்யா பொத்தனூர் சண்முகம் அவர் கள்,  இன்றைக்கு நம்மிடையே மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கிறார் - நாமும் மகிழ்ச்சியடை கிறோம் - இந்த அரங்கமும் மகிழ்ச்சியடைக்கூடிய வாய்ப்பைப் பெற்றிருக்கிறது.

‘சன்’ செய்தி தொலைக்காட்சியில் ‘‘நூற்றாண்டு விழா காணுகின்ற கருப்புச் சட்டைக்காரர்’’

அருமை நண்பர்களே, இந்த நிகழ்வு என்பது பெரிய மாநாடு போல பொது அரங்கத்திலே நடத்தப்பட்டு இருக்கவேண்டும்,  இந்த ஊரைப் பொறுத்தவரையில். நான் இங்கு வந்தவுடன் விழாக்குழுவினரிடம் கேட்டு, சங்கடப்பட்டேன். ஏனென்றால், இந்த அரங்கத்தில் இடம் இல்லை. நேற்றுமுதல் இந்த விழா நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அய்யா பொத்தனூர் சண் முகம் அவர்களைப்பற்றி ‘சன்’ செய்தி தொலைக் காட்சியில், ஓர் அற்புதமான அறிமுகத்தைக் கொடுத்து, ‘‘நூற்றாண்டு விழா காணுகின்ற கருப்புச் சட்டைக்காரர்’’ என்ற தலைப்பில் அந்த நிகழ்ச் சியை ஒளிபரப்பி இருந்தார்கள். அதற்காக அவர்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கின்றோம்.

தன்னுடைய வாழ்நாளில் எப்படி அய்யா பொத் தனூர் சண்முகம் அவர்கள், கட்டுப்பாடோடும், ஒழுக்கத்தோடும், எளிமையோடும் வாழ்ந்தார் களோ, அதேபோல,  இந்த விழாவையும் எளிமை யாக நடத்தவேண்டும் என்று நினைத்துத்தான் இந்த அரங்கத்திற்குள் நடத்துகிறார்கள்.

இந்தக் கொள்கையினுடைய 

வெற்றிக்கனிதான் அய்யா க.ச. 

இது ஒரு நல்ல பிரச்சார விழா - அவருக்காக மட்டு மல்ல - இந்தக் கொள்கையினுடைய வெற்றிக்கனிதான் அய்யா க.ச. அவர்களுடைய நூற்றாண்டு விழா.

நாங்கள் எல்லாம் பெருமைப்படவேண்டிய விஷயம் என்னவென்றால், அவரிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளம் இருக்கின்றன.

அப்படிப்பட்ட செய்திகளை அனைத்துக் கட்சிகள், கட்சிகளுக்கு அப்பாற்பட்டவர்களுக்கும் மேலே சென்று, நாம் பரப்பவேண்டும் என்பதுதான் மிகவும் முக்கியம்.

க.ச. அவர்களைப்பற்றி சிறப்பாக எடுத்துச் சொன் னார்கள் இங்கே உரையாற்றிய ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள்.

படிப்பகம் - நூலகம் உருவாக்கம்

தன்னுடைய பிள்ளைகளுக்குக் கொடுத்த இடத் தைக்கூட,    அவர்களின் சம்மதத்தைப் பெற்று, நூற் றாண்டு விழாவின் நினைவாக -  அந்த இடத்தில் ஒரு படிப்பகத்தை, நூலகத்தை உருவாக்கவேண்டும் என்ப தற்காக பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு - அந்த இடத்தை முன்கூட்டியே பதிவு செய்து, அதை செங்குட்டுவன் அவர்கள் என்னுடைய கையில் கொடுக்கக்கூடிய வகையில், இன்றைக்கு இந்த விழாவில் ஒரு தனி சிறப்பை செய்திருக்கிறார் - அது எடுத்துக் காட்டானதாகும்.

எங்களுக்கெல்லாம் பெரிய பிரச்சினை என்ன வென்றால், சொத்துக்களைக் கொடுப்பதற்கு நிறைய பேர் இருக்கிறார்கள் - காரணம் என்னவென்றால், இது நாணயமான ஓர் அறக்கட்டளை. இந்த அறக்கட்டளை எதற்காக நிலங்களைக் கொடுக்கிறார்களோ, அந்த நோக்கத்தை நிறைவேற்றக் கூடிய அறக்கட்டளையாகும்.

உங்களுக்கெல்லாம் தெரியும், தந்தை பெரியார் அவர்கள் கையெழுத்துப் போடுவதற்குக்கூட நாலணா வாங்கினார்; ஆனால், அந்தப் பணத்தை யாருக்காகப் பயன்படுத்தினார் - மக்களுக்காகப் பயன்படுத்தினார் - அவருடைய செல்வத்தையெல்லாம் முழுக்க முழுக்க மக்களுக்காகவே பயன்படுத்தி இருக்கிறார்.

அதன் காரணமாகத்தான் இங்கே உரையாற்றியவர்கள் சொன்னதைப்போல, இவ்வளவு நிறுவனங்கள் சிறப்பாக செயல்படுகின்றன. அதற்கு அய்யா க.ச. போன்றவர் களுடைய வழிகாட்டுதல்கள் இருக்கின்றன. எங்களுக் கெல்லாம் பெருமை அதுதான். அவருடைய தலைமை யில் நாங்கள் எல்லாம் செயலாளராக இருக்கிறோம்.

அப்படிப்பட்ட ஓர் அற்புதமான, ஒரு சிறப்பான இந்த இயக்கத்திற்குப் பெருமை தரக்கூடிய நாணயமான தலைவர் நம்முடைய அய்யா க.ச. அவர்கள்.

பெரியார் உலகத்திற்கே கொடுத்தார்

அதுபோல, அருமை நண்பர் புள்ளையண்ணன் அவர்கள் ஓராண்டுக்கு ஆயிரம் ரூபாய் என்று கணக்குப் போட்டு, நூறாண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் என்று அய்யா க.ச. அவர்களுக்குக் கொடுக் கிறார் என்று சொன்னால், அதைக்கூட ‘பெரியார் உலக’த்திற்குக் கொடுத்தார்; தன்னுடைய வீட்டிற் குக் கொண்டு போகவேண்டும் என்று நினைக்க வில்லை.

இதுதான் தொண்டறம் என்று பெயர்.

நம் வாழ்க்கையில், நாம் வழமையாகக் கேட்ட இரண்டு சொற்கள் - இல்லறம் - துறவறம் என்பது தான்.

ஆனால், இன்றைக்குத் துறவு என்பதைப்பற்றி இங்கே உரையாற்றிய ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் மிக அழகாக சொன்னார். மனிதனை மனிதன் சுமக்கவேண்டும் என்று சொல்கின்ற துறவிகள்தான். அவை துறவுகள் அல்ல - வேறு வகையான துறவுகள்.

அப்படிப்பட்ட சூழலில், இவர்களைப் பொறுத்த வரையில், தொண்டறம் என்ற சொல் இருக்கிறதே - தந்தை பெரியாருடைய சுயமரியாதை இயக்கம் வளர்ந்த பிறகு, இல்லறம் என்பதோடு தொண் டறமும் இணைந்தது என்று அய்யா அவர்கள் சொன்னார்.

தொண்டு செய்து பழுத்த பழம்!

தந்தை பெரியார் அவர்களைப்பற்றி, புரட்சிக்கவிஞர் அவர்கள் சொல்லுகின்ற நேரத்தில்,

‘‘தொண்டு செய்து பழுத்த பழம்‘‘ என்று சொன்னார். இதுவரை எந்தத் தலைவர்களும் தொண்டு செய்து பழுத்த பழமாக இல்லை. பழுத்த பழமாக இருக்கிறார்கள்; ஆனால், தொண்டுக்கும், அவர்களுக்கும் சம்பந்த மில்லை.

தொண்டு செய்திருக்கிறார்கள், ஆனால், அவர்கள் பழுத்ததில்லை மிக முக்கியமாக.

''தொண்டு செய்து பழுத்த பழம்'' என்ற பெருமைக்கு உண்டான காரணத்தினாலே, மாணவப் பருவந்தொட்டு, நம்முடைய அய்யா க.ச. அவர்கள், நூற்றாண்டு விழா நாயகர் அவர்கள், இந்த இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.

அதேபோன்று, இன்றைக்கு நான் அவருக்கு சால்வை போர்த்தியபொழுது, ஒரு இனந்தெரியாத உணர்வு ஏற்பட்டது.

என்னை மேசையின்மீது தூக்கி நிறுத்தி 

பேச வைத்தவர் அய்யா க.ச.

என்னை மேசையின்மீது தூக்கி நிறுத்தி பேச வைத்தவர் அவர். அதை நான் நினைத்துப் பார்க்கிறேன்.

பொத்தனூர் என்பது இயக்க வரலாற்றில் மிகவும் முக்கியமான பகுதியாகும். பொத்தனூருக்கு எப்படி செல்வது என்பது நிறைய பேருக்குத் தெரியாது. ஆனால், பொத்தனூரைப்பற்றி அந்தக் கால குடியரசு, விடுதலையில் நிறைய செய்திகள் வரும்.

அய்யா க.ச. அவர்களின் இல்லத்திற்கு வராதவர்களே கிடையாது

காரணம் என்னவென்றால், பல பறவைகள் வேடந் தாங்கலில் வந்து தங்கும், குளுகுளுவென்று இருக்குமே - ஒரு பருவம் வரை பறவைகள் தங்கிவிட்டுச் செல்லுமே - அதுபோல, திராவிட இயக்கத்தின் அந்நாளைய மாண வர் கழகத் தலைவர்கள் அத்துணை பேரும், அய்யா க.ச. அவர்களின் இல்லத்திற்கு வராதவர்களே கிடையாது.

இந்த விழாவிற்கு, அந்த உணர்வோடுதான் நானும், என்னுடைய வாழ்விணையரும், எல்லோரும் வந் திருக்கின்றோம். 

எவ்வளவு பக்குவப்பட்டவர் என்பதற்கு....

அய்யா க.ச. அவர்களை நூற்றாண்டில் அவரோடு, என்னுடைய அருமைச் சகோதரி சுந்தராம்பாள் அவர் கள், அமர்ந்திருக்கவேண்டும்; ஆனால், இயற்கையின் கோணல்புத்தி இன்றைக்கு அவர் இல்லை. பல பேருக்கு வாழ்விணையர் இல்லையென்றால், அவர்களுடைய வாழ்வே முடிந்து போகும். ஆனால், இவர் எவ்வளவு பக்குவப்பட்டவர் என்பதற்கு அதுவே எடுத்துக்காட் டாகும். அந்தத் துயரத்தையும் தாங்கிக் கொண்டார். எதனால் அவர் தாங்கிக் கொண்டார்? தன்னுடைய கட்டுப்பாட்டான வாழ்க்கையின்மூலம் - பலருக்கு உதவி செய்யக்கூடிய வாழ்க்கை. அவரையும் சேர்த்து வைத்துப் பாராட்டிவிட்டோம். காரணம் என்னவென் றால், அந்த அம்மையாருடைய சமையல், விருந்தோம்பல் தான்.

அருமைச் சகோதரி சுந்தராம்பாள் அம்மையார் 

பொதுவாக ஒரு விழாவில் ஆண்களை மட்டும்தான் பாராட்டி நமக்குப் பழக்கமே தவிர, அவர்களுக்கு அடித்தளமாக இருக்கிற மகளிரைப் பாராட்டுவது என்பது மிக அபூர்வமானது. ஆகவே, இந்த நேரத்தில், அந்த அம்மையாரை நாம் நினைவுகூரவேண்டும். பிறந்த நாள் மலரில், தெளிவாக நினைவூட்டியிருக் கின்றோம். அந்த வகையில் அம்மையார் இருந்திருந்தால், இந்த விழா இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

(தொடரும்)


No comments:

Post a Comment