சென்னை மாநிலம் ''தமிழ்நாடாக'' சட்டப்படி மாற்றப்பட்ட மறக்க முடியாத பொன்னாள் ஜூலை 18 'தமிழ்நாடு' என்று கூறும் ஒவ்வொருவரின் நாக்கும் திராவிட இயக்க சாதனையை உச்சரிக்கிறது என்று பொருள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 18, 2022

சென்னை மாநிலம் ''தமிழ்நாடாக'' சட்டப்படி மாற்றப்பட்ட மறக்க முடியாத பொன்னாள் ஜூலை 18 'தமிழ்நாடு' என்று கூறும் ஒவ்வொருவரின் நாக்கும் திராவிட இயக்க சாதனையை உச்சரிக்கிறது என்று பொருள்!

 சென்னை மாநிலம் ''தமிழ்நாடாக'' சட்டப்படி மாற்றப்பட்ட மறக்க முடியாத பொன்னாள் ஜூலை 18

'தமிழ்நாடு' என்று கூறும் ஒவ்வொருவரின் நாக்கும்  திராவிட இயக்க சாதனையை உச்சரிக்கிறது என்று பொருள்!

இதற்காகப் பாடுபட்ட - உயிர்நீத்த அத்துணைப் பேருக்கும் - அண்ணாவுக்கும் பாராட்டும் - வீரவணக்கமும் உரித்தாகுக!

சென்னை மாநிலம் என்பது ''தமிழ்நாடு'' என்று அதிகாரப்பூர்வமாகப் மாற்றப்படுவதற்குப் பாடு பட்டவர்களை எல்லாம் நினைவு கூர்ந்து, பாராட்டும், வீர வணக்கமும் செலுத்தும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் அறிக்கை வருமாறு:

‘சென்னை மாநிலம்' என்றும், ‘மெட்ராஸ் ஸ்டேட்' என்றும் அழைக்கப்பட்டு வந்த நிலை மாற்றப்பட்டு, அரசு ரீதியாக சட்டப்படி ‘தமிழ்நாடு' என்று மாற்றப்பட்ட - வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட நாள் - இந்நாள் (18.7.1967).

இதுவும் வியப்பே!

தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட மக்கள் வாழும் மண்ணுக்குத் ‘‘தமிழ்நாடு'' என்ற  கோரிக்கைக்காகப் பல்வேறு போராட்டங்களை நடத்திப் பெயர் சூட்டப்பட வேண்டிய அவசிய நிலை ஏன் ஏற்பட்டது என்பதுகூட வியப்பான ஒன்று மட்டுமல்ல, விசித்திரமும்கூட!

1938 இல் ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) சென்னை மாநில பிரதமராக இருந்தபோது இந்தியைப் புகுத்தினார். தந்தை பெரியார் தலைமையில் தமிழ்நாடே பொங்கி எழுந்தது. நாடெங்கும் மாநாடுகள், பேரணிகள் என்று வெடித்துக் கிளம்பின,

தந்தை பெரியாரின் 

''தமிழ்நாடு தமிழருக்கே'' என்ற முழக்கம்!

1.8.1938 அன்று திருச்சியிலிருந்து ‘தமிழர் பெரும்படை' அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை கே.வி.அழகிரிசாமி அவர்களை அணித் தலைவராகக் கொண்டு புறப்பட்டது.

நூறு பேரைக் கொண்ட அப்படையை தந்தை பெரியார் நல்லுரை புகன்று தொடங்கி வைத்தார். அப்படை சென்னை கடற்கரையில் சங்கமித்தபோது 70 ஆயிரம் மக்கள் திரண்டெழுந்து மாபெரும் வரவேற்பு அளித்தனர்.

கடல் அலைகளோடு போட்டிப் போட்ட அந்தக் கூட் டத்தில் உரையாற்றியபோதுதான், ‘‘தமிழ்நாடு தமிழருக்கே!'' என்ற முழக்கத்தைக் கொடுத்தார் தந்தை பெரியார்.

மொழிவாரி மாநிலம் பிரிவின்படி ‘சென்னை ராஜ்ஜியம்' என்பதற்கு ‘தமிழ்நாடு' என்று பெயர் மாற்றப்பட முதல் குரல் கொடுத்தவர் தந்தை பெரியார்.

இதன் பின்னணி வரலாறு என்ன?

தி.மு.க. ஆட்சியில் அறிஞர் அண்ணா அவர்கள் 1967 ஆம் ஆண்டில் இதே ஜூலை 18 இல் சென்னை மாநிலத் திற்குத் ‘‘தமிழ்நாடு'' என்று அரசு ரீதியாகத் தீர்மானம் கொண்டு வந்தார்  - இதன் பின்னணியில் பெரும் போராட் டங்களும், உரத்தக் குரல்களும் உண்டு என்பதை நினைவு கூர்வது பொருத்தமாகும்.

1961 ஆம் ஆண்டில் மேற்குவங்க இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் தோழர் பூபேஷ் குப்தா அவர்கள் மெட்ராஸ் மாநிலத்திற்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டவேண்டும் என்ற சட்ட முன்வடிவு ஒன்றை முன்மொழிந்து, விவாதங்கள் நடைபெற்றதுண்டு - என்றாலும், அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

1956 ஆம் ஆண்டில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு விட்ட நிலையில், இந்தப் பிரச்சினையின் தேவை முக்கியமானதாகக் கனன்றது.

தியாகி சங்கரலிங்க நாடார் அவர்களின் 'சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டம்!'

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி 1956 ஜூலை 27 அன்று சங்கரலிங்க நாடார் அவர்கள் ‘உண்ணாநிலைப் போராட்டத்தைத்' தொடங்கினார். 76 நாள் அந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அவர், 1956 அக்டோபர் 13 ஆம் நாள் மரணத்தைத் தழுவினார்.

சட்டப்பேரவையில் பலமுறை தீர்மானங்கள்

1961 ஜனவரியில் சோசலிஸ்டுக் கட்சி உறுப்பினர் பி.சின்னத்துரை தமிழ்நாடு பெயர் மாற்றத் தீர்மானத்தை சட்டமன்றத்தில் கொண்டு வந்தார்.

1964 இல் தி.மு.க. உறுப்பினர் மானமிகு இராம.அரங் கண்ணல் அவர்களும், இந்த வகையில் சட்டப்பேரவையில் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.

அமைச்சர் ஆர்.வெங்கட்ராமன் கூறிய 

பதில் என்ன?

அப்பொழுதைய அமைச்சர் திருவாளர் ஆர்.வெங்கட் ராமன் சொன்ன பதில்தான் வேடிக்கையானது.

‘தமிழ்நாடு' என்று சொன்னால், வெளி உலகில் இருப்பவர்களுக்கு எப்படித் தெரியும்? ‘மெட்ராஸ்' என்று சொன்னால்தான் சர்வதேச அரங்கிற்குத் தெரியும் - அது பெருமையாகவும் இருக்கும் என்று சொன்னதுண்டு.

தடைகளைக் கடந்துதான் தி.மு.க. ஆட்சியில் ''தமிழ்நாடு'' மலர்ந்தது!

இவ்வளவுத் தடைகளையும் கடந்துதான் அண்ணா அவர்கள் தலைமையில் தமிழ்நாட்டில் ஆட்சி அமைந்த போது 1967 ஏப்ரல் 14 ஆம் நாள் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் ‘தமிழக அரசு' என்ற பெயர்ப் பலகை இடம்பெற்றது.

1967 ஜூலை 18 அன்று (இன்றைக்கு 54 ஆண்டுகளுக்கு முன்பு) அரசு ரீதியாக சென்னை மாநிலம் என்பதைத் ‘‘தமிழ்நாடு'' என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் தீர்மானத்தை முதலமைச்சர் அண்ணா முன்மொழிய நிறைவேற்றப்பட்டது.  ‘தமிழ்நாடு' என்று முதலமைச்சர் கூற, உறுப்பினர்கள் ‘வாழ்க' என்று மும்முறை முழங்கினர்.

இதில் ‘குல்லூகப்பட்டர்' ராஜாஜி குறுக்குச்சால் ஓட்டினார். 'Tamil Nadu' என்பதில் உள்ள 'U'   என்ற எழுத்தை ('Tamil Nadu')  நீக்கிவிடலாம் என்றார் - அது நிராகரிக்கப்பட்டது.

ஆச்சாரியாரின் நோக்கம் என்ன என்பது அறிந்ததே!

28.11.1968 அன்று தமிழ்நாடு பெயர் மாற்ற மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. 1969 ஜனவரி 14 இல் மெட்ராஸ் ஸ்டேட் என்பது ‘‘தமிழ்நாடு'' என்று அதிகாரப்பூர்வமாக மாறியது என்பது வரலாற்று ரீதியான அரிய தகவல்களாகும். 

வரலாற்றைத் தெரிந்துகொள்ளாமல் பேசவேண்டாம்!

‘திராவிட மாடல்' அரசு என்றால் கேலியும், கிண்டலும் செய்யும் மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் இந்த வரலாற்றைத் தெரிந்துகொள்ளவேண்டும்.

தமிழ்நாடு என்று இன்றைக்குக் கூறுவோர், அவர்களை அறியாமலேயே தந்தை பெரியாரை, அறிஞர் அண் ணாவை, திராவிட இயக்க ஆட்சியை ஒப்புக்கொண்டு, அவர்களின் நாக்குகள் உச்சரிக்கின்றன என்பதுதான் உண்மை.

நமது வீர வணக்கம்!

இந்த வரலாற்றுப் பொன்னாளில் இதற்காகத் தங்கள் பங்களிப்பை  அளித்த அனைவருக்கும் உள்ளத்தின் வேரிலிருந்து பாராட்டுவோம்! தியாகி சங்கரலிங்கனாருக்கு வீர வணக்கம் செலுத்துவோம்!

‘தமிழ்நாடு' பெயர் வாழும் மட்டும்  அறிஞர் அண்ணாவின் அரசியல் ஆட்சிதான் - தத்துவப்படி!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

18.7.2022


No comments:

Post a Comment