கணினிமயமாக மாற்றப்பட்ட ரயில்கள் கட்டுப்பாட்டு துறை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 23, 2022

கணினிமயமாக மாற்றப்பட்ட ரயில்கள் கட்டுப்பாட்டு துறை

சென்னை, ஜூன் 23- சிறப்பான சேவையை வழங்குவதற்காக ரயில்கள் கட்டுப்பாட்டு துறை தற்போது கணினி மயமாக்கப்பட்டு மென்பொருள் வாயிலாக செயல்படுவதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: காவல்துறைக்கு கட்டுப்பாட்டு அறை உள்ளது போல ரயில்கள் இயக்கத்திற்கு கட்டுப்பாட்டு துறை உள்ளது. இந்த கட்டுப்பாட்டு துறை சென்னை, மதுரை, திருச்சி, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய கோட்ட அலுவலகங்களில் செயல்படுகிறது. இந்த துறைக்கு விடுமுறையே கிடையாது. 365 நாட்களும் 24 மணி நேரமும் ஓய்வில்லாமல் செயல்படுகிறது. சரக்கு மற்றும் பயணிகள் ரயில்கள் இந்த கட்டுப்பாட்டு துறை மூலமாகவே இயக்கப்படுகிறது. ரயில் இயக்கம், வர்த்தகம், சிக்னல் மற்றும் தொலைதொடர்பு, பொறியியல், இயந்திரவியல், மின் பாதை, பாதுகாப்பு துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் இந்த கட்டுப்பாட்டு துறை மூலம் ரயில் இயக்கத்திற்கு பெரிதும் உதவி புரிகிறார்கள்.  சரக்கு மற்றும் பயணிகள் ரயில்களை இயக்குவதற்கு நேரடியாக நிலைய அதிகாரிகள் உதவிகரமாக இருக்கிறார்கள். கட்டுப்பாட்டுத்துறை ரயில் இயக்க அலுவலர் ரயில்களை இயக்குவதற்கான ஆலோசனை மற்றும் உத்தரவு வழங்குகிறார். அதன்படி நிலைய அதிகாரிகள் செயல்படுகிறார்கள்.

இந்த கட்டுப்பாட்டு துறை அலுவலகங்களில் ‘‘கிராப் சார்ட்’’ போல ஒரு பக்கம் நேரம் ஒரு பக்கம் ரயில் நிலைய பெயர்களை எழுதி கோடுகள் வரைந்து ரயில் இயக்கத்தை கட்டுப்படுத்துகிறார்கள். தற்போது இந்த முறை கணினி மயமாக்கப்பட்டு கட்டுப்பாட்டு அலுவலக மென்பொருள் வாயிலாக செயல்படுகிறது. இந்த முறையில் பதியப்படும் ரயில் வருகை மற்றும் புறப்பாடு நேரம் பயணிகளுக்கு பல்வேறு செயலிகள் மூலம் உறுதியான தகவலாக வழங்கப்படுகிறது. இந்த கட்டுப்பாட்டு துறை ஊழியர்கள் வேலை நேரம் நடு இரவில் ஆரம்பிப்பது போலவும் முடிவடைவது போலவும் அமையும். எனவே ஊழியர்கள் பல நேரங்களில் அலுவலகத்திலேயே தங்கி பணியாற்றக்கூடிய சூழ்நிலை ஏற்படும். ரயில்பாதை விரிசல் ரயில் இன்ஜின் பழுது, மின்பாதை பழுது போன்ற நேரங்களில் அவற்றை கட்டுப்பாட்டு துறை ஊழியர்கள் திறமையாக கையாண்டு ரயில் இயக்கத்தை உறுதி செய்கிறார்கள். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

No comments:

Post a Comment