தேர்தல்களில் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் போட்டி தேர்தல் ஆணையம் முக்கிய முடிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 18, 2022

தேர்தல்களில் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் போட்டி தேர்தல் ஆணையம் முக்கிய முடிவு

புதுடில்லி, ஜூன் 18 தேர்தல்களில் வேட்பாளர்கள் இரு தொகுதிகளில் போட்டியிட தடை விதிக்க வேண்டும். இல்லையென்றால், இரண்டு தொகுதிகளில் வென்று இடைத்தேர்தலுக்கு காரணமாகும் வேட்பாளர்களுக்கு மிக அதிக தொகை அபராதமாக விதிக்க வேண்டும் என ஒன்றிய அரசிடம் தேர்தல் ஆணையம் வலியுறுத்தி உள்ளது.

தேர்தல்களில் இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிட கட்டுப்பாடு விதிக்கும் வகையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் கடந்த 1996-ஆம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்டது.

அதன்பின் ஒரு தொகுதிக்கு மேல் போட்டியிட தடை விதிக்கும் வகையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என தேர்தல் ஆணையம் கடந்த 2004-ஆம் ஆண்டு கூறியது. இந்நிலையில் ஒன்றிய சட்ட அமைச்சக செயலாளருடன், தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் சமீபத்தில் கலந்துரையாடினார். அப்போது கடந்த 2004-ஆம் ஆண்டு தெரிவிக்கப்பட்ட பரிந்துரையை, மீண்டும் வலியுறுத்தினார்.

இரண்டு தொகுதிக்கு மேல் போட்டியிட தடை விதிக்க முடியவில்லை என்றால், இரு தொகுதிகளிலும் வென்று, ஒரு தொகுதியில் விலகல் செய்து இடைத் தேர்தலுக்கு காரணமாகும் வேட்பாளருக்கு மிக அதிக தொகையை அபராதமாக விதிக்க வேண்டும் அல்லது இடைத்தேர்தலுக்கான செலவை ஏற்க வைக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

வேட்பாளர்கள் ஒரு தொகுதிக்கு மேல் போட்டியிட தடை விதிக்கும் திட்டத்துக்கு ஒன்றிய சட்ட ஆணையம் ஆதரவு தெரிவித்தது. ஆனால், இரு தொகுதிகளிலும் வெற்றி பெறும் வேட்பாளர்கள், இடைத் தேர்தல் செலவுக்கு நிகரான தொகையை டெபாசிட் செய்ய வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் மற்றொரு விருப்பத்தை சட்ட ஆணையம் ஏற்கவில்லை.


No comments:

Post a Comment