துறவிகள், ஜீயர்கள்மீது சட்டம் பாயுமா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 9, 2022

துறவிகள், ஜீயர்கள்மீது சட்டம் பாயுமா?

ஹிந்து தர்மத்தை காக்க ஹிந்துக்கள் அனைவரும் சபதம் ஏற்க வேண்டும்' என, மதுரையில் நடந்த விஷ்வ ஹிந்து பரிஷத், அறவழிகாட்டும் ஆன்றோர் பேரவையின் துறவியர் மாநாட்டில் அகில உலக பொதுச் செயலாளர் மிலிந்த் பிராண்டே தெரிவிக்க துறவிகள் மற்றும் மக்கள், 'ஜெய் ஸ்ரீராம்' என, வீர முழக்கமிட்டனர்.

அவர் பேசுகையில், ''வேற்றுமத அமைப்பு ஹிந்து மதத்திற்கு கேடு விளைவிக்கிறது. கேரளாவில் ஒரு மத அமைப்பின் கூட்டத்தில், 'ஹிந்துக்களே சாகத் தயாராக இருங்கள்' என்ற முழக்கம் கிளம்பியது. '10 ஆண்டுகளில் 1.2 கோடி இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளிப்போம்' என, அந்த அமைப்பினர் கூறுகின்றனர். ''ஹிந்து மதத்தைக் குழி தோண்டி புதைப்பதை பார்த்து சுவாமிகள் முருகன், பெருமாள், ஈசன் அஞ்ச மாட்டார்கள். அவர்கள் கையிலும் ஆயுதங்கள் இருப்பதை மறந்து விடாதீர்,'' என்றார்.

மதுரை ஆதீனம் ஹரிஹர தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் பேசுகையில்,  "ஆதீனம் அரசியல் பேசக் கூடாது என்றால் அரசியல்வாதிகளுக்கு கோவிலில் என்ன வேலை? சுவாமி துஷ்ட தேவதை என்பவர்களுக்கு உண்டியல் மட்டும் இஷ்ட தேவதையா? அறநிலைய துறையை நீக்கி விட்டு கோவில்களை நீதிபதி தலைமையில் எங்கள் வசம் ஒப்படையுங்கள்" என்றார்.

மன்னார்குடி செண்டலங்கார ராமானுஜ ஜீயர் பேசுகையில், ''இனி யார் ஹிந்து மதத்திற்கு எதிராக பேசினாலும் அவர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும்,'' என்றார்.சின்மயா மிஷன் சிவயோகானந்தா பேசுகையில், ''விவேகானந்தருக்கு பின் சுவாமி சின்மயா நந்தா வீரத் துறவியாக திகழ்ந்தார். வேள்வித் தாய் என போற்றப்படும் பசு இல்லை என்றால் உணவு இல்லை. அதனால், தமிழ்நாட்டில் பசு வதை தடை சட்டம் அவசியம்,'' என்றார்.

கோவை சிவலிங்கேஸ்வர சுவாமிகள் பேசுகையில், ''இது ஹிந்து நாடு. ஆனால் மற்ற மதத்தினருக்கு எதிரான நாடல்ல. அப்படி இருந்தும் சுவாமி நடராஜரை இழிவாக பேசுகின்றனர். கோவிலுக்குள் இருக்க வேண்டிய குருமகா சன்னிதானங்கள் ஹிந்து மதத்தை காக்க ரோட்டில் அலைகின்றனர்,'' என்றார்.

ஸ்தாணுமாலயன், வி.எச்.பி., இணை பொதுச் செயலாளர் பேசுகையில், ''ராமர் பாலம் இடிக்க இங்கு அடிக்கல் நாட்டினர். அதற்கு எதிராக வி.எச்.பி., போராட்டம் நடத்தி அதை கைவிட வைத்தது. சிவன் நடந்த, மண் சுமந்த ஊர் இது. ஆட்சியாளர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஹிந்துக்கள் விழித்தெழ வேண்டும். கிருஷ்ண பகவான் அதர்மத்தை அழிப்பார். கி.மு., கி.பி., எல்லாம் நமக்கு கிருஷ்ணர் பிறப்புக்கு''முன் பின் தான்,'' என்றார். கோவில் ஆக்கிரமிப்புகளை அகற்ற, மதமாற்ற தடை சட்டம், நல்லிணக்கம் பேணல் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.ஆதீனங்கள் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்யர், சாந்தலிங்க மருதாசல அடிகளார், ராமநந்த குமரகுருப, சடகோப ராமானுஜ ஜீயர், ராகவாநந்தா சுவாமிகள், குமர பிரியா மதா, துறவிகள், சாதுக்கள் பங்கேற்றனர்.

- ‘தினமலர்' (இணையம்), 6.6.2022

இப்படி எல்லாம் பேசி இருப்பவர்கள் சாலைகளில் சோடா பாட்டில் எடுத்து வீசி சண்டை போடும் ரவுடிகள் அல்லர். ஆதீனகர்த்தர்கள் - முற்றும் துறந்த முனிவர்கள், ஜீயர்கள் என்று சொல்லப்படுபவர்கள்.

இவ்வாறு வன்முறைகளைத் தூண்டும் வகையில் பேசுவோர் மீது சட்டம் கட்டாயம் தம் கடமையைச் செய்ய வேண்டும்.

அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் சாலைகளில் நடமாடக் கூடாது என்று ஒரு ஜீயர் பேசுகிறார்; சோடா பாட்டிலை எடுத்து வீசுவோம் என்று இன்னொரு ஜீயர் முண்டா தட்டுகிறார்.

சட்டம் எல்லோருக்கும் பொதுதானே! சங்கராச் சாரியாரையே பிடித்து சிறையில் தள்ளப்படவில்லையா?

மதவெறியைத் தூண்டும் இத்தகு பேச்சுகளால் தான் இன்று வெளிநாட்டில் உள்ளவர்களும் இந்தியாவை எதிர்த்துப் போர்க் கோலம் பூண்டு நிற்கிறார்கள். பொருளாதார நெருக்கடியைத் தொடுக்கிறார்கள். 

எனவே தமிழ்நாடு அரசு காவிகளின் வன்முறைப் பேச்சுக்கும், செயலுக்கும் ஒரு முடிவை ஏற்படுத்த வேண்டும். சட்டம் தன் கடமையைச் செய்யட்டும்.

No comments:

Post a Comment