விஞ்ஞான கருவிகளில் அஞ்ஞானமா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 23, 2022

விஞ்ஞான கருவிகளில் அஞ்ஞானமா?

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நடைபெற்ற (19.6.2022) மாநிலப் பகுத்தறிவாளர் கழக பவள விழா மாநாடு அந்தப் பகுதியிலும், வட்டாரத்திலும் புத்தெழுச்சியை ஏற்படுத்தி விட்டது. மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி இளைஞர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தியது. 

12 சிறப்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

"ஊடகங்களின் கடமை" என்ற தலைப்பில் (11ஆம் தீர்மானம்) கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

"விஞ்ஞான சாதனங்களைப் பயன்படுத்தி அச்சிடப்படும் ஏடுகள், இதழ்கள் மக்களை மூடநம்பிக்கையில் மூழ்கடிக்கும் வகையில் ஆன்மிகச் சிறப்பு இதழ்களை வெளியிட்டு, மக்களின் பொருளையும் அறிவையும் பறிக்கும் போக்கு ஒரு வகையான சுரண்டல் என்பதை இம்மாநாடு மிகுந்த வேதனையோடு தெரிவிக்கிறது. மின்னணு சாதனங்களான தொலைக் காட்சிகளும் இதே போக்கைப் பின்பற்றுவது வருத்தத்திற்குரியதாகும். விஞ்ஞானத்தைப் பயன்படுத்தி அஞ்ஞானத்தைப் பரப்புவது அறிவு நாணயமற்ற செயல் என்பதோடு கேபிள் மற்றும் செயற்கைக்கோள் தொலைக்காட்சிகளை நடத்துவதற்கான விதிமுறைகள் (The Cable Television Network Rules, 1994) பிரிவு 6 (1) (j)ன்படி  No Programme should be carried in the cable service which encourages superstition or blind belief    என்று தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளமைக்கு எதிரான செயலாகும்.

பில்லி, சூனியம், ஏவல், பல்வகை ஜோதிடங்கள், ராசிக்கல், எந்திரத் தகடு விற்பனை என்று மூடநம்பிக்கைகளைப் பரப்பும் விளம்பரங்களையும், நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்புவதை ஊடகங்கள் நிறுத்திட வேண்டும்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 51A(h) இந்தியக் குடிமகனின் அடிப்படைக் கடமைகளுள் ஒன்றாக வரையறுத்துள்ள அறிவியல் மனப்பான்மையைப் பரப்பும் பணிக்கு, குறைந்தபட்சம் வாரம் ஒரு முறையாவது பகுத்தறிவு, அறிவியல் சிறப்பு இதழ்களை வெளியிட வேண்டுமாய் ஏடுகளையும், இதழ்களையும் இம்மாநாடு வலியுறுத்துகிறது. தொலைக்காட்சிகளும் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான அறிவியல் அறிவூட்டலைச் செய்யுமாறு இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது." என்பதுதான் அத்தீர்மானம்.

ஏடுகளோ, இதழ்களோ, தொலைக்காட்சிகளோ கடவுளின் கிருபை யாலோ சாமியார்கள், சங்கராச்சாரியார்கள், சாயிபாபாக்களின்  அருளாலோ கை வரப் பெற்றவையல்ல.

 பகுத்தறிவின் அடிப்படையில் விஞ்ஞான சிந்தனையின் முயற்சியால் கண்டுபிடிக்கப்பட்டவை.

இதில் என்ன வெட்கக்கேடு என்றால் அறிவியல் கண்டுபிடித்த சாதனங்களைப் பயன்படுத்தி, சாமியார்களும், சங்கராச்சாரிகளும்,  மடாதி பதிகளும், ஜீயர்களும் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டுள்ளனர்.

ஏடுகள் ஆன்மிக இதழ்களை வாரந்தோறும் வெளியிட்டுக் கொண்டு பிழைப்பு நடத்துகின்றன.

தொலைக்காட்சிகளோ காலையில் தொடங்கும் போதே இராசிப் பலன்களைக் கூறுகின்றன. இன்றைக்கு எந்த நிறத்தில் உடை அணிவது, எந்த நிற மோதிரத்தை அணிவது என்று ஆருடம் கூறுகிறார்கள்.

வெட்கம் கெட்ட முறையில் நவக் கிரகத்தின் அடிப்படையில் சோதிடங்களைக் கூறிக் கொண்டிருக்கிறார்கள்.

நவக்கிரகங்களின் பட்டியலில் பூமியை விலக்கி விட்டு அதன் துணைக் கிரகமான சந்திரனை வைத்துள்ளனர். கேது, ராகு என்ற கிரகங்களே கிடையாது. அவற்றைக் கிரகங்களின் பட்டியலில் வைத்து ஜோதிடம் சொல்லிக் கொண்டுள்ளனர்.

2009இல் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியான வெங்கட்ரமணன் ராமகிருஷ்ணன் சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் பேசும்போது குறிப்பிட்டார்.

"அரசியல் சாசனத்திலேயே அறிவியல் மனோபாவத்தை வளர்ப்பதைப்பற்றி குறிப்பிடும் ஒரே நாடு இந்தியாதான். ஆங்காங்கே நடப்பவைகளில் உள்ள ஒற்றுமைகளை பொதுமைப்படுத்தி அதை நம்பும் மனித மனதின் விளைவுதான் ஜோதிடம். ஒருவன் பிறந்த நேரத்திற்கும், கோள்களின் இயக்கத்திற்கும் அவன் வாழ்க்கையில் நடப்பவைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

ஆனால் இதுபோன்ற நம்பிக்கை ஒருவரிடம் வேரூன்றி விட்டால் அவற்றை மாற்றுவது கடினம். அறிவியல் அறிவும், பகுத்தறிவும் சார்ந்து இயங்கும் ஒரு சமூகத்தைவிட மூடநம்பிக் கையின் அடிப்படையில் இயங்கும் ஒரு கலாச்சாரம் மோசமான விளைவுகளையே சந்திக்கும்" என்றார். நோபல் விஞ்ஞானி வெங்கட்ரமணன் ராமகிருஷ்ணன் ('தினமலர்' 7.1.2016 பக்கம் 13).

உண்மை இவ்வாறு இருக்க, ஏடுகளும், இதழ்களும் தொலைக்காட்சிகளும் மூடநம்பிக்கைகளைக் கட்டிக் கொண்டு அழுவதும் பரப்புவதும் மிகப் பெரிய மோசடி அல்லவா - கிரிமினல் குற்றமல்லவா!

இலண்டனில் ருத்திராட்ச விளம்பரம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப் பட்ட போது, உடனடியாகத் தடை செய்யப்பட்டதுண்டே!

செஞ்சி மாநாட்டுத் தீர்மானத்தில் சுட்டிக்காட்டியபடி தொலைக் காட்சிகளில், கேபிள் டிவிகளில் மூடநம்பிக்கைகளை ஒளிபரப்பக் கூடாது என்று சட்டம் இருக்கிறது.

விஞ்ஞான மனப்பான்மையை மக்களிடம் பரப்ப வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை   (51A(h) என்றும் திட்டவட்டமாகக் கூறப்பட்டுள்ளது.

மூடநம்பிக்கையின் காரணமாக அறிவும், பொருளும், பொழுதும் நாசமாக்கப்படுவதை எந்த விலை கொடுத்தேனும் தடுக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும்.

பில்லி, சூன்யம், ஏவல் என்று பல்வேறு பித்தலாட்டங்களைப் பரப்பி சாமியார்கள் மக்களின் அறியாமையைப் பயன்படுத்திப் பணத்தைச் சுரண்டுவதும், இரவு காலப் பூஜை என்று கூறி இளம்பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்து கொன்றுவிடுவதும் நாளும் நாட்டில் செய்திகளாக வந்து கொண்டுதானே இருக்கின்றன.

தங்கள் சரகத்தில் குற்றங்கள் பெருகி வருவதைத் தடுக்கக் காவல் நிலையத்திலேயே கிடா வெட்டிப் பூஜை செய்யும் காவல் நிலையமும் உண்டே!

ஆயுதப் பூஜை என்று சொல்லி காவல் நிலையங்கள் ஏலம் விடப்படுவது இன்றும் தொடர்கிறதே!

இவற்றை எல்லாம் எடுத்துக்காட்டி மக்களை நல்வழிப்படுத்த தந்தை பெரியாரின் இயக்கத்தைத் தவிர வேறு நாதியில்லையே நாட்டில்.

எனவே திராவிடர் கழகத்திற்கும் பகுத்தறிவாளர் கழகத்திற்கும் நிறைய பணிகள் காத்துக் கொண்டு இருக்கின்றன. திட்டமிடுவோம் - செயல் படுவோம் - நாட்டை நல்வழிப்படுத்துவோம்!

வாழ்க பெரியார்!

வளர்க பகுத்தறிவு!!


No comments:

Post a Comment