நீதித்துறையிலும் இடஒதுக்கீடு தேவையே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 28, 2022

நீதித்துறையிலும் இடஒதுக்கீடு தேவையே!

கடந்த சனியன்று (25.6.2022) மதுரையில் கூடிய திராவிடர் கழகப் பொதுக் குழுவின் எட்டாவது தீர்மானம் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் பதவியில் இடஒதுக்கீடு தேவை என்ற மிகவும் முக்கியமானதோர் தீர்மானமாகும்.

உயர்நீதிமன்ற பதவிகள் நியமனத்தில் சமூகநீதி தேவை!

"சென்னை உயர்நீதிமன்றத்தில் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 75; தற்போதுள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை 55. இதில் 12 நீதிபதிகள் பார்ப்பனர்கள் என்பது சமூகநீதிக் கண்ணோட்டத்தில் மிகப்பெரிய அநீதியாகும். 3 சதவீத பார்ப் பனர்கள் அனுபவிக்கும் வாய்ப்பு - ஆதிக்கம் 22 விழுக் காடாகும். இந்நிலையில் காலியாக உள்ள நீதிபதிகள் பதவி களுக்குப் பார்ப்பனர்களை நியமனம் செய்திடாமல், வாய்ப்புக் கிடைத்திராத பல்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்களையே நீதிபதிகளாக நியமனம் செய்திட வேண்டும் என்று இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகத் தொடர்ந்து பார்ப்பனர்களையே நியமிப்பதைத் தவிர்க்குமாறு இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது."

நாட்டின் அதிகார மிக்க அமைப்பு என்று வரும் போது உச்சநீதி மன்றமும், உயர்நீதிமன்றங்களும்தான்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சிப் பீடத்தில் அமரும் பிரதமர், முதல் அமைச்சர்களுக்கு உள்ள அதிகாரங்களைவிட நீதிபதி களுக்கு அதிகாரம் உண்டு.

சட்டமன்றங்கள், நாடாளுமன்றம் இயற்றும் சட்டங்களைக்கூட செல்லாது என்று கூறும் அதிகாரம் இவைகளுக்குண்டு.

அத்தகு பதவிகளில் சமூகநீதி - இடஒதுக்கீடு என்பது அவசியம் தேவை. ஆனால் நிலைமை அவ்வாறு இல்லை என்பதுதான் வேதனைக்குரியதாகும்.

நீதித்துறையிலும் இடஒதுக்கீடு தேவை என்பதைத் திராவிடர் கழகம் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டு வருகிறது.

ஒன்றிய அரசின் சட்ட அமைச்சராக இருந்த சங்கரானந்து அவர்கள் சென்னை வந்தபோது, அன்றைய திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அவரைச் சந்தித்து, நீதிமன்றங்களில் நீதிபதி பதவிகளில் இடஒதுக்கீடு அவசியம் தேவை என்று வலியுறுத்தி, கோரிக்கை மனுவினை வழங்கினார். ('விடுதலை' 22.9.1988)

34 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. இன்னும் தீர்மானம் நிறைவேற்றும் நிலையில்தான் இருக்கிறோம்.

1989ஆம் ஆண்டில் அன்றைய குடியரசுத் தலைவரான கே.ஆர். நாராயணன் அவர்கள், உச்சநீதிமன்ற நீதிபதிகள் நால்வர் நியமனம் தொடர்பான கோப்பில், கீழ்க்கண்டவாறு ஒரு கருத்தைப் பதிவு செய்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்குத் திருப்பி அனுப்பினார்.

"மக்கள் தொகையில் 25 விழுக்காடு எஸ்.சி., எஸ்.டி., மக்கள் உள்ளனர். அவர்களுக்கும் பெண்களுக்கும் அரசியல் சட்டத்தின் படியும், சமூகநீதிக் கொள்கைக்கு ஏற்பவும் உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும். அவர்களுக்குரிய பிரதிநிதித்துவம் அளிக்கப் படாமல் இருப்பது அல்லது ஒட்டு மொத்தமாக பிரதிநிதித்துவமோ, இல்லாதிருப்பது நியாயமாகாது என்று அந்தக் கோப்பில் எழுதியிருந்தார்.

அப்பொழுது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த கே.எஸ். ஆனந்த் என்ற பார்ப்பனர் என்ன எழுதிக் குடியரசுத் தலைவருக்குத் திருப்பி அனுப்பினார் தெரியுமா?

"இது போன்ற பதவிகள் தகுதி - திறமை அடிப்படையில்தான் நிரப்பப்பட முடியும்" என்று குடியரசு தலைவருக்கே கோப்பைத் திருப்பி அனுப்பினார் என்றால் பார்ப்பனர்களின் இனவுணர்வைத் தெரிந்து கொள்ளலாம். 

நீதிபதி பதவிகளை மாநில அரசுகளின் பரிந்துரையின் அடிப்படையில், குடியரசுத் தலைவரே நியமனம் செய்ய வேண்டும் என்றிருந்த சட்டப்படியான நிலைமை, உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பைத் தங்களுக்குத் தாங்களே வழங்கிக் கொண்டு, குடியரசு தலைவருக்கு இருந்த அதிகாரத்தையே பறித்துக் கொண்டு விட்டதே!

நாடு சுதந்திரம் அடைந்தாலும் ஆதிக்கம் பார்ப்பனர்களின் கைகளில் தான் இருக்கும் (BrahminoCracy) என்று இன்றைக்கு 97 ஆண்டுகளுக்கு முன்பே (1925) சேலம் பொதுக் கூட்டத்தில் தந்தை பெரியார் சொன்னதுதான் எத்தனைத் தொலைநோக்கு!

சென்னை உயர்நீதிமன்றத்தில் 55 நீதிபதிகளில் 12 பேர் பார்ப்பனர் என்பது எத்தகைய கொடுமை - சமூக அநீதி!

கேரள மாநிலத்தில் நடைபெற்ற பார்ப்பனர்கள் மாநாட்டில் இரண்டு உயர்நீதிமன்ற பார்ப்பன நீதிபதிகள் கலந்து கொண்டு, சண்ட பிரசண்டம் செய்கிறார்கள் என்றால், இதற்குப் பெயர் தான் தகுதி- திறமையா?

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த  பார்ப்பனர் ஒருவர் தன் பதிவேட்டில் தன் பிறந்த வயதைத் திருத்திப் பதவியை நீடித்துக் கொண்டதுண்டே!

அவர்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? குடியரசுத் தலைவராக இருந்த பார்ப்பனரான இராதாகிருஷ்ணன் அவர்மீது ஒரு துரும்பு, தூசுகூட விழாமல் ஒரு பைசா இழப்புமின்றிப் - பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படவில்லையா? ஓ, இதற்குப் பெயர்தான் தகுதி - திறமையா?

அதனால்தான் தந்தை பெரியார் சென்னை உயர்நீதிமன் றத்தில் இரு பார்ப்பன நீதிபதிகளின் முன்னிலையிலேயே  "பார்ப்பான் நீதிபதியாய் வாழும் நாடு கடும்புலி வாழும் காடு!" என்றார்.

நீதிபதிகள் நியமனத்தில் சமூகரீதியான பிரதிநித்துவம் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டமைக்கு எடுத்துக்காட்டு உண்டு.  திரு.எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த காலத்தில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் தேர்வில் ஜாதிவாரி பிரநிதித்துவம் இல்லை என்று காரணம் கூறி உயர்நீதி மன்ற தேர்வுக் குழு அனுப்பிய நீதிபதிகள் நியமனப் பட்டியல் திருப்பி அனுப்பப்பட்டது. அப்போது, இது ‘இம்மண்ணின் உளவியலுக்கு எதிரானது’(Soil Psychology) என்று அன்றைய சட்ட அமைச்சர் பொன்னையன் அவர்கள் சொன்னார்.

மதுரைப் பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட நீதித்துறையிலும் சமூகநீதி தேவை என்பது மிகவும் முக்கியமான அவசியமான தீர்மானமாகும்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் இருக்கும் 55 நீதிபதிகள் எண்ணிக்கையில் 12 பேர் பார்ப்பனர் என்பது 22 விழுக்காடாகும். 3 விழுக்காட்டினருக்கு 7 மடங்கு அதிகமாகும். இனி எஞ்சியிருக்கும் 20 நீதிபதி பதவிகளில் ஒரு பார்ப்பனருக்குக்கூட இடம் அளிக்கப்படக் கூடாது.

வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ள பல்வேறு சமுதாயத்தின ருக்கும் இடம் அளிக்கப்பட வேண்டும் என்னும் - திராவிடர் கழக மதுரைப் பொதுக்குழு தீர்மானத்தை சமூகநீதியில் அக்கறை உள்ள அனைத்துத் தரப்பினரும் வலியுறுத்துமாறு வலியுறுத்துகிறோம். 

No comments:

Post a Comment