ஒரு தேர்வில் தோல்வி அடைவதால் குடிமூழ்கிவிடாது! அதற்காகத் தற்கொலை என்பது கூடவே கூடாது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 22, 2022

ஒரு தேர்வில் தோல்வி அடைவதால் குடிமூழ்கிவிடாது! அதற்காகத் தற்கொலை என்பது கூடவே கூடாது

வகுப்புகளில் மனோதத்துவவாதிகள்மூலம் மாணவர்களுக்கு வழிகாட்டுதல்கள் தேவை!

தமிழர் தலைவர் ஆசிரியர்  அறிக்கை

ஒரு தேர்வில் தோல்வி அடைந்தால் ஒன்றும் குடிமூழ்கிப் போகாது. ஆனால், தேர்வில் தோல்வி அடைந்த 11 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது விபரீதமானது - துயரப்படவேண்டியது. வகுப்புகளில் மனோதத்துவவாதிகள் மூலம்  இருபால் மாணவர்களுக்கும் தன்னம்பிக்கையுடன் கூடிய வழிகாட்டுதலைக் கற்பிக்க ஏற்பாடு செய்யவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். 

அவரது அறிக்கை வருமாறு:

கடந்த 2 ஆண்டுகளில் 

கல்வி கற்பதில் ஏற்பட்ட தடைகள்

கடந்த இரண்டு ஆண்டுகளில் கரோனா - கொடுந்தொற்று காரணமாக 10 ஆம் வகுப்பு, 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தமிழ்நாட்டில் தேர்வு எழுதவே வாய்ப்பில்லை. (வகுப்புகள் இல்லாமலும், ஆன்-லைன் என்ற முறை யிலும் ஆங்காங்கே வீட்டிலிருந்த நிலையிலேயே நடந்தது) மாணவர்களும் முடங்கியிருந்த சூழ்நிலையும், அதன் காரணமாக ஒருவகை மன அழுத் தத்திற்கும்கூட ஆளானார்கள்.

அதுபோலவே, 8, 9 ஆம் வகுப்புத் தேர்வு எழுதாத மாணவர்கள் பல்லாயிரக்கணக்கில் - ஏன் லட்சக்கணக்கில்கூட உண்டு. பள்ளி மூடப்பட்டு இருந்ததும், தேர்வு நடத்த சூழ்நிலை இல்லாத காரணத்தாலும்.

இவ்வாண்டுதான் வகுப்புகள் ஓரளவு நடந்து முடிந்து பிளஸ் டூ மாணவர்கள் தேர்வு எழுதினார்கள்.

இதில் 4 லட்சத்து 6 ஆயிரத்து 105 மாணவிகளும், 3 லட்சத்து 49 ஆயிரத்து 893 மாணவர்களும் ஆக மொத்தம் - 7 லட்சத்து 55 ஆயிரத்து 998 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 93.76 விழுக்காடு.

முந்தையத் தேர்வு நடந்த ஆண்டை விட (2020) இது சற்று அதிகமாகும்.

ஆண்களைவிட பெண் மாணவிகள் அதிகம் வெற்றி!

8, 9 ஆம் வகுப்புத் தேர்வு முன்பு எழுதாத வாய்ப்பில்லா நிலையில், 'ஆல்பாஸ்' என்ற நிலையில், இப்போது 10 ஆம் வகுப்புத் தேர்வு - பொதுத் தேர்வு நடந்த நிலையில் -

10 ஆம் வகுப்புத் தேர்வு எழுதிய மாணவச் செல்வங்களில் 4 லட்சத்து 27 ஆயிரத்து 73 மாணவிகளும், 3 லட்சத்து 94 ஆயிரத்து 920 மாணவர்களும், மூன்றாம் பாலித்தவர் ஒருவரும் என 8 லட்சத்து 21 ஆயிரத்து 994 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

2019 ஆம் ஆண்டைவிட இந்தக்  கரோனா பாதிப்பு - தாக்கத்திற்குப் பிறகு 5 விழுக்காடு குறைவுதான்! என்றாலும், வருத்தப்படுவதற்கு ஒன்றுமில்லை; காரணம், சூழல்!

இத்தகைய தேர்வு முடிவுகளில் - வழமைபோல் - ஆண் மாணவர் களைவிட, பெண் மாணவிகளே அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர்! பெண்களின் கவனச் சிதறலின்மை ஒரு முக்கிய காரணம் ஆகும்!

தந்தை பெரியார் வழிநடக்கும் தமிழ் நாட்டு ‘திராவிட மாடல் ஆட்சி' பல ஆண்டுகளாக ‘‘பெண் கல்வி, பெண் கல்வி'' என்று முழங்கி முன்னுரிமை அளித்து வருதலும் முக்கிய காரணம் ஆகும்!

மாணவர்கள் தேர்வில் தோல்வியால் தற்கொலை என்பது ஒரு விபரீத முடிவு

இந்நிலையில், நாம் மகிழ்ச்சியை அனு பவிக்க முடியாத அளவுக்கு வந்துள்ள செய்தி - தேர்வு எழுதிய மாணவர்களில் 11 பேர் அதற்காக (தேர்ச்சியின்மை) மனமுடைந்து உயிரைப் போக்கிக் கொண்டுவிட்ட அதிர்ச்சிச் செய்தி நம்மைத் துயரப்படுத்துகிறது! இது ஒரு விபரீத முடிவாகும்.

இந்தத் தேர்வுகளை வாழ்நாளில் எப்போதும் எழுதி வெற்றி பெறலாமே!

ஒரு தேர்வில் தோற்றால் 

குடியா மூழ்கிப்போகும்?

ஒருமுறை தேர்வில் தோற்றால் என்ன குடியா முழுகிவிடும்? பலவீனமான மாணவச் செல்வங்களுக்கு... மன அழுத் தம் ஏற்படாத அளவுக்கு வெற்றிக்குக் கொடுக்கும் முக்கியத்தில், ஒரு முக்கிய பங்காக தோற்றாலும் மன உறுதியோடு அதை எதிர்கொண்டு மீண்டும் எழுதி வெற்றிக் கனி பறிக்கலாம். தேர்வில் தோல்விமூலம் ‘நமக்கு எல்லாமே போய்விட்டது' என்று கருதி உயிரை மாய்த்துக் கொள்ளும் மன பலவீனத்திலிருந்து மாணவர்களை மீட்டெடுக்க வேண்டும்.

இதில் பெற்றோர் - ஆசிரியர்கள் - பொதுநலவாதிகள் அனைவரது பங் களிப்பும் முக்கியம்!

மனோதத்துவவாதிகளின் 

வழிகாட்டுதல் அவசியம்!

வகுப்பறைகளில் மனோ தத்துவவாதி களை அழைத்துப் பொதுவாகப் பேசுவது போல - ''வாழைப் பழத்தில் ஊசியை ஏற்றுவதுபோல'' மென்மையாகப் பேசிப் பேசி தோல்வியையும் எதிர்கொள்ளும் மனப் பக்குவத்தை மாணவ - மாணவி களிடையே உருவாக்குவது அவசியம்!

மாணவ, மாணவிகளே அவசரப்பட்டு இப்படி முடிவு எடுக்காதீர்கள் - அது யாருக்கும் நல்லதல்ல!

உங்கள் பெற்றோரை, உறவுகளை, நண்பர்களை ஒருகணம் எண்ணிப் பாருங்கள்!

 கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

22.6.2022


No comments:

Post a Comment