தமிழ்நாடு அரசைப் பற்றி அவதூறு பரப்புவதா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 12, 2022

தமிழ்நாடு அரசைப் பற்றி அவதூறு பரப்புவதா?

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்த பிறகு வட இந்திய ஊடகங்கள் தொடர்ந்து திட்டமிட்டு மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர் களின் தலைமையிலான ஆட்சியை மோசமான ஆட்சி என்று - வட இந்தியாவில் முக்கியமாக பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநில மக்களிடையே வதந்திகளைப் பரப்பி வருகின்றன.

இங்குள்ள பா.ஜ.க.வினர் பொய்ச் செய்திகளை திட்டமிட்டு ஹிந்தியில் மாற்றம் செய்து தர அதை அப்படியே இந்தி அலை வரிசைகள் ஒளிபரப்பி வருகின்றன.

சாமியார் ஆதித்யநாத்தின் பினாமி தொலைக் காட்சியான சுதர்சன் செய்தி (ஹிந்தி) நிறுவனம் பொய்ச் செய்திகளை வெளியிட அதை அப்படியே மற்ற செய்தி நிறுவனங்களும்  வெளியிட்டு வருகின்றன. அதன்படி  சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டு தேவாலயங் களுக்கும், இஸ்லாமிய வழிபாட்டுத்தலங்களுக்கும் மின்சாரக் கட்டணத்தில் சலுகை வழங்கப்படுவதோடு ஹிந்துக் கோயில்களுக்கு பல மடங்கு மின்சாரக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. என்றும் தமிழ்நாடு பா.ஜ.க. பிரமுகர்  ஒருவர் தொலைக்காட்சி விவாதத்திலேயே பச்சைப் பொய்யைக் கூறினார். அதற்கு அப்போதைய அ.தி.மு.க. அரசு எந்த ஒரு மறுப்பும் கூறாமல் அமைதி காத்தது.

இப்போது அதே செய்தியை ஹிந்தியில் வெளி யிட்டுள்ளனர். 'நோய் வாய்ப்பட்ட மதச் சார்பின்மை' என்று கேலித்தலைப்பிட்டு இதுதான் தமிழ்நாட்டில் ஹிந்துக்கள் மீதான பாகுபாடு. அங்கு "ஹிந்து விரோதக் கட்சியின் ஆட்சி - ஹிந்துக் கோவில்களுக்கு கூடுதல் மின் கட்டணம்" என்ற தலைப்பில் செய்தி வெளியிட் டுள்ளனர். சுதர்ஷன் செய்தித் தொலைக்காட்சியின் உண்மையான உரிமையாளர் சாமியார் ஆதித்யநாத் ஆவார். அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது 2012ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. அது தொடர்ந்து மத விரோத செய்திகளை மட்டுமே வெளியிட்டு வந்தது.

அதன் தலைமை ஆசிரியர் ராம்தாஸ் சவன்கே ஹிந்தியில், தமிழ்நாட்டு ஆட்சியாளரான ஹிந்து விரோதி ஸ்டாலின் அரசினர் - மசூதிகளிலும், தேவாலயங்களிலும் யூனிட்டிற்கு ரூ.2.15 வசூல் செய்கின்றனர் என்று செய்தி வெளியிட்டார். இந்த செய்தியை, இவர்களது அலை வரிசையிலிருந்து பெறப்பட்டது என்ற குறிப்போடு வடக்கே பிரபல செய்தி தொலைக்காட்சிகள் வெளியிட்டு வருகின்றன.

வட இந்திய மக்களிடையே தமிழ்நாடு அரசு குறித்த மோசமான சிந்தனையை விதைத்து வருகின்றனர். தமிழ்நாடு அரசு இதனை தடுக்காவிட்டால் இவர்கள் தொடர்ந்து இதுபோன்ற போலிச் செய்திகளை வெளி யிட்டு, தமிழ்நாட்டிற்கு அவப்பெயரை ஏற்படுத்திக் கொண்டே இருப்பார்கள்.

நாகரிகம், ஒழுக்கம், நேர்மை இல்லாத கட்சி  என்று ஒன்று உலகில் இருக்கிறது என்றால், அது சங்பரிவாரும், அதன் அரசியல் வடிவமான பிஜேபியும்தான்.

இந்தியாவிலேயே முதன்மையான முதல் அமைச்சர் என்ற நற்பெயரை சிதைப்பதுதான் இவர்களின் நோக்கமாகும்.

அங்கும் 'திராவிட மாடல் ஆட்சி' என்ற சொற்கள் அதிகம் புழக்கத்திற்கு வந்து உள்ள நிலையில் பார்ப்பன சக்திகளின் வயிற்றைப் பெரிதும் கலக்க ஆரம்பித்து விட்டது. இதன் தாக்கம் வெளிமாநிலங்களிலும் பரவி விடும் என்ற பயம் அவர்களை உதைக்கிறது.

இந்தக் கட்டத்திலேயே தமிழ்நாடு அரசு இதில் தலை யிட்டு உரிய நடவடிக்கையை எடுக்குமாறு வலியுறுத்து கிறோம்.

No comments:

Post a Comment