சில வரிகளில் அறிவியல் செய்திகள் ஹைட்ரஜன் யுகம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 16, 2022

சில வரிகளில் அறிவியல் செய்திகள் ஹைட்ரஜன் யுகம்!

ஜப்பானில் ஹைட்ரஜனை முதன்மை எரிபொருளாக ஆக்கத் திட்டமிட்டுள்ளது டொயோட்டா. இதற்கென மலிவு விலை ஹைட்ரஜனை தயாரிக்கும் ஆலைகளை டொயோட்டா நிறுவி வருகிறது. டொயோட்டாவின் மாற்று எரிபொருள் பிரிவான, 'வோவன் பிளானட்', பாதுகாப்பான ஹைட்ரஜன் கலன்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது. வீட்டு சமையல் எரிவாயு கலன், வாகனங்களில் கழற்றி மாட்டுவதற்கு ஏற்ற எரிபொருள் கலன், தொழிற்சாலைகளுக்கான பெரிய ஹைட்ரஜன் தொட்டி என்று பல அளவுகளில் வடிவமைக்கப் பட்டிருக்கின்றன. ஜப்பான் ஹைட்ரஜன் நாடாகிவிடுமா?

அருமையான கணினி!

அமெரிக்காவின் டென்னசி மாகாணத்திலுள்ள, ஓக் ரிட்ஜ் தேசிய ஆய்வகத்தில் இருக்கிறது, 'பிரான்டியர்' என்ற கணினி. இதை உலகிலுள்ள அதிதிறன் கணினிகளை பட்டியலிடும் 'டாப் 500' என்ற இணையதளம், உலகின் முதலாவது 'அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர்' என்று மதிப்பிட்டு உள்ளது. அது மட்டுமல்ல, உலகின் முதலாவது 'அதிவேக செயற்கை நுண்ணறிவுத் திறன் கொண்ட கணினி' என்ற சிறப்புப் பட்டத்தையும் டாப் 500 தளம், பிரான்டியருக்கு வழங்கியுள்ளது.

வேளையறிந்து பயிற்சி செய்!

எப்போது உடற்பயிற்சி செய்யலாம்? இதில் ஆண்-, பெண் வேறுபாடு உண்டு என்கின்றனர். நியுயார்க்கிலுள்ள ஸ்கிட்மோர் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள். ஆண்களுக்கு எவ்வகை பயிற்சிகளையும் செய்ய மாலைநேரமே சரி. ஆனால், பெண்களின் நோக்கத்தைப் பொறுத்து பயிற்சி நேரம் மாறுபடும். உடல் கொழுப்பைக் கரைக்க பெண்களுக்கு, காலை வேளை உடற்பயிற்சி உகந்தது. தசை வலுவைக் கூட்ட, மாலையில் பெண்கள் உடற்பயிற்சி செய்யலாம் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பறவைகளை விரட்டும் ட்ரோன்!

பயிர்களை நாசமாக்கும் பறவைகளை விரட்ட, சோளக்கொல்லை பொம்மை, படபடக்கும் ரிப்பன் போன்றவை பலனளிப்பதில்லை. எனவே, இதற்கு தானியங்கி ட்ரோன்கள் தான் சரி என்கின்றனர், அமெரிக்காவின் வாசிங்டன் பல்கலைக் கழக விஞ்ஞானிகள். ட்ரோன்களுக்கு கழுகு போன்ற பறவைகளின் தோற்றத்தைத் தருவது, சுழலும் விசிறிகளுக்கு மின்னும் வண்ணம் பூசுவது போன்ற உத்திகளை அவர்கள் முயன்று வருகின்றனர். பறவைகளைக் கொல்லாமல், அருகே சென்றாலே, அவற்றின் மிரட்டலான 'உய்ங்' ஓசையால் பறவைகள் மிரண்டு பறந்துவிடும்.


No comments:

Post a Comment