இந்தி எதிர்ப்பு மாநாட்டு முழக்கங்கள் - 4.6.2022 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 5, 2022

இந்தி எதிர்ப்பு மாநாட்டு முழக்கங்கள் - 4.6.2022

 தோழர் இரா. முத்தரசன்

இந்தியை எதிர்த்தால் நாங்கள் தேச விரோதிகளா? 89 வயதில் தமிழர் தலைவர் இந்தியை எதிர்க்க தார் சட்டியைத் தூக்கிக் கொண்டு போராடக் கிளம்புகிறார். இளைஞர்கள் சும்மா இருப்பார்களா? தார் டின்னையே தூக்கிக் கொண்டு கிளம்பி விடுவார்கள்.... எச்சரிக்கை!

பேராசிரியர் சுப.வீரபாண்டியன்

1955- தேசியக் கொடி எரிப்புப் போராட்டத்தை தந்தை பெரியார் முன்னெடுத்தார். இந்தி திணிப்பு கிடை யாது என்று பிரதமர் வாக்குறுதி கொடுத்தபோது "சரி போராட்டத்தை ஒத்தி வைக்கிறேன்!" என்றார் தந்தை பெரியார்.

தமிழர் தலைவர் அவசியப்படும் பொழுதெல்லாம் போராட்டத்தை உயிர்ப்பித்துக் கொண்டுள்ளார். 

"திராவிட இயக்கப் போர்வாள்" வைகோ

திருவண்ணாமலையில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டுக்குத் தலைமை வகித்த போதே அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள் இந்தியின் அபாயத்தை எச்சரித்தார்.

1938, 1948, 1965 போராட்டங்களைப் பட்டியலிட்ட திராவிட இயக்கப் போர்வாள் வைகோ திராவிடர் கழகத் தலைவர் தலைமையில் அணி வகுப்போம் என்றார்.

டி.கே.எஸ். இளங்கோவன்

இந்தி என்ன செய்யும் என்ற கேள்வியை எழுப்பிய திமுக செய்தித் தொடர்பு செயலாளர் - அது நம்மைச் சூத்திரராக்கும் - சூத்திரத் தன்மையை நிலைக்க வைக்கும் என்றார்.

இந்தி பேசும் மாநிலங்கள் வளர்ச்சி அடையாதவை - இந்தி பேசாத மாநிலங்கள்தான் வளர்ச்சி அடைந்தவை! மொழிக்கும் - வளர்ச்சிக்கும் தொடர்பு உண்டு. 

எழச்சித் தமிழர் தொல். திருமாவளவன்

நீட்டாக இருந்தாலும் சரி, இந்தியாக இருந்தாலும் சரி உரிய நேரத்தில் மாநாடுகளையும், போராட்டங்களையும் எழுச்சியுடன் நடத்துபவர் நமது தமிழர் தலைவர் அவர்கள்.

இன்றைக்குச் சில பேர் திராவிடத்தைக் கொச்சைப் படுத்த கிளம்பியுள்ளனர். திராவிடத் தத்துவம் என்பது நிலத்தைச் சார்ந்ததல்ல - கோட்பாட்டை, தத்துவத்தைச் சார்ந்தது.

ஆரியத்துக்கு எதிரானது திராவிடம்.

தந்தை பெரியாருக்கு முன்னதாகவே ஆதி திராவிட  மகாசபையை உண்டாக்கியவர் அயோத்திதாசப் பண்டிதர்.

தந்தை பெரியாரை எதிர்க்கும் தமிழ்த் தேசியவாதிகள் பண்டிதரை எதிர்க்க முன் வராதது ஏன்? தந்தை பெரியாரை மட்டும் எதிர்ப்பது ஏன்? திராவிடத்தை, பெரியாரை எதிர்ப்பவர்கள் பார்ப்பனர்களுக்குத் துணைபோகும் பிற்போக்கு சக்திகள்.

மாண்புமிகு மா. சுப்பிரமணியன்

இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 11ஆம் தீர்மானம் கூறியுள்ளபடி ஒன்றிய அரசு அறிவிக்கும் திட்டங்களின் பெயர்கள் எல்லாம் இந்தி - சமஸ்கிருதப் பெயர்கள்தான். இந்த நிலை இருந்தால் இந்தி - சமஸ்கிருதம் தெரியாத மக்களுக்கு அவை எப்படி போய் சேரும்? என்ற வினாவை எழுப்பினர். 

தமிழர் தலைவர் ஆசிரியர்

பார்ப்பனீயம் என்பது மூளைக்குப் போடப்பட்ட விலங்கு. ஆரியர் - திராவிடர் என்பது ரத்தப் பரீட்சை அல்ல! அது ஒரு சித்தாந்த போர். வணக்கம் என்றால் திராவிடம். நமஸ்காரம் என்றால் ஆரியம்.

இந்திய யூனியனில் டெரிடெரியைச்  சேர்த்து இந்தியாவில் 35 மாநிலங்கள்.  இந்தி பேசப்படுவதாகக் கூறும் மாநிலங்கள் வெறும் 12 தான். ஆனால் இந்தியா முழுவதும் அதிக மக்களால் பேசப்படும் மொழி இந்தி என்பது பொய்!

சிங்கப்பூரில் 4 மொழிகள் ஆட்சி மொழிகளாக உள்ளன. அங்கே பெரும்பாலான மக்கள் பேசும் மொழி சீனம் என்பதால் அதை ஆட்சி மொழியாக்கினார்களா? இல்லையே! என்ற அறிவார்ந்த வினாவை எழுப்பினார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி. 

No comments:

Post a Comment