'விடுதலை’ ஏடு பெற்ற விழுப்புண்கள் - பாரீர்! இப்படி ஒரு நெருப்பாற்றில் நீந்தி மீண்ட நாளேடு வேறு உண்டா? சிந்திப்பீர், இளைய தலைமுறையினரே! -2 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 25, 2022

'விடுதலை’ ஏடு பெற்ற விழுப்புண்கள் - பாரீர்! இப்படி ஒரு நெருப்பாற்றில் நீந்தி மீண்ட நாளேடு வேறு உண்டா? சிந்திப்பீர், இளைய தலைமுறையினரே! -2

கி.வீரமணி, ஆசிரியர், ‘விடுதலை’நமது ‘விடுதலை’ நாளேடு, நமது ஒடுக்கப்பட்ட, உரிமை மறுக்கப்பட்ட மக்கள் - அவ்வுரிமைகளைப் பெறவும், மூட நம்பிக்கைகளிலிருந்து விடுதலையாகி, பகுத்தறிவின் பயன்பட்டால் உலகில் போற்றத்தக்க சமுதாயமாக ஆக வேண்டும் என்பதற்காகவும், எத்த னையோ லட்சம் ரூபாய்கள், பொருள் இழப்பானாலும் கூட, சமுதாயத்திற்கும், மக்களுக்கும் அறிவிலும், மனத் திலும் லாபம் என்பதால், 88 ஆண்டுகள் எதிர்நீச்சல் போட்டு நடைபெற்றுவரும் ஓர் அதிசய நாளேடு!

ஒரு இலட்சிய, கொள்கை நாளேடு - சமூகப் புரட்சிக்கான கருத்தியல் போருக்கான பயணத்தில், இது காகிதம் அல்ல - ஆயுதம் - அறிவாயுதம் என்று உணர்த்தும் வகையில் அது சந்தித்துள்ள எதிர்ப்புகளை, அரசின் அடக்குமுறை காரணமாக விழுப்புண்களையும் ஏற்று வீறுநடை போட்டு வந்துள்ள வரலாற்றுச் சுவடுகளைப் படித்துப் பாருங்கள். அதன் அறிவுப் புரட்சி, அமைதிப் புரட்சி எப்படிப்பட்ட ‘‘விலை’’ கொடுத்து வளர்ந்து வந்திருக்கிறது என்பது புரியும்.

விளையாட்டுக்காக அல்ல இந்த வீர நாளேடு -வினையாற்றி சமூகத்தை மாற்றுவதற்காகவே!

அனைவரும் சமம், சமத்துவ, சம வாய்ப்பே அதன் இலக்கு; சமூகநீதி  - அதனை அடைய வழி மானமும், அறிவும் பெற்ற மனிதர்களாக மக்களை உருவாக்குதல் என்பதே அதன் குறிக்கோள்.

சமூக, பொருளாதார, அரசியல் பண்பாட்டு விழிப்புணர்வு, மீள் பார்வை, மீட்டெடுக்கவே அதன் பயனுறு பயணம் என்பதைத் தொடங்குகையில் எவ்வளவு சங்கடங்களை, அடக்குமுறை அம்புகளை அதுவும் அந்நாளைய பிரிட்டிஷ் அரசிடமிருந்தும், அது எப்படி சந்தித்து மீண்டுள்ளது என்பதைப் புரிய பழைய நிகழ்வுகளை இங்கே தொகுத்து அளிக்கும் தொடர் இது!

படித்து அறிக, அறிந்து ஆதரவு தருக!

1935 ஆம் ஆண்டுக்குச் செல்வோமா?

அதன் தொடக்கத்திலேயே எப்படிப்பட்ட எதிர்நீச்சல், சோதனை, வழக்கு, தண்டனை, சிறைவாசம் அதன் ஆசிரியர், வெளியிடுவோருக்கு! 

இதயத்தைத் தாக்கும் செய்திகள் - தகவல்கள் அல்லவா இவை?

அதற்கு விடையாக, அக்கட்டுரை வெளிவந்த பத்திரிகையின் தேதி குறிப்பிடப்படுகின்றதே என நீதிபதி கூறினார்.

வழக்குத்தொடரும்படி சர்க்கார் அளித்துள்ள உத்தரவில் கட்டுரையின் இங்கிலீஸ் மொழி பெயர்ப்பு உத்தரவுடன் சேர்க்கப்பட்டிருப்பதாய்க் கூறப்பட்டிருக்கிறதென்றும் கட்டுரையின் கருத்தை நோக்கினால் ஆகஸ்ட் 19ஆம் தேதி வெளிவந்த கட்டுரையே வழக்குக்குக் காரணமானதெனத் தெரியவருமென்றும் கட்டுரையின் தலைப்பு மொழிபெயர்ப்பு தப்பாக இருந்தாலும் அதனால் பிராசிகியூஷன் உத்தரவுக்கு பாதகமேற்படாதென்றும் பப்ளிக் பிராசிகியூட்டர் வி.எல்.எத்திராஜ் தெரிவித்தார்.

அப்பால் பிராசிகியூஷன் ஆர்டர் சம்பந்தமாக ஒரு ஆட்சேபனை கிளப்பப்பட்டது.

மாகாண கவர்னரே மாகாண நிர்வாக அதிகாரி என்றும், கவர்னருக்கு யோசனை கூறவே மந்திரி சபைக்கு அதிகாரமுண்டென்றும், பிரஸ்தாப வழக்கு போன்ற வழக்குகளில் கவர்னரே பிராசிகியூஷன் உத்திரவு பிறப்பித்திருக்க வேண்டுமென்றும் எதிரித் தரப்பின் சர். எ.டி.பன்னீர்செல்வம் ஒரு ஆட்சேபனை கூறினார். நிர்வாக விஷயங்களில் கவர்னரைத் தவிர வேறு எவரையும் இந்திய சர்க்கார் சட்டம் ஒப்புக் கொள்ளவில்லை யென்றும் கவர்னருக்கு உதவி புரியவே மந்திரிகள் இருந்து வருகிறார்கள் என்றும் மேலும் சர். பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

“கவர்னர் உத்தரவுப்படி” என்று இருப்பதினால் கவர்னர் வழக்கு தொடர உத்தரவளித்தார் எனப் பொருள்படாதா என நீதிபதி கேட்டார்.

சென்னை சர்க்கார் உத்தரவளித்திருப்பதாகவே குறிப்பிடப்பட்டிருக்கிறதென்றும் ஆர்டரில் கவர்னர் உத்தரவளித்திருப்பதாகக் குறிப்பிடப்படவில்லை யென்றும் வழக்குத் தொடர ஆர்டர் கவர்னர் பெயரிலேயே பிறப்பிக்கப்பட வேண்டுமென்றும் சர். பன்னீர்செல்வம் பதிலளித்தார். பப்ளிக் பிராசிக்கியூட்டர் பதிலளிக்கையில் கௌன்சிலோடு கூடிய கவர்னர் அல்லது ஸ்தல சர்க்கார் என்பதற்குப் பதிலாக ‘மாகாண சர்க்கார்’ என்ற சொற்றொடரை உபயோகிக்கலாமென இந்திய சர்க்கார் சட்டம் ஒரு கௌன்சில் ஆர்டர் மூலம் திருத்தப்பட்டிருக்கிற தென்றும் ஆகவே பிராசிகியூஷன் ஆர்டர் கொடுக்கும் அதிகாரம் மாகாண சர்க்காருக்கே என்றும் பிரஸ்தாப விஷயத்தில் மாகாண சர்க்கார் என்பது சென்னை சர்க்காரே அன்று கவர்னர் அல்லவென்றும் சென்னை சர்க்கார் பிராசிகியூஷனுக்கு உத்தரவளித்து விட்டதனால் அந்த உத்தரவு கவர்னர் பெயரால் பிறப்பித்ததாகவே கருதப்பட வேண்டு மென்றும் கவர்னர் உத்தரவுப் படி என்றும் குறிப்பிடப் பட்டிருப்பதினால் ஆர்டர் செல்லத்தக்கதே என்றும் எதிர்தரப்பு ஆட்சேபனை செல்லத்தக்கதல்ல வென்றும் தெரிவித்தார்.  

ஸர்.பன்னீர்செல்வம் பதிலளிக்கையில் கவர்னர் பெயரால் ஆர்டர் பிறப்பிக்கப்பட்டிருந்தாலும் கவர்னர் நேரடியாக பிறப்பிக்கவில்லை யென்றும் இந்திய சர்க்கார் சட்டம் கவர்னரை மட்டுமே ஒப்புக் கொண்டிருப்பதனால் கவர்னர் நேரடியாக உத்தரவு பிறப்பிக்காத எந்த வழக்கையும் எந்தக் கோர்ட்டும் விசாரணை செய்யக்கூடாதென்றும் விளக்கினார்.

கவர்னர் உத்தரவுப்படி சென்னை சர்க்கார் பேரால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது என நீதிபதி தெரிவித்தார்,

அதற்கு ஸர். பன்னீர்செல்வம் பதிலளித்ததாவது:

“மாகாண நிர்வாகம் நடத்த கவர்னருக்கு மூன்றே மூன்று வழிகள் தானுண்டு. ஒன்று கவர்னர் யுக்திப்படி நடத்துவது, இரண்டாவது தன் சொந்தப் பொறுப்பில் நடத்துவது, மூன்றாவது மந்திரிமார் யோசனைப்படி நடத்துவது, சென்னை சர்க்கார் இந்திய சர்க்கார் சட்டத்தால் சிருஷ்டிக்கப்பட்டதே.ஆகவே சர்க்கார் உத்தரவுகள் எல்லாம் கவர்னர் பேராலேயே பிறப்பிக்கப்பட வேண்டும். எனவே இந்த பிராசிக்கியூஷன் உத்தரவு செல்லுபடியாகாது. தயவு செய்து நீதிபதி ஹைக்கோர்ட்டு அபிப்ராயம் அறிய முயலவேண்டும்.

எதிரிதரப்பு ஆட்சேபனைகளுக்குப் பின்னால் உத்தரவு பிறப்பிக்கப் படுமென்றும் வழக்குத் தீர்ப்புக் கூறுகையில் அதுபற்றிப் பிரஸ்தாபிக்கப் படுமென்றும் நீதிபதி தெரிவித்தார்.

எதிர்தரப்பில் சில சாட்சிகளை விசாரணை செய்யப் போவதாய் சர். பன்னீர்செல்வம் கூற 1934 ஜனவரி 5ந் தேதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

(‘குடி அரசு‘, 6.11.1938)

முசிரி ‘விடுதலை’ வழக்கு. 11.1.39ஆம் தேதி தீர்ப்புக் கூறப்படும்

(நமது நிருபர்)

திருச்சி, ஜன. 6 - திருச்சி ஜில்லா போர்டு தேர்தல் சம்மந்தமான ஒரு செய்தியை 27.5.1938-ந்தேதி ‘விடுதலை’ யில் வெளியிட்டதாக முசிரி டிவிஷனல் மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் ஒரு மானநஷ்ட வழக்கை தோழர் வீரப்பன் என்ற ஒரு காங்கிரஸ்காரர் தொடர்ந் திருந்தார். நேற்றோடு டிபன்ஸ் விசாரணைகளும் முடிந்துவிட்டன. மாஜிஸ்டிரேட் 11-1-1939ந் தேதி தீர்ப்பு கூறுவதாக நேற்றுக் கூறினார். தோழர்கள் முசிரி பெத்துப்பிள்ளை என்.எஸ். கந்தசாமி ஆகியவர்கள் விசாரிக்க வேண்டுவதில்லை என கூறப்பட்டுவிட்டது. பிரபல கிரிமினல் வக்கீல் தோழர் எஸ். ஜெ. ரெத்தினசாமி “விடுதலை”க்காக ஆஜரானார்.

(‘குடி அரசு', 8.1.1939) 

 ‘விடுதலை’ ‘குடி அரசு’க்கு 2000-ரூபாய் ஜாமீன் பிரஸுக்கும் ரூ. 1000 ஜாமீன்

கோயமுத்தூர், ஜன.4- ஈரோட்டிலிருந்து வெளி வரும் ‘விடுதலை’ தினசரிக்கும், ‘குடி அரசு’ வாரப் பத்திரிகைக்கும் தனித்தனியாக ரூபாய் ஆயிரம் ஆயிரமாக ரூ 2000 ஜாமீனும், பிரஸுக்கு வேறு ரூ.1000 ஜாமீனும் இன்று சென்னை சர்க்காரால் வாங்கப்பட்டு பிரசுரகர்த்தாவாயும் பதிப்பாளாராகவும் மிருந்த தோழர் ஈ.வெ.கிருஷ்ணசாமி அவர்களுக்குக்குப் பதிலாக தோழர் அ. பொன்னம்பலம் பேருக்கு டிக்கலரேஷன் மாற்றப்பட்டிருக்கிறது.

(‘குடி அரசு', 8.1.1939).

(தொடரும்)


No comments:

Post a Comment