1946 இல் கருஞ்சட்டைப்படை மாநாட்டுப் பந்தல் எரிக்கப்பட்ட மதுரையில் வரும் 25 ஆம் தேதி திராவிடர் கழகத்தின் பொதுக்குழு விபீஷணர்களின் துணை கொண்டு காவிகள் ஊளையிடுகின்றன முக்கியமான காலகட்டத்தில் நடக்கும் மதுரை பொதுக்குழுவுக்கு வாரீர், தோழர்களே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 23, 2022

1946 இல் கருஞ்சட்டைப்படை மாநாட்டுப் பந்தல் எரிக்கப்பட்ட மதுரையில் வரும் 25 ஆம் தேதி திராவிடர் கழகத்தின் பொதுக்குழு விபீஷணர்களின் துணை கொண்டு காவிகள் ஊளையிடுகின்றன முக்கியமான காலகட்டத்தில் நடக்கும் மதுரை பொதுக்குழுவுக்கு வாரீர், தோழர்களே!

தமிழர் தலைவர் ஆசிரியர்  அறிக்கை

மிக முக்கியமான காலகட்டத்தில் - விபீஷணர் களின் துணையோடு காவிகள் ஊளையிடும் ஒரு தருணத்தில் மதுரையில் நடக்கவிருக்கும் திராவிடர் கழகப் பொதுக்குழுக் கூட்டத்திற்கு அழைப்பினை விடுத்து, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். 

அவரது அறிக்கை வருமாறு:

கழகத்தின் கருஞ்சட்டைக் காவலர்களே, லட்சியப் பாதையில் ஏறு நடைபோடும் என்னருந் தோழர்களே!

மதுரையில் 5 ஆண்டுகளுக்குப்பின், மீண்டும் ஒரு வரலாறு படைக்கப் போகும் கழகத்தின் மத்திய நிர்வாகக் குழுக் கூட்டத்தை (25.6.2022), மதுரை மாநகர திராவிடர் கழகம், மாவட்ட திராவிடர் கழகம், ப.க. போன்ற அமைப் புகள் - அனைவரும் அணிதிரண்டு ஆர்வத்துடன் ஆர்வமிகு மதுரை செயல்வீரரான அமைப்புச் செய லாளர் மதுரை வே.செல்வம் தலைமையில் தேனீக் களாகப் பறந்து பறந்து செயலாற்றி, மீண்டுமொரு முத்திரை பதிக்க, பருவம் பாராது உழைக்கின்றனர் - அவர்கள் அழைக் கின்றனர் நம்மை!

மதுரையின் வரலாறு என்ன? 

1946 இல் கருஞ்சட்டை மாநாட்டுப் பந்தலுக்குத் தீ வைத்த பார்ப்பனக் கும்பல்

முன்பு 11.5.1946, 12.5.1946 ஆம் நாட்களில் மதுரையில் முதலாவது மாகாண கருப்புச் சட்டை மாநாடு வைகை ஆற்றுப் பாலத்தின் கீழ்ப்புறத்தில் பிரம்மாண்ட பந்தலில் முதல் நாள் சிறப்பாக நடந்ததைப் பொறுக்க முடியாத பார்ப்பனர்கள், இரவோடு இரவாக மாநாட்டுப் பந் தலுக்குத் தீ வைத்தனர் - நகருக்குள் வந்த கருஞ்சட்டையினர்மீது பொய் பழிப் பிரச்சார அவதூறுகளால் தாக்கினர்!

மாநாட்டை இரண்டாம் நாள் நடத்தவிடாமல் காவல்துறைமூலம் கச்சிதமாக தமது கரவு நெஞ்ச எண்ணத்தை அன்றைய வைத்தியநாதய்யர் கூட்டம் கூலிகள் துணையோடு நிறைவேற்றி, வெற்றி என அகமகிழ்ந்தது. அதனால் அய்யா அறிக்கை; அண்ணா ‘மரண சாசனம்' பிறந்தது!

அதே மதுரைதான் பெரியாருக்கு சிலை - அவர் முன்னிலையில் அமைத்துத் திறந்து ‘கழுவாய்' தேடியது!

கருஞ்சிறுத்தை பட்டாளம் இன்று அணிதிரண்டு ஆர்ப்பரித்து  அனைவரையும் வரவேற்க ஆயத்த மாகிறது. இந்தக் கொள்கை இயக்க நிலத்தில் - எதிர்ப்பு என்பது உரம் போட்டு நீர்ப் பாய்ச்சுவது அல்லவா!

பொய்ம்மைத் திரையைக் கிழிப்போம்!

முன்பைவிட இப்போது ஆரியம், விபீஷணியத்தின் துணைக் கொண்டு, காவிகளின் ஓலமும், ஊளைகளும் பெருகியிருக்கின்றன. திக்கெட்டும் புகழ்பரப்பும் இன்றைய ‘திராவிட மாடல்' ஆட்சி என்று பெரும் புகழுடன் நடைபெறுவதை சகிக்காது, அவதூறு பரப்பிவரும் பொய்ம்மைத் திரையைக் கிழித்துப் பொதுமக்களுக்கு விழிப்பேற்படுத்த மாலை மாபெரும் பொதுக்கூட்டம் மதுரை அண்ணா நகரில் நடைபெறவும் இருக்கிறது!

பெரியார் என்ற பேராயுதத்துடன் நாம், நம் கொள்கை எதிரிகளை களத்தில் சந்திக்கும் பிரச்சாரப் பெரும் போரில், உண்மைகளைத் தோலுரித்துக் காட்ட அருமையான ஏற்பாடு!

அனைத்து முக்கிய பொறுப்பாளர்களே, கருஞ்சட்டைக் கடமை வீரர்களே!

மதுரையை நோக்கி வாரீர் தோழர்களே!

மதுரையை நோக்கி வாருங்கள்!

இடையறாத பணிதான் - என்ன செய்வது!

மரம் சும்மா இருந்தாலும், காற்று சும்மா இருக்கவிடுவதில்லையே!

தேவைப்படுகிறதே இப்போது - தேவையை முன்னிறுத்துகின்ற ஆரியம் - சனாதனத்தை சந்திக்க மக்களை ஆயத்தப்படுத்த அறிவாயுதத்தின் வீச்சு - தேவையானதாகும்!

எனவே, நமது இயக்கத்தின் பேச்சு - இலட்சியத்தின் மூச்சு - திராவிடத்தின் வீச்சு!

மதுரையில் சந்திப்போமா, தோழர்களே!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

23.6.2022

No comments:

Post a Comment