முதலமைச்சரும் - பிரதமரும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 30, 2022

முதலமைச்சரும் - பிரதமரும்

ஒன்றிய அரசின் பிரதமர் நரேந்திரமோடி சென்னை வந்தார். நலத் திட்டங்களைத் துவக்கி வைத்தார் - அடிக்கல்லும் நாட்டினார். அரசு முறையில் வந்த பிரதமரை மரபுப்படி தமிழ்நாடு முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர்  தளபதி மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் வரவேற்றார்  - நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.

முதலமைச்சர் அவர்கள் சில முக்கிய கோரிக்கைகளை முன் வைத்தார். 

இதில் என்ன குற்றம் குறை இருக்கிறது? ஒரு பிரதமரிடம் ஒரு முதலமைச்சர் மாநிலம் தொடர்பான கோரிக்கைகளை வைப்பதைவிட வேறு கடமை  - வேறு எதுவாக இருக்க முடியும்? பிரதமரின் ஆடை அலங்காரத்தைப் பற்றியா பேச முடியும்?

முதலமைச்சர் கோரிக்கை வைப்பதே குற்றம் என்று சிலர் அத்துமீறிப் பேசுகிறார்கள்  - எழுதுகிறார்கள் என்றால் இதன் பொருள் என்ன?

பிரதமரை மகாமகா சாம்ராஜ்ய அதிபதி - அவரிடம் கோரிக்கை வைக்கலாமா என்று குறுநில மன்னர்களாக இருந்து கூவுகிறார்களா? ஒன்றும் புரியவில்லையே!

தமிழ்நாட்டுக்கான பிஜேபி தலைவர் வாய்க்கு வந்தவாறு பேசுகிறார். முதலமைச்சர் கோரிக்கைகளை வைத்தது கரும்புள்ளியாம். அவரைச் சொல்லிக் குற்றமில்லை. அவர் சார்ந்திருக்கிற கட்சியின் அடாவடித்தனமான சிந்தனையும் செயல்பாடுகளும் அந்த இரகத்தைச் சேர்ந்தவையே! 

நாட்டின் பெரும்பாலான மக்களைப் பாதிக்கக் கூடிய 'நீட்'டிலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்குக் கோரி எத்தனை எத்தனை முயற்சிகளை - தமிழ்நாடு அரசு எடுத்திருக்கிறது? அதற்கு எள் மூக்கு முனை அளவுக்கும் செவி சாய்க்காத வராயிற்றே பிரதமர்.

தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு எதிர்க்கிறது. அதனால் பயன் இருக்கிறது என்று மட்டும் பிரதமர் பேசலாமா - என்று எதிர் கேள்வியை  அவர்கள் பாணியிலே நாம்கூட வைக்கலாமே!

'தினமலர்' ஏடு ஒருபடி மேலே சென்று தாண்டிக் குதிக்கிறது. முதலமைச்சர் நடவடிக்கையால் பிரதமர் கோபம் அடைந் துள்ளாராம். பிரதமரின் அலுவலக அதிகாரிகள் கூறினார்களாம். பிரதமரின் அலுவலக அதிகாரிகள் 'தினமலரை' அழைத்துச் சொன்னார்களா? 'தினமலர்' ஆட்கள் பிரதமர் அலுவலகத்தில் உலவுகிறார்களா?

இவர்கள் விருப்பத்திற்கு எதையும் எழுதி, பிரதமர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர் - பேசினர் என்று எழுதுவது எல்லாம் பிரதமர் அலுவலகத்தையே கடும் விமர்சனத்துக்கு ஆளாக்குவது ஆகி விடாதா?

எப்படி எல்லாம் 'தினமலரின்' புத்தி மேய்கிறது என்றால், பிரதமரின் அருகில் முதலமைச்சர் நின்று ஒளிப்படம் எடுத்தால் அது சிறுபான்மையினருக்கு வருத்தத்தை ஏற்படுத்தும் என்று முதலமைச்சர் நினைத்திருக்கலாம் - அதனால் விலகி நின்றார் என்று தன் கைச் சரக்கை  அவிழ்த்துக் கொட்டுகிறது 'தினமலர்' (29.6.2022).

எதற்கெடுத்தாலும் இந்தக் கும்பலுக்கு குறி சிறுபான்மை மக்களான இஸ்லாமிய மக்கள்மீது தானா?

ஒரு பிரதமர் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பொது வானவர் என்ற நினைப்பே கிடையாதா? "மதச்சார்பின்மை"  (ஷிமீநீuறீணீக்ஷீ) என்ற சொல்லாடல் அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் இடம் பெற்று இருக்கிறதே - அந்த அரசமைப்புச் சட்டத்திற்கு உண்மையாக நடப்பேன் என்று சத்தியம் செய்துதானே அமைச்சர் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார்கள். அதன்படி நடக்கக் கடமைப்பட்டவர்கள் இல்லையா?

சுதந்திர தினத்துக்காக ஒன்றிய அரசு கொடுத்த அதிகாரப் பூர்வமான விளம்பரத்திலேயே 'செக்குலர்' என்ற சொல்லை நீக்கியவர்கள்தானே இவர்கள்.

அதிகாரம் கையில் இருப்பதால் ஆட்டம் போடலாம் என்று நினைக்க வேண்டாம்.

மன்னாதி மன்னர்கள் எல்லாம் வரலாற்றில் இருந்த இடம் தெரியாமல் போனதுண்டு. அதுவும் மக்கள் வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்படும் ஜனநாயக அமைப்பு முறையில், அதிகாரப் போதை கண்களை மறைக்குமானால், அதன் முடிவு பரிதாபமாகத்தான் இருக்க முடியும்.

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் முழு உருவச் சிலையை இந்திய குடியரசு துணைத் தலைவர் திறந்து வைத்து வானளாவிய அளவில் புகழ்ந்துப் பேசினாரே - இவர்மீதும் அவதூறுகளை அள்ளி வீசப் போகிறார்களா?

எந்த மொழியையும் திணிக்கக் கூடாது என்று பேசினாரே - துணைக் குடியரசு தலைவர் இதனைத்தானே தமிழ்நாடும் கூறுகிறது. தமிழ்நாடு பிஜேபி என்ன கூறப் போகிறது?

இது போன்றவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் கருத்துகள் துணைக் குடியரசு தலைவரின் உரையில் இருப்பதைக் கூர்ந்து கவனித்தவர்கள் உணர்வார்கள்.

பேசட்டும் - பேசட்டும் - எழுதட்டும் - அதன் எதிர்வினையை வட்டியும் முதலுமாக தமிழ்நாட்டு மக்கள் சேர்த்துக் கொடுப்பார்கள் என்பதில் அய்யமில்லை.

  

No comments:

Post a Comment