ஹிந்தி எதிர்ப்புத் தீ! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 4, 2022

ஹிந்தி எதிர்ப்புத் தீ!

ஹிந்தி எதிர்ப்புத் தமிழ்நாட்டில் ஒவ்வொரு கால கட்டத்திலும் மூண்டு எழுவதற்குக் காரணம் - ஏதோ ஒரு மொழியை எதிர்க்க வேண்டும் என்ற நோக்கில் அல்ல.

1937இல் சென்னை மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ராஜாஜி பிரதமராகப் பதவி ஏற்றார். பதவி ஏற்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக 'தட்சிண பாரத ஹிந்தி பிரச்சார சபா' விழாவில் பேசிய ஆச்சாரியார் (ராஜாஜி) "தற்போது உள்ளதைவிட வட இந்தியர்களை தென்னிந்தியர்கள் நன்றாகப் புரிந்து கொள்ள ஹிந்தி உதவும். இந்தியாவின் அரசியலிலும், வணிகத்திலும் ஹிந்தி அவசியமாகும். எனவே இந்தியைப் பள்ளிகளில் கட்டாய பாடமாக்கலாம் என்று கருதுகிறேன்" என்றார்.

1937 ஆகஸ்டு 10 அன்று சென்னை இராமகிருட்டிணா மாணவர் இல்லத்தில் பேசிய அவர் பள்ளிகளில் ஹிந்தி  கட்டாய பாடமாக்கப்படும் என்று அறிவித்தார்.

ஆச்சாரியாரின் இந்த அறிவிப்பை 'ஆனந்தவிகடன்' இதழ் ஆனந்தமாக வரவேற்று, "உயர் கல்வியில் சமஸ்கிருதத்தை விருப்பப் பாடமாக அறிமுகப்படுத்த வேண்டும்" என்று எழுதியது ('ஆனந்த விகடன்' 17.10.1937) 

வாயாடி சத்தியமூர்த்தி அய்யரோ, 'பூனைக்குட்டி வெளியில் வந்தது' - என்பதற்கு ஏற்ப "வருணா சிரம தருமத்தைப் பாதுகாக்கவும், இராம ராஜ்ஜியத்தை ஏற்படுத்தவும் ஹிந்தியுடன், சமஸ்கிருதத்தையும் பள்ளிகளில் கட்டாயப் பாடமாக்க வேண்டும்" என்றார் (மா. இளஞ்செழியன் எழுதிய 'தமிழன் தொடுத்த போர்' பக்கம் 80,81).

இந்தப் பின்னணியைப் புரிந்து கொண்டால்தான்; ஹிந்தியையும், சமஸ்கிருதத்தையும் புகுத்த ஒன்றிய அரசு ஏன் காலில் கட்டை கட்டிக் கொண்டு ஆடுகிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

தேசிய கல்விக் கொள்கையில் மூன்றாவது மொழியாக கொல்லைப்புறம் வழியாக தந்திரமாகப் புகுத்துவதனுடைய நோக்கமும் வெளிப்படும்.

விருப்பப் பாடமாக இருந்த ஜெர்மன் மொழியைத் தூக்கி எறிந்து விட்டு, அந்த இடத்தில் சமஸ்கிருதத்தைக் குந்த வைக்கும் பார்ப்பனீயத்தின் சூட்சமமும் புலனாகும்.

இப்பொழுது மேலும் வெளிப்படையாக ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அமித்ஷா - ஏற்கெனவே பிரதமர் நேரு கொடுத்த வாக்குறுதியைக் கழிப்பிடத்தில் கசக்கி எறிந்து விட்டு, 'ஆங்கிலம் இருக்கும் இடத்தில் ஹிந்திதான்' என்று ஓங்கி அடித்துக் கூறி விட்டார்.

இதற்கு மேலும் ஒன்றிய அரசின் நோக்கத்தைத் தெரிந்து கொள்ள எந்த ஆதாரத்தைத் தெரிந்துகொள்ளக் காத்திருக்க வேண்டும்?

ஆரியத்தின் ஆணி வேரைத் துல்லியமாக அறிந்து அதன் மூலத்தைத் தாக்குவதில் எப்பொழுதுமே தந்தை பெரியார் அவர்களும் சரி, அவர்களால் உண்டாக்கப்பட்ட திராவிடர் கழகமும் சரி, அதன் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களும் சரி குறியாக இருப்பதுதான் வரலாறு.

அதனுடைய வீச்சுதான் கடந்த சனியன்று (30.4.2022) சென்னையில் கிளர்ந்தெழுந்த - எழும்பூர் இரயில் நிலையத்தின் பெயர்ப் பலகையில் இடம் பெற்றுள்ள ஹிந்தி எழுத்துக்களை அழிக்கும் - போராட்டமாகும்.

திராவிடர் கழகத்தின் போராட்டம் என்றாலே அதில் ஒரு தனித் தன்மையும், வீரியமும் தலை தூக்கி நிற்கும்.

எதைச் செய்தால் எட்ட வேண்டிய இடத்திற்கு எட்டுமோ, சம்பந்தப்பட்டவர்களின் சிந்தனையை உலுக்குமோ அதைச் செய்வதுதான் திராவிடர் கழகத்தின் தனி முத்திரை!

குறுகிய காலத்தில் அறிவிக்கப்பட்ட போராட்டம்தான். 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திரண்டதுதான் அதன் தனித்தன்மை.

இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தோழர் இரா. முத்தரசன் அவர்கள் தார் டின்னையும், பிரஷையும் கழகத் தலைவரிடம் எடுத்துக் கொடுத்து போர்ச் சங்கு ஊதி வழியனுப்பியதும், அவரே உடன் நடந்து வந்ததும் - தமிழ்நாட்டின் தனித் தன்மையாகும்.

இந்தப் பிரச்சினையில் கட்சிகள் எங்களைப் பிரிக்காது என்ற உணர்வுக்கு அடித்தளமிட்டுச் சென்றவர் தந்தை பெரியார் - இதற்கு பெயர்தான் பெரியார் மண் - திராவிடப் பூமி என்பது.

500க்கும் மேற்பட்ட தோழர்கள் அணி வகுத்து - ஹிந்தி எதிர்ப்பு முழக்கமிட்டு மிகுந்த  கட்டுப்பாட்டுடன் இலக்கை நோக்கி நடந்து சென்ற காட்சி கண் கொள்ளாக் காட்சி - காவல்துறையினரே வியந்த நேர்த்தி!

போராட்டக் கிளர்ச்சிக்குத் தலைமை வகித்த திராவிடர் கழகத் தலைவர் தெளிவாகவே அறிவித்தார். "இது ஓர் அடையாளப் போராட்டமே! ஹிந்தித் திணிப்பு என்ற நிலை நீடிக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும்! தொடரும்!!" என்றார்.

வரும் ஜூன் 4ஆம் தேதி முற்பகல் சென்னைப் பெரியார் திடலில் ஹிந்தி எதிர்ப்புக் கருத்தரங்கமும், மாலை சென்னை சைதாப்பேட்டையில் ஹிந்தி எதிர்ப்பு திறந்த வெளி மாநாடும் நடைபெறும்.

பிள்ளைப் பூச்சியல்ல தமிழ்நாடு - தந்தை பெரியார் என்ற பீரங்கி வயிற்றில் பிறந்த கொள்கை வீரர்களின் கோட்டம் என்பதை உணர வேண்டியவர்கள் உணரட்டும்! உணரட்டும்!!

No comments:

Post a Comment