'பெரியார் பிஞ்சு' சிறுவர் மாத இதழ் சார்பில் பகுத்தறிவுடன் வாழ்வியலைக் கற்றுத்தந்த பழகுமுகாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 26, 2022

'பெரியார் பிஞ்சு' சிறுவர் மாத இதழ் சார்பில் பகுத்தறிவுடன் வாழ்வியலைக் கற்றுத்தந்த பழகுமுகாம்

தீச்சட்டி ஏந்தி மூடநம்பிக்கையை முறியடித்த பிஞ்சுகள்

வல்லம், மே 26- ‘பெரியார் பிஞ்சு’ சிறுவர் மாத இதழ் சார்பில் நடைபெற்ற பழகு முகாமின் நான்காம் நாளில் தஞ்சாவூர் அரண்மனைக்கு சுற்றுலா சென்று பல்வேறு பகுதிகளை சுற்றிப்பார்த்தனர்.

பெரியார் பிஞ்சு மாத இதழ் வழங்கும் பழகு முகாம் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல் கலைக்கழகத்தில் 22.05.2022 முதல் 26.05.2022 வரையிலான 5 நாள்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, நான்காம் நாளை (25.05.2022) எட்டியது. வழக்கமான காலை நேர நடைப்பயிற்சி, சிலம்பம், கராத்தே, ஏரோபிக்ஸ் ஆகியவற்றைத் தாண்டி இன்பச் சுற்றுலா, உலகம் உரு வான வரலாறு, வால் மியூரல் (சுவற்றில் வண்ண ஓவியங்கள் வரைதல்), சைல்டு லைன் நிகழ்வு, பெரியார் திரைப்படம் என்று நிகழ்ச்சி நிரல் அமைக்கப் பட்டிருந்தது.

சரபோஜி அரண்மனைக்கு சுற்றுலா சென்ற பெரியார் பிஞ்சுகள்!

நான்கு நாள் நிகழ்வில் பெரியார் பிஞ்சுகள் நீச்சல் பயிற்சியை அடுத்து பல்கலைக்கழக வளாகத்தை விட்டு வெளி யில் செல்வது இதுதான். வளாகத்திற்குள் என்றாலுமே பேருந்தில் ஏறியதுமே ஓஓஓ... வென்று குரல் எழுப்பி அந்த இடத்தையே கலகலப்பாக்கி விடுவார்கள். அதே பேருந்து வளாகத்தை விட்டு வெளியில் சென்றால் கேட்கவே வேண் டாம். நீச்சல் பயிற்சிக்குச் செல்லும் போது கூடுதலாக குரல் கேட்கும். இப்போது சுற்றுலா என்றவுடன், அதுவும் முதல் வகுப்பே சுற்றுலா என்றவுடன் உற்சாகம் கரைபுரண்டது. ஆர்வம் ஓஓஓ... வென்ற ஓசை பெரிதாக எழுந்தது. ஒருங்கிணைப் பாளர்களை அது தொடர்பான தகவல் களைச் சொல்லச்சொல்லி துளைத்தெடுத் தனர். பேருந்து புறப்பட்டது. வழியெல் லாம் காண்பவற்றைப் பற்றி தனது நண் பர்களிடம் வளவளவென்று பேசியவாறே வந்தனர். பேருந்து தஞ்சை சரபோஜி மன்னர் அரண்மனை வாசலில் நின்றது. முதலில் தஞ்சாவூர் தொடர்பான ஆவ ணப்படம் பிஞ்சுகளுக்கு திரையிட்டுக் காட்டப்பட்டது. தொடர்ந்து, கலைக் கூடம், 1600 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட நாயக்கர் கொலு மண்டபம், 26-.12-.1955 ஆம் ஆண்டு தரங்கம்பாடி கடற்கரையில் ஒதுங்கிய 92 அடி நீளம் உள்ள திமிங் கலத்தின் எலும்பு, மணிகோபுரம், மராத் தியர் தர்பார் கூடம், இரண்டாம் சர போஜியின் நினைவரங்கம், கி.பி.1684 ஆம் ஆண்டு கட்டப்பட்ட மன்னன் சகாஜியின் தர்பார் கூடம், பீரங்கிகள், அதற்கான பாறையிலான குண்டுகள், மன்னர் காலத்துச் சிவிகை, புகழ்பெற்ற சரஸ்வதி நூலகம் உள்ளிட்ட பல்வேறு வரலாற்றுப் பெருமை வாய்ந்த இடங்களைக் கண்டு களித்தனர். அங்கேயே பிஞ்சுகளுக்கு தர்பூசணிப் பழம் வழங்கப்பட்டது. 

இந்நிகழ்வில் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பர்வீன், ரமேஷ், ப.கீதா, அனுஷ்யா, சுந்தரராஜன், சர வணகுமார், ஜெயந்தி, சக்தி, மதுமிதா, கலைச்செல்வன், முகமது சமீர், பாண்டி யன், பிரின்சு என்னாரெசு பெரியார், உடுமலை வடிவேல் ஆகியோர் பெரியார் பிஞ்சுகளுடன் உடனிருந்தனர்.

வால் மியூரலும், பெரியார் பிஞ்சுகளும்!

அங்கிருந்து மறுபடியும் பல்கலைக் கழகத்திற்குப் பேருந்து திரும்பியது. அங்கே மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டது. அய்ன்ஸ்டின் அரங்கில் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், உலகம் உருவான வரலாறு என்ற தலைப்பில் காணொலிகளுடனும், மாணவர்களிடம் உரையாடியபடியும் கலகலப்பாக பாடம் நடத்தினார். மதிய உணவுக்குப் பிறகு, ஆர்க்கிடெக் கட்டட வளாகத்தின் பின்புற சுவற்றில் வால் மியூரல் எனப்படும் சுவரோவியம் வரையும் புதுமையான பணியில் பெரியார் பிஞ்சுகள் ஈடுபடுத்தப் பட்டனர். இதில் உதவிப் பேராசிரியர் கே.சித்ரா முன்னிலையில் உதவிப் பேரா சிரியர் அருள் யோகராஜ், மென்பொருள் துறையைச் சேர்ந்த யுகேஷ், அனந்தகுமார் ஆகியோரின் உதவியுடன் பிஞ்சுகள் இப்பணியை மேற்கொண்டனர். தாயும் சேயும் என்ற பொருளமைந்த ஓவியத்தை கே.பி.இனியா, இதழ்யா, இதயா, அனுவந் தனா, பிரதிக்‌ஷா ஆகியோர் பங்கேற்றனர். அங்கேயே உள்ள விளையாட்டரங்கில் மாணவர்கள் மனம்போனபடி விளையாட அனுமதிக்கப்பட்டனர். 

அங்கிருந்து மறுபடியும் பல்நோக்கு விளையாட்டரங்கிறகு பெரியார் பிஞ் சுகள் அழைத்துவரப்பட்டனர். அங்கே அவர்களுக்கு  சிற்றுண்டி வழங்கப்பட்டது. 

தீச்சட்டி ஏந்தி மூடநம்பிக்கை முறியடிப்பு

தொடர்ந்து துரை.சக்ரவர்த்தி விடுதி பொறுப்பாளர் அழகிரி தீச்சட்டி ஏற்பாடு செய்து பெரியார் பிஞ்சுகள், அவர்களுக்கு ஒருங்கிணைப்பாளர்களாக இருக்கக்கூடிய பயிற்சி ஆசிரியர்கள் ஆகியோருக்கு அந்த தீச்சட்டி தொடர்பான மூடநம்பிக்கை களை விளக்கி அனைவருக்கும் அதை கையில் ஏந்தும் வாய்ப்பை வழங்கினார். பெரியார் பிஞ்சுகள் நான், நீ என்று போட்டி போட்டவாறே கையில் ஏந்தி மகிழ்ந்தனர். அத்தோடு அது தொடர்பான பல்வேறு கேள்விகளை அழகிரியிடம் கேட்டுத் தெளிந்தனர். அதையடுத்து, சைல்டு லைன் அமைப்பின் சார்பில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்நிகழ்வில் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பேராசிரியர் பர்வீன், பொதுச்செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சைல்டு லைன் சார்பில் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலை பலகலை கழகத்தின் இணை பேராசிரியர் ஆனந்த ஜெரால்டு, எடின்பர்க் ஆகியோரும் சிறப்பு விருந்தினராக இங்கேயே படித்து, தனியார் பி.எட் கல்லூரியில் முதல்வராக பணியாற்றும் ஜான்வில்சன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஆனந்த ஜெரால்டு மாணவர்களுடன் உரையாடியபடியே சைல்டு லைன் பணிகள் பற்றியும், அதுதொடர்பான மாணவர்களுக்கு தேவையான விழிப் புணர்வையும் கற்றுக்கொடுத்தார். மாணவர்களும் இவ்வகுப்பில் சிறப்பாக பங்கேற்றனர். தொடர்ந்து விலையாட் டுகளை ஜான் வில்சன் கற்றுக்கொடுத்தார். 

முட்டிமோதும் இருவேறு எண்ணங்கள்!

அங்கிருந்து மறுபடியும் அய்ன்ஸ்டின் அரங்கிற்கு பிஞ்சுகள் அழைத்துவரப்பட்டு, அவர்கள் ஓயாமல் மீதி பெரியார் திரைப்படம் எப்போது திரையிடப் போகிறீர்கள் என்று கேட்டுகொண் டிருந்ததை நிறைவேற்றும் வண்ணம் பெரியார் திரைப்படத்தின் மீதி திரையிடப்பட்டு நேரமின்மை காரணமாக நிறுத்தப்பட்டு, இறுதிப்பகுதி நாளை திரையிடப்படும் என்று அவர்களுக்கு வாக்குறுதி அளித்துவிட்டு, சொர்ணா ரங்கநாதன் விடுதிக்கு அழைத்து வரப் பட்டு, உணவுக்குப் பிறகு அவரவர் அறைகளுக்கு சென்றனர். இது நான்காம் நாள் என்பதால் மற்ற நாள்களில் இல்லாத ஒரு உணர்வு அவர்களுக்கு ஏற்பட்டி ருந்தது. நண்பர்களுடன் மிகவும் நெருக்க மாக பழகியபிறகு நாளை அவர்களைப் பிரியப்போகிறோம் என்ற எண்ணமும், இங்கேயே இருந்துவிடலாம் என்று கூறி கொண்டிருந்தவர்களும் கூட, நாளைக்கு பெற்றோரைக் காணப்போகிறோம் என்ற கலவையான உணர்வுகளுடன் முட்டி மோதும் தவிப்புடன் நண்பர்களுடன் அளவளாவியபடியே படுக்கச் சென்றனர். இப்படியாக பழகு முகாமின் நான்காம் நாள் நிறைவுற்றது.

No comments:

Post a Comment