ஜிப்மரில் இனி எல்லாம் ஹிந்தியிலா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 9, 2022

ஜிப்மரில் இனி எல்லாம் ஹிந்தியிலா?

புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவ மனையில் ஹிந்தி மொழியைக் கட்டாயமாக்கும் வகையில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது

ஒன்றிய அரசு கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங் களில் அலுவல் ரீதியான பயன்பாட்டிற்கு ஹிந்தி மற்றும் ஆங்கிலம் பயன்படுத்தப்படும். இந் நிலையில், அலுவல் ரீதியான பயன்பாட்டை ஹிந்தியில் மட்டுமே மாற்றுவது தொடர்பான புதிய சுற்றறிக்கை ஒன்றை ஜிப்மர் இயக்குநர் பிறப்பித்துள்ளார். அதில்,  "ஒன்றிய அரசு அலுவ லகங்களின் பதிவேடுகள் மற்றும் கோப்புகளில் இதுவரை ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. இனி வரும் காலங் களில் அவை அனைத்தும் கட்டாயம் ஹிந்தி மொழியில் மட்டுமே பயன்படுத்தப்படும்" என அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசின் ஹிந்தித் திணிப்பு நட வடிக்கையின் முயற்சிதான் இது என்றும், இதனை அனைத்து தரப்பினரும் ஒன்றாக இணைந்து எதிர்க்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். ஒன்றிய சுகாதாரத் துறையின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ளது ஜிப்மர் மருத் துவமனை என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் தமிழ் பெயர் கொண்ட புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராசன் "'திராவிட மாடல்' என்று ஆங்கிலத்தில் ஏன் சொல்ல வேண்டும், தமிழ்ப் பற்று கொண்ட மு.க.ஸ்டாலின் 'திராவிட மாதிரி' என்று தமிழில் கூறலாமே!" என்று மறைமுகமாகக் கேலி செய்திருந்தார்.  

இந்த நிலையில் அவரது கட்டுப்பாட்டின் கீழ் வரும் புதுச்சேரியில் இனி ஹிந்தியில் மட்டுமே எழுதவேண்டும் என்று கட்டாயப்படுத்தி இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.   தமிழ், ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு, தெலுங்கு, மலையாளம் பேசும் புதுச்சேரி  மக்கள் அதிகம் செல்லும் மருத்துவமனையில் இனி எல்லாமுமே ஹிந்திதான் என்று கொண்டுவந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த பிஜேபி அரை வேக் காடுகளைக் கேட்டால் ஹிந்தி எங்கே திணிக்கப் படுகிறது? என்று, வேற்றுக் கிரகத்திலிருந்து வந்தவர்கள் போல குதிப்பார்கள்.

தமிழ்நாட்டு மக்களவை உறுப்பினர் ஒன்றிய அமைச்சருக்கு ஆங்கிலத்தில் எழுதினால் ஹிந்தியில் பதில் அளிப்பார்கள்.

தேசிய கல்வி என்ற பெயரால் ஹிந்தியை - சமஸ்கிருதத்தை திணிப்பதைக் கேட்டால் வேறு மொழிகளையும் மூன்றாம் மொழியாகப் படிக்கலாமே என்பார்கள். ஒரு வகுப்பில் ஒரு மாணவன் ஜெர்மன், மலையாளம் படிக்க விரும்பினால் அதற்கு ஏற்பாடு செய்வார்களா? ஒரு மாணவனுக்காக ஓர் ஆசிரியரை நியமிப் பார்களா?

ஹிந்தி என்ற ஒட்டகம் உள்ளே நுழைகிறது- எச்சரிக்கை! எச்சரிக்கை!!

No comments:

Post a Comment