"நீட்" எதிர்ப்பு பரப்புரை பெரும் பயணம் ஒரு புதிய கோணம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 16, 2022

"நீட்" எதிர்ப்பு பரப்புரை பெரும் பயணம் ஒரு புதிய கோணம்!

உடுமலை வடிவேல்

ஈ.வெ.ராமசாமி எனும் மகத்தான மனிதர் தொடங்கிய "சுயமரியாதை பிரச்சார நிறுவனம்" இப்போது 100 ஆண்டுகளை நெருங்குகிறது. இதன் நோக்கமாக 'குடிஅரசு' பத்திரிகையில் குறிப்பிடப்பட்டி ருந்தது  "அனைவருக்கும் அனைத்தும்" என்பதுதான்! இது இந்தியத் துணைக் கண்டத்தில் அவ்வளவு சுலபத்தில் எட்டக்கூடிய இலக்கல்ல என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. 

ஈ.வெ.ராமசாமியைப் பொறுத்தவரையில், முடியுமா? முடியாதா? என்பதல்ல! அவசியமா? இல்லையா? என்பதுதான்! மிகக் கடினமான இந்த இலக்கை எட்ட அவர் வகுத்துக் கொண்ட இயங்குமுறைகள் இன்னமும் வியப்பானது. ஆம், ஒன்று போராட்டம்! மற்றொன்று பிரச்சாரம்! ஜாதி, பேதங்கள் தாண்டவமாடும் இடத்தில் அவற்றை ஒழித்துக் கட்ட முடிவு செய்துவிட்ட ஒருவருக்கு எவ்வளவு கோபம் கொப்பளித்திருக்க வேண்டும்? ஈ.வெ.ராமசாமிக்கும் சனாதனத்தின் மீது கோபம் பொங்கி வழிந்தது. ஆனால், அந்தக் கோபத்தில் அறிவே கோலோச்சியது! அந்த கோபம் கலந்த அறிவு செய்த பிரச்சாரத்தால் இன்றைய தமிழ்நாடு, அய்ரோப்பிய நாடுகளோடு ஒப்பிடக்கூடிய வகையில் வளர்ந்துள்ளதாக, நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞரான  'அமர்த்தியா சென்'  உள்ளிட்ட அறி ஞர்கள் குறிப்பிட்டிருக்கின்றனர். புரட்சியாளர் அம் பேத்கரும் இதை வேறு வகையில், “தென்னகத்தில் படித்தவர்கள், பகுத்தறிவு அதிகம். ஆகவே வடமாநி லங்களோடு ஒத்துப்போகாது” என்று குறிப்பிட்டிருக்கிறார். 

1938க்குப்பிறகு பெரியார் என்று அறியப்படும் ஈ.வெ.ராமசாமி, அன்னை மணியம்மையாருக்குப் பிறகும் இன்றைய தலைவராக இயங்கும் 90 வயதை நெருங்கும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் அதே வீரியத்துடன் இயங்குகின்றது. இந்த அரிய கொள்கைத் தொடர்ச்சி வேறெங்கும் காண முடியாதது. அதற்கான இன்றைய சாட்சிதான் ’நீட்’ தேர்வு எதிர்ப்பு, புதிய தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு என்ற மிக முக்கியமான பிரச்சினைகளை மய்யப்படுத்தி, 3 ஏப்ரல், 2022 இல் நாகர்கோயிலில் தொடங்கிய,  பரப்புரை பயணத்தின் வீச்சு! இரண்டு ஆண்டுகள் கரோனா காரணமாக தலைவரை நேரில் கண்டிராததாலும், தந்தை பெரியாருடன் அணுக்கமாக இருந்த தொண் டர்களில் மிக, மிக முக்கியமானவர் என்பதாலும், பேராசிரியர், கலைஞருக்குப் பிறகு திராவிடர்  இயக்கத்தின் மூத்த தலைவர் என்பதாலும் அவர் செல்லும் இடமெல்லாம் கூட்டணிக் கட்சித் தலைவர்கள்; பொதுமக்கள் என பலாப்பழத்தில் ஈ மொய்ப்பது போல் மொய்த்தனர். "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற தத்துவப்படி இயங்கும் ஒருவரை, கடலூரில் ”மண்ணின் மைந்தர்” என்று கொண்டாடினர். கருஞ்சட்டை வீரர்களைப் பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை. நமது செயலவைத் தலைவர் அறிவுக்கரசு, இன்னும் ஒருபடி மேலே சென்று, “அவர் உலகத் தமிழர்களுக்கே தலைவர்தான்! இன்றைக்கு ஒரு நாள் மட்டுமாவது அவர் எங்க ஊர்க்காரராக இருக்கட்டுமே” என்று உரிமை கொண்டாடினார். 

அதற்குத் தகுந்தாற் போலவே பரப்புரை மெல்ல சூடுபிடித்து, தற்போது பொறி பறக்கிறது! அதுவும் அவருடைய பரப்புரையில் ஒன்றிய அரசு, அதன் ஒற்றர் ஆளுநர் ஆகியோர் அரசமைப்பு சட்டத்திற்கு விரோதமாக செயல்படுகின்றனர் என்றே வெளிப் படையாக குற்றம் சாட்டிப் பேசி வருகிறார். தன் மீது வழக்கு வந்தாலும் பரவாயில்லை என்று துணிச் சலுடன், அறிவு நாணயத்துடன் தான் பேசும் கருத்துகளுக்கு பொறுப்பேற்கிறார். ஆசிரியர் தமிழ்நாட்டு மக்களையே மாணவர்கள் போலவே கருதி, சமூக அரசியல் கல்வியைப் புகட்டுகிறார். எங்கே புரியாமல் போய்விடுமோ என்று எடுத்துக்காட்டுகள் சொல்கிறார்.  Concurrent list  தான், Common list  அல்ல என்றும் சிறு பிள்ளைக்கு வகுப்பு எடுப்பது போல எடுக்கிறார். இன்னமும் ஒரு படி மேலே சென்று அந்த ஆங்கிலச் சொல்லின் வேர் சொல்லையே சொல்லி அதற்கான பொருளாக ‘ஒத்திசைவுப் பட்டியல்’ என்றும் சொல்லி, நீட், புதிய தேசியக் கொள்கை இரண்டிலும் எங்கே ஒத்திசைவு? என்றே பேசி வருகிறார். 

பிரதமர் மோடியை, அவருக்குப் பின்னிருக்கும் ஆர்.எஸ்.எஸ். சை சமரசமின்றி கொள்கை பூர்வமாக அம்பலப்படுத்துகிறார். இந்திய அரசமைப்பின் பிரிவு 21ஏ இன் படி, 4 வயது முதல் 16 வயது வரை அனைவருக்கும் கட்டாயக் கல்வி என்ற, அரசமைப்பு சட்டத்தின் அடிக்கட்டுமானத்தில் (Basic Structure)  உள்ளதாக அரசியல் சாசனப் புத்தகத்தை படித்தே காண்பிக்கிறார். அதே போலத்தான் ஆளுநரையும் அதிரடி கேள்விகளால் துளைத்தெடுக்கிறார். அவருடைய நோக்கமெல்லாம், சட்டப்படி நடை போட்டுக்கொண்டிருக்கும் தமிழ்நாடு அரசுக்கும், முதலமைச்சர்; சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் ஆதரவாக மக்களைத் தயாரிப்பதுதான்! மக்களுக்கு அறிவு கொளுத்துவது தான்! எவரையும் விட, அதிகாரம் மிக்கவர்கள் மக்கள்தான்! காரணம், இது மக்களால் மக்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு! என்றெல்லாம் மக்களுக்கே அவர்களுடைய கனபரிமாணத்தை அறிமுகப்படுத்துகிறார். மொத்தத்தில் நாம் கேட்பது சலுகை அல்ல, பிச்சை அல்ல, அரசமைப்புச் சட்டப்படி உள்ள உரிமை! என்று மக்களுக்கு மிக நெருக்கமாக சென்று விட்டார். ஆக, பாதிப் பயணம் முடிந்திருக்கும் போதே இந்தப் பரப்புரை வெற்றியை நோக்கி செல்வதை தெள்ளத் தெளிவாக உணர முடிகிறது.

ஆனால், இந்த பரப்புரைப் பயணம் இயல்பாகவே வேறொரு பரிணாமம் பெற்று வருவதைக் காண முடிகிறது. ஆம், ஒரு வகையில் 1929 இல் செங்கல்பட்டில் நடைபெற்ற, முதல் சுயமரியாதை மாகாண மாநாட் டின் ”வெற்றி விழா” பயணமாக இது உருமாற்றம் பெற்றிருக்கிறது. அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட புரட் சிகரமான தீர்மானங்கள் அனைத்தும் அரசுகளின் சட்டங்களாக, திட்டங் களாக செயல் வடிவம் பெற்று விட்டன. குறிப்பாக பெண்களுக்கு கல்வி, அரசியல் அதிகாரம் கிடைத்திருக்கின்றது. இது உலக சாதனையாக கொண்டாடப்பட வேண்டியது என்றே தமிழர் தலைவர் ஒரு பரப்புரைக் கூட்டத்தில் பேசியே இருக்கிறார். 1929 இல் இந்தத் தீர்மானங்களைக் கேலி செய்தும், சாத்தியமற்றது என்றும் விமர்சனம் செய்தவர்கள் இன்றில்லை. ஆனால், அந்தத் தீர்மானங்கள் இன்றைக்கும் அப்ப டியே கல்வெட்டில் பொறித்து வைக்கப்பட்டிருக் கின்றன! அந்தத் தீர்மானங்களுக்கு உயிர் கொடுப்ப தற்காக அறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர், தமிழர் தலைவர் ஆசிரியர், இன்னமும் ஏராளமான சுயமரியாதை வீரர்கள், வீராங்கனைகள் போராடியிருக்கின்றனர். 

”ஜாதி, மத, பேதம் கூடாது” என்றொரு தீர்மானம்! இன்று, இவை இல்லாத ஒரு மக்கள் திரள் ஒன்று உருவாகியிருக்கிறது! இல்லையென்று சொல்ல முடியாது. ”பொது ஜனங்களுக்கு சம உரிமை தேவை” என்றொரு தீர்மானம். 50 ஆண்டுகளாக பெரியார், கலைஞர், ஆசிரியர் ஆகியோர் போராடி, இப்போது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் காலத்தில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் உரிமை பெற்றாகி விட்டது! பெண்களுக்கு மணவிலக்கு உரிமை, விதவைகளுக்கு மறுமண உரிமை, தங்கள் இணையை தாங்களே தேர்ந்தெடுத்தல் என்பதும் ஒரு தீர்மானம்! நிறைவேறி இருக்கிறதா? இல்லையா? சடங்குகள் அற்ற திருமணம் உண்டே! பெண்களுக்குச் சொத்துரிமை, உத்தியோக உரிமை கிடைத்திருக்கிறதே! இன்னும் எவ்வளவோ! நீதிமன்றங்கள் கூட இந்தத் தீர்மானங்களுக்கு தப்பவில்லை. 1989 இல் முத்தமிழ் அறிஞர் கலைஞர் பெண்களுக்கு சொத்துரிமை சட்டத்தை கொண்டு வந்த போது, ”இதற்கு 60 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது” என்று வேதனைப்பட்டிருக்கிறார். இதற்குப் பிறகுதான் கலைஞர் தலைமையிலான தி.மு.க. பங்கேற்றிருந்த ஒன்றிய அரசு சட்டம் கொண்டு வருகிறது. எப்படிப்பட்ட வெற்றி இது! ஒரு துளி ரத்தம் சிந்தாமல் பெற்ற வெற்றி என்பதுதான் அந்த வெற்றிக்கே மகுடம் சேர்ப்பதாகும்! 

பரப்புரை மேடைகளில் ஊராட்சி, பேரூராட்சி உறுப்பினர்கள், நகராட்சித் தலைவர்கள், மாநகராட்சி மேயர்கள் என்று பெண்கள் மேடையில் அணிவகுத்து அமர்ந்திருக்கும் போது, விதைத்த விவசாயி, விளைந்த பயிரைக்கண்டு எப்படி பரவசப்படுவாரோ அப்படித்தான் தமிழர் தலைவர் ஆகிப்போனார்!

 1925 இல் தொடங்கப்பட்ட சுயமரியாதை இயக்கத்தின் வெற்றிதான் இன்று ”திராவிட மாடல்” என்று ஆய்வாளர்களால் கொண்டாடப்படுகின்றது. அந்த திராவிட மாடலைத் தந்த, தாய்க் கழகத்தின் இன்றைய தலைவர், ”இது பரப்புரைப் பயணம் மட்டுமல்ல, சுயமரியாதை இயக்கத்தின் வெற்றி விழா” என்று அவரே சொல்லி,  அந்த வெற்றியில் பூத்த கனிகளுக்கு, அகமும், முகமும் மலர பயனாடை அணிவித்து மரியாதை செய்து, நெகிழ்ந்தார். நம்மையும் நெகிழச் செய்தார். 

இன்னொன்றையும் சொல்ல வேண்டும். தந்தை பெரியாரும், திராவிடர் கழகமும் அறிவித்த போராட்டங்கள் வெற்றியை மட்டுமே அறுவடை செய்திருக்கின்றன என்று கம்பீரமாகச் சொல்லி வருகிறார் ஆசிரியர்! ”அதற்காகப் பயன்படுத்தப்பட்ட ஆயுதம், ”பெரியாரியம் எனும் பேராயுதம்” என்றும் பிரகடனப்படுத்தி இருக்கிறார்! ”அமித்ஷாவுக்கும், மோடிக்கும் தமிழ்நாட்டின் வரலாறு தெரியாது” என்று சொல்லி, இதுவொன்றும் வெல்ல முடியாத பணியல்ல என்று மக்களுக்கு நம்பிக்கை தருகிறார். அதனடிப்படையிலேயே, ”நீட், புதிய தேசிய கொள்கை ஆகியவற்றிலிருந்து மீண்டு வருவோம்! மீண்டும் வருவோம் உங்களைச் (மக்களை) சந்திக்க” என்றும் சொல்லி வருகிறார். நூறாண்டு கால தமிழ்நாட்டின் வரலாறும் நமக்கு அதைத்தான் சொல்கிறது. இன்னமும் பயணம் மீதம் இருக்கிறது. ஆம் பயணங்கள் முடிவதில்லை!


No comments:

Post a Comment