இந்தி மொழியும் நடிகர்களின் சர்ச்சையும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 29, 2022

இந்தி மொழியும் நடிகர்களின் சர்ச்சையும்

 ஹிந்தி தேசிய மொழி என்று கூறிய ஹிந்தி நடிகர் அஜய்தேவ்கான் பா.ஜ.க.வின் பாசிச நடவடிக்கைக்கு துணைபோவது வேதனை அளிக்கிறது, நாட்டின் ஒற்றுமையைக் குலைக்கும் மோசமான நடவடிக்கைக்கு துணை போகவேண்டாம் என்று கருநாடக மேனாள் முதலமைச்சர் எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.

பீகார்,  ராஜஸ்தான், குஜராத், மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட், சத்தீஸ்கர் மற்றும் உத்தரப்பிரதேசம் என்று வடஇந்திய மாநிலங்கள் பலவும் தங்களுக்கு என்று தனி மொழி அடையாளத்தை கொண்டுள்ள போதும் அதை எல்லாம் பின் தள்ளி ஹிந்திதான் அவர்களுக்கான மொழி என்று ஆகிவிட்டது.  அத்தகையதொரு நிலையை தென்னிந்தியாவிலும் உருவாக்க ஒன்றிய பா.ஜ.க. அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது; அதற்காக  ஆங்கிலத்திற்கு மாற்றாக ஹிந்தியைக் கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கைகு தமிழ்நாட்டு மக்கள் மட்டுமன்றி கன்னடம், மராத்தி, வங்காளம் மற்றும் பஞ்சாபி மொழி திரைபிரபலங்களும் ஹிந்திக்கு எதிராக குரல்கொடுத்தனர்.

கன்னட திரையுலகைச் சேர்ந்தவர்கள் தற்போது இதற்கு மிகவும் வலுவாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ஒன்றில் நாயகனாக நடித்த  நடிகர் சுதீப் கிச்சா “இனியும் ஹிந்தியை தேசிய மொழி என்று யாரும் கூறவேண்டாம். அது ஒரு பேச்சுமொழி - அதிகம் பேர் பேசும் மொழியாக கூறப்படுகிறது” என்று பேசியிருந்தார். இதனைக் குறிப்பிட்டு தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள பிரபல ஹிந்தி நடிகர் அஜய் தேவ்கான், “பிறகு எதற்கு உங்கள் மொழி திரைப்படங்களை ஹிந்தியில் டப்பிங் செய்கிறீர்கள்” என்று சுதீப்புக்கு  பதிலளித்துள்ளார்.

அஜய் தேவ்கானின் இந்த பதிவில் ஹிந்தி மொழி தேசிய மொழி என்று குறிப்பிடப்பட்டிருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் மற்ற மாநில மொழிகளைப் போன்றதே ஹிந்தி மொழி அதற்கு தேசிய மொழி என்ற சிறப்பு தகுதி ஏதும் இல்லை என்பதுகூட தெரியாமல், வட இந்தியாவைச் சேர்ந்த பலரும் பேசி வருவது குறித்து சமூக வலைத்தளங்களில் மீண்டும் விமர்சனங்கள் தொடங்கியுள்ளன.

இதற்குப் பதிலளித்துள்ள கருநாடக மேனாள் முதலமைச்சர் குமாரசாமி சமூகவலைதளத்தில் எழுதியுள்ளதாவது “இந்தியாவில் பேசப்பட்டு வரும் மொழிகளில் ஹிந்தியும் ஒன்றுதான், கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம், மராத்தி என்பவை போன்ற ஒரு மொழிதான். இந்தியா பல மொழிகள் பேசும் தோட்டம். பல மதம், பல மொழி, பல கலாச்சார அமைப்பு. அதைத் தொந்தரவு செய்ய முயற்சிக்காதீர்கள்  ஹிந்தி அதிகமான மக்களால் பேசப்படுவதால் மட்டுமே - அது பெரும்பாலான மக்களின் மொழியாக இல்லை. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான 9 மாநிலங்களில் ஹிந்தி 3ஆவது மொழியாகக்கூட  இல்லை. 'ஹிந்தி அரசியல் கட்சிகள்' பிராந்திய மொழிகளை ஒழிக்கும் தீய முயற்சியை மேற்கொண்டு வருகின்றன.  

பாஜக அரசு ஒரே வரி, ஒரே மொழி, ஒரே ஆட்சி என்ற சர்வாதிகார மனநிலையில் உள்ளது. அதன் ஊதுகுழல்களாக பிரபல நடிகர்கள் - திடீரென்று  பாஜக மற்றும் அதன் ஹிந்தி தேசியவாதத்தின் ஊதுகுழலாக புதிய அறிவு கொண்டு திரைப்பிரபலங்கள் பணியாற்றியுள்ளனர். ஹிந்தி நடிகர் அஜய் தேவ்கன் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.

 கன்னட சினிமா இன்று ஹிந்தி சினிமாவைத் தாண்டி வளர்ந்து வருகிறது.  

பாசிச மதவாத போதை இந்தியாவை உடைக்கிறது. பா.ஜ.,வால் பரப்பப்பட்ட நோய், ஒட்டுண்ணியாக பரவிவருகிறது, அந்த ஒட்டுண்ணியை பரப்புவதற்கு பிரபலங்களை விலைகொடுத்து வாங்கி நாட்டையே குலைத்து வருகிறது. இது இந்தியாவின் ஒற்றுமைக்கு ஆபத்தானது” என்று குமாரசாமி குறிப்பிட்டுள்ளார். 

ஏதோ ஹிந்தி வடமொழி என்ற வெறுப்பில் பேசப்படும் கருத்தல்ல இவை - யதார்த்தமான நாட்டு நிலையை வெளிப்படுத்தும் நிலைக் கண்ணாடி.

திரையுலகினர் கருத்துக்களைக் கூறலாம்; அதுநாட்டைப் பிளவுபடுத்தும் சக்திகளின் ஊது குழலாக இருக்கக் கூடாது.

No comments:

Post a Comment