பகிர்ந்து கொண்டதொரு குடிஉரிமையின் இந்திய பாரம்பரியம் மீட்டெடுக்கப்பட வேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 25, 2022

பகிர்ந்து கொண்டதொரு குடிஉரிமையின் இந்திய பாரம்பரியம் மீட்டெடுக்கப்பட வேண்டும்

கோபாலகிருஷ்ண காந்தி

1838-1923இல் வாழ்ந்த இங்கிலாந்து நாடாளுமன்ற லிபரல் கட்சி உறுப்பினரான ஜான் மோர்லே அய்ரிஷ் ஹோம் ரூல் இயக்கத்தை ஆதரித்த போதிலும், இந்தியாவுக்கு சுதந்திரம் அளிப்பது பற்றி ஆதரவு தெரிவிக்காமல் கீழ்க்கண்டவாறு எழுதி இருக்கிறார்; "இந்தியர்கள் தங்களது விவகாரங்களை நம்மைவிட மிக நன்றாகவே கையாள இயன்றவர்கள் என்பதால் இந்தியாவைவிட்டு நாம் வெளியேறுவதே அறிவுடைமை என்று சிலர் கூறி வருவதை நானறிவேன். அதனைத் தொடர்ந்து ஏற்படும் அராஜகம், ரத்தம் ஒடும் கலவரங்கள் பற்றிய தோற்றத்தைக் காண்பவர்கள் அத்தகைய பேரழிவை ஏற்படுத்த இயன்ற அந்த முடிவை ஆதரிக்கவே மாட்டார்கள்" என்று கூறும் அவர், இந்தியர்களுக்கு வாக்குரிமையும், அரசில் பிரதிநிதித்துவத்தையும் அளிக்க வேண்டும் என்று கூறப்படும் சீர்திருத்தக் கருத்துகளுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்த அவர், "இருண்ட தொலை தூரத்திலிருந்து அராஜக கர்ஜனையையும், மக்கள் படுகொலை செய்யப்படும்போது எழுப்பப்படும் ஓலத்தையும், குழப்பம் நிறைந்த சண்டை சச்சரவுகளின் சத்தத்தையும் நீங்கள் கேட்கும்போது, நீங்கள் என்ன செய்து விட்டீர்கள் என்று உங்களது மனமே உங்களைக் கண்டிக்கும்" என்று கூறியுள்ளார். மோர்லேயின் இந்த இரு கருத்துகள் பற்றி ஒரு கட்டுரையில் வின்ஸ்டன் சர்ச்சில்" அவரது அச்சங்கள் ஆதாரம் அற்றவை என்பதை காலத்தினால் மட்டுமே மெய்ப்பிக்க இயலும்" என்று எழுதியிருக்கிறார்.

மோர்லேயின் ஊகம் சரியாகிப் போனதா? அல்லது தவறாக ஆகிப் போனதா?

இந்திய சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டு விழாவை நாம் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், மோர்லேயின் ஊகங்கள் தவறானவை என்று காலம் மெய்ப்பித்து இருக்கிறதா என்ற கேள்வியை நாம் கேட்கக் கூடும்.

இந்தியாவில் அராஜகம் நிலவுகிறதா? நிச்சயமாக இல்லை என்றுதான் கூற வேண்டும். நமது ஜனநாயகத்தைப் பார்ப்பவர்கள் அதனை கொந்தளிப்பு மிகுந்தது என்று வேண்டுமானால் கூறலாம். உண்மைதான் நமது தலைவர்களில் சிலர் சட்டத்தை மறந்து போவதுடன், இந்திய அரசமைப்பு சட்டம் என்ற ஒன்று இருப்பதையும் மறந்து போகிறார்கள். பல அரசியல்வாதிகள் தங்கள் மனங்களில் வெறுப்பை வைத்துக் கொண்டும், நாக்குகளில் விஷத்தைத் தடவிக் கொண்டும், தங்களுக்கு எந்தவிதமான தண்டனையும், கிடைக்கக் கூடும் என்ற அச்சமே இன்றி பேசி வருகின்றனர். அதனால் இந்தியாவை சட்டத்தின் ஆட்சியே இல்லாத பாலைவனம் என்று கூறிவிட முடியாது. 

ரத்தம் சிந்தும் கலவரங்கள் நடைபெறுகின்றனவா? இல்லை என்றும், ஆம் என்றும் கூறலாம். குழப்பம் மிகுந்த சூழ்நிலைகள் ஏற்பட்டிருக்கலாம்; சத்தம் மிகுந்த கலவரங்கள் ஏற்பட்டிருக்கலாம்; மிகுந்த சேதமும் அழிவும் ஏற்பட்டிருக்கலாம். நமது அரசு அதிகாரிகள் ஒழுங்கின்மையை அறிவார்கள். ஆனால் ரத்தக் கலவரங்கள் இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டு இருக் கின்றனவா? அதற்கான வழியே இல்லை. குழப்பம் மிகுந்த நமது நேரங்கள் மோசமானவையாக இருக்கலாம். ஆனால் அவை ரத்தக் களறி அல்ல.

இந்தியாவில் குழப்பம் நிலவுகிறதா?

ஆம். நிலவுகிறது. அது ஏதோ புது மாதிரியாக இருக்கின்றது. அவை வேண்டுமென்றே விதைக்கப்பட்டு மிகுந்த கவனத்துடன் பாதுகாத்து வளர்க்கப்படுகிறது. நமது தேசிய அடையாளம் எது என்பது பற்றியது அது. நமது மூலக் கருவில் மக்கள் என்னவாக இருக்கிறார்கள் என்பதுபற்றியது அது. இந்தியாவில் யுகம் யுக காலமாக மூன்று விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது. அவை ஜாதி, மதம், நாடு ஆகியவை. ஜாதி என்பது உறவு முறையிலான ஒரு விவகாரமாக இருப்பதாகும்; மதம் என்பது வழிபாட்டைப் பற்றியதாக இருப்பதாகும்; நாடு என்பது குடியுரிமை பற்றியதாக இருப்பதாகும். முதல் இரண்டும் மிகுந்த உணர்வுப் பெருக்கு கொண்டவை என்பவையாகவும் மூன்றாவது ஓர் உயர்ந்த லட்சியத்தைக் கொண்டதாகவும் இருப்பதாகும். முதல் இரண்டும் மூன்றாவதை சூழ்ந்து மறைத்து விடக் கூடாது என்று இந்திய மறுமலர்ச்சியின் தலைவர்கள் விரும்பினர். முதலாவதான ஜாதி என்பது ஒரு பொருட்டே அல்ல என்றும், இரண்டாவதான மதம் என்பது ஒரு தனிப்பட்ட விஷயமானது என்றும், மூன்றாவதான நாடு என்பது நம்மை செயல்பட வைப்பது என்றும் கருதப்பட்டு வந்துள்ளது. ஆனால் இன்றோ ஜாதியும் மதமும் மிகப் பெரிய அளவில் நாட்டை சூழ்ந்துகொண்டுள்ளது. நாடு சுதந்திரம் பெற்றதற்குப் பின்னரான ஹிந்து - முஸ்லீம்களிடையேயான பிரிவினை கூர்மை மிகுந்ததாக இன்று உள்ளது.

வருத்தமடைந்து பேச இயலாமல் இருக்கும் வேதனையின்  முனகலையும் படுகொலை செய்யப்படுபவர்களின் மரண ஓலத்தையும் நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோமா? இந்தியா இரண் டாகப் பிரிக்கப்பட்ட போது, இந்த முனகலையும் ஓலத்தையும் முதலாவதாகவும் கடைசியானதாகவும் நாம் கேட்டிருந்தால், அதுபற்றிய கொடிய நினை வுகள் ஓட்டு மொத்த மக்களின் நினைவில் இருந்து தேய்ந்து மறைந்து போயிருக்கக் கூடும். ஆனால் அப்படி நடக்கவில்லை. இந்தியா சுதந்திரம் பெறு வதற்கு முன் பல முறை நடந்தேறியது போலவே, சுதந்திரம் பெற்றபோது நடந்ததுபோலவே அது மறுபடியும் திரும்பத் திரும்ப நடந்தேறியுள்ளது. கடந்த முறை எப்போது அது நடைபெற்றது. நேற்று நடந்தது என்று ஒருவர் கூறலாம்; தினந்தோறும் நடக்கிறது என்று மற்றொருவர் கூறலாம். நேற்று என்பது எப்போது வேண்டுமானாலும் இன்று என்று ஆகிவிடும் என்பதை மக்கள் நன்றாகவே அறிவார்கள்.

மதிப்பிழந்து போகும் இந்தியா

நாளுக்கு நாள் வளர்ந்துவரும் பேரச்சம் ஏற்படுத்த இயன்ற ஹிந்து - முஸ்லிம் பிரிவினை நமது நாட்டை மதிப்பிழக்கச் செய்வதுடன், அதனுடைய பெருமையை சீரழித்து, பகிர்ந்து கொள்ளும் மக்கள் குடியுரிமை என்ற பாரம்பரியத்தை அழித்து விடவும் அது செய்கிறது.

மிக மிக சாதாரணமான சில்லறை நிகழ்ச்சிகளுக்காக கலவரங்கள் தீ விபத்து போலதவறாமல் தொடங்கி விடுகின்றன. ஆனால் இந்த ஹிந்து - முஸ்லிம் கலவரங்களில் கலவரங்களை ஏற்படுத்தும் நோக்கம் கொண்ட வன்முறையாளர்களின் உதவியுடன் இதர மத அமைப்புகளும் வெகு விரைவாகத் தங்களை அக்கலவரங்களுடன் இணைத்துக் கொள்கின்றன. அவர்கள் யார் என்பதை நாமறிவோம் இரு மதங்களையும் சேர்ந்தவர்கள் அவர்கள்.

ராம நவமி கொண்டாட்டத்தின்போது கலவரங் களை தொடங்கியவர்கள் யார்? இதனால் லாபம் அடைந்தவர்கள் யார்?

நாம் ஏற்கெனவே அறிந்துள்ள, அறிந்துகொள்ள இயன்ற பெயரற்ற, முகமற்ற, கலவரத்தைத் தூண்டி விடும் ஆட்கள் அவர்கள். இதனால் யார் எதனை இழந்தார்கள்? யார் துன்பம் அடைந்தார்கள்? என்பதையும் நாம் அறிந்திருக்கிறோம்  என்பதே பெரும் சோகம். ஏதுமறியாத ஹிந்து, முஸ்லிம் அப்பாவி மக்கள்தான் அவர்கள். அத்தகைய அப்பாவி மக்களையும் தாண்டி ரத்தம் சிந்தியவர்கள் யார்? நமது நாடு, அதன் ஒற்றுமை, ஒருங்கிணைப்பு மற்றும் அதன் மனச்சாட்சி ஆகியவையே ரத்தம் சிந்தியவை.

ஆரம்ப வன்முறை நிகழ்ச்சிகளை பற்றிய செய்திகளை ஒளியின் வேகத்தில் சமூக ஊடகங்கள் பரப்பி விட்டன. கலவரத்தில் ஈடுபட்டவர்கள் என்று சந்தேகிக்கப்பட்ட மக்களின் வீடுகளை மத்திய பிரதேச மாநிலஅரசு மாவட்ட அதிகாரிகள் இடித்துத் தகர்த்தனர் என்று அறிக்கைகள் தெரி விக்கின்றன. மிக மிகக் கடுமையாக அவர்கள் செயல்பட்டுள்ளார்கள். இந்த தாக்குதல்களுக்கு உள்ளானவர்கள் யார்?

பொதுச் சொத்துக்களை அழித்தவர்கள் அவற்றின் இழப்புகளை சரி செய்ய வேண்டும் என்று கூறுவது கேட்பதற்கு வேண்டுமானால் நன்றாக இருக்கும். ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்களின் மனைவி, மக்களும் தங்குவதற்கு கூரை இல்லாமல் செய்வது என்பது நன்றாக இருக்குமா?

காந்தியாரின் பட்டினிப் போராட்டம்

வடமேற்கு எல்லை மாகாணத்தின் முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக இருக்கும் கோஹட் மாவட்டத்தில் 1924ஆம் ஆண்டில் நடைபெற்ற மிக மிக  மோசமான ஹிந்து முஸ்லிம் கலவரம் நாட்டை அச்சுறுத்திக் கொண்டிருந்த போது காந்தியார்  டில்லியில் 21 நாள் பட்டினிப் போராட்டம் மேற்கொண்டார். ஆனால் பலவீனப்பட்டுப் போயி ருந்த காந்தியார் தன்னைச் சுற்றி இருந்தவர்களிடம் மெதுவான குரலில் கூறியதாவது: "நாம் ஒன்றாக சேர்ந்து வாழ்வதற்கு இயன்றவர்களாக இருக்க வேண்டும். ஹிந்துக்களும் முஸ்லிம்களும் தங்கள் வழிபாட்டுத் தலங்களில் வழிபாடு செய்வதற்கு முழு சுதந்திரம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். இந்த அடிப்படை சுதந்திரத்தை நம்மால் உறுதிபடுத்தப்பட முடியாமல் போனால் இஸ்லாத்துக்கும் ஹிந்து மதத்திற்கும் எந்த அர்த்தமுமே இல்லை".

"காந்தியாரை இங்கே குறிப்பிடுவதில் எந்த பயனும் இல்லை. அவர் பழைய சரித்திரமாகி விட்டவர்" என்று ஏமாற்றமடைந்த வாசகர் கூறுவதைக் கேட்கும்போது, அது எனக்கும் தெரியும் என்று கூறுவதற்குதான் எனக்கு உடனடி யாகத் தோன்றும். மாபெரும் செல்வாக்கை செலுத் துபவர்கள் பலர் அவர்களில் இருக்கக் கூடும். காந்தியார் மற்றும் பகத் சிங்கை சுட்டிக்காட்டி அண்மையில் நடைபெற்ற கொள்கை அறிவிப்பு நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மதச்சார்பின்மை, பற்றி தெரிவித்த தனது நிலைப்பாடு ஈடு இணையற்றதாக இருப்பதாகும். கண்ணூரில் அண்மையில் நடந்து முடிந்த இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் அக்கட்சி வெளியிட்ட அறிக்கை வரவேற்று வணங்கத்தக்கதாக இருப்பதாகும். இவை மட்டுமின்றி, மதச் சார்பின்மைபற்றி உறுதியான நிலைப்பாட்டை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகள் ஆகியவை பாராட்டுக்குரியவை. ராமநவமி கலவரங்கள் பற்றி குறிப்பிட்ட கருநாடக மேனாள் முதலமைச்சர் எடியூரப்பா "ஹிந்துக்களும் முஸ்லிம்களும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் போல ஒற்றுமையாக வாழ வேண்டும்" என்று கூறியுள்ளார்.

நீதிமன்றங்கள் தலையிட வேண்டும் தேசிய மனித உரிமைக் குழு மற்றும் தேசிய சிறுபான் மைக் குழு ஆகியவற்றுடன் இணைந்து மதச் சார்பின்மைபற்றி உறுதியான நிலைப்பாட்டை நீதிமன்றங்கள் மேற்கொள்ள வேண்டிய நேரம் இதுவே. அவர்கள் அனைவரும் சேர்ந்து அரச மைப்பு சட்டத்தின் முன்னுரை மற்றும் 25 ஆவது பிரிவினை நிலைநிறுத்த வேண்டும்.

எஸ்.ஆர். பொம்மைக்கும் இந்திய ஒன்றிய அரசுகளுக்குமிடையே 1994ஆம் ஆண்டு நடைபெற்ற வழக்கு ஒன்றில் இந்திய உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில் "மதச் சார்பற்ற கொள்கை என்பது அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சமாகும். மத நம்பிக்கை சுதந்திரத்தினை பலவீனப்படுத்துவது என்பது ஒரு அடிப்படை சுதந்திரத்தையே பலவீனப்படுத்துவதாகும். கோபத்தையும் வருத்தத்தையும் ஏற்படுத்த இயன்ற கடுஞ்சொற்கள் மூலம் வெறுப்பு உணர்வைக் கொட்டுவதும், ஆட்சியில் உள்ளவர்களால் அது ஆதரிக்கப்படுவதும் அரசமைப்பு சட்டத்தையே சிறுமைப்படுத்துவதாகவும், இந்திய மக்களை ஏமாற்றி காட்டிக் கொடுப்பதாகவும் இருப்பதாகும். அது நடைபெறுவதை அனுமதிக்க முடியாது. மதவெறி என்பது நமது குடியுரிமையை அவமதிப்பாகவும், நமது மனித நேயத் தன்மையையே அழித்து விடுவதாகவும், நமது அரசமைப்பு சட்டத்துக்கே எதிரானதாகவும் இருப்பது ஆகும்.

குஜராத் மாநில வாடிகம் வட்டத்தில் உள்ள தலவானா என்ற கிராமத்தின் 100க்கும் மேற்பட்ட முஸ்லிம் மக்கள் 1200 ஆண்டுகள் பழைமையான வீர் மகராஜ் மந்திர் கோயில் வளாகத்தில் தங்கள் ரம்ஜான் நோன்பை முடித்துக் கொள்வதற்கு அண்மையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். "இதயம் கடினமானதாக ஆகி சுருங்கிப் போகும்போது, இரக்கம் - கருணை என்ற நன்னீர் என்மீது பொழிகிறது" என்ற தாகூரின் கவிதைதான் நினைவுக்கு வருகிறது.

இப்போது நாட்டில் நிலவி வரும் கடினமான வெறுப்பும், கோபமும் சூழ்ந்ததாக இருக்கும் நிலையில், பெருந்தன்மை என்பது முழுவதுமாக இழக்கப்பட்டு விடவில்லை என்று குஜராத் காட்டுகி றது. மோர்லேயையோ அல்லது சர்ச்சிலையோ தவறான கருத்து கொண்டவர்கள் என்பதை நாம் மெய்ப்பிக்கத் தேவையில்லை. நமது ஜனநாயகத்தின் மனசாட்சிக்கு மட்டும் விசுவாசமாக இருப்பவர்கள் நாம் என்பதை மட்டும் மெய்ப்பிக்க வேண்டும்

நன்றி: 'தி இந்து' 15.4.2022

தமிழில்: த.க. பாலகிருட்டிணன்


No comments:

Post a Comment